View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2
Pages :
1
2
3
4
[
5]
6
7
8
pavalamani pragasam
11th June 2013, 08:01 AM
மனதுக்கு சிறிதும் பிடிக்காதது
பலவும் சுற்றிலும் நடக்குது
பருவத்தில் மொட்டு மலரவில்லை
செந்நீராய் மழை மாறவில்லை
பேற்றின் பெருமை புரியவில்லை
அடங்கி ஆளும் கலை காணவில்லை
கரையும் இளமை கவலையில்லை
கணக்குப் போடத் தெரியவில்லை
அரிய எளிய இன்ப நேரங்களில்லை
ஆக மக்கள்தொகை பெருகவில்லை
chinnakkannan
15th August 2013, 11:44 AM
பெருகவில்லை
பாலும் தேனும் சர்க்கரையும்
ஆறாக சாலைகளில்...
பெருகவில்லை
இன்பங்கள் எல்லா இடங்களிலும்..
பெருகவில்லை
உற்பத்தி விவசாயம் முன்னேற்றம்..
ஆனாலும்
சுதந்திரம் பெற்ற
உணர்வு மட்டும் இருக்கிறது மிஞ்சி..
pavalamani pragasam
15th August 2013, 08:06 PM
மிஞ்சி நின்றது எத்தனை
ஒரு காக்காயை சுட்டபின்
சிறுவர் புதிர் இதுதானே
நிமிர்ந்து நேராய் நடந்தவர்
பட்ட துயர் பேசுகின்றன
காவியமும் சரித்திரமும்
மெத்த உணர்ந்தவர் நோகாமல்
நாசுக்காய் நயமாய் வளைந்திட
பறந்துவிட்ட காக்காயாயிருக்க
நெஞ்சை நிமிர்த்தும் தீரர்களோ
பிறப்பதும் சிறப்பதும் இன்றும்
தொடர்வதே அழகிய அனுபவம்
chinnakkannan
15th August 2013, 09:35 PM
அனுபவம் என்று
ஆரம்பித்து எழுதப் பார்க்கையில்
ஏதோ காரியமாய்
சமையலறையில் இருந்த அவள்
எதிர்பாராமல் வந்து முத்தமிட
ம்ம்
கிடைத்தது இன்னொன்று!
pavalamani pragasam
16th August 2013, 07:38 AM
இன்னொன்று இன்னொன்று இன்னொன்று
ஈன்று ஈன்று ஈன்று
முயன்று முயன்று முயன்று
வென்று வென்று வென்று
வாகை சூடும் வனிதாமணி
ஆண் வாரிசு ஆசையெனும் பிணி
chinnakkannan
16th August 2013, 10:26 AM
பிணிக்கு மருந்தெனவே பக்குவமாய் வாயில்
இனிக்கா தொருபொருளை இட்டவரைத் தான்நோக்கிக்
கண்சுருங்கிக் கத்தும் குழந்தைக் குரலதுவும்
பண்ணில் ஒருவகை தான்
pavalamani pragasam
16th August 2013, 12:56 PM
ஒரு வகைதான் ஆணினம்
அவ்வினம் அறியாத இலக்கணம்
பெருங்கடலான பெண்ணினம்
வர்ணிக்கத்தான் மானினம்
கற்பனைக்கெட்டா வல்லினம்
அடக்க முடியாததோர் இனம்
ஆதிக்க வெறி கொண்ட மேலினம்
வெல்ல முடியாத அற்புத தனம்
chinnakkannan
16th August 2013, 01:33 PM
தனத்தை இன்னும் காணாமல்
...தவியாய்த் தவிக்குது அவள்மனது
கணக்காய் வருவாள் நேரத்தில்
..காரியம் தன்னை முடித்திடுவாள்
சுணக்கம் ஏதும் கொள்ளாமல்
..செய்வாள் சொன்ன வேலைகளை
பணத்தை முன்பாய் வாங்காமல்
..பார்ப்பாள் வேலை அவள்போல்யார்..
அக்கா ஸாரி லேட்டாச்சு..
..அஞ்சு மணிபஸ் போயாச்சு
பக்கா வாகச் செய்வேன்நான்
...பார்ப்பீர் நீங்கள் இப்பொழுது
விக்கல் தீர்க்கும் தண்ணீர்போல்
...விரைந்தே வந்த தனத்தாலே
அக்கா மனமும் நேராச்சு..
..அஞ்சரை சீரியல் பார்த்தாச்சு..!
pavalamani pragasam
16th August 2013, 08:27 PM
பார்த்தாச்சு பல நூறு வேசம்
பாவிக்குப் பசியெடுத்தால் பாசம்
திமிரெடுத்தால் பறக்கும் சாட்டை
மனம் போல் ஆடுவான் வேட்டை
உபகாரத்துக்குப் எடுத்த அவதாரம்
யந்திரமாய் இயங்கவே ஒரு தாரம்
சிந்திக்கத் தெரியாத, கூடாத ஒருத்தி
கல்லை புல்லை பக்தியில் இருத்தி...
செக்கு மாட்டுத் தடத்தில் உழலும் மனிதா
அக்கினிக்குஞ்சு காட்டை எரிப்பது புதிதா
chinnakkannan
16th August 2013, 09:08 PM
புதிதாகப் பார்ப்பதுபோல் இருக்கும் தன்மை
…புவனத்தில் உன்னுடைய அழகின் வன்மை
கதியென்றே இருந்திடுவர் கவிஞர் எல்லாம்
..கனிவான புன்னகையில் பூக்கும் பூவில்
விதியெல்லாம் மாற்றாது உந்தன் தோற்றம்
..விரந்தேதன் தோல்வியதை ஒப்புக் கொள்ளும்
பதியானேன் அதுஎந்தன் அதிர்ஷ்ட மன்றோ…
…பாவைநீயும் சிரிக்காதே உண்மை சொன்னேன்..
அழகாகப் பேசுகிறீர் ஆனால் நீரும்
…அன்பாலே மறந்துவிட்டீர் ஒன்றை ,மட்டும்
சலசலக்கும் அருவியெனத் தழுவிச் சென்றீர்
…சந்தர்ப்பம் பலநேரம் என்னை வென்றீர்
கலகலப்பாய்ப் பேசினீரே கால ந் தோறும்
..கதிகலக்கும் துன்பமது வந்த போதும்..
வளமாக இருக்கின்ற் எந்தன் தோற்றம்
..வந்ததற்கே காரணம்தான் நீரே அன்றோ
pavalamani pragasam
17th August 2013, 08:14 AM
நீரே அன்றோ நேற்று
விதிகள் வகுத்தது
வேதம் எழுதியது
வினைகள் ஆற்றியது
வியாபித்து நின்றது
விலங்கை பூட்டியது
எங்கும் எதிலும் காண்
ஆணாதிக்க சிந்தனை
chinnakkannan
17th August 2013, 11:45 AM
சிந்தனை செய்து பாருங்கள்
நாட்டில் பணத்தின் மதிப்பு குறைகிறது
தங்கம் விலை ஏறுகிறது
அக்கிரமங்கள் நிதம் அரங்கேறுகின்றன
நிலையான ஆட்சி...
அம்மா சமையலறையில்
வெண்டைக்காய் நறுக்க
தங்கை பூகோளப் பாடத்தை
உருப்போட்டுக் கொண்டிருக்க
அப்பா ஆங்கிலப் பேப்பரில்
ப்ரிட்ஜ் விளையாடிக்கொண்டிருக்க்
நான்
என்னறையில் மறு நாளுக்கு
உடை எடுத்து வைத்துக் கொண்டிருக்க
வியர்க்க விறுவிறுக்கப் பேசிய
அரசியல்வாதியின் பேச்சை
கேட்டுக் கொண்டிருந்தன
வரவேற்பறையில் இருந்த்
காலி சோஃபாக்கள்..
pavalamani pragasam
17th August 2013, 12:05 PM
சோஃபாக்கள் அழகானவை
தேக்கில் செதுக்கியவை
பயன்படுத்த சுகமானவை
உயர்ரக பஞ்சடைத்தவை
வீட்டை அலங்கரிப்பவை
அந்தஸ்தை காட்டுபவை
பளிச்சென்று இருப்பவை
உற்சாகம் ஊட்டுபவை
சேவையில் சிறந்தவை
அவை பெண்களொத்தவை
chinnakkannan
17th August 2013, 03:56 PM
பெண்களொத்தவை என்றால்…
ஸாரி டியர்..தமிழில் நான் கொஞ்சம் வீக்”
“பெண்களைப் போல் என்று அர்த்தம்..
சரி.. என்னைப் போல் ஒன்று சொல்லேன்”
“பூ”
“அப்புறம்..”
“ம்ம் தோணமாட்டேங்குது..
என் உணர்வுகளைத் தமிழில் சொல்லத் தெரியவில்லை”
“உங்களைப் போல் நான்
ஒன்று சொல்லட்டா”
ம்ம்
“தத்தி.!.!”
pavalamani pragasam
17th August 2013, 07:06 PM
தத்திகள்தான் அதில் ஐயமென்ன
கோடு கிழிக்கும் லட்சுமணன்கள்
கதி கலக்கும் அல்லிராணிகள்
இவர்கள் இடைவிடா மோதல்கள்
பார்த்தயரா தலைமுறைகள்
பாடம் படிக்காத ஆண்மகன்கள்
venkkiram
17th August 2013, 07:18 PM
ஆண்மகன்கள் பாவம்
அம்மாவின் பாசத்திற்கும்
காதலியின் கட்டாயத்திற்கும்
துணையின் கடிவாளத்திற்கும்
வாழ்நாளை விலை கொடுக்கும்
ஏழைகள்.
chinnakkannan
18th August 2013, 12:07 AM
ஏழைகள் இல்லாத நாடாய்
நம் தலைவர் மாற்றுவார் என
மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருக்க
சுடச் சுட பஜ்ஜி சுட்டபடி இருந்த
பாட்டி மய்ங்கிவிழ
இரண்டு ரூபாய்க்குத் தண்ணீர் வாங்கி தெளித்து
:”வாங்க பாட்டி பக்கத்துல தெரிஞ்ச டாக்டர்
இருககார் போகலாம்” என வேர்க்கடலைப் பையுடன்
ஆட்டோவில் ஏறி வேர்க்கடலைக்காரன் செல்ல
பாட்டி சுட்ட பஜ்ஜிகள்
கவனிப்பாரின்றி இருந்ததால் மாயமாக
முழங்கிக்கொண்டிருந்தார் மேடைப் பேச்சாளர்..
எமது ஆட்சியில் திருட்டு கொள்ளை
,குறைந்திருக்கின்றது் தெரியுமா..
pavalamani pragasam
18th August 2013, 07:28 AM
தெரியுமா அர்த்தம்
நடந்ததும் நடப்பதும்
நடக்கப்போவதும் நன்று
கீதையில் கண்ணன் அன்று
சொன்னது போரில் நின்று
புதிராய் தோன்றும் இன்று
chinnakkannan
18th August 2013, 10:19 AM
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனநினைத்தால்
வென்று வரலாம் உலகு
pavalamani pragasam
18th August 2013, 01:29 PM
உலகு உருண்டை
சுத்துது சுழது
சான்றோர் கற்றோர்
ஆராய்ந்து சொன்னது
சுலபமாய் புரியுது
நடுரோட்டில் நாறுது
தலைமுறைகள் தடுமாறுது
கல்லூரி மாணவியரும்
அவர்தம் நண்பர்களும்
நடைபாதையில் போதையில்
தலை சுற்றி நிற்கையில்
உலகு மட்டுமா சுத்துது
வாழ்க்கைப்படகு ஆடுது
அழிவின் விளிம்பிலினிலே
chinnakkannan
18th August 2013, 01:55 PM
விளிம்பினிலே நின்று கொண்டிருந்தது
கண்ணீர்..
எந்த சமயத்திலும்
கன்னத்தில் உருளலாம்..
கண்களில் குறுகுறுப்புப் போய்
சோகம்..
வேணாம்..அழக்கூடாது..
பக்கத்து வீட்டு ஆண்ட்டி தாண்டா செல்லம்..
டபக்கென உன்னைத் தூக்கிட்டாளா..
நோ நோ அழப்படாது..
வா என்கிட்ட..
படக்கென தாவியது குழந்தை
என்னிடம்
அழுகையை முழுங்கி
திரும்பி அவளை முறைத்ததில்
நாங்கள் சிரிக்க
அதுவும் மறந்து சிரித்தது
புரியாமலேயே..
pavalamani pragasam
18th August 2013, 07:47 PM
புரியாமலேயே சொல்வதை எழுதக்கூடாது
வியாசர் விநாயகருக்கிட்ட பதிலாணை
இடைவிடாமல் கதையைச் சொல்லச் சொன்ன
மூத்தவனின் உத்தரவிற்கு மறுமொழி
நிதானமாய் கதை தொடர கண்ட வழி
நின்று கிரகித்து பதித்தான் ஆனைமுகன்
ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்ந்தவரும்
அசுரரும் அந்தணரும் அரசரும் ஆரணங்குகளும்
அவர்தம் அளவில்லா ஆசாபாசங்களும்
யயாதிக்கு யௌவனம் ஈன்று மூப்படைந்த
ஐந்தாம் மகன் பாசமும் பெற்ற பரிசும்
வரிசையாய் தொடரும் மகாகாவியமும்
மனிதன் மாறாது சரித்திரம் மாறாது
தொடரக்காண்பது மாயையா உண்மையா
chinnakkannan
18th August 2013, 09:26 PM
மாயையா உண்மையா என்று இங்கே
…மயக்காமல் சொல்லிவிடு செல்லக் கண்ணா
சாய்கின்ற பொழுதினிலே இங்கு வந்தாய்
.சலிக்காமல் பிடிமண்ணை இட்டுக் கொண்டாய்
வாயைத்தான் உலுக்கிவிட்டுத் திறக்க வைத்தால்
…வண்ணமான உலகமதும் சுற்றக் கண்டேன்
தாய்தானே கேட்கின்றேன் குட்டிக் கண்ணா
…தவிக்கின்றேன் சொல்லிவிடு சின்னக் கண்ணா.!
pavalamani pragasam
19th August 2013, 08:07 AM
சின்னக் கண்ணா யதுகுலக் கள்ளா
சிருங்கார மன்னா மாதவச் செல்வா
சலனமில்லா குளத்தில் எறிந்தாய் கல்லை
எழும்புதே இன்னும் ஓயாத சிற்றலைகள்
chinnakkannan
19th August 2013, 11:18 AM
சிற்றலைகள் கொஞ்சம் பேரலைகள் கொஞ்சம்
என
காலருகில் வந்து
தொட்டுவிட்டு ஏதும்
பேசாமல் உள்வாங்குவதைப் பார்க்கையில்
கடலில் தெரிகிறது
அவளது பிரதிபிம்பம்
pavalamani pragasam
19th August 2013, 02:04 PM
பிரதிபிம்பம் இதுவோ
சொர்க்கத்தின் ருசியோ
தேவலோக இன்பநிலையோ
உள்ளுடும் உணர்வென்ன
பின் மாலை மழையில்
முன்னிரவு குளிர்ந்திட
சட்டென்று பூத்து
குப்பென்று மணந்து
தென்றலில் மரமல்லி
ஜன்னலருகில் குலுங்க
கைவிரல் அசைவில் விரியும்
கணிணி விளையாட்டினிலே
மனம் கிறங்கும் காலம்
சொர்க்கத்தின் நகல் கோலம்
chinnakkannan
19th August 2013, 04:24 PM
கோலமாவேய் கோலமாவேய்
கூவி வரும் வயசாளியிடம்
பாட்டி கூடையிறக்கச் சொல்லி
தொட்டுப் பார்த்து
என்னடா நறநறப்பு பத்தாதே
ம்ம் இவ்ளோதான் தருவேன்..
பேரம் பேசுவாள்
அவனும் பாதியாய்க் குறைத்தாலும்
வாங்கிச் செல்வான்..
இப்போது எனது பேத்தி
ஆனை விலைக்கு
ப்ளாஸ்டிக் கவரில்
வாங்கி வருகையில்
கோலமாவு விற்பவனின்
அழுக்கு உருவம்
நிழலாடுகிறது கண்ணில்
venkkiram
19th August 2013, 05:57 PM
கண்ணில் தூசியென கசக்கிக் கொண்டே
விருப்பமில்லாமல் விளையாடியப் பொழுதில்
ஓடுவதை நிறுத்தி எங்கே காட்டென
எதிர் வீட்டுப்பெண் தன்பிஞ்சு கைகளினால்
எந்தன் இமைவிரித்து ஊதிவிட்ட சுடுகாற்றால்
கண்வலியோடு தானும் பறந்துபோனதொரு உணர்வு
pavalamani pragasam
19th August 2013, 07:06 PM
உணர்வு முழு ஆணின் உணர்வு
அதனோடு விளையாடும் பெண்ணே
அறிந்து செய்கிறாயா வில்லியே
அறியாது செய்கிறாயா வெகுளியே
ஆண் பெண் இரு சாதியின் உடற்கூறு
பனியும் நெருப்புமாய் வெவ்வேறு
தொட்டுத் தொட்டுப் பழகும் கள்ளியே
நீயும் பாலையில் வளரும் கள்ளியே
புது நாகரிகமிது ரொம்ப போலியடி
மானிட வாழ்விதனால் மணக்காதடி
chinnakkannan
19th August 2013, 09:29 PM
மணக்காதடி இதெல்லாம்
போகன் வில்லாப் பூக்கள்
பார்க்க நன்னா இருக்கும்
சூட மாட்டார் யாரும்
என்னை மாதிரி..
கையில் காத்ரேஜ் வண்ணச் சாயமும்
வாயில் சிரிப்புமாக
என் நாற்பது ப்ளஸ் அக்கா சொல்ல
எனக்கு வந்தது அழுகை.
pavalamani pragasam
20th August 2013, 07:52 AM
அழுகை போல் மொழியுண்டா
கழுவி விடும் மருந்துண்டா
மின்னாமல் முழங்காமல் மழை
சொல்லாமல் போய்விடும் கவலை
chinnakkannan
20th August 2013, 09:58 AM
கவலை என எழுதவேண்டுமாம்..
எழுதலாமா.. என நினைக்கையில்
காலருகே ஏதோ ஊற
பார்த்தால் கிடுகிடுகென்று
ஓடி ஒளிந்தது அந்த ஜந்து..
உடன் பாட்டும் வந்தது..
சவலைக் குழந்தையாய்ச் சலிக்கவே வைக்கும்
கவலைக் கரப்பை அடி..!
pavalamani pragasam
20th August 2013, 06:56 PM
அடி மேல் அடி வைத்தால் நகரும் அம்மியா
ஓட்டுக்குள் ஐந்தடக்கும் நல்ல ஆமையா
காடு கொள்ளாமல் மிரண்டுவிட்ட சாதுவா
நிமிர்ந்த நடை கொண்ட ஞானச்செருக்கா
பெண்ணே பெரும் சக்தியே உன் நிறமென்ன
முகம் வெளுக்காதே கண் சிவந்து எழுந்து வா
chinnakkannan
21st August 2013, 10:02 AM
எழுந்து வா வா ம்ம்
சமர்த்தோல்லியோ
மிக இறுக்கமாய்
முகத்தை வைத்துச் சுவற்றைப்
பற்றி
எழப்பார்த்த குழந்தை
தொப்பென விழ..
ஈஸிசேர் தாத்தா
மறுபடி ட்ரை பண்ணுடா..
மறுபடி முயற்சி பண்ணி
மறுபடி விழுந்து
வாய் கோணி
ஆ..
தாத்தா பதறி எழுந்து
அருகில் ஓட
குழந்தை சிரித்தது..
எனில்..
ஆ என்பது
எழுந்துவா தாத்தா என
அதன்மொழீயில்
இருக்கலாம் அர்த்தம்..
pavalamani pragasam
21st August 2013, 12:58 PM
அர்த்தம் இருக்கிறதா வாழ்வில்
குறையில்லாக் குடும்பமாய்
கணவனும் குழந்தையுமாய்
நாகரிக நகரில் சுதந்திரமாய்
பணியுமுண்டு மனநிறைவாய்
ஆடம்பரமாய் செல்வச்செழிப்பாய்
உல்லாசமாய் பயணிக்கையில்
வார இறுதியில் விருந்துண்டு
முழுதாய் இருநாள் கழியுமுன்
ஒரு காலை கயிற்றில் தொங்குகிறாள்
காரணம் தெரியவேயில்லை
கல்வி கூட வரவில்லை போராட
பாசம் இழுக்கவில்லை விடைபெறுமுன்
பொறுப்பில்லாமல் தப்பித்த சுயநலமி
பொறுமையில்லாமல் ஓடும் கோழை
எங்கு சென்றிருப்பாள் புத்திசாலி
சொர்க்கத்திற்கா நரகத்திற்கா
எங்கு போய் என்ன சாதிப்பாள்
chinnakkannan
21st August 2013, 04:33 PM
சாதிப்பாளாக்கும்
இந்த ஷணமே இது வேணும்னு
பிடிவாதம் ஜாஸ்தி
சின்ன வயசுலருந்தே
இப்படித் தான் இருந்தா..
பார்த்தா
கல்யாணம் ஆகி
ஒரு மாசம் தான் ஆறது
எத்தனை மாற்றம்..
அப்படியே மாறிட்டா மாமி
வேலை பண்ற நறுவிசென்ன
அடக்க ஒடுக்கமாப் பேசறது என்ன..
எங்க இருந்து இதுக பெறதுகள்..
அம்மா
பக்கத்து வீட்டு மாமியுடன் பேச
மாமி சொன்னாள்
”உங்களுக்குத் தெரியாதா
மாறவே மாறாதது மாற்றம் தான்
உலகத்திலே
pavalamani pragasam
22nd August 2013, 08:03 AM
உலகத்திலே அழகாக பூத்திருக்கு மொழிப்பற்று
மக்கள் குழாம் உரையாடுவது அவரவர் மொழியிலே
தனி மணம் தனி குணம் கொண்ட தமிழினம் ஏனோ
இதிலே இணையாமல் ஆங்கிலத்தைப் பற்றிடலாமோ
அருமை மகன் உதவியுடன் தமிழ் மென்பொருள்
தரவிறக்கம் செய்தேனே சுற்றத்தை நட்பை
இணையத்திலே தமிழை மணக்கச்செய்ய
வாரீரென அன்பாய் விட்டேன் அறைகூவல்
venkkiram
22nd August 2013, 08:31 AM
அரைகூவல் செய்தேன் அமைச்சரிடம்
நாளைய பிரசுரிப்பில் நீ யாரென
நாடு முழுதும் தெரியப்போகிறதேன
அடுத்த நாள் தினசரிகளில் தலைப்புச் செய்தி
பிரபல பத்திரிக்கை அச்சகம் தீப்பிடிப்பு
pavalamani pragasam
22nd August 2013, 02:22 PM
தீப்பிடிப்பு ஆச்சரியமில்லை
பக்குவமில்லா பருவத்தில்
பஞ்சும் நெருப்பும் அருகிருந்தால்
தகுதியறியா காதல் தடுக்க
வழி தவறிய மகளை காக்க
கதறியழுத பெற்றோர் கண்டோம்
ஊடகங்களில் தினசரி சூடான தீனி
திரும்பிய மகள் மீறுவாளா இனி
chinnakkannan
22nd August 2013, 03:13 PM
இனியும் நடந்து கொண்டு
தான் இருக்கப் போகிறது..
பிறப்பு இறப்பு பூத்தல் காய்த்தல்
மடிதல் மறுபடி
பிறத்தல்..
எல்லாரையும்
தொட்டுக் கொள்ளும்
அதிர்ஷ்டம் கொண்டது
காற்று தான்..
pavalamani pragasam
23rd August 2013, 09:32 AM
காற்றுதான் குளிர்ந்தது
மனமோ கொதித்தது
நிலைகெட்ட மாந்தரை
வீணரை நினைந்து
chinnakkannan
23rd August 2013, 03:53 PM
நினைந்து நடக்கையிலே நேசமுடன் வந்தே
இணையாய் நடக்கும் நிலவாய் – இணையேவுன்
பொன்னைப் பழித்திடும் பூமுகம் நெஞ்சினில்
பின்னி வருகுது பார்
pavalamani pragasam
23rd August 2013, 10:56 PM
பார் பார் என்று இன்று
மூடி மூடி வைத்த அழகு
ஏன் ஏன் இந்த வக்கிரம்
எது எது இங்கு இன்பம்
chinnakkannan
24th August 2013, 10:50 AM
இன்பம் மிகப்பொங்கு முன்விழிகள் இன்றைக்குத்
துன்பத்தின் தாலாட்டைப் பாடுவதேன் – மென்மை
மனத்துள் உறைந்திருந்த மன்னன் தொலைவில்
பணமீட்டச் செல்வதால் தான்
pavalamani pragasam
24th August 2013, 11:39 AM
பணமீட்ட செல்வதால் தான்
பொறுப்பு வந்தது ஒருவனுக்கு
புரிய முடிந்தது உலகின் போக்கை
பெருமை மனதில் பிறந்தது
பக்குவம் அடையும் பொழுதே
பொழுதும் போகின்றது நல்லபடியாய்
chinnakkannan
24th August 2013, 01:59 PM
நல்லபடி யாய்க்கவிதை நெய்ய வேண்டும்
..நாவினிலே கலைமகளும் சொல்ல வேண்டும்
கல்லென்றே இருந்தமனம் கனிந்து இங்கே
..கனிவான சிற்பமென மாற வேண்டும்
வில்லினிலே சீறிவரும் அம்பைப் போல
…வெற்றிதரும் கற்பனைகள் மிளிர வேண்டும்
சொல்லரசி நாமகள்நீ என்னை வாழ்த்தி
..சோர்விலாமல் நற்கவிதை அருள வேண்டும்
pavalamani pragasam
24th August 2013, 06:47 PM
அருளவேண்டும் ஆலாலகண்டன் அறிவுடன் வாழ
பள்ளிக்குப் படிக்க பஸ்ஸில் பயணம் செய்யும்
கள்ளிக்கு வருமாம் காதலும் கத்திரிக்காயும்
சாதி கடந்து வயது மறந்து மாலை மாற்றி
வாழ விடாத வினை வந்தால் பஞ்சாயத்து
தாய் வீட்டுக்கு விரட்டுவான் தாணாக்காரன்
chinnakkannan
25th August 2013, 12:06 PM
தாணாக் கார ரிடம்சொன்னால்
...தயங்கா மல்தான் தண்டிப்பார்
வீணாய் எதுவும் பேசாமல்
...வீட்டைக் காலி செயுமென்றார்
ஆனால் என்ற குடித்தனத்தை
...அலட்சியம் செய்தே நோக்குகையில்
தேனாய்க் கேட்டது ஒருகுரலும்
...தெளிவாய்ச் சொன்னது அம்மழலை
வாங்க அங்க்கிள் குட்மார்னிங்க்
..குரலைக் கேட்டேன் வந்தேன்நான்
போங்க நீங்கள் என்மார்க்*ஷீட்
..பார்த்தால் வெரிகுட் சொல்வீர்தான்..
பாங்காய்க் காட்டிய பேப்பரினை
..வீட்டுக் காரர் பார்க்கையிலே
தேங்கிய கோபம் தான்மறந்து
..குட்பாய் சொல்லிச் சென்றுவிட்டார்..
pavalamani pragasam
25th August 2013, 07:50 PM
சென்றுவிட்டார் நிலவுக்கு
வென்றுவிட்டார் விண்ணை
அறியார் அடுத்த வீட்டாரை
மதியார் ஊர் வழக்கத்தை
தீவாய் வாழ்ந்திருப்பார்
தனிச் சட்டங்களுடனே
chinnakkannan
26th August 2013, 11:17 AM
சட்டங்களுடனே அழகாய்
மாட்டியிருந்த தாத்தாவின்
சான்றிதழ்கள் எல்லாம்
அப்பாவின் காலத்தில் பரணில்..
பேரனின் காலத்தில்
சட்டம் பிரிக்கப் பட்டு
அவை குப்பையில்
போடப் படுவதை
தொங்கிக் கொண்டிருந்த
சட்டமணிந்த
பேரனின் சான்றிதழ்
பார்த்துக் கொண்டிருந்தது
திகைத்தபடி
pavalamani pragasam
27th August 2013, 07:57 AM
திகைத்தபடி நிற்கிறாள்
சுழித்தோடுது காட்டாறு
மிரட்டும் அதிவேகம்
தினமொரு நவீனம்
புதுப் புது சாதனம்
எத்தனை மென்பொருள்
கையளவு மணலுடன்
கலங்கிடும் கிழவி
venkkiram
27th August 2013, 08:19 AM
கிழவி படும் அவஸ்தை சொல்லி மாளாது
கிழவன் ஒரேயடியாய் போய்ச் சேர்ந்த பின்
அம்போன்னு நட்டாத்துல விட்டுப் போயிட்டியேனு
அப்போக் கூட கிழவனைத் திட்டித் தீர்ப்பாள்
chinnakkannan
27th August 2013, 10:08 AM
திட்டித் தீர்ப்பாள் அம்மா..
ஹோம் ஒர்க் பண்ணியா
டிவி பார்க்காதே
ஏன் இத்தனை விளையாட்டு..
எப்பப் பார்த்தாலும்
குண்டு குண்டா கதைப்புத்தகம்
ஒழுங்கா சாப்பிடேண்டா..
கோபம் கோபமாக வரும்..
மனதுக்குள்
டிவியிலும் கதைகளிலும் வரும்
ராட்சசி,பூதம் என
நினைத்திருக்கிறேன்..
இப்போது
கெஞ்சுகிறேன்..
அம்மா
டிவி பார்..
ரிலாக்ஸா இரு..
புக்ஸ் கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு படி..
மெல்ல நட
அப்பத் தான் கொஞ்சமாவது பசிக்கும்
சாப்பிடலாம்லயா..ப்ளீஸ்..
படுத்த படுக்கையாயிருக்கும்
அவளிடமிருந்து
வந்தது மெல்லிய புன்னகை..
pavalamani pragasam
27th August 2013, 12:20 PM
புன்னகை பூக்கும் பெண்கள்
படிக்கவேண்டிய புத்தகங்கள்
புரியாத அதிசய புதிர்கள்
ஆச்சரியம் ஆமோதிப்பு ஆவல்
ஏளனம் எக்காளம் இறுமாப்பு
போலி மரியாதை கடமை
கபடம் காதல் களிப்பு
நஞ்சு கலந்த நயவஞ்சகம்
மறைத்த ஆழ் துயரம்
எதுவென்று எப்படி அறிவாய்
chinnakkannan
27th August 2013, 05:56 PM
அறிவாய் அறிவால் அழகாகப் பாடம்
அரிவையே கற்றாய் எனக்கூற பாவையவள்
தெரிந்த கலையும் தெவிட்டாமல் தானுயர
பற்றினாள் குருபாதந் தான்..
pavalamani pragasam
27th August 2013, 06:20 PM
குருபாதந் தான் என்பார்கள்
சனியா சுக்கிரனா சூரியனா
கட்டத்துக்குள் பயன்களை
கவனமாய் கணிப்பார்கள்
விண்ணில் மின்னிடும் கிரகம்
எத்தனை பேர் ரசிப்பார்கள்
chinnakkannan
28th August 2013, 11:39 AM
ரசிப்பார்கள்..
கவலைப் படாதீர்கள்
நன்றாகத் தான் வந்திருக்கிறது..
இயக்குனர் உறுதி மொழிந்தும்
தயாரிப்பாளருக்கு உறுத்தல்..
பின்ன..
ஊரில் மஞ்சக் காணி முதல்
மனைவி,சின்ன வீட்டின் நகை வரை
விற்றாயிற்று..
படம் ஓடவேண்டும் தான்..
என்ன செய்வது..
கூப்பிடு சமீபத்திய பாடலாசிரியரை
எடு ஒரு பாட்டை..
படம் வெளியாகி
வெற்றி பெற
விமர்சனங்கள் வந்தன..
அந்தக் குத்துப்பாட்டைத் தவிர்த்திருக்கலாம்..
படத்துக்குக் கிடைத்திருக்கும் விருது..
மறுபடி மொழுமொழு முகமணிந்த
தயாரிப்பாளர் சிரித்தார்..
விருதுல்லாம் வேணாம்ப்பா
எனக்குப் பணம் வருது..போதும்..!
pavalamani pragasam
28th August 2013, 02:58 PM
போதும் சாதாரண ஒப்பனை
பருவக் குமரிக்கு என்கிறேன்
புதுமலருக்கு கவர்ச்சியிருக்கு
பூச்சுக்கள் சாயங்கள் களிம்புகள்
பக்குவமான பராமரிப்புகள்
பேணுவர் பேரிளம்பெண்கள்
chinnakkannan
29th August 2013, 10:20 AM
பேரிளம் பெண்கள்
நடுத்தர வயதுக்கும்
முதுமைக்கும் நடுவில்..
கொஞ்சம் எரிச்சல்
அவ்வப்போது படுவார்கள்
எதற்கெடுத்தாலும் குற்றம்
கணவனையும் குழந்தைகளையும்
சொல்வார்கள்..
இருந்தாலும் நல்லவர்கள்..”
”என்னடி செஞ்சுக்கிட்டிருக்க அங்க”
“உன்னப் பத்தித் தான்
எழுதிக்கிட்டிருக்கேம்மா..”
“சொல்றது காதில விழலை..
சரி சரி..வேகமாக் குளிச்சுட்டு
ஸ்கூலுக்குக் கிளமப்ற வழியப் பாரு
நிற்காதே மசமசன்னு.!.”
pavalamani pragasam
29th August 2013, 01:43 PM
மசமசன்னு நிப்பான் ஆம்பள
மகுடம் சூட்டினதா நினைப்பு
தலைதான் அவன் ஐய்யமில்ல
கழுத்து சொல்றபடி அசையணும்
பொம்பளதான் கழுத்து புரியுதா
இணையத்துல படிச்ச முத்து
chinnakkannan
31st August 2013, 09:52 AM
முத்தண்ணன் பக்கத்து வீடு
சிறு வயது முதலே பயம்..
நேரில் வந்தால் ஓடி ஒளிவோம்
அவர் தம்பி மட்டுமல்ல
தெரு நண்பர்கள் அனைவரும்..
கண்டிப்பு ஜாஸ்தி..
முப்பது வருடம் கழித்து
தளர்ந்திருந்த அவரைப்
பார்த்த போதும் பேசவில்லை..
முறுவலித்து நகரப் பார்க்க..
அவர் தான் இழுத்து நிறுத்தி..
எப்படி இருக்கே இருக்கீங்க தம்பி..
பார்த்து நாளாச்சு
ஒல்லியாப் பார்த்தது உஙகளை..
இப்போ அகலமாய்ட்டீங்க..
பதிலுக்கு அவர் தம்பியை
என் பழைய தோழனைக் கேட்டால்..
ஒன்றும் சொல்லாமல்
பெருமூச்சு விட்டு
சின்ன வயசு பயம்
உங்க கிட்ட இன்னும் இருக்கு..
அவன் நினைக்கலியே
கோவிச்சுக்கிட்டுப் போனவன் தான்..
பாத்துப் பேசியே பத்து வருசம் ஆச்சு
என்றவர் மறுபடி என்னை மேல் கீழாகப்
பார்த்து
தாங்க்ஸ்பா உன்னில்
என் தம்பியப் பார்த்துட்டேன்..
எனச்சொல்லி
திரும்பி நடந்தார் தளர்நடையில்
pavalamani pragasam
31st August 2013, 10:44 AM
தளர்நடையில் தங்க மேனியில்
கொடியிடையில் கோவையிதழில்
சொக்குவான் அரசகுமாரன்
போகுமிடமெல்லாம் ஒருத்தி
அவ்வண்ணமே இருக்கிறாள்
அலுக்கிறது பழைய புதினம்
chinnakkannan
1st September 2013, 10:18 AM
பழைய புதினம் தான்..
அழகான உயிர்ச் சித்திரங்கள்
கொஞ்சம் பழுப்படைந்து..
சில பல துணுக்குகள்,
பாதி மட்டும் இருக்கும்
சினிமா விமர்சனம்,
பாதி இருக்கும் வாசகர் கடிதம்,
என
அத்தியாயம் பிசகாமல்
பைண்ட் செய்யப் பட்டு
இருந்தது கிடைத்தது..
அக்காவுடையது தான்..
படிக்கப் படிக்க சுவாரஸ்யம்..
ஒரு அத்தியாயத்தின்
முதுகுப் பகுதியில்
சுஜா ஐ லவ்யூ ரமேஷ்
எனக் கிறுக்கியிருக்க..
சுஜா அக்கா பெயரில்லை
ரமேஷீம் யார் எனத்தெரியாது..
அக்காவிடம் கேட்க வேண்டும்..
வருடங்கள் பலவானதால்
நினைவிருக்குமா தெரியவில்லை..
ம்ம்
கதையைவிட இதில்
கூடியது சுவாரஸ்யம்
venkkiram
1st September 2013, 10:35 AM
சுவாரஸ்யம் குன்றிப் போகும் உறவுகள்
சுவடுகள் கலைந்துபோன நினைவலைகள்
சுழியில் மாட்டித் திசைமறந்த சருகுகள்
சுழன்று வரும் வெறுமைப் பொழுதுகள்
pavalamani pragasam
1st September 2013, 08:07 PM
வெறுமைப் பொழுதுகள் தேன்கூட்டில் இல்லை
சுறுசுறுப்பான மூளைக்கு ஓய்வென்பதில்லை
தேடலும் ஆர்வமும் ஆராய்ச்சியும் உந்தும்போது
அயர்வில்லை அலுப்பில்லை ஆனந்தம் மட்டுமே
chinnakkannan
2nd September 2013, 01:32 PM
ஆனந்தம் மட்டுமே தெரிய
வந்தவளிடம்
அம்மா எதுவும் பேசவில்லை..
மெளனமாய்க் காஃபி கலந்து
கொடுக்க
குடித்துவிட்டு
நான் அவருக்குக் கலக்கறேம்மா..
கொஞ்சம் டிகாக்*ஷன் தூக்கலா
சர்க்கரை கம்மியா இருக்கணுமாம்..
உனக்குத் தெரியாது..
எனச் சொல்ல
கோபத்தில்பார்த்த அம்மாவின் கண்களில்
தெரிந்தது சந்தோஷம் உள்ளூர..
Russellozd
3rd September 2013, 12:45 AM
சந்தோஷம் உள்ளூர பறந்தது வானுயர
பெற்றோரின் மனம். மகளுக்கு மணம் .
கடைசி நிமிடத்தில் மூத்தவளின் காதலரிய
படையாய் வந்தவர் இளையவளை பெண்கேட்க
திகைத்துரைத்த மௌனத்தை சம்மதத்திற் கறிகுறியாய்
திரித்துணர்ந்து மேடையில் அமர்த்தி விட்டாரே.
வாயை அடைத்து வாழ்வை கெடுத்து
கனவை கலைத்த கூட்டம் விடுத்து
கண்டம் தாவி சென்றது தம்பதி
நெஞ்சமொன்று சேராததை குறிப்பதை போல
தஞ்சம் புகுந்தனர் கண்டத்தின் இருமூலையில்
காதலால் இணையாத அவ்விரு உள்ளங்களை
காலம் வந்து பிணைக்க முடியுமாயென்ன ?
விவாகரத்தில் முடிந்தது சோகக் கதை
தாய்தந்தைய ருள்ளம் உற்றது வதை
pavalamani pragasam
3rd September 2013, 08:02 AM
வதை செய்கின்றான் என்னை
நொடிக்கொரு கேள்வி வருது
ஒன்றுக்குமே விடை கிடையாது
சின்னக் கண்ணை உருட்டியே
சிற்றேவல் புரிய வைக்கிறான்
தூங்காது தூங்கவிடாது படுத்தி
இன்பமான துன்பமிதை பெற
பாட்டியாகவேண்டும் ஒருத்தி
chinnakkannan
4th September 2013, 11:57 AM
ஒருத்தி அங்கே தலைமேலே..
..ஒழுங்காய் அழகாய் அமர்ந்திருக்க
ஒருத்தி பாதி உடலினிலே
..உள்ளம் கொடுத்தும் தானிருக்க
கருவம் ஏதும் கொள்ளாமல்
..களிப்பாய்ச் சிரிக்கும் சிவனேயுன்
புருவம் சற்றே தான் நிமிர்த்திப்
..பார்த்தே அருள்வாய் உலகினையே.
pavalamani pragasam
4th September 2013, 01:06 PM
உலகினையே சிறு பந்தாக்கி
உள்ளங்கையிலதைத் தாங்கி
விரல் நுனியிலதை இயக்கி
விந்தை புரியும் விஞ்ஞானமே
மந்திரம் போட்டது போலவே
மக்கட்தொகை கிடக்குதே
இணையில்லா இணையத்திலே
இணைந்தன நெஞ்சங்களே
chinnakkannan
5th September 2013, 11:26 AM
நெஞ்சங்களே நெடுநாளதும் கழிந்தாலெனில் நினைப்பீர்
மஞ்சில்முகம் புதைக்கும்நிலா மலர்ந்தேவெளி வரும்போல்
வஞ்சம்மிகு உலகும்நிதம் வழங்கும்சுவை அறிந்தே
கஞ்சம் இலா அறிவையிந்தப் பணியில்தரும் எமையே
pavalamani pragasam
5th September 2013, 01:05 PM
எமையே வீழ்த்திய வியப்பொன்று
என்றும் இங்கு இரு பெற்றவர்கள்
மெத்தப் படித்தவர் பட்டங்கள் பல
பெற்றவர்கள் ஆயினும் அவர் கீழே
நிற்பர் தம் மழலையர் பார்வையில்
எளிய தகுதிகள் பெற்றவராயினும்
அசைக்க முடியா நம்பிக்கையுடன்
குருபக்தியுடன் பின்தொடரப்படும்
பெருமைக்குரிய ஆசிரியர்களே
பிஞ்சுவிரல் பற்றிய பிரம்மாக்கள்
chinnakkannan
8th September 2013, 03:56 PM
பிரம்மாக்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
தோன்றிக் கொண்டு தான்
இருக்கிறார்கள்..
உதாரணத்திற்கு
நமது இளம் இயக்குனர்...
பிரமாண்ட கரகோஷம் செய்ய
அந்த இயக்குனருக்கு
நினைவுக்கு வந்தது
தான் இயக்கிய படமும்
அதிலிருந்த
தான்பார்த்த நான்கு குறுந்தகடு படங்களும் தான்..
pavalamani pragasam
9th September 2013, 07:22 AM
குறுந்தகடு படங்களும் தான்
வெகுவாய் மனதில் பதியும்
பொன்னான பழமொழிகளாய்
சின்ன வயது நினைவுகளாய்
மாம்பழம் சப்பி முடிந்ததும்
கொட்டையை காயவைத்து
தணலில் இட்டு சுட்டெடுத்து
சொத்தையாவெனப் பதறி
நல்ல பருப்பெனின் நிம்மதி
ஊரைக் கூட்டி விருந்துண்டு
ஆசையாய் நடக்கும் திருமணம்
சொத்தையாகும் பயமின்றி
chinnakkannan
10th September 2013, 12:31 PM
பயமின்றி துள்ளித்தான் பாய்ந்தகாலம் போனது..
..பாரினிலே கண்டகாட்சி பாழ்மனதில் பூண்டது
சுயங்கொண்டே சோர்விலாமல் சூதுஎதும் கொண்டிரா
...சுறுசுறுப்பு மிகக்கொண்ட இளமையதும் போனதே
வயல்வரப்பில் விளைந்தநாற்று அசைந்தாடிக் காற்றிலே
..வானம்பார்த்து நின்றதுபோல் வாழ்ந்தகாலம் போனது
கயல்விழிகள் மனதினுள்ளே கலந்தாடி நீந்திய
..காலமெல்லாம் போச்சுபோச்சு முதுமைவந்து சேர்ந்ததே...!!
pavalamani pragasam
11th September 2013, 07:38 AM
சேர்ந்ததே அவசரமாய் மடமையும் பேராசையும்
மரத்தினின்று உதிர்ந்த கனியில் மேதை உதயம்
நிழல் தரும் போதியின் கீழ் அமர பிறந்தது ஞானம்
காடழியும் கொடுமையில் அழியுது அறிவும் அருளும்
chinnakkannan
11th September 2013, 11:58 AM
அருளும் அணியாய் முறுவல் முகத்தில்
..அணையாச் சுடராய் மிளிர்ந்தே ஒளிரும்
புருவம் வளைந்தே அழகாய் விரிந்தே
..புவனம் த்னையே சிரித்தே மயக்கும்
சிறுவன் எனவே நினைத்தால் மிகவும்
..சிறப்பாய்த் தகப்பன் குறையை அகற்றும்
குருவே முருகா உனையே பணிந்தேன்
..கொடுப்பாய் பணிவும் அறிவும் அறமும்..
pavalamani pragasam
11th September 2013, 02:10 PM
அறமும் தூங்கிவிட்டதால்
அரக்கர் கைகளில் ஆட்சி
பேய்களும் பிசாசுகளும்
வைத்ததே சட்டமென்று
கலிகாலம் நடக்குதின்று
பாட வா பள்ளியெழுச்சி
chinnakkannan
12th September 2013, 12:02 AM
பள்ளி யெழுச்சியினைப் பாங்காகத் தானிங்கு
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
pavalamani pragasam
12th September 2013, 08:05 AM
செய்கவே மனம் போலவே
காஞ்சிபுரம் பனாரஸ் பட்டோ
கனகமணி ஆரமோ வைரமோ
கதம்ப மாலையும் மல்லிகையும
பால்கோவாவும் பக்கோடாவும்
பை நிறைய திணித்த காசும்
அன்புடனே நீர் வழங்கினால்
பெற்றுக்கொள்ள கசக்குமோ
chinnakkannan
15th September 2013, 02:26 PM
கசக்குமோ மருந்து என்றே கடினமாய் முகஞ்சு ளித்து
பசப்பலும் செய்தொ ளிந்து பாட்டியால் பிடியும் பட்டு
விஷமிலை குட்டி கொஞ்சம் வாயினைத் திறடி என்றே
வசம்புபோல் ஏதோ இடவும் ஓடியே பறந்தது சுரமும்..
pavalamani pragasam
15th September 2013, 04:20 PM
சுரமும் விட்டபாடில்லை
வாய் கசப்பும் போகவில்லை
பெண்ணினம் கொதிக்குது
கவசமின்றியே தவிக்குது
இன்னும் எத்தனை பேர்
தொங்கவேண்டும் தூக்கிலே
chinnakkannan
16th September 2013, 11:46 AM
தூக்கிலே போட்டு
மேல் வைக்கப் பட்டிருக்கும்
முறுக்குகளை
பாட்டி அறியாமல் ஏறி
நான்கைந்து கை நிறைய அள்ளி
மாடிக்கு எடுத்துப் போய்
கடக் மொடக் என்று கடித்து
ருசித்த காலம் போயின..
இன்று
பளபளக்கும்ப்ளாஸ்டிக் டப்பாவில்
கைக்கெட்டிய படி சிரிக்கும்
முறுக்குகள்..
திட்டுவதற்கு பாட்டி இல்லை
எடுத்துச் சாப்பிட த்ரில் இல்லை..
கடக் மொடக்கென கடிக்க
இல்லை பற்கள்..
pavalamani pragasam
16th September 2013, 03:15 PM
பற்கள் தெரிய சிரித்தோம்
சிரித்துக் கொண்டேயிருந்தோம்
பள்ளிக்கூடப் பருவத்திலே
பாட்டி வீட்டில் கூடியாடிய
பழைய சொர்க்கத்தையே
கண்டது போல் களித்தோம்
அக்கா பேரன் திருமணத்தில்
சந்தித்த உறவுத் தோழிகள்
chinnakkannan
17th September 2013, 10:37 AM
தோழிகள் செவிகள் எல்லாம்
...தொய்வுறும் வண்ணம் நன்றாய்
நாழிகைப் பொழுது நின்று
..நயம்பல உரைத்துப் பின்னே
ஊழிபோல் அவளை உள்ளே
...தள்ளியே விடவும் அங்கே
நாலையும் தொலைக்க வைக்கும்
..நல்லறம் தொடர்ந்த தன்றோ..
pavalamani pragasam
17th September 2013, 12:07 PM
தொடர்ந்த தன்றோ வர்த்தக தந்திரம்
மக்கட்தொகை பெருகிய நாடிதில்
மகளிர் மாவையும் களிம்பையும்
பூசிப் பூசி அழகு சிலைகளாய் மிளிர
அமெரிக்க அரங்கில் இந்திய அழகி
சூட்டப்பட்டாள் அலங்கார கிரீடம்
chinnakkannan
17th September 2013, 12:33 PM
கிரீடத்தைத் தலைதனிலே அணிந்து அங்கே
..கிடுகிடென்றே கனமதனை உளத்தில் வாங்கி
விறுவிறுப்பாய் வாலியுந்தான் அவையில் சொன்னான்
...வெண்ணிலவாம் தம்பிமனை தாரைதன்னை
பற்றிடுவேன் எனக்கொன்றும் பழியும் வாரா
..பார்த்திடலாம் சுக்ரீவன் செயல்கள் எல்லாம்
சுற்றமெல்லாம் திகைத்திடவே செய்த தீமை
...சுற்றிவந்து அவனுயிரை எடுத்த தன்றோ..
pavalamani pragasam
18th September 2013, 08:03 AM
உயிரை எடுத்த தன்றோ
உள்ளே சென்ற திரவம்
கண்ணில் படவில்லையோ
குடித்துவிட்டு ஓட்டாதீர்
எச்சரிக்கைப் பலகை
மதுவை ஒழிக்க முயல்
chinnakkannan
22nd September 2013, 01:27 AM
முயல்வதில் வேகங் கூட்டி மூச்சுகள் தன்னை விட்டு
புயலென முயலும் பாய்ந்தே போட்டியில் ஓடிய வேகம்
சுயத்திலே சிந்தை கர்வம் சொக்கியே கொண்ட தாலே
வியப்புகள் பலதைச் சேர்த்தே வென்றது ஆமை அங்கே..
pavalamani pragasam
22nd September 2013, 08:20 AM
அங்கே தேடி
இங்கே தேடி
எங்கே போனது
என் மூக்குக்கண்ணாடி
பாட்டியின் அடையாளம்
வெளுப்பது பரிதாபம்
chinnakkannan
24th September 2013, 03:08 PM
பரிதாபமாய் பசியோடுதான் பழக்கத்திலே கரங்கள்
வரியோடிய முதுமையதன் வழக்கத்தையே உரைக்க
பரிவானவர் சிலபேரெதும் தருவாரென நீட்ட
கரிபூசிய முகத்தோடதைக் காணாதுசெலல் தவறே
pavalamani pragasam
25th September 2013, 07:48 AM
தவறே அதிசயமான தவறே
பூந்தளிர் பாதந்தான் நடந்தது
அதில் பூகம்பம் விளைந்தது
பசி தாகம் தூக்கம் தொலைந்தது
அளவிட முடியாத சேதாரம்
அதுவே வாழ்வின் ஆதாரம்
chinnakkannan
26th September 2013, 02:06 PM
ஆதாரந் தனைக்கேட்டு முதியவரின் குற்றம்
..அழகுறவே தவறென்றே சுந்தரனும் சொல்ல
மோதாதே சிறுபயலே என்னிடமா கேட்பாய்
..முக்கியமாய்ச் சான்றிதழும் இங்கிருக்கு தப்பா
பூதாகர மெனவே காட்டிவிட்ட ஓலை
..புனிதமனச் சுந்தரனின் பெற்றவரின் ஒப்பம்
வேதாந்தம் பலச்சொல்லும் கிழவனென ஈசன்
..வித்தையன்று புரிந்ததுவும் விளையாட்டுத் தானே..
pavalamani pragasam
27th September 2013, 08:37 AM
விளையாட்டுத் தானே காட்டுது என் செல்லப் பறவைகள்
ஆப்பிரிக்கக் கிளி அழகிய கிளி இரு ஜோடி இரு வண்ணம்
பயந்து பானைக்குள் பதுங்கும் பக்கம் சென்று பார்க்கையில்
காத்துக் கிடந்தேன் எப்போது முட்டையிடும் பொரிக்கும்
என்ன வண்ணத்திலே எத்தனை குஞ்சு பிறக்குமென
பக்குவமாய் ஊறிய பயிறுகளை கருத்தாய் ஊட்டினேன்
அறிகுறியே இல்லை என் ஆசை நிறைவேறவெனவே
மெத்த வருந்தி நிதமமும் நான் கவனித்து வருகையிலே
ஆஹா! நேற்று கண்டேன் ஐந்தாவதாய் ஒரு பறவை
பச்சை வண்ணத்திலே முழு இறகுகளுடனே அழகாய்
முட்டையிட்ட சுவடில்லாமல் குஞ்சு குரல் கேளாமல்
ரகசியமாய் வந்துதித்த அதிசயம் எனக்கு பேரின்பம்
chinnakkannan
30th September 2013, 12:49 PM
பேரின்பம் சிற்றின்பம் என்றெல்லாம் சொல்லி
..பிரித்துத்தான் பேசுவது என்னென்று அங்கே
ஊரிலிரு நண்பர்கள் சந்தித்த போது
..உளமார மனமாரச் சொன்னானே ஒருவன்
தேரினிலே வருகின்ற முருகனவன் அழகை
..திகட்டாமல் பார்ப்பதுவே பேரின்பம் என்றான்
வாரிவிடும் வள்ளலனெ பிரம்மனவன் தந்த
..வஞ்சிமுகம் கொஞ்சுமொழி எனச்சொன்னான் ஒருவன்
காரிருளில் கன்னியுடன் சுகிப்பதல்ல இன்பம்
...கண்மல்க இறைவனிடம் கொள்வதுவே இன்பம்
தூறிவரும் சாரலென தோகையவள் இன்பம்
..துவண்டுவிடும் வறண்டுவிடும் எனப்பேச்சு கூட
நேராக அறிவதற்கு எந்த இடம் என்றே
..நெடுநேரம் பலவிதமாய் யோசனைகள் கொண்டு
தேரினையே இழுத்துவரும் திருவிழாவின் போது
..தெரிந்துகொள்வோம் எனச்சொல்லி பிரிந்திடவும் செய்தார்..
சிவந்தநிறம் சிரித்தவிழி சிறுமழலைத் தோற்றம்
..சிந்தனையில் வந்துவிடும் சீர்மிகுந்த ஏற்றம்
உவந்தபடி முருகனையே பார்த்தவனின் நெஞ்சோ
..உணர்வுடனே வஞ்சியிடம் சென்றவனை எண்ண
துவண்டயிடை துடிக்குமிதழ் திரண்டவுடல் கொண்ட
..தேவியவள் அருகினிலே ஆர்வமுடன் வந்தும்
குவலயத்தின் குமரனையே இன்னொருவன் எண்ணி
..கொள்ளாத பேரின்ப நிலையினையே பெற்றான்
pavalamani pragasam
1st October 2013, 07:54 AM
பெற்றான் உலகத்தார் நன்றியை
இணையத்தை கண்டுபிடித்தவன்
தூரங்களைத் தொலைத்தவன்
இதயங்களை இணைத்தவன்
இணையில்லாதோர் சேவகன்
இன்றிங்கோர் இனிய நாயகன்
chinnakkannan
2nd October 2013, 01:36 PM
நாயகனைப் பற்றியொரு பாட லிங்கு
.. நலமுடனே எழுதுவென்று சொல்லி விட்டார்
ஆயர்குல்த் தில்உதித்து அரிய செயலை
..அழகுறவே செய்துவிட்ட கண்ணன் மற்றும்
தூயமனம் கொண்டராமன் என்று மேலும்
..துள்ளிவரும் கோபநிறை பரசு ராமன்
பாயாமல் பதுங்கிநின்ற கூர்மத் தோற்றம்
..பன்றிமுகம் மச்சமென மேலுங் கொண்டே
நடுஙகவைக்கும் நரசிங்கத் தோற்ற மொன்று
..நல்லவித பலராமன் தோற்ற மொன்று
ஒடுங்கித்தான் வாமனனாய் வரங்கள் கேட்டே
..ஓங்கியகால் உலகளந்த தோற்ற மொன்று
முடுக்கிவிட்ட கோபத்தால் மூர்க்கங் கொண்டு
..மோதிமோதி உலகினையே அழிக்கும் தோற்றம்
தொடுத்தநற் பெருமாளே சிவந்த உந்தன்
..தாமரைப்பூப் பொற்பாதம் பணிந்தேன் நானே..
pavalamani pragasam
2nd October 2013, 02:16 PM
நானே நானே என முந்தி எழுந்தால்
மண்டையில் குட்டு முந்திரிக்கொட்டை
குட்டியும் மட்டந்தட்டியும் தணியாது
முனைப்பு ஆர்வம் ஆச்சர்யம் வீரம்
chinnakkannan
3rd October 2013, 02:59 PM
வீரமுடன் வேலெடுத்து எதிரியின்மேல் தானெய்து
..வெற்றிநகை புரிந்தவந்த மன்னனவன் தன்னுடைய
ஊரென்று அழைக்கின்ற தலைநகரம் நுழையுங்கால்
..உணர்ச்சியெலாம் மிகக்கோண்டு கோஷங்கள் பலவாக
காரிருளாம் பொழுதெனினும் கண்விழித்துக் கூடியங்கே
..களிப்புடனே வாழ்த்துகளை மக்களலை சொல்லிடவே
வேர்முதலாய் மகிழ்ச்சியுடன் வீடடைந்தால் நீள்பிரிவால்
..வேல்விழியாள் பார்வைசுட விக்கித்தே நின்றானே..
pavalamani pragasam
4th October 2013, 07:15 AM
விக்கித்தே நின்றானே
விண்ணகம் ஏகிய காந்தி
ஜப்பானிய குரங்கு மூன்று
கண்ணை காதை வாயை
மூடிக் காத்த தீமையை
திக்கெட்டும் பரப்பிடும்
பரபரப்பான ஊடகங்கள்
ஆற்றிடும் சேவையிலே
chinnakkannan
8th October 2013, 10:17 AM
சேவையிலே மோர்க்குழம்பு
ஊற்றி சாப்பிட்டால் நல்லா இருக்கும்டா
அது என்ன பிடிக்கலைங்கற..
திட்டிக் கொண்டே உண்டது அந்த்க் காலம்..
இன்று
ஹார்லிக்ஸ் நூடுல்ஸாம் நல்லதாம்
சாப்பிடு என்கிறாள் மனைவி
ம்ஹீம்
பேசவில்லையே மறுபேச்சு!
pavalamani pragasam
8th October 2013, 02:08 PM
மறுபேச்சு பேசாமல்
தரக்குறைவைத் தாங்கி
மக்கள் மாக்களாய்
மாறுகின்ற கொடுமை
நெஞ்சு பொறுக்குதில்லையே
காடழிக்க காத்திருக்கு
அக்னி குஞ்சொன்று
ரௌத்திரம் பழகியே
என்னென்று சொல்ல
எப்படி விவரிக்க
பொங்கும் ஆத்திரம்
வார்த்தை தின்றதோ
வாய் செத்ததோ
பித்தாகி திகைக்க
அனலாய் மூச்சு
துருத்தியாய் வீச
அக்கிரமத்தை சொல்ல
அமைதியை தேட
தவிக்கிறேன் நழுவும்
நிதானத்தைப் பற்ற
முயல்கிறேன் நானும்
முடியலையே இன்னும்
குலக்கொழுந்தொன்று
பசுந்தளிரொன்று எங்கள்
பால்வடியும் முக செல்வன்
ஒன்பது வயது பாலகன்
பாட்டியுடன் கொஞ்ச வந்த
அழகிய விடுமுறையில்
பத்து நாளுக்கு முந்தைய
வயிற்றுபாதை திரும்பவே
கூர்மதி கொண்டவளாம்
அனுபவமுள்ளவளாம்
என் பின்னே பிறந்தவளாம்
மருத்துவம் பயின்றவளாம்
எதற்கும் ரத்த பரிசோதனை
பார்த்திடலாமென பரிந்துரைக்க
கையில் கொடுக்கப்பட்ட
சோதனை முடிவுத்தாள்
அணுகுண்டை போட்டது
கிட்டதட்ட நான்கு பங்கு
வெள்ளை அணுக்கள்
சொல்ல நா கூசும்
பொல்லாத நோயின்
காலனின் கைப்பிடியை
கொடிய வேதனையை
சுட்டிக் காட்ட அதிர்ந்தோம்
சிதைந்தோம் மொட்டையாய்
எச்சரிக்கை முறையாய்
சுமக்காத சீட்டினை கண்டு
சீறிய என் தங்கையும்
வேறிடத்தில் மறுபரிசோதனை
செய்திட பணிக்க இரவும்
துவங்கிட காத்திருந்தோம்
மறு நாள் மறு சோதனை
முடிவை கையில் வாங்க
வார்த்தது பாலை வயிற்றில்
அந்த இரண்டாம் சோதனை
ஒரு கோளாறுமில்லையென
கண்ணகியாய் எரிக்கக்
கிளம்பியவளை நிறுத்தி
பொறுமை புகட்டினர்
நகரின் உச்ச தரம் கொண்ட
சோதனை கூடத்தில்
மறுநாள் மூன்றாம் முறை
சோதனை முடித்து அதிலும்
இருக்கவில்லை பிழையேதும்
சிறந்த குழந்தை நிபுணரையும்
கண்டு தெளிந்த பின்னும்
ஆறவேயில்லை எனக்கு
நுகர்வோர் நீதிமன்றத்தில்
தண்டனை பெற்றுத் தராது
குடும்பம் அடைந்த துயர்
கொஞ்சமும் ஆறாது
என்றே ஒற்றைக்காலில்
நின்றவள் முதல் சோதனை
மையத்தின் தலைமையை
தொலைபேசியில் அழைத்து
நடந்ததை விவரித்தேன்
இது நீதியா நியாயமா
நெஞ்சு பொறுக்குமா
அடுக்குமா இக்கொடுமை
பத்திரிகையில் கிழிக்கட்டுமா
கோர்ட்டில் வழக்காடட்டுமா
தொழில் தர்மம் இதுதானா
குமுறினேன் கொதித்தேன்
மழை இன்னும் பெய்திட
காரணனாய் ஒரு நல்லவன்
மறுமுனையில் இருந்து
என் எரிமலையை
அப்படியே உணர்ந்து
கண்ணியமும் கொள்கையும்
கொண்ட கனவானாய்
கொள்ளை பணிவாய்
மன்னிக்கக் கோரி
எளிதில் மன்னிக்கும்
சாமானிய குற்றம்
இதுவல்லதான் என்றும்
உடனடியாய் விசாரித்து
நடவடிக்கையாய் அக்கொடிய
தவறு செய்த அலுவலரை
பத்து நாள் பணிநீக்கம் செய்து
பழிவாங்கும் திட்டத்தை என்
மனதிலிருந்து துடைத்தானே
நொந்த மனமும் உடலும்
என்று முழுதாய் தேறுமோ
chinnakkannan
11th October 2013, 11:55 PM
தேறுமோ இல்லை என்றால்
..தெளிவுடன் சொல்க ஐயா
ஆருடம் சொலலக் கையில்
..அரைமணி பார்க்க லாமா
மாறுதல் வருமா தந்தை
..மருந்தினில் குணமாய் போமா
ஊரிடம் கேட்ட போது
..உள்ளதைச் சொல்வீர் என்றார்...
காரிருள் படர்ந்த கண்கள்
..கலங்கவெ வைக்கு தய்யா
மீறியே வந்த அழுகை
..மென்மையாய்ப் பீற ஜோஸ்யர்
பாரிலே உனது தந்தை
..பலதினம் இருப்ப ரென்றார்
வாரியே மகனும் தந்து
..வசந்தமாய்த் தாவிச் சென்றான்..
சொன்னது பொய்தான் என்றே
..சிந்தையில் படுது என்றே
வண்ணமாய் மனைவி கேட்க
..வருத்தமாய் அவரும் சொன்னார்
என்னதான் சொல்ல இவளே
..இவனது ஜாத கத்தில்
திண்ணமாய் இவனின் முடிவு
..தெரிவதை என்று சொன்னார்..
pavalamani pragasam
12th October 2013, 08:27 AM
சொன்னார் சிந்தனை சிற்பி சாக்ரடிஸ் அன்றே
சமூகம் கெட்டதே சீரிய கலாசாரம் அழிந்ததே
அதர்மமும் அக்கிரமமும் தலைவிரித்தாடுதே
இன்று வாழ்வது போல் கணக்காய் சொன்னாரே
ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னும் கலிகாலம்
சுற்றி உருளுது மாற்றமின்றி இக்காலச்சக்கரம்
chinnakkannan
20th October 2013, 10:42 PM
சக்கரம் சுற்றச் சுற்ற
..சடக்கெனப் பானை அங்கே
பக்குவம் கொண்ட வாறே
..பாங்குடன் எழவும் அங்கே
சக்கையைத் துடைத்து மெல்ல
..சங்கடம் கொளாத வாறு
வெக்கையில் வைக்க பானை
..விம்மியே மிளிரு மன்றோ..
சொக்கிடும் அழகு கொண்ட
..சுந்தரப் பானை எல்லாம்
தக்கன வாக வைத்து
..தகுந்ததாய்ப் பணமுங் கேட்டால்
பக்கெனச் சிரிக்கும் ஆட்கள்
..பார்த்திடேன் இவனை இங்கே
சொக்கிடும் தங்கம் போன்று
..சொல்கிறான் விலையை என்றே
திக்கெனச் சோல்லும் போதில்
..தேகமும் சோர்ந்து போக
மிக்கவும் துக்கம் வந்து
...மென்மையாய் மனதில் ஏற
சிக்கலை நீக்கப் பானை
..சிரிப்பது போலத் தோன்றி
பக்குவம் கொள்வான் நெஞ்சை
..பாவமக் கலைஞன் தானே..
pavalamani pragasam
21st October 2013, 08:25 AM
கவிஞன் தானே
காண்கிறானே
கலைக்கண்ணாலே
ஒளிந்திருக்கும் அழகை
கலைந்திருக்கும் ஒழுங்கை
அத்திறமையும் கண்ணும்
வடிக்கும் நேர்த்தியும்
வாய்க்குமோ எல்லோர்க்கும்
chinnakkannan
22nd October 2013, 10:40 AM
எல்லோர்க்கும் நமஸ்காரா
ஐ யாம் ரியல்லி ப்ரெளட் டு
மீட் யூ டாமில் பீப்பிள்..
இஃப் யூ ஆர் நாட் தேர் ஐயாம் ஆல்ஸோ நாட் தேர்.
டாமில் குட் மொழி லாங்க்வேஜ்
என்னை இந்த டாமில் கான்ஃபெரன்ஸிக்கு
கூப்பிட்டு ஹானர் பண்ணியமைக்கு தாங்க்ஸ்
ஐ லவ் யூ ஆல்
ஜெய் ஹிந்த்
pavalamani pragasam
22nd October 2013, 02:02 PM
ஜெய் ஹிந்த் என சொன்னால்
தேகம் முழுதும் சிலிர்க்கும்
ஜவான்களின் அணிவகுப்பு
அவர் நடையின் மிடுக்கு
அணிந்த உடையின் எடுப்பு
காதர் சட்டைகள் குல்லாக்கள்
அந்நியனைத் துரத்திய
ஆண்டுக்கணக்கில் நடத்திய
செக்கடியிலும் குண்டடியிலும்
தூக்கு மரத்திலும் செத்து
பல வழியில் போராடிய
மாவீரர்களும் அவர்கள்
பெற்றுத் தந்த சுதந்திரமும்
நினைவுக்கு வருகுதே
chinnakkannan
23rd October 2013, 02:25 PM
வருகுதே மன்னர் தேர்தான்
..வாசலில் நிற்கா தேடா
உருக்கிடும் வெய்யில் அங்கே
...உளமுடன் உடலை வாட்ட்
பருவமோ விளையாட் டென்றால்
..பற்பல அடிகள் எல்லாம்
பருகுவாய் எந்தன் பிடியில்
..பாங்குடன் சிக்கி விட்டால்..
சொல்லச் சொல்லக் கேட்காமல்
..சிறுவா நீயும் நின்றாயே
வில்லில் சென்ற அம்பைப்போல்
..வேகங் கொண்ட தேரதுவும்
கொள்ளை கொண்ட துன்னுயிரை..
..கொவ்வை ஆனது என்விழிகள்
கல்லாய்ப் போன நெஞ்சம்தான்
..காலன் கொண்டான் என்மகனே..
எத்தனை பணந்தந் தாலும்
..என்னுயிர் சென்ற தய்யா
சத்தமும் சந்தங் கொண்டு
..சலங்கையின் ஒலிகள் போல
முத்தெனப் பிறந்த அந்த
..மூத்தவன் மரித்து விட்டான்
பித்தென ஆன தய்யா
..பாவியென் மனமும் இன்று..
குறுக்கிலே வந்த எந்தன்
..குறுகுறு மைந்தன் காலன்
விரித்தவவ் வலையில் நன்றாய்
..விழுந்ததை என்ன சொல்ல
மறுகுதே எந்தன் நெஞ்சம்
..மன்னவர் நீரும் இதற்கு
பொறுப்பெனச் சொல்லு கின்றீர்
..பொறுப்பெலாம் விதிதான் ஐயா...
pavalamani pragasam
24th October 2013, 03:17 PM
ஐயா புது யுகமிதில்
படித்தவன் பாமரன்
யார் அறிவாளியென
அறிந்தேன் கதையிதில்
குறுக்கு சந்தொன்றில்
ஒருநாள் ஷோக்கான
குட்டிப்பூனையொன்று
தன வாலை உயர்த்தி
சுற்றி சுழன்று நெடுநேரம்
ஆடக் கண்டது ஓர்
பெரிய பூனையுந்தான்
என்ன செய்கிறாய் என்றது
மிடுக்குடன் குட்டிப்பூனை
பெரிய படிப்பு படித்தேன்
வாலில் உள்ளது சந்தோசம்
என்றே கற்றதையொட்டி
பிடிக்க முயல்கிறேன் அதை
என்றவுடன் சொன்னது
பெரிய பூனை எளிமையாய்
நான் பெரிய படிப்பேதும்
படித்தேனில்லை ஆயினும்
அறிவேன் சந்தோசம் என்
வாலில் உள்ளதென என்
வேலைகளை நான்பாட்டுக்கு
செய்து வர வால்பாட்டுக்கு
என் பின் வருகிறதாக்கும்
அதனுடன் சந்தோசமும்
சாதாரணமாய் சொல்லிவிட்டு
கிளம்பியது சோலியைப் பார்க்க
chinnakkannan
30th October 2013, 09:21 PM
பார்க்கப் பார்க்க
வெகு அழகாய் இருக்கும்
விதம் விதமாய் வட இந்திய இனிப்புகள்
விலை அதிகம் என
எனக்குத் தெரியாத பருவம்
எச்சில் ஊறும் நாவில்
கேட்டால்
அம்மா அதெல்லாம் வேண்டாம்
நான் பண்ணித்தரேன் நம்ம மைசூர்பாகு..
பண்ணியும் தருவாள்..
ம்ம்
இப்போதோ
ஸ்வீட்ஸ்டாலே வைக்கலாம்
சம்பாத்யம் அதிகம்
ஆனால் முடியாது..
வீட்டுக்காரருக்குச் சர்க்கரை..
ஏதோ என்னால் முடிந்த
தியாகம்..
pavalamani pragasam
31st October 2013, 07:50 AM
தியாகம் செய்யணுமாம்
மகள் வளர்ந்ததும்
அலங்காரமாய் பூணுவதை
மருமகள் வருமுன்
ருசியாய் தின்னுவதை
அவ்விருவர் தடை
இன்பம் அனுபவிக்க
எந்த நொந்த கிழம்
சொன்னதிது அறியேன்
நேரெதிர் என் வாழ்வில்
chinnakkannan
1st November 2013, 11:06 AM
என்வாழ்வில் வந்துவந்த தீபா வளியை
...எண்ணயெண்ண நெஞ்சினிலே உற்சா கந்தான்
பொன்னாக மின்னிவரும் புதிதாய்த் தைத்த
..பாவாடை தாவணியில் இளமை கொண்ட
பெண்ணுடைய கண்களிலே மின்ன லைப்போல்
..பூரிக்கும் துடிப்பான துள்ள்லைப் போல்
வண்ணமெனப் பொங்கிவரும் என்றும் தானே
..வார்த்தைகளில் சொல்லவொண்ணா எழிலும் தானே..
pavalamani pragasam
1st November 2013, 12:42 PM
எழிலும் தானே இடம் பிடித்தது
இதழோர சின்னப் புன்னகையில்
பேரெழில் கண்டிட பெரிதாய்
சிரிக்கத் தூண்டிய பேராசையில்
பேரழிவே நிகழும் பெண்ணே
தவிர்த்திடுக பெருந்துன்பம்
chinnakkannan
1st November 2013, 06:57 PM
பெருந்துன்பம் கண்களிலே கொண்ட அந்தப்
..பாவையிடம் பெரியவரும் சென்று கேட்டார்
பருவத்தின் வாயிலிலே நிற்கும் பெண்ணே
..பார்வையிலேன் சோகத்தைக் காட்டி நின்றாய்
உருவத்தில் குமரியென இருக்கும் உந்தன்
..உணர்வினிலே துயரமேந்தான் வந்த திங்கே
குருவெனவே நினைத்துநீயும் சொல்வாய் நானும்
..கூறிடுவேன் ஏதேனும் நன்மை என்றால்..
உருவாக்கி விட்டபெற்றோர் யாரோ அறியேன்
..உணர்வுகளைத் தூண்டிவிட்ட வல்ல நண்பன்
சுறுசுறுப்பாய் என்னுடனே ஆடி நின்றே
..சோர்விலாமல் பலகதைகள் பேசி வந்தான்
துரும்புக்கும் துயர்செய்யா தூய உள்ளம்
..தோற்றுத்தான் போனதையா பாழும் விபத்தால்
முறுவலிக்கும் அதிர்ஷ்டமது எனக்கு இல்லை..
..மேனியுடன் நானிருக்க அதுவும் தொல்லை..
காதலனின் மரணத்தால் கலங்கி நிற்கும்
..கன்னியவள் கைபற்றிச் சொன்னார் அவரும்
பாதகந்தான் பெருந்துயர்தான் அறிவேன் நானும்
..பாவியான எமனுந்தான் பழியைச் செய்வான்..
வாதஞ்செய வரவில்லை உனக்கு பெண்ணே
..வாழ்க்கையது இருக்கிறது எழுந்து நிற்பாய்..
மோதவ்ரும் துயரங்களை நின்று ஏற்று
..மேய்ப்பதுவே வாழ்க்கையெனச் சொன்னார் நன்றாய்.
உப்பென்றும் காரமென்றும் உடலில் ஏற
...உணர்வுகளில் துயரந்தான் மறந்துபோகும்
சப்பென்று இருந்தாலது தயிரில் ஊறி
..சாரமில்லா புளிப்பான சாதமன்றோ
தொப்பென்று இதயத்தை விட்டி டாதே
..தோல்விகளும் துயரங்களும் நிலைத்து நிற்கா
முப்பொழுதும் இறைவனையே நினைக்கும் போதில்
..முன்னிற்கும் வாழ்க்கையது விரைந்து போகும்..
சொன்னவரோ பெரியவர்தான் ஆனால் என்ன
..சோர்வதனை நீக்கினரே ஆஹா நன்று
வண்ணமயில் சற்றுசற்றாய் தேறிக் கொஞ்சம்
..வாகாகக் கேட்டுவிட்டாள் ஐயா நீர்யார்..
எண்ணமதில் வைக்குவண்ணம் நானும் ஒன்றும்
..ஏற்றமிகு பெரியவனா ஒன்றுமில்லை..
உன்னைப்போல் பேரழகாய் பெண்கள் ரெண்டு
..அழகான சம்சாரம் இரண்டு பிள்ளை..
சின்னதான வியாபாரம் சொத்து கொஞ்சம்
..சோர்விலாமல் வாழ்க்கைதான் சென்ற தம்மா
கண்வைத்தார் யாரென்றால் காலம் தானே
..காலத்தில் மாற்றத்தில் விபத்து ஒன்றில்
என்குடும்பம் மரித்திடவும் இலக்கில் லாமல்
..எங்கெங்கோ சுற்றுகையில் கண்ணில் பட்டாய்
என்றேதான் சொல்லியவர் செல்லப் பார்த்தால்
..எளியவரின் கைகளிலே ஒன்று இல்லை....
rajeshkrv
2nd November 2013, 02:10 AM
பெருந்துன்பம் கண்களிலே கொண்ட அந்தப்
..பாவையிடம் பெரியவரும் சென்று கேட்டார்
பருவத்தின் வாயிலிலே நிற்கும் பெண்ணே
..பார்வையிலேன் சோகத்தைக் காட்டி நின்றாய்
உருவத்தில் குமரியென இருக்கும் உந்தன்
..உணர்வினிலே துயரமேந்தான் வந்த திங்கே
குருவெனவே நினைத்துநீயும் சொல்வாய் நானும்
..கூறிடுவேன் ஏதேனும் நன்மை என்றால்..
உருவாக்கி விட்டபெற்றோர் யாரோ அறியேன்
..உணர்வுகளைத் தூண்டிவிட்ட வல்ல நண்பன்
சுறுசுறுப்பாய் என்னுடனே ஆடி நின்றே
..சோர்விலாமல் பலகதைகள் பேசி வந்தான்
துரும்புக்கும் துயர்செய்யா தூய உள்ளம்
..தோற்றுத்தான் போனதையா பாழும் விபத்தால்
முறுவலிக்கும் அதிர்ஷ்டமது எனக்கு இல்லை..
..மேனியுடன் நானிருக்க அதுவும் தொல்லை..
காதலனின் மரணத்தால் கலங்கி நிற்கும்
..கன்னியவள் கைபற்றிச் சொன்னார் அவரும்
பாதகந்தான் பெருந்துயர்தான் அறிவேன் நானும்
..பாவியான எமனுந்தான் பழியைச் செய்வான்..
வாதஞ்செய வரவில்லை உனக்கு பெண்ணே
..வாழ்க்கையது இருக்கிறது எழுந்து நிற்பாய்..
மோதவ்ரும் துயரங்களை நின்று ஏற்று
..மேய்ப்பதுவே வாழ்க்கையெனச் சொன்னார் நன்றாய்.
உப்பென்றும் காரமென்றும் உடலில் ஏற
...உணர்வுகளில் துயரந்தான் மறந்துபோகும்
சப்பென்று இருந்தாலது தயிரில் ஊறி
..சாரமில்லா புளிப்பான சாதமன்றோ
தொப்பென்று இதயத்தை விட்டி டாதே
..தோல்விகளும் துயரங்களும் நிலைத்து நிற்கா
முப்பொழுதும் இறைவனையே நினைக்கும் போதில்
..முன்னிற்கும் வாழ்க்கையது விரைந்து போகும்..
சொன்னவரோ பெரியவர்தான் ஆனால் என்ன
..சோர்வதனை நீக்கினரே ஆஹா நன்று
வண்ணமயில் சற்றுசற்றாய் தேறிக் கொஞ்சம்
..வாகாகக் கேட்டுவிட்டாள் ஐயா நீர்யார்..
எண்ணமதில் வைக்குவண்ணம் நானும் ஒன்றும்
..ஏற்றமிகு பெரியவனா ஒன்றுமில்லை..
உன்னைப்போல் பேரழகாய் பெண்கள் ரெண்டு
..அழகான சம்சாரம் இரண்டு பிள்ளை..
சின்னதான வியாபாரம் சொத்து கொஞ்சம்
..சோர்விலாமல் வாழ்க்கைதான் சென்ற தம்மா
கண்வைத்தார் யாரென்றால் காலம் தானே
..காலத்தில் மாற்றத்தில் விபத்து ஒன்றில்
என்குடும்பம் மரித்திடவும் இலக்கில் லாமல்
..எங்கெங்கோ சுற்றுகையில் கண்ணில் பட்டாய்
என்றேதான் சொல்லியவர் செல்லப் பார்த்தால்
..எளியவரின் கைகளிலே ஒன்று இல்லை....
சி.க அருமை அருமை
pavalamani pragasam
2nd November 2013, 08:14 AM
ஒன்று இல்லை ரெண்டு இல்லை
பலகாரக்கடையே போலிருக்கும்
சுட்டு வைத்த பட்சணங்கள்
ஆளுக்கொன்று பிடிக்கும்
அனைவரும் ருசித்துண்பதை
கண்டு மனம் முழுதும் இனிக்கும்
இன்று பிள்ளைகள் வராததால்
எண்ணைசட்டி அடுப்பிலேறாமல்
பண்டிகையில்லா சாதாரண நாள்
வரும் வருடம் வரமாகட்டும்
chinnakkannan
9th November 2013, 01:34 PM
வரமாகட்டும் மக்களுக்கு
என் அறிவும் அனுபவமும்
என்று தான் இந்தப் பதவியை ஏற்றேன்..
அது ஏனோ சாபமானது..
மெளனத்தின் மூலம்
சில பல விஷயங்களைச்
சமாளிக்கலாம் என நினைத்தது
பூசியது முகத்தில் கரி..
ஓய்வு பெறும் நாள் நெருங்க
நெருங்க என் முகத்தில் கூடுகிறது
பிரகாசம்..
நாட்டிலும் அது ஏற்படும் என
பலர் எண்ணுவது
எனக்கு வேதனை..
மற்றவர்க்ளுக்கு ம்ம் நம்பிக்கை..
pavalamani pragasam
10th November 2013, 08:25 AM
நம்பிக்கை தொலைத்த ஆசாமிகள்
அகங்காரம் தொனிக்கும் குரல்கள்
அர்த்தம் அதிகமில்லா தீர்ப்புகள்
பட்டினிச்சாவு நாட்டில் நடக்க
கோடிகளைக் கொட்டி சாட்டிலைட்டா
அரசுக் கொட்டிலின் பாதுகாப்பு
ஆடம்பர செலவை விட கம்மியடா
குரங்காய் மரத்தில் வாழ்ந்தவன்
சொகுசாய் காரில் பயணிப்பதெப்படி
ஓயாத விஞ்ஞான ஆராய்ச்சியாலடா
chinnakkannan
2nd December 2013, 09:17 PM
ஆராய்ச்சியால் அடா
எல்லாம் என்னுழைப்பு
நான் தான் செய்தேன்
இந்த நோய்தீர்க்கும் மருந்தினை
என விஞ்ஞானி முழங்க
உதவியாளன் கண் நிலம் நோக்க
தட்டுப்பட்டன
மீளா உறக்கத்தில் இருந்த வெள்ளெலிகள்..
pavalamani pragasam
3rd December 2013, 08:03 AM
வெள்ளெலிகள் துள்ளி ஓடும்
கிளி ஒன்று யாரு என கத்தும்
பாட்டியின் தம்பி சிறு வீட்டில்
பேரப்பிள்ளைகள் எங்களுக்கு
பாட்டியுடன் அங்கு செல்கையில்
மனதில் வழியும் குதூகலம்
chinnakkannan
3rd December 2013, 02:04 PM
குதூகலமாகத் தான் இருக்கும்
வருட முடிவு வர வர..
அடுத்த வருடம்
இன்ன செய்யலாம்
இப்படி இருக்கலாம்
இவ்வளவு சம்பாதித்து
இவ்வளவு சேமிக்கலாம்
வேலை மாறலாமா
கல்யாணம் செய்து கொள்ளலாமா
இன்னும் இன்னும்..
வருடக் கடைசி நாளின்
கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர்
புதுவருட முதல் நாளில் தோன்றும்
ஆச்சு இன்னொரு வருஷம்..
ம்ம் நல்லா இருக்கட்டும்..
என்ற நினைப்புடன்
நல்லா இருக்குமா
என எழும் கேள்விக் குறியும்..
இருந்தாலும்
தொடரும் நம்பிக்கை..
pavalamani pragasam
4th December 2013, 07:42 AM
நம்பிக்கை நட்சத்திரங்கள்
நாளைய சூரியன்கள்
நம் கலங்கரைவிளக்கங்கள்
நல்ல இளைய பிள்ளைகள்
chinnakkannan
5th December 2013, 03:27 PM
பிள்ளைகள் அங்கு மிங்கும்..
..பேச்சுகள் பலவாய்க் கத்தி
எள்ளியே ஓடிச் செல்ல
..ஏற்றமாய் நோட்ட மிட்டு
விள்ளலாய் எடுத்த இட்லி
..வாயினில் போட மறந்த
தள்ளாத பாட்டி சொன்னாள்
..தக்கவாய் பாத்துப் போங்க.
pavalamani pragasam
7th December 2013, 07:31 AM
போங்க என்றால் வாங்க
வாங்க என்றால் போங்க
ஊடி விளையாடி மகிழ
வஞ்சியர் தனி அகராதி
chinnakkannan
7th December 2013, 11:38 AM
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்கும் உன் அழகே
pavalamani pragasam
7th December 2013, 01:33 PM
அழகே ஆயிரம் கப்பலை கடலிறக்குமாம்
அதி நீள போரினை நடத்தி வைக்குமாம்
ஆபத்தின் உறைவிடமாகிக் கிடக்குமாம்
அன்றும் இன்றும் காவியத்தின் கருவாம்
chinnakkannan
10th December 2013, 02:33 PM
கருவாமென கனிந்தேசொல கணவன்முகம் மலர்ந்தே
திருவேயிவள் எனவேசொலி தளிர்மேனியை அணைத்தே
தருவேன்பல விதமாகவே பரிசேயெனச் சொலியே
பருவத்திலே தாயானவள் இதயமதை நிறைத்தான்..
pavalamani pragasam
11th December 2013, 07:04 AM
நிறைத்தான் இல்லத்தை
பட்டால் நகை நட்டால்
பகட்டால் சொகுசால்
பரிவொன்றே போதும்
பெண்ணைப் போற்றவென
புரியாத அவன் பாமரன்
chinnakkannan
20th December 2013, 11:44 AM
பாமரன் போலத் தோற்றம்
.,..படகினில் வந்த கூட்டம்
சாமரம் வீசும் தென்றல்
..சாற்றிய மென்மை உள்ளம்
கோமகன் ராமன் மீதோ
...கொண்டதோ பக்தி வெள்ளம்
பூமனம் கொண்ட குகந்தான்
..புவனமும் அறியும் அம்மா..
pavalamani pragasam
20th December 2013, 01:15 PM
அம்மா அம்மம்மா
பற்றி எரியுதம்மா
புயலின் நடுவினில்
தேவேந்திரன் மகள்
கேட்கக் கூசும் சோதனை
வேலைக்காரியால் வேதனை
முட்டி மோதும் அரசியல்
நடந்ததுதான் என்னவோ
chinnakkannan
20th December 2013, 11:43 PM
என்னவோ என்றே நெஞ்சில்..
..ஏதோவோர் அச்சம் கூட்ட
மின்னலைப் போலத் தாவி
...மென்மையாம் எந்த்ன் பெண்ணின்
கண்ணிலே உற்றுப் பார்த்தால்
..கரித்துளி இல்லை என்றால்
வண்ணமாய்க் குவித்து வாயால்
..வக்கணம் காட்டு றாளே..!
pavalamani pragasam
21st December 2013, 09:34 AM
காட்டுறாளே குருட்டுப் பாசம்
ஒன்றிரண்டு பெத்த தாயின்று
கண்டிப்புக்கு அடங்காதவை
அவள் வளர்த்த செல்லங்கள்
பிஞ்சில் பழுத்து வெடித்த
மீசை அரும்பிய விடலைகள்
மிகப்பெரியதோர் வாகனத்தில்
பயங்கர வேகத்தில் மின்னலாய்
விதிமுறைகள் மீறி பறந்து
சாலையோரம் சிவனே என்று
நடந்து சென்ற நல்லவரை
முதியவரை மோதி நொறுக்கி
மருத்துவமனையில் சேர்த்து
நினைவு திரும்பாமலே அவர்
சில நாள் பாவமாய் கிடந்தது
பல லட்சங்கள் வீணே கரைத்து
யந்திரத்தில் மூச்சு விட்டு
இறுதியில் உலகை விட்டு
பயணிக்க யார் காரணம்
chinnakkannan
23rd December 2013, 08:23 PM
காரணம் கேட்க லாமா
...காரிகை கண்ணின் ஓரம்
ஆரமாய்க் கோலம் கண்டு
...அவனுமே சொன்னான் மெல்ல
பாரமாய் இருந்த நெஞ்சம்
..பகிர்வதால் இளகு மன்றோ
ஈரமாய்ச் சொல்ல அங்கே
..எந்திழை முறுவல் செய்தாள்..
சொல்ல நினைத்தால் முடிந்திடுமோ
...சோகம் என்னை மறந்திடுமோ
அள்ளி முடிக்கும் வார்த்தைகளை
...அழகாய் அளவாய்த் தான்போட்டு
மெல்லக் கேட்கும் சகநடிகா
...மேவிச் சொல்வேன் கேள் கதையை
வல்ல விதியின் விளையாட்டா
...வாட்டும் வினையாய் ஜாதகமா...
நடிகை என்றே எனை அறிவாய்..
.. நட்பாய் பழகத் தான் துடிக்கும்
விடியல் அறியா பறவையென
..வஞ்சி எனைநீ அறியாயே
கடிதாய் வந்த ஓர்காதல்
..காரிகை என்னை அள்ளீயதே
துடிக்கும் இளமை இன்னபிற
..தோழன் பிரிவும் காரணமே..
மெல்லச் சிரித்தான் சகநடிகன்
...மேகம் போலத் தான்கருமை
கொள்ளா இருந்தால் அதுநடிப்பு
...கோதை உனக்குத் தெரியாதா
விள்ளீச் செல்லும் மேகம்போல்
..வேகமாய் துயரும் மாறிவிடும்
அள்ளிச் சிரிப்பை முகத்தினிலே
...அழகாய் அணிவாய் எனச்சொன்னான்
pavalamani pragasam
24th December 2013, 08:34 AM
சொன்னான் முடிவாக உறுதியாக
போகாதே அங்கே இங்கே என
நிற்காதே கண்ட இடத்திலென
கண்கொத்திப் பாம்பானான்
வெடித்தது பூகம்பம் அங்கு
ஆணாதிக்க முழு உருவே
கொடுங்கோலனே உன்னடிமை
நானல்ல புது யுக பெண்ணடா
உன் பிடிக்குள் அடங்குவேனா
என் நகர்வை கண்காணிக்கும் நீசனே
என் அசைவை கவனிக்கும் அற்பனே
பிரிந்து செல்கிறேன் இப்பொழுதே
சுதந்திரமாய் பறந்து திரிவேன்
பிழைத்துக்கொல்வேன் நீயின்றி
செத்துவிட மாட்டேன் பட்டினியில்
பிரவாகம் நிற்கவில்லை
பரிதாபமாய் தவித்தான்
தன்னிலை விளக்கினான்
அன்பே ஆருயிரே கண்மணியே
கொலைகார மனித எதிரிகள்
தீவிரவாதிகள் பலசாலிகள்
கொடிய நவீன போர்முறைகள்
பயங்கர உயிகொல்லி கருவிகள்
நச்சுப்புகையும் மின்சார ஆயுதமும்
இன்னும் பிற வியூகமும் அமைக்க
பதறாமல் இருப்பேனோ சொல்லம்மா
ஆபத்தை நான் கண்ட இடமெங்கும்
நீ போகாதிருக்க வேண்டினேன்
பொல்லாத பேச்செல்லாம் ஏனம்மா
போகாதே என்னைவிட்டு நில்லம்மா
பதியின் பாசமறிந்தாள் சின்னவள்
பாகாய் உருகினாள் சரணடைந்தாள்
chinnakkannan
25th December 2013, 06:32 PM
சரணடைந்தாள் ஏந்திழையும் கணவனவன் பாதம்
..சங்கடந்தான் இருந்தாலும் நின்றானே ஆங்கே
வரமெனவே மனையாளாய் வாய்த்திட்ட வஞ்சி
..வனவாழ்க்கை என்றாலும் மயங்காமல் அங்கே
துறவுக்காய் பதிசெல்ல பின்னாலே சென்று
..தூய்மைமிகு வாழ்க்கையினை வாழ்ந்தவளும் அன்றோ
உறவினிலே பழிவந்தால் உலகின்முன் நீக்க
..உணர்ச்சியினை மட்டாக்கி நின்றானே அண்ணல்
pavalamani pragasam
26th December 2013, 02:54 PM
அண்ணல் காந்தி சிரிக்கிறார்
ரூபாய் நோட்டுக்களில் தினம்
அறியாத அப்பாவியாய்தானே
ஆசை முகம் மறக்கலானதே
அன்றாட பணப் பரிமாற்றம்
அட்டையிலும் எங்கேயும்
அல்லது கணினி பெட்டியிலுமென
ஆகிவிட்ட கலிகாலமிதிலே
chinnakkannan
28th December 2013, 09:16 PM
கலிகால மிதிலேபல கனமாய்வரும் விஷயம்
பலிகொள்ளுதே பலவாண்டுகள் பகிர்ந்தேவரும் நடத்தை
வழியாய்தினம் வரமாய்ப்பலர் மனத்தேயுள மனிதம்
வழிமாறுதே குறைந்தேயினி மறைந்தேயது விடுமோ
pavalamani pragasam
29th December 2013, 10:02 AM
மறைந்தேயது விடுமோ
மாயமோ மந்திரமோ
தினம் தினம் தேயுதே
காணாமலே போனதே
இரு வாரத்தில் இருளானதே
கலங்கிய கணத்தில்
கீற்றாய் முளைத்தது
சிறிது சிறிதாய் வளர
மனமதுவும் குளிர
முழுதாய் கண்ட நிலவு
வாழ்வதின் ஏற்ற இறக்கம்
காட்டியதோ தெளிவாகவே
chinnakkannan
1st January 2014, 12:37 PM
தெளிவாகவே தான் பிறக்கிறது
புதுவருடம்
நல்ல எண்ணங்கள்
நல் வாழ்க்கை
நல்ல விஷயங்கள்
இன்னும் பல நல்லவை தருவதற்கு..
எல்லாம்
எப்படி நாம் இருக்கிறோம் என்பதை வைத்து
pavalamani pragasam
2nd January 2014, 08:51 AM
வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்
இயலாதவன் வசனம் வஞ்சிக்கு கசக்குதே
பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறான்
பொறுக்காமல் பொறுமுகிறாள் உறுமுகிறாள்
பூலோகத்தைப் பீடித்த பிணியிதுவல்லவோ
புற்றாய் கொல்லும் இது மருந்தேயில்லையே
chinnakkannan
20th January 2014, 10:49 PM
மருந்தே இல்லையே..
என்ன பண்ண..
நாலு நாள் தாடி
கண்ல
செம்மறியாட்டுக் கண்ணோட மந்தம்
கன்னம் ஒட்டிப் போச்சு
என்னடான்னு கேட்டா
நஸ்ரியாக்கு கண்ணாலம் நிச்சயம் அதான்னு
சொல்றான் பாவிப்பய புள்ள
அதுக்கா இப்டி
நாமெல்லாம் பத்மினிலருந்து
ராதாலேர்ந்து
இன்னும் பலபேரைப் பார்த்துருக்கோம்
பேராண்டி..
வாழ்க்கையே ஒரு
பாஸிங்க் க்ளவ்டா
ஈஸியா ஃப்ரீயா உடுன்னு
அவன் பாஷைலயே சொன்னா..
போ..தாத்தா
ஒனக்குப்புரியாதுங்கறான்..
போறான் போ..புரியாத பய..!
pavalamani pragasam
21st January 2014, 08:58 AM
புரியாத பயன்னு நினைச்சிட்டானுங்க
வெளக்குமாத்த தூக்கிட்டு கிளம்பிட்டான்
வேகமா பெருக்கித் தள்ளுறான் குப்பைய
மிரண்டு ஓடுது பழம் பெருச்சாளி எல்லாம்
பெண்டு பிள்ளைக பிழைக்கப் போகுது
பரிகாரம் கிடைக்கப்போகுது பாவத்துக்கு
chinnakkannan
21st January 2014, 10:29 PM
பாவத் துக்காய் பரலோ கத்தில்
..பங்காய் வருமே ச்ம்பள மாக
சாவின் பின்னால் சாத்தான் எல்லாம்
...சற்றே பிய்த்தே உனையே உண்பர்
ஆவ தென்ன வென்றே கேட்டால்
..அமைதி யுடனே நல்ல செயலை
அவதி எதுவும் கொள்ளப் படாமல்
...அழகு டனேதான் செய்தால் நன்றாம்..
நன்றி குருவே என்றான் சிறுவன்
..நலமாய் அழகாய் நயமாய் உரைத்தீர்
இன்னும் இன்னும் என்றே என்னை
..கேட்கத் தூண்டும் இனிக்கும் பேச்சு
என்ன கேள்வி கேட்டால் பதிலும்
..ஏகம் வருமே என்ற படியால்
கேட்பேன் நானே உம்மைத் தானே
..பாவம் என்றால் என்ன என்றான்..
அடுத்தவன் சொத்து வேண்டா அழுக்கெனப் பொறாமை வேண்டா
துடுக்குடன் கோபம்கொண்டே துயர்படும் வார்த்தை எல்லாம்
மிடுக்குடன் சொல்ல லாகா மேலுமே பாவம் உண்டு
விடுத்திடு பாப எண்ணம் விளங்கிடும் உனது வாழ்வே
பாவமென்றால் என்னவென்றே தெரியா மல்நான்
..பாங்காக நன்கிருந்தேன் குருவே ஆனால்
தூவுமழை சாலையிலே சேறாதல் போல்
..சிந்தையிலே பாபம்பற்றி சொல்லி விட்டீர்.
பாவத்தைப் பற்றிய்தும் சொன்னால் கூட
..பாபம்தான் என்பதுவும் சரியா ஐயா
நாவசைத்தே எதையோதான் சொல்ல வந்த
.. நற்குருவும் சொல்லாமல் சென்று விட்டார்..
pavalamani pragasam
22nd January 2014, 08:01 AM
சென்றுவிட்டார் பெரியவர்
பூடகமாய் உயிலை எழுதி
வயக்காட்டை உழுதனர்
புதைத்த பணத்திற்காக
கிடைக்கவில்லை பணம்
உழைப்பை வீணாக்காமல்
உழுத மண்ணில் விதைக்க
விளைந்தது பொன்னாக
சோம்பிக் கிடந்தவர்கள்
உணர்ந்தனர் உண்மையை
chinnakkannan
2nd February 2014, 05:53 PM
உண்மையைச் சொல்வேன் பாவாய்
..உணர்விலும் ஓடி நிற்கும்
கன்னியே என்று முந்தன்
..களிகொளும் தோற்ற மங்கே
வண்ணமாய் பூவின் சாயல்..
..வாட்டமாய் வாழை மேனி
திண்ணமாய்த் தினமும் தோன்றி
..தீண்டியே சீண்டும் அன்றோ..
pavalamani pragasam
3rd February 2014, 07:44 AM
சீண்டும் அன்றோ செய்த வினை
செயத்தகாத தீய செயல்களால்
பெற்ற கல்வியும் உதவாமல்
சேர்த்த செல்வமும் நிலைக்காமல்
தள்ளாத வயதில் தனியே
தள்ளியே நிற்கும் உறவுகள்
தடுமாறி தடம் புரண்ட வாழ்க்கை
துணையாய் வந்தது மதுவும்
கூடவே போதை மாத்திரையும்
அத்தோடு மூக்குப்பொடியும்
உடும்பாய் பற்றியிருக்க
புத்தன்றி வேறென்ன வாய்க்கும்
தவித்த வாய்க்கு தண்ணியோ
பக்குமாய் செய்த உணவோ
தருவாரின்றி உணர்வு மரத்து
ஒரு வித துறவினிலே வாழ
ஒரு நாள் காலன் வந்து
கதவை தட்ட கௌரவமாய்
அனுப்பி வைக்க சொந்தத்தை
அழைக்கும் பொறுப்பும்
அக்கம்பக்கத்தார் தலையிலே
விசித்திரமான நடப்புகள்
விதியின் பல நாடகங்கள்
chinnakkannan
12th February 2014, 05:46 PM
நாடகங்கள் பலவற்றை நயமுடனே செய்து
.. நன்றான மேடைபல அரங்கேற்றி அன்று
ஊடகங்கள் தான்குறைந்த காலத்தில் நன்றாய்
..உணர்ச்சியுடன் பலவூர்கள் சென்றேதான் அங்கே
மாடங்கள், மதில்களுமே மன்னவரின் உடைகள்
..மற்றுபல செய்தவர்தான் நடிகரவர் பெயரோ
ஆடவைத்து அதிரவைக்கும் தோற்றமுடன் திரையில்
..அழகாகப் பவனிவந்த மனோகரவர் தானே..
pavalamani pragasam
13th February 2014, 07:51 AM
மனோகரவர் தானே
மேடையேறாமல்
அரிதாரம் பூசாமல்
வசனம் பேசாமல்
வலம் வருகின்றார்
பொது இடங்களில்
பெண்பிள்ளைகளை
கண்டதும் மோகித்து
காமத்தில் சுகித்து
கௌரவ மாந்தராய்
ஏலம் விடுகிறார்
மானத்தை நெறியை
மெல்லக் கொல்லும்
கொடிய நஞ்சின்று
chinnakkannan
19th February 2014, 01:18 PM
கொடிய நஞ்சின்று வேகமாய்ப்
பரவுகிறது..
அது வேறு எவருமல்ல
எதிர்க் கட்சி தான்..
ஆகவே..
என நேற்று முழங்கிய தலைவர்
இன்று
அதே கட்சியில் இணைய
நஞ்சைப் பற்றி
யோசிக்க ஆரம்பித்தனர் மக்கள்..
pavalamani pragasam
19th February 2014, 04:39 PM
மக்கள் பிறந்த பின்னர்
மணவாளன் பின்னிருக்கையில்
மூச்சிருக்கும் வரை
முதலிடம் அவர்களுக்கே
chinnakkannan
19th February 2014, 05:44 PM
அவர்களுக்கே தெரியும்..
போடுவது வேஷம் என
பார்ப்பவர்களுக்கும்...
இருப்பினும்
அலுக்காமல்
நடந்து கொண்டிருக்கிறது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நாடகம்
நடிப்பவர்களிடமும்
பார்ப்பவர்களிடமும் தான்
மாற்றமிருக்கும்..
மற்றதில் இல்லை..
pavalamani pragasam
20th February 2014, 08:18 AM
இல்லை எனும் சொல்
இல்லை என்று சொல்
இலகுவாய் எதையும் வெல்
இன்பம் எனதென்று சொல்
chinnakkannan
14th March 2014, 08:27 PM
சொல்லிவிட வேணு மின்னு
...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
அல்லிமலர்க் கால வெச்சு
..அன்றவளும் போகை யிலே
மெல்லமெல்ல வேகங் கூட்டி
..மேவிமுன்னால் சென்று நிக்க
கள்ளவிழி பாத்த பின்னால்
...காணாமலே போச்சு வார்த்தை..
..
pavalamani pragasam
15th March 2014, 01:16 PM
வார்த்தை விளையாட்டில்தான் எத்தனை வகை
மூழ்கி துழாவி வெல்கையில் பிறக்குது உவகை
கட்டங்களுக்குள் மல்லு கட்டும் அப்போட்டிகள்
இன்றெந்தன் இனிய இணைய பொழுதுபோக்குகள்
chinnakkannan
15th March 2014, 10:02 PM
பொழுது போக்குகள்
பூக்களைப் போன்றவை..
தொடுப்பவரைப் பொறுத்து
தினம், வாரம், வருடம் என மலர்பவை..
சிறப்பான ஒரு பூ
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை மலரும்.
தொடுப்பவரில்
சிலருக்கு வெற்றியும் சிலருக்குத் தோல்வியும்
வழங்கி விட்டு
தொடுக்காத மீதம் பேருக்கு
அழகாய்
அடுத்த ஐந்து வருடம் வரை
அளித்துச் செல்லும் ஏமாற்றத்தை..
pavalamani pragasam
16th March 2014, 08:24 AM
ஏமாற்றத்தை வாடிக்கையாய் பலரும்
அறியாத வேடிக்கையாய் மிக சிலரும்
அரசியல் நடக்கும் அசிங்க அரங்கத்தில்
பல்லாயிரம் ஒன்றல்ல அவதாரங்கள்
உலகை உய்விக்க வந்த உத்தமர்கள்
கோடிகளில் உருட்டி வைத்த ஊழல்கள்
உச்சரிப்பதெல்லாம் தன்னல பொய்கள்
கேட்டிடத் திரளும் செம்மறியாடுகள்
சீரழிந்த செயல்பாடுகள் மாறாதா
நேர்மையான நல்லாட்சி வாராதா
chinnakkannan
16th March 2014, 12:45 PM
வாராதா கண்ணனவன் உருவம் கண்ணில்
..வந்துவக்க வைக்கவரும் காலம் என்றே
ஆறாக மனமுருகி அழைத்த பெண்ணின்
..அழகுமிகு பாடல்கள் கேட்ட வண்ணம்
வா ராதா என்றபடி வந்தான் அங்கே
..வஞ்சியவள் மனங்கவர்ந்த மாயன் மேலும்
பேறாகத் தந்துவிட்டான் தன்னைத் தானே
..பெண்மயிலும் கலந்துவிட்டாள் அவனில் அன்று...
pavalamani pragasam
17th March 2014, 08:15 AM
அன்று நடந்தது ஒரு புரட்சி
விதவை முகத்தில் மலர்ச்சி
வெறுமை தொலைத்த நெற்றி
கையில் கழுத்தில் அணிகள்
இன்று தேவை ஒரு புரட்சி
பொதுவாய் பெண் என்பவள்
வயது பருவம் பொருட்டின்றி
என்றும் மூளியாய் நிற்கிறாள்
பூவை தொலைத்து விட்டு
பொட்டை அழித்து மறந்து
மொட்டை கை கழுத்துடன்
காணத்தான் சகியலையே
புது நாகரிகம் புகுந்ததேன்
புரியாமல் தவிக்கிறேன்
chinnakkannan
13th April 2014, 10:20 PM
தவிக்கிறேன் துடிக்கிறேன் தணற்புழுவாய் என்றே
...தயங்காமல் முழக்கங்கள் பலவிதமாய்ச் செய்தே
பவித்திரமாம் பாரதத்தின் பண்பதனைக் காக்க
..பாங்காக நீங்களெல்லாம் பேருதவி செய்வீர்
செவிக்குணவு கிடைத்ததனால் பேசாமல் நின்றே
..சோம்பேறிக் குணமடைந்து எதிரியிடம் சென்றால்
தவிலுக்கு அடிபடுமே இருபக்கம் இல்லை
..தக்கபடி அடிபடுவீர் எப்பக்கமும் என்றே
முடிக்கின்றேன் இவ்வுரையை மூவுலகும் காக்கும்
...மேலான தலைமையிது எனச்சொல்லி அமர்ந்தால்
நடிக்கின்றேன் என்பார்கள் நால்வகையும் தம்முள்
..நன்றாக அடக்கிவைத்து இருப்பதாக எண்ணும்
தடியர்கள் எதிரணியில் இருக்கின்ற நண்பர்
..தானாகத் தெரியாத மூடர்கள் பலராம்
விடிவதற்கு ஓட்டெனக்கே எனச்சொல்லி முடிக்க
...வெறும்பேச்சுப் புரியாமல் எழுந்ததுகை தட்டல்..
..
pavalamani pragasam
15th April 2014, 08:02 AM
கை தட்டல் கேட்டு
குளிர்ந்தது காது
கழுத்தில் மாலை
களிப்பேறிய நிலை
கௌரவ பட்டம்
கொடுத்தது கூட்டம்
குதூகல வேளையிலே
குற்றால சாரலிலே
கலைந்தது கனவு
கண்ணெதிரே நின்றது
கட்டிய காதல் மனைவி
கையில் தண்ணீர் கிண்ணி
chinnakkannan
15th April 2014, 10:07 AM
தண்ணீர் கிண்ணியை
அரைவாசி நிரப்பி
மடியில் தலையைச் சாய்த்து
குடிடா கண்ணு எனக் கொடுக்க
உதடு குவிய மறுக்காமல்
கோவித்து யே என மறுபடி மறுபடி
அழ..
பின் தோளில் சாய்த்து
பாரு தோ தோ
பாரேன் அந்தக் காககாய
ஒன்ன மாதிரி
முழிய முழிய் உருட்டுது பாரேன்
எனத் தொடர்ந்த பேச்சில்
மனம் வந்து தண்ணீரைக்
குழந்தை மடக் மடக் எனக்
குடிக்கவும்
நிரம்பியது
அன்னையின் வயிறு..
pavalamani pragasam
15th April 2014, 12:59 PM
வயிறு மட்டும் உண்டு பருப்பதோ
உழைத்து நாம் ஓடாய் தேய்வதோ
மற்ற உறுப்புகள் எண்ணத துவங்க
கை கால் வாய் உணவை மறுக்க
கூட்டு சதியில் காலியாய் வயிறு
அத்தோடு முடியவில்லை கதை
அத்தனை உறுப்பும் சோர்ந்தன
இயங்கும் சக்தியை இழந்தன
யாரால் யாருக்கு லாபம்
போட்டியில் கற்ற பாடம்
அனுபவம் புகட்டிய அமுதம்
அன்பாய் சார்ந்திருப்பதே நலம்
chinnakkannan
15th April 2014, 01:59 PM
நலமாய் இருக்கத்தான் நாங்களின்று
..நன்றாகக் கைகுவித்து கேட்டு நிற்போம்
வளம்பலவும் உமக்குவாய்க்க வேணுமென்றால்
..வாக்குதனை இட்டிடுவீர் எமக்கே என்றே
பலமாகப் பாய்ந்தங்கே கேட்டே அங்கு
..பதைபதைப்பாய் அமர்ந்தபின்ன்ர் அருகில் கேட்டார்
களத்திற்கு வந்துவாக்கும் கேட்டு விட்டேன்..
..கரன்சியினை கண்ணீலெப்போ காட்டு வீர்நீர்!!
pavalamani pragasam
16th April 2014, 07:21 AM
நீர் என்றும் விஞ்சுகிறீர்
வஞ்சியை கொஞ்சுகிறீர்
கொஞ்சம் கெஞ்சுகிறீர்
நெஞ்சம் மறைக்கிறீர்
வஞ்சம் நிறைக்கிறீர்
வென்றதாய் நினைக்கிறீர்
அய்யோ பாவம் ஆண்களே
அறியாத அப்பாவிகளே
chinnakkannan
16th April 2014, 03:59 PM
அப்பாவிகளே
என் இனிய மக்களே
ஒன்று சொல்வேன் கேட்பீர்..
எதிர்கட்சிக்குப் போட்டீர்களென்றால்
நீங்கள் முட்டாள்கள்
எங்களுக்கு ஓட்டு கொடுத்தீரெனில்
புத்திசாலிகள்..ஆகவே
கேட்ட மக்கள்
எப்போதும் போலேவே
அமைதி காத்தனர்
புத்திசாலித் தனமாக..
pavalamani pragasam
17th April 2014, 07:41 AM
புத்திசாலித்தனமாக
முன்யோசனையாக
எச்சரிக்கையாக
மிக கவனமாக
ஊஹும்......
எதுவும் பலிக்காது
வீண்கனவு உனது
தோற்பதும் சுகமே
தாம்பத்திய போர்க்களம்
அடக்கிய சூத்திரம்
chinnakkannan
17th April 2014, 10:54 AM
சூத்திரம் மறந்து போனால் சுலபமாய் வழியும் சொல்லி
பாத்திகள் தோட்டந்த் தன்னில் பதிவதைப் போல நெஞ்சில்
சேர்த்திட வைத்த பள்ளி தென்றலாய் நினைவில் தீண்டி
கோர்த்திடும் விரைவில் வேலை குறைவறச் செய்வ தற்கே
pavalamani pragasam
17th April 2014, 11:55 AM
குறைவறச் செய்வதற்கே
கோடி வேலை கிடக்கே
கோடை விடுமுறையிலே
குதூகலமாய் விளையாட
கோலியும் சோழியுமாய்
கூடிய தோழியர் அன்று
கையில் ஐபேட் இருக்க
கண்ணான பேத்தியுடன்
கோடி இன்பம் பெற்றேன்
கணக்கில்லா கேம்ஸில்
காலம் மாறினாலும் நான்
களிக்கின்ற குழந்தையே
chinnakkannan
17th April 2014, 12:48 PM
குழந்தையே என்று நின்று
..குறைகளை மறந்த காலம்
சலசலச் சாரைப் பாம்பாய்
..தாவியே ஓடிப் போச்சு
வளம்பல மாற்றம் பெற்ற
...வஞ்சியாய் அவளும் பேச
களிகொளும் மனத்தில் அங்கே
..கருத்துடன் பயமும் கூடும்..
pavalamani pragasam
18th April 2014, 07:17 AM
கூடும் ஆசைகளும் வசதிகளும்
குறையும் திருப்தியும் நிம்மதியும்
பெருகும் நோயும் கவலையும்
புத்தர் கண்டுபிடித்தது புதிதல்ல
chinnakkannan
18th April 2014, 11:37 AM
புதிதல்ல கண்விழித்துப் பார்த்த போது
...புத்துணர்வாய் தெரிந்திருந்த தாயின் உள்ளம்
புதிதல்ல பள்ளிமுதல் தொடங்கி நாளும்
...பாடங்கள் மனதினிலே பதிந்த உண்மை
புதிதல்ல சின்னவனாய் இருந்து இன்று
..பொன்மனத்து வாலிபனாய்த் தோற்றம் ஆனால்
புதிதாய்த்தான் இருக்கிறது அன்பே உந்தன்
..பூப்பூக்கும் இதழ்கொண்ட தேனைக் கண்டே..!
pavalamani pragasam
18th April 2014, 12:27 PM
கண்டே பசியாறும் கஞ்சனா
உறியிலே ஊறுகாயை வைத்து
சோற்றை அப்பக்கம் காட்டியோ
வாடையிலே திருப்தியாய் உண்டு
ஓடையிலே கை கழுவி திரும்பவோ
ஏலாது என்னால் வா கைக்குள்ளே
chinnakkannan
18th April 2014, 04:48 PM
கைக்குள்ளே உலகமென குருவும் சொல்ல
..காணவில்லை என்றுசொன்னான் சிஷ்யன் அங்கே
பைக்குள்ளே இருக்குமனம் சொல்லும் வார்த்தை
..பக்குவமாய் நீசொல்ல வாங்கிக் கொள்ளும்
தைத்துவீடு நெஞ்சத்தில் தூய எண்ணம்
..தெளிவாகக் கொண்டுதெய்வம் தொழுதால் நன்றாய்
மெய்ப்பொருளூம் உன்னருகில் வந்து சேரும்
..மேல்வாழ்வு கிட்டிவிடும் குருவும் சொன்னார்..
pavalamani pragasam
19th April 2014, 08:32 PM
சொன்னார்
பதமாய்
பக்குவமாய்
நயமாய்
நல்லவிதமாய்
பலிக்கவில்லை
பதி பாவம்
சதி சக்தியல்லவோ
chinnakkannan
19th April 2014, 09:19 PM
சக்தியல்லவோ சிவனல்லவோ சாந்தமாகவே பணிவாய்
பக்தியாகவே பக்குவங்களை பார்த்துபார்த்துதான் உரைப்பீர்
முக்திகொள்ளவும் நெஞ்சமெலாமுமே நிறைந்துநின்றிடும் இறையை
நித்தியபூஜைகள் நன்குசெய்திட மோட்சங்கிட்டுமே அறிவீர்...
pavalamani pragasam
20th April 2014, 08:13 AM
அறிவீர் வெயிலின் கொடுமையை
அவசியமான ஒரு பருவத்தை
பரிகாரமாய் பதநீரும் இளநீரும்
நுங்கும் முலாம்பழமும் வெள்ளரியும்
எலுமிச்சை நன்னாரி நாவினிக்க
பரிவாய் இயற்கை வழங்குவதை
chinnakkannan
20th April 2014, 12:29 PM
இயற்கை வழங்குவதை எழிற்கூட்ட வேண்டுமென
..ஏதோ செய்கின்றார் ஏந்திழையர் இன்னாளில்
மிகையாய்ச் சிகப்பழகு சாயத்தில் தான்வந்தால்
..மென்னுதடும் இழக்காதோ மின்னுகின்ற தன்நிறத்தை
சிகையில் சிச்சிறிதாய் மாற்றங்கள் செய்திடலாம்
..சிகையே சின்னதெனப் போய்விட்டால் ஆவதென
சுயமாய்த் தான்பொங்கும் அழகினைத்தான் தக்கவைக்க
..தூய மனமிருந்தால் போதுமென உணராரோ
pavalamani pragasam
20th April 2014, 04:24 PM
உணராரோ இங்கிவர் உணராரோ
அறிவியல் வளர்ச்சி அபாரந்தான்
ஐம்புலனுக்கும் சுகம் அதிகந்தான்
அத்தனை கண்டுபிடிப்பும் அருமையே
ஆனாலும் கொடுக்கும் விலை என்ன
கொஞ்சமும் சிந்திக்காமல் திளைக்க
யந்திரங்கள் அடுக்காய் வீட்டுக்குள்
நுழைந்தபின் சிரமமின்றி சடுதியில்
வேலைகள் முடிந்தாலும் அவயங்கள்
வேலையிழந்து நோய்கள் பழகியதே
இயல்பாய் கிடைத்த உழைப்பை
உடற்பயிற்சியிலே தேடியும்
உடலும் இளைக்கவில்லை
பிணிகளும் ஒதுங்கவில்லை
எங்கும் எப்போதும் வேண்டும்
செயற்கை குளிரூட்டல் எனில்
வியர்வை சுரப்பிகள் வீணாகி
கழிவகற்றி தேயுதே கிட்னியும்
இயற்கையோடு ஒன்றி வாழாது
இயந்திரங்களோடு பிணைந்து
பிழையாகுதே வாழ்க்கை முறை
புத்திசாலித்தனம் போனதெங்கே
chinnakkannan
20th April 2014, 04:51 PM
போனதெங்கே என்றெல்லாம் புலம்பாமல் கொஞ்சம்
..புத்தியுடன் நடந்துவிடு இனிமேல்தான் நீயும்
ஆனபடி தானுரைத்தேன் செவிகளையும் மூடி
..அழகாக வக்கணைகள் காட்டிநின்றாய் இன்றோ
கானங்கள் பலபாடி சோகத்தில் மூழ்கி
..காதலினைச் சொலவிலையே என்றெல்லாம் ஏங்கி
கானலென நினைக்கின்றாய் கலங்காதே பெண்ணே
..காதலர்க்கு தூதுசெல நான்போவேன் முன்னே!
pavalamani pragasam
21st April 2014, 08:42 AM
முன்னே போனால் முட்டி
பின்னே சென்றால் உதைத்து
முடக்குதே படுத்துதே அய்யோ
நான் பாவமில்லையா மூப்பே
chinnakkannan
21st April 2014, 10:25 AM
மூப்பே என்னைச் சீண்டாதே
..முகத்தில் சுருக்கம் தாராதே
சீப்போ என்றே சொல்லிடுவேன்
..திரும்பி என்னைப் பார்க்காதே
காப்போம் என்றே எனைச்சுற்றி
..கடமை இருக்கு கேட்டாயோ
போப்பு என்றென் ஊர்த்தமிழில்
..சொல்வேன் நீயும் போய்விடப்பா..
pavalamani pragasam
21st April 2014, 02:56 PM
போய்விடப்பா என
பூவை கெஞ்சினாள்
செல்லப் பூனையிடம்
கணவனுக்குப் பிடிக்காத
ரகசிய சிநேகிதனிடம்
தடவுவேன் நாளை இரவு
chinnakkannan
21st April 2014, 05:32 PM
நாளை இரவு நலமாய் வருவேன் என்றே சொன்னாள்..
.. நானும் அவளை உளத்தில் சுமந்தே அங்கே சென்றேன்
வேளை கூட திரும்பி வஞ்சி சென்றாள் என்றோ
..வீணர் சிலரின் பார்வை எண்ணிப் போனாள் என்றோ
மேலை நாட்டில் இருக்கும் நேரக் கட்டுப் பாட்டை
...மென்மை யாக உணர்த்திப் போனாள் என்றோ நானும்
தேளைக் கண்டு திகைத்தாற் போல தவித்த போதில்
..தேனாய்ப் பின்னால் இருந்தே என்னை அணைத்தாள் அவளும்..
pavalamani pragasam
22nd April 2014, 07:54 AM
அவளும் களம் சென்றாள்
தோளோடு தோள் நின்றாள்
தேர் அச்சில் விரல் வைத்தாள்
வரம் இரண்டும் பெற்றாள்
மறந்தே போனவற்றை
கூனி எடுத்துக் கொடுத்தாள்
அது ராம காவியமானது
சமத்துவத்தின் விளைவானது
chinnakkannan
22nd April 2014, 10:37 AM
விளைவானது எதுவோஎன சிலநாட்களில் தெரியும்
களையானவை களைந்தேபல பயிர்கள்விதை விடுமா
சுளையாகவே பழைமைபல சுவையாய்ச்சொலும் மனிதர்
வலைவீச்சினில் நாடோயினி விழுமாயிலை எதுவோ
pavalamani pragasam
22nd April 2014, 03:27 PM
எதுவோ ஒன்று தடுக்க
எதுவோ ஒன்று இழுக்க
என்னவொரு தடுமாற்றம்
எத்தனை தப்பாட்டம்
இரு பாலிடை ஈர்ப்பு
என்றும் கலையின் கரு
chinnakkannan
22nd April 2014, 09:01 PM
கருவினில் கண்ட தோற்றம்
....காலத்தின் போக்கில் நல்ல
உருவினைக் கொண்டு அன்று
... உலகினில் வந்த போது
முறுவலும் முகத்தில் பொங்கி
... மனதிலும் மகிழ்ச்சி தங்கி
சுறுசுறு வென்றே சுற்றம்
...சொன்னது அந்தக் காலம்
விறுவிறு வென்றே நீயும்
..வேகமாய் வளர்ந்து விட்டாய்
சுறுசுறுப் பாக வேலை
..சடுதியில் தேடி இன்று
துருதுரு பெண்ணின் மையல்
..கொண்டதால் என்னை நீயும்
துரும்பென எண்ணிப் போகச்
..சொல்கிறாய் பரவா யில்லை....
..
pavalamani pragasam
23rd April 2014, 08:09 AM
பரவாயில்லை இந்த மாற்றங்கள்
கூட்டுக்குடும்பத்தில் அதிகாரம்
குவிந்திருந்தது மூத்த தலையிடம்
பெட்டிப்பாம்பாய் ஆணும் பெண்ணும்
தனி அரசாங்கம் நடக்குது இன்று
தம்பதிக்கு சம உரிமைகள் உண்டு
நரைத்த தலைகளுக்கு நிம்மதி
அலுப்பில்லாத ஆனந்த ஒய்வு
chinnakkannan
23rd April 2014, 02:41 PM
ஓய்வெடு என்று
அலுவலகத்தில் அனுப்பி வைத்தாலும் கூட
சுற்றிச் சுற்றி
ஏதாவது வேலை
பார்த்துக் கொண்டேஇருந்தார் தாத்தா..
சொந்த வியாபாரம் என்பதால்
இறப்புக்கு முதல் நாள் வரை
கடைக்குப் போய் வந்துகொண்டிருந்தார் அப்பா
நாற்பத்தைந்து வயசில்
போதும்..கொஞ்சம் சேர்த்தது இருக்கு
என நினைத்து
வி.ஆர்.எஸ் வாங்கி
சந்தோஷமாய் இருக்கும் நான்..
எப்படியும் நாற்பது வயசுக்குள்ள
சேர்த்துடுவேன் டாடி..
நானும் இவரும் தான் வேலைக்குப்
போறோம்ல..
அப்புறம்
லைஃபை எஞ்சாய் தான் பண்ணனும்..
இது என் மகள்..
ஆகக் கூடி
ஓய்வென்பது வயதைப் பொறுத்திருந்தது போக
மாறிவிட்டது இன்று
pavalamani pragasam
23rd April 2014, 03:20 PM
மாறிவிட்டது இன்று தேர்தல் காட்சி
படித்தவர் பசையுள்ளவர் வீடுகள்
தேடி வருவதில்லை வேட்பாளர்கள்
பார்த்ததே இல்லை ரகசிய பரிசுகள்
சம்பிரதாயமாய் வருவர் கட்சிக்காரர்கள்
வாக்குச்சாவடி தகவல் சீட்டுடன்
அந்தோ அதுவும் இல்லை இம்முறை
வாக்குரிமைக்கு வந்த சோதனை
chinnakkannan
23rd April 2014, 09:23 PM
சோதனை தாக்கும் போது
...சோகமும் விலக்கி அங்கெ
வேதனை தீர நன்றாய்
..விரைந்துவோர் செயலைச் செய்தால்
பேதமை ஆன நெஞ்சம்
..பெற்றிடும் ஆற்றல் அந்த
சோதனை தீர்வ தற்கு
..சுகமுடன் தீர்வும் தருமே..
pavalamani pragasam
24th April 2014, 08:11 AM
தருமே புத்துணர்ச்சி
காலை காப்பியின் ருசி
காதில் விழும் தினசரி
கிள்ளையின் கச்சேரி
கொல்லை மரமேறி
மனமே கேட்டு நீ ரசி
chinnakkannan
24th April 2014, 02:35 PM
ரசியென்ற ஓட்டமிடும் மங்கை நல்லாள்
..ரசனையுடன் நாவலொன்றில் ஓடிச்சென்றே
வசியங்கள் மயக்கத்தைச் செய்யும் போலே
..வாகாகத் தங்கத்தை வென்று செல்வாள்
புசிப்பதுவா மனிதவாழ்க்கை போநீ மூடா
..புவனத்தில் லட்சியமே முதலில் மெய்யாம்
உசுப்பிவிட்டு சொல்லிவிடும் கருத்து எங்கே
..அழகான சுஜாதாவின் நாவல் தானே
/*பத்து செகண்ட் முத்தம்- சுஜாதா//
pavalamani pragasam
25th April 2014, 08:05 AM
நாவல் தானே
சிறுவன் ஆயுதம்
ஔவை திகைத்த
சொல் விளையாட்டு
chinnakkannan
25th April 2014, 02:11 PM
விளையாட்டாய்க் கூடதீய சிந்தை கொண்டால்
..வினையாக மாறுதற்கு நேரம் ஆகா
களைகளினை பயிர்களுடன் வளர்த்து வைத்தால்
..காலத்தில் நற்பயிரும் வாடும் அன்றோ
தளையெனவே இருக்கின்ற கெட்ட சிந்தை
..தடுத்துவிடும் நல்லநல்ல செயலைத் தானே
வளையாத நற்சிந்தை உடலை நெஞ்சை
..வளமாக்கி விட்டுவிடும் உண்மை தானே..
pavalamani pragasam
26th April 2014, 08:36 AM
உண்மை தானே மாறிவிட்டது
அன்றாட அட்டவணை இன்று
அன்று போலில்லை எதுவும்
ஆசைகள் எல்லாம் வேறானது
chinnakkannan
26th April 2014, 12:25 PM
வேறானது எதுவோயிலை வித்தைசொலும் மனந்தான்
தேரானது நிலைமீதினில் தெளிந்தேநகர் வதுபோல்
நேரானது நங்கைமணம் கொண்டேஅசல் புகுந்தே
மாறாமலே இருந்தாலது தவறேயென உணர்வாய்..
தகப்பன்மனம் தவிக்கும்படி தயங்காமலே சுடுசொல்
பகட்டாகவே பாய்ந்தோடி் யே இதயந்த்தனில் தைத்தே
விகற்பம்கொளா யிவளெங்ங்கனம் மாற்றங்கொண்டா ளென்றே
திகைத்தாலுமே உலகத்தினில் சகஜம் என உணர்வாய்
pavalamani pragasam
26th April 2014, 04:15 PM
உணர்வாய் ஓயாது
ஐப்பசி மாத அடைமழை
பெண்களின் அரட்டை
கவிதைக்கு கவிதையும்
chinnakkannan
26th April 2014, 08:40 PM
கவிதையும் மொழியையும் கருத்தில் கொண்டால்
..கலகலப்பாய் உற்சாகம் பிறந்தே தீரும்
தவிக்கின்ற தாகத்தில் தொண்டை அங்கே
..தாங்காமல் காய்ந்தபடி உலரும் போதில்
குவித்தகையில் பாய்ந்துவிழும் அருவி நீர்போல்
..குளிர்விக்கும் உடலைத்தான் மற்றும் இன்னும்
பவித்திரமாம் பக்குவமாய்ப் பொங்கும் கவிதை,..
…பாட்டெல்லாம் நமதுவுயிர் மூச்சே தானே
pavalamani pragasam
27th April 2014, 08:43 AM
மூச்சே தானே ஆனதின்று
அருமையான இணையம்
உடல் இயக்கம் குறைத்து
உயிர் ஊக்கம் பெருக்குதே
chinnakkannan
27th April 2014, 11:24 AM
பெருக்குதே என நினைத்துப்
போட்ட வைப்பு நிதியின்
வட்டி சதவிகிதம்
குறைந்து விட்டது..
எதற்கும் இருக்கட்டும் என்று
பலவருடங்கள் முன்
வாங்கிய
புதராய்க் கிடந்த நிலத்தின் மதிப்போ
வெகு உயரத்தில்..
முதலீடுகளின் மதிப்பு
முன்னோக்கி ஊகிப்பது
என்றும்
எப்போதும்
எக்காலத்திலும் கஷ்டம் தான்..
அது பணமானாலும் சரி
அன்பானாலும்....
pavalamani pragasam
27th April 2014, 12:00 PM
அன்பானாலும் அளந்துதான் கொட்டவோ
அமுதும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சோ
அழகாய் அன்றே சொன்ன பழமொழியே
அனுபவிக்கத் திகட்டாத நல்ல வழியே
chinnakkannan
27th April 2014, 01:58 PM
வழியே இல்லை எனக்
கைவிடப் பட்டவை
சமயத்தில் சரியாகி விடும்
சரியான வழி தான்
என நினைத்தால் மாறுகின்றன..
காரணம் தான் புரியாமல்
சொல்கிறோம்
காரணம் விதி..
pavalamani pragasam
28th April 2014, 08:14 AM
விதி ஒன்று சமைக்கிறாள்
புதிய உலகின் நம் கிழவி
வேலையில்லா மாமியா
வேலிக்காட்டுக்கு நீர் இறைக்க
விரிந்து கிடக்கு பண்ணைகள்
கணிணித் திரையினிலே
chinnakkannan
28th April 2014, 02:40 PM
திரையினிலே கண்டுவந்த காட்சியினைக் கண்டே
..சிறுவனவன் நடிப்பதையும் ரசித்திருந்து பார்த்தே
வரைமுறைகள் ஏதுமின்றி வாய்விட்டே சிரித்தே
..வாகாக வாழ்த்திவிட்டு இருக்கின்ற பெரியீர்
கரைகடந்து அலையெழும்பித் தரையினிலே வந்தால்
..காணாமல் போய்விடுமே சிறுகுடிசை எல்லாம்
வரைகடந்து அச்சிறுவர் வீட்டினிலே பேச
..வகையாக அறிவுரையும் சொல்லத்தான் வேண்டும்..
pavalamani pragasam
29th April 2014, 08:06 AM
சொல்லத்தான் வேண்டும்
சொக்கிப்போன விதத்தை
தேனாய் பேச ஒரு தத்தை
தினமும் காலை மாலை
கொல்லை மரக்கிளையில்
தவறாது வந்தமர்கிறதே
chinnakkannan
29th April 2014, 02:14 PM
வந்தமர்கிறதே
நினைவுக் குயில்
அவ்வப்போது..
மாறுபடும்
சோகம், சந்தோஷம் என
ராகங்கள்..
pavalamani pragasam
30th April 2014, 08:25 AM
ராகங்கள் காதுக்கு குளிர்ச்சி
வண்ணங்கள் கண்ணுக்கு விருந்து
வாசங்கள் நாசிக்கு மருந்து
போவோமா காட்டுக்குள்ளே
chinnakkannan
30th April 2014, 07:22 PM
காட்டுக் குள்ளே கட்டெடுக்க
…காலையிலே போற புள்ள
கூட்டிவர யாரு மில்ல
..கூட வாரேன் ஒம்மாமன்
நோட்ட மிட்டுப் பாக்காதீர்
...நோவு தய்யா என்னுசுரு
ஆட்ட பாட்டம் போட்டுப்புட்டு
..அந்தி வந்தா போய்விடுவீர்..
இப்ப என்ன வேணுமின்னு
..சொல்லுபுள்ள செஞ்சுடலாம்
தப்பு ஒண்ணும் இல்லபுள்ள
..தாலி ஒண்ணு கட்டிடவா
கப்புன்னு கண்ணுக் குள்ற
…காந்தம் வச்சு ஈர்க்காதே
சொப்புவாய் திறந்து கொஞ்சம்
…சிரிச்சுபுடு என்றபுள்ள..
pavalamani pragasam
1st May 2014, 08:11 AM
என்றபுள்ள அறிவுக் கொழுந்தல்லவா
அவ அறியாத சங்கதியுமுண்டா
அச்சமில்லாம நடக்குறா நேரா
போகாத இடமெல்லாம் போறா
வானத்த வில்லா வளைக்குறா
மாறாத பழைய பயபுள்ளதான
மாபாதகமெல்லாம் செய்யுறான்
போகப்பொருளாத்தான் பாக்குறான்
chinnakkannan
1st May 2014, 12:10 PM
பாக்குறான் கொட்டக் கொட்ட
..பூவிழி சிமிட்டா மல்தான்
காக்கவும் நீதான் அம்மா
..கொஞ்சவும் நீதான் என்றே
நோக்கிடும் அவனைத் தரையில்
.. நீஞ்சுடா என்றே விட்டால்
பேக்குபோல் கோணி கண்ணில்
..பேய்மழை கொண்டு விட்டான்..
pavalamani pragasam
1st May 2014, 03:14 PM
கொண்டு விட்டான் சாலையின் மறுபுறம்
சாரணன் செய்தது பேருதவி மூதாட்டிக்கு
ஆண்டவன் எடுப்பானிங்கு பல அவதாரம்
என்பதற்கு இது போல் எண்ணற்ற ஆதாரம்
chinnakkannan
2nd May 2014, 09:34 AM
ஆதாரம் வேண்டுமென்றால் இந்தா ருங்கள்
..அழகான அட்டையிலே குறிப்பும் உண்டு
சேதாரம் என்னவென்றால் ஒன்றும் இல்லை.
...சிலாக்கியமாய் இன்றுவிலை ஆமாம் ஐயா..
தாத்தாவும் பேரனுமே வந்த கடைதான்..
...தங்கத்தை இன்றுவாங்க பெருகும் எனவும்
வேதாளம் மரத்தினிலே ஏறும் வண்ணம்
..வீழ்கின்றார் மக்கள்நகைக் கடையில் தானே
pavalamani pragasam
2nd May 2014, 01:55 PM
கடையில் தானே வியாபாரம் கொழிக்குது
இணையத்தில் விரித்த சந்தையிலே
கத்திரிக்காயும் வீட்டு வாசல் வருமோ
படி தாண்டி போகவும் வேண்டாமோ
ஆச்சர்யங்கள் இன்னும் என்னென்னவோ
மனித தொடர்பை தொலைக்கும் விதியோ
முகம் பார்த்து பேசாமல் வர்த்தகமோ
யந்திரங்களுடன் மட்டும் வாழ்க்கையோ
chinnakkannan
2nd May 2014, 08:10 PM
வாழ்க்கையோ என்ன வென்று
...வஞ்சிநான் அறிகி லேனே
ஊழ்வினை என்னை உந்தன்
,..உளத்திலே நெருங்க வைத்து
பாழ்பல செய்த பின்னர்
..பாவையை நீவிர் விட்டு
ஆழ்கடல் மேவிச் செல்ல
..அணங்குநான் தவிக்கி றேனே
pavalamani pragasam
3rd May 2014, 06:59 AM
தவிக்கிறேனே தாகத்தில்
தீராத ஒரு புது மோகத்தில்
இணையத்தின் தாக்கத்தில்
எண்ணற்ற விளையாட்டிருக்க
நேரம்தான் போதவில்லையே
கவலை சிறிதும் இல்லையே
chinnakkannan
3rd May 2014, 09:47 AM
இல்லையே என்றே சொல்லாமல்
..இரந்தவர் தமக்கு எப்பொழுதும்
அள்ளியே தந்தான் கர்ணணவன்
..அழகிய அங்க மன்னனவன்
மல்லிகை நிறத்தில் நெஞ்சமது
...மணமுடன் பரந்தே விளைந்ததது..
கள்வனாம் கண்ணன் காய்நகர்த்த
..காலனும் கொய்தே போய்விட்டான்....
pavalamani pragasam
3rd May 2014, 04:08 PM
போய்விட்டான் கதிரவன் ஓய்வெடுக்க
உயிர்த்தது இரவின் இனிய இயக்கம்
வெள்ளைப் பூக்கள் மலர்ந்து மணக்க
இள மனங்கள் கொஞ்சம் கிறுகிறுக்க
முழு விழிப்பில் ஒரு தனி உலகம்
மீண்டும் கதிரவன் உதிக்கும் வரை
chinnakkannan
4th May 2014, 11:32 AM
உதிக்கும்வரை உழைக்கும்மனம் உழன்றேகனன் றிடும்பின்
துதித்தேயிறை செயலேவெனத் தெளிவாய்மலர் திடும்பின்
பதித்தேயிழை இழையாய்க்கவி புனைந்தாலது அழகாய்
மதித்தேபலர் நினைவில்கொளும் மணத்தைப்பரப் பிடுமே..
pavalamani pragasam
4th May 2014, 08:03 PM
மணத்தைப் பரப்பிடுமே நால்வகை புகை
மாநகர் மதுரையிலே இளங்கோவின் கதை
காவியத் தம்பதிக்கு சொன்ன அறிமுக உரை
மணங்கள் குறையவில்லை காரணிகள் வேறு
chinnakkannan
4th May 2014, 10:05 PM
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..
pavalamani pragasam
5th May 2014, 08:27 AM
கண்ணே நீ மூட நேரும் வழி எதுவோ
பறந்த விமானம் மாயமாய் மறையுமோ
தடதடக்கும் ரயில் பெட்டி தடம் புரளுமோ
ஆபத்தில்லா ஓர் வழி சாலையில் விபத்தோ
அக்கறையில்லா மருத்துவ சேவையிலா
வெறியில் அடித்து நொறுக்கும் கொலையிலா
கலாச்சார மாற்றம் தரும் பகீர் அதிர்ச்சியிலா
விதியே இத்தனை கொடூரம் ஏன் கற்றாய்
chinnakkannan
5th May 2014, 12:51 PM
கற்றாய் அனைத்தையும்”
குரு மகிழ்ந்து நற்சான்றிதழ் கொடுக்க
வாங்கிய சீடன் சொன்னான்
“நன்றி குருவே
இனிமேல் தான்
நான் கற்பது நிறைய இருக்கிறது
வாழ்க்கையின் பாடங்கள்”
pavalamani pragasam
5th May 2014, 02:27 PM
பாடங்கள் பள்ளியறையில்
எந்தப் பள்ளியறையில்
வயதை பொறுத்தது அது
அறிவும் அனுபவமும் வரும்
chinnakkannan
5th May 2014, 06:02 PM
வருமென்றே காத்திருக்கும் வஞ்சியவள் கண்களிலே
..வாகாகத் தெரிகிறது வருங்காலம் நலமெல்லாம்
தருமென்றே நம்பிக்கை ஊட்டியவன் வண்ணமுகம்
..தயங்காமல் தினம்தினமும் பார்த்தவனின் தண்ணுருவம்
மறுபடியும் வருகின்றேன் மெல்லியலே மயங்காதே
..மாதங்கள் பலவாகும் மருகாதே கட்டாயம்
வருவேன்நான் எனச்சொன்ன வார்த்தையையும் தான்நினைந்து
..வாடித்தான் நிற்கின்றாள் உயிருருகி அவனுக்காய்.
pavalamani pragasam
6th May 2014, 07:46 AM
அவனுக்காய் உருகியே
சமைத்து சிங்காரித்து
சிந்தித்து சிரித்து என
தன்னை தொலைத்தவள்
தேடிப் பிடித்த சுயமின்று
முன்னே நிற்கிறது காண்
chinnakkannan
6th May 2014, 09:23 PM
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
pavalamani pragasam
6th May 2014, 11:06 PM
நீ சொல்வது தவறென்று
நக்கீரனாய் உரைத்தாள்
மறுத்த மாதொருத்தி
மாதராய் பிறந்திடவே
மாதவம் செய்திருக்கும்
கவிமணியின் ரசிகை என்
கருத்தை இப்பெண் பிறவி
சாபமில்லை வரமே என்று
வக்கணையாய் நான் வடித்த
இணையக் கட்டுரைக்கு
கடுப்பாய் பதிலிட்டாள்
வாதங்கள் பல வைத்தாள்
எதுவும் எனக்கு ஏற்பில்லை
நகைப்பே வந்தது படித்து
ஆணுக்குக் கொடுத்தது
பலகோடி விந்தணுக்கள்
பெண்ணுக்கு வழங்கப்பட்டதோ
ஒரேயொரு சினை முட்டை
மாதத்திற்கு ஒரு முறை
புரியவில்லையா இதிலேயே
பாரபட்சமான நிலையை
படைக்கும் வித்தைக்கு
போதும் ஒரு முட்டை
பலசாலி பெண்ணுக்கு
பாவம் ஆணுக்குத்தான்
பலகோடி வேணுமடி
பதில் சொன்னேன் நானும்
பைத்தியக்காரி ஒருத்திக்கு
chinnakkannan
7th May 2014, 04:35 PM
ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை..
pavalamani pragasam
8th May 2014, 08:57 AM
புன்னகை முகத்தின் வளைகோடு
நேராக்கும் பல புரிதல் சிக்கல்
எங்கும் வளம் வரும் குறியீடு
எளிதாய் இலகுவாகும் சவால்
chinnakkannan
8th May 2014, 02:15 PM
சவாலாய்த் தானிருக்கிறது..
வெந்தயம் நீர்மோர் வெறும் வயிற்றில் குடித்தல்
நன்னா வெங்காயத்தை
உப்புப் போட்டுபிசிறி தயிர் விட்டுடு
பின் அரை மணி நேரம் கழிச்சு சாப்பிடு சரியாகும்..
இள நீர் குடிக்கலாம்..
அடிக்கடி வாட்டர் குடி..ஐஸ் வாட்டர் இல்லை..
அப்ப தான் வேர்வைல போனது நேராகும்..
அப்புற்ம்
நல்லக்ரீம் முகத்துக்குப் போட்டுக்கோ
வீகோ ஓகே ஏன்னா அது ஹெர்பல்..
ரொம்ப முக்கியம்
குளிர்ந்த நீரில் அதாவது கோல்ட் வாட்டர்ல
முகத்த ரின்ஸ் பண்ணு.. அடிக்கடி
ம்ம் நிறைய அட்வைஸ்
அம்மா பாட்டி சொன்னது
உபயோகப் படுத்தினாலும்
உடல் எரியத்தான் செய்கிறது..
ஒரே ஒரு கேள்வி..
எப்போ ஓ நீ போவாய் வெயிலே!
pavalamani pragasam
9th May 2014, 07:28 AM
வெயிலே நிழலின் அருமை கண்டேன்
இருளே ஒளியின் பெருமை அறிந்தேன்
வலியே சுகத்தின் பொருள் உணர்ந்தேன்
ஒன்றால் ஒன்றின் மகிமை கூடியதே
chinnakkannan
9th May 2014, 09:34 AM
கூடியதே சந்தோஷம் கொஞ்ச மில்லை
...குட்டியிதழ்ச் சிரிப்பினிலே கொள்ளை கொண்டு
தேடியதே சில்வண்டுக் கண்கள் எல்லாம்
..திகைத்தபடி அன்னையினை எங்கே என்று
மூடியதே வாயங்கு சிரிப்பை விட்டு
..முணுக்கென்றே கண்ணீரும் எட்டிப் பார்க்க
நாடிவந்தாள் மருமகளும் பேரன் வாங்கி
..நல்லமுது தான் தரவும் சிரிப்பு அங்கே..
pavalamani pragasam
9th May 2014, 04:11 PM
அங்கே எதுவும் தப்புவதில்லை
ஆண்டவன் தீர்ப்பில் ஈரமில்லை
தப்புக்கள் எலாம் தண்டிக்கப்படும்
தலைமுறை தாண்டியும் மறவாது
முற்பகல் செய்திட்ட பாவங்கள்
பொழுது சாயுமுன் கழிக்கப்படும்
நின்று கொல்வதில்லை என்பதை
நிச்சயமாய் காணலாம் இக்காலத்தில்
chinnakkannan
9th May 2014, 04:27 PM
இக்காலத்தில் எல்லாமே
சுலபம்
அதனாலேயே சிறிசுகளுக்கு
பெரியவர்களின் மதிப்பு தெரிவதில்லை
என பாட்டியிடம் இருந்து
எனக்கு வந்தது இ-மெயில்
pavalamani pragasam
10th May 2014, 08:07 AM
இ-மெயில் பரிமாற்றம்
தொடர்பு நுட்ப மாற்றம்
மனித வாழ்வில் ஏற்றம்
பழகாதிருப்பது குற்றம்
chinnakkannan
10th May 2014, 01:31 PM
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
அந்தக்காலம்..
இன்று
குற்றம் பார்த்தாலும்
பார்க்காவிட்டாலும்
சுற்றம் இருக்கிறது
சற்றுத் தள்ளி
தனித் தனித் தீவுகளில்
pavalamani pragasam
10th May 2014, 02:06 PM
தீவுகளில் தனிக்காட்டு ராணிகள்
மழலை சிந்தும் முத்துக்கள்
அள்ளுவதோ பல தாதிகள்
தாம்பத்யத்தில் இடைவெளிகள்
இதிலென்ன திறமைகள்
இவைதானா சாதனைகள்
பதித்ததெங்கே தடங்கள்
வாழாத பாலைவனங்கள்
chinnakkannan
11th May 2014, 02:32 PM
பாலை வனங்கள் வறண்டுவிட
..பாழும் வெயிலில் சுருண்டுவிட
சோலை வனமாய் நீருற்றாய்
,..சொர்க்கம் போலே வந்தாய்நீ
காலைக் கதிரோன் வந்ததிலே
..களிப்புக் கொண்ட மலர்கள்போல்
வேலை செய்யும் நெஞ்சமும்தான்..
..விம்மும் மகிழ்வில் நித்தமும்தான்..
pavalamani pragasam
12th May 2014, 07:55 AM
நித்தமும்தான் சத்தம் கேட்குது
தத்தை கத்துது காலை மாலை
சுத்துது எங்க வீட்டு மாடியை
வைத்த அரிசியும் பிடிச்சிருக்கு
சுத்தமான தண்ணீரும் பருகுது
சொத்தும் சுகமும் இதுவல்லவோ
chinnakkannan
12th May 2014, 12:14 PM
இதுவல்லவோ எனக்கென்றுதான் எழுந்தேகிளர்ந்த துவோ
பதுமையென பரிகாசமாய் பார்த்தேசிரித் தவரும்
புதுமையென புகழ்ந்தேமனம் மகிழ்ந்தேயவர் பரிசு
இதுதானென தரக்காரணி அழகானகற் பனையே..
pavalamani pragasam
12th May 2014, 02:11 PM
கற்பனையே செய்யுதே வஞ்சனையே
பஞ்சகல்யாணியாய் பறக்கவில்லை
கழுதையாய் சண்டித்தனம் செய்ய
கதைப்போட்டி கடைசி நாள் நெருங்க
ஐயகோ என் செய்வேன் நான் தவிக்க
எங்கிருக்கிறாய் என் கதையின் கருவே
chinnakkannan
12th May 2014, 09:23 PM
கருவே உருவாய் காலப் போக்கில்
…இளமைப் பருவம் எய்தும் போதில்
மருவாய் உளத்தில் மயக்கும் ஆசை
..மாற்றம் பலவைச் செய்யும் போதில்
நறும்பூக் கொண்ட நாரும் போலே
…நாலாய் மேலாய் இன்னும் இன்னும்
வருமே எண்ணம் நன்றும் நஞ்சும்
..வாகாய்த் தீமை தவிர்த்தால் நலமே
pavalamani pragasam
13th May 2014, 07:11 AM
நலமே பெண்ணின் நலமே
நல் வாழ்வின் மையமே
நாகரிகத்தின் அடையாளமே
நிலைக்கட்டுமே நிரந்தரமாய்
chinnakkannan
13th May 2014, 09:17 PM
நிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து
...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்
புறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்
..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து
வரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....
..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்
தரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா
..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..
pavalamani pragasam
14th May 2014, 08:42 AM
கண்ணா நீ விழித்துக்கொள்ளடா
கதவுக்குப்பின் நின்று பேசியவள்
கடுகு தாளிக்க மட்டும் தெரிந்தவள்
காணாமல் போனாளடா இந்நாளில்
கச்சிதமாய் உன்னை மாதிரியே
கட்டவிழ்த்து வாழத் துணிந்தாளடா
chinnakkannan
14th May 2014, 10:36 AM
துணிந்தாளடா தெரியுமா
உன் பாட்டி பட்ட கஷ்டம்..
என்பார் தாத்தா
ஆரம்பப் பேச்சுக் குழறிக் குழறி
வயதான தன்மையால்
பாட்டி இல்லாத் பேதமையால்..
உங்களைத் தைரியமாக வளர்க்கத்
துணிந்தாளா..
பக்கத்து ஊருக்குத் தனியாகப் போகத்
துணிந்தாளா எனப்
புரியாது..
பின் தான் புரிந்தது
என்னை எப்படி விட்டுப் போகத் துணிந்தாள் என்பது..
அதுவும்
தாத்தாவின்
கண்ணோரம் காய்ந்த
கறையைப் பார்த்தபிறகு..
pavalamani pragasam
14th May 2014, 07:10 PM
பார்த்தபிறகு மனம் மாறுமா
கற்பனை பிம்பம் மறையுமா
வண்ணங்கள் தான் கரையுமா
கட்டிய கோட்டையும் சரியுமா
விபரீத பரிட்சை தேவையா
இப்படியே தொடர்வது நலமே
chinnakkannan
14th May 2014, 09:03 PM
நலமே
எனச் சொன்னது
உன் வீட்டின் முன்னிருந்த
வேப்பமரக் கிளை,
அதை உரசிக்கொண்டிருந்த காற்று,.,.
நலமே எனச் சொன்னார்கள்
உன் வீட்டில்
உன் அப்பா,
உன் அம்மா,
உன் தங்கை
உன் பாட்டி..
ஆனால்
நலமே எனச் சொலவில்லை
உன்
மெலிந்த உடலும்,
வாடிய சருகான முகமும்,
கண்ணோரம் நீ வைத்திருந்த
என்னுயிரும்..
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.