PDA

View Full Version : Thirupathur - oru thiruppam



madhu
17th August 2012, 06:17 PM
"மாதவா.."

அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கிளம்பி வந்து நேராக என் காதுக்குள் பாய்ந்தது.

"டேய் மாதவா.. அப்பா கூப்பிடறார் என்னன்னு கேளுடா ?"

"என்ன ?" என்று ஹாலை நோக்கி குரல் கொடுத்து விட்டு "அம்மா.. என்னன்னு கேட்டுட்டேன்" என்றேன்.

"கொழுப்பு ஜாஸ்தியாயிடுத்துடா நோக்கு. அப்பாங்கற மரியாதையே இல்லாம போயிடுத்து"

"ஏம்மா இப்டி குதிக்கறே ! இப்போ ஒனக்கு என்ன ஆகணும் ? நான் அப்பா முன்னாடி போய் கையை கட்டிண்டு நிக்கணுமா ? இதோ போய் நிக்கறேன். ஓகேவா ? " எழுந்தேன்.

நான், மாதவன், 26 வயது. ஒரு கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் அதோ ஹாலில் அவசர அவசரமாய எல்லா பேப்பரையும் உதறி உதறி எடுத்து வச்சிகிட்டு இருக்குறவர் என் தோப்பனார் நாராயணன். உள்ளே காபியை ஆத்திண்டு அப்பாவுக்காக டபராவில் ஊதி ஊதி வைக்கறது என் அம்மா அகிலாண்டம்.

அய்யர் வீட்டுல பொறந்திருந்தாலும் இந்த சென்னை மாநகரத்து தெருக்களில் வளர்ந்ததால் என் பாஷை இப்படித்தான் கொஞ்சம் கலந்து கட்டியாக ஒரு மாதிரி இருக்கும்.

"அப்பா.. என்னத்துக்கு கூப்டேள்?"

"டேய் மாது.. இந்த வாரம் ஊரைச் சுத்தி ஊளையிட கிளம்பறியா ? ( நான் சேல்ஸ் விஷயமா ஊர் ஊராக போவதற்கு என் அப்பாவின் விளக்கம் இது ) "

"நான் என்ன குள்ள நரியா ஊளையிடறதுக்கு ? எதுக்கு இந்த கிண்டல் ?"

"அட அதுக்கில்லேடா.. என் ஃப்ரெண்டு மகாதேவன் பொண்ணுக்கு வர வெள்ளிக்கிழமை கல்யாணம். நான் போகலேன்னா கோச்சுப்பான். ஆனா எங்க ஃபாக்டரில இன்ஸ்பெக்ஷன் நடக்கறது. அதனாலே எல்லா பிளாண்டுக்கும் நானும் அவாளோட கூடவே போகணும். அம்முலு ( என் அக்கா ) வேற இங்கே வராளாம். அதனால உங்கம்மாவை தனியா போகச் சொல்லவும் முடியாது. நீ தண்டத்துக்கு ஊர் சுத்தாம ஆத்துல உக்காந்துண்டு இருந்தா உன்னை அனுப்பலாமேன்னுதான் கேட்டேன்"

அப்பாவுக்கு எப்போதுமே என் மார்க்கெட்டிங் வேலை மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. ஊர் ஊராக சுற்றி லாட்ஜில் தங்குபவர்களுக்கு எல்லா கெட்ட பழக்கமும் வரும் என்பது அவர் எண்ணம். ஆனால் அது எப்படிப்பட்ட தப்பான எண்ணம் என்பது எனக்குத்தான் தெரியும். ஏனென்றால் இப்படி ஊர் ஊராக சுற்றும் முன்னாலேயே எனக்கு எல்லா வழக்கமும் வந்து விட்டது. அட.. கொஞ்சூண்டு டிரை செஞ்சு பார்த்தேன். அவ்ளோதான். நம்புங்கோண்ணா !

ஆனாலும் வீட்டில் இருக்கும்போது நான் சுத்தமான அக்மார்க் நல்ல பையன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எந்த மனக் கஷ்டமும் வராமல் இருக்க ஆசைப்படுபவன். அவர்களும் என் மீது எக்கசக்கமாக அன்பு வைத்திருப்பவர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இப்போது கூட வரும் சனிக்கிழமை ஒரு நல்ல கம்பெனியில் சேலத்தில் இண்டர்வியூ. அதற்கு போவதற்காக வியாழன் முதல் டிரிப் எதுவும் இல்லாமல் வைத்திருந்தேன். முடிந்தால் அப்படியே ஏற்காட்டுக்கு ஒரு டிரிப் அடிக்கலாம் என்று ஒரு திட்டமும் இருந்தது. இப்போ திடீர் என்று அப்பாவின் கட்டளை. என்ன ஆகுமோ ? .

"சென்னையிலேதானே கல்யாணம் ? "

"இங்கேதான் பத்திரிகை எங்கேயோ வச்சிருந்தேன். திருப்பத்தூர்ல கல்யாணம். மண்டபத்தை தேட் நீ கஷ்டமே பட வேண்டாம். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி மருந்துக்கடை மகாதேவன் அப்படின்னு சொன்னா எல்லாருக்கும் தெரியுமாம்"

அப்பா ஒரு பார்மசூடிகல்ஸ் தொழிற்சாலையில் மேலாளர். அதனால் தமிழ்நாட்டின் பல மருந்துக் கடைக்காரர்களையும் தெரிந்திருக்க சான்ஸ் அதிக்ம்.

"உங்க கிட்டே மருந்து வாங்குற ஆசாமியா ? அவர் வீட்டு விசேஷத்துக்கெல்லாம் நான் போகணுமா ? அம்மா.. இந்த அப்பா வரவர ரொம்ப படுத்தறார் பாரேன் ?"

"அடச்சீ... அவன் என்னோட கிளாஸ் மேட். என்னால வர முடியலேன்னா என் பையனை அனுப்பறேன் அப்படின்னு சொல்லி இருக்கேன் போக முடியுமோனோ ?"

"ம்ம்.. எனக்கும் சனிக்கிழமை ஒரு இன்டர்வியூ இருக்கு. அதனாலே வெள்ளிக்கிழமை கல்யாணத்தை அட்டெண்ட் செஞ்சுட்டு அப்படியே சனிக்கிழமை இண்டர்வியூ முடிச்சுட்டு வரேன்"

"இதோ பாரு. ஆபீஸ் வேலைக்கு போகலியோனோ.. அதுனால ஊரைச் சுத்தாம சனிக்கிழமை சாயந்தரம் ஆத்துக்கு வந்து சேரு. அம்முலு வந்துடுவா. நானும் வந்துடுவேன். ரமேஷ் வேறு மாமாவைக் காணுமேன்னு ஏங்கி போயிடுவான். ( ரமேஷ் என் அக்காவின் பையன் )"

அப்போ ஏற்காடு டிரிப் அம்புட்டுதானா என்று புகை விட்டபடியே "சரிப்பா" என்றேன். ( நான் நல்ல பையனாச்சோல்லியோ ?}

ஆனால வியாழக்கிழமையே அப்பா கிளம்பி ஆந்திராவில் வெவ்வேறு ஊர்களில் உள்ள தொழிற்சாலைக்கு போய்விட்டு சனிக்கிழமை மாலைதான் திரும்புவதாகவும், போனில் கூப்பிட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்றும் உத்தரவு போட்டிருந்ததால் அந்த கல்யாண பத்திரிகை கிடைக்காமல் வீட்டில் உள்ள் மூலை முடுக்கை எல்லாம் தோண்டினோம்.

"இதுவும் ஒரு வழியில நல்லதா போயிடுத்துடா மாதவா ! ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான். நான் அழுதாலும் அழுதேன். என் கண் புளிச்சை கரைஞ்சுதுன்னு சொல்வாளோல்லியோ அது மாதிரி எதுக்காகவோ தேடி தோண்டி குன்னிப் போட்டதுல ஆமே சுத்தமா ஆயிடுத்து"

எனக்கு எரிச்சல் வந்தது.

"அட போம்மா.. நீ வேற ஆத்திரத்தை கிளப்பாதே ! நான் நாளைக்கு கல்யாணத்துக்கு போகலேன்னா அப்பா டங்கு டங்குன்னு தாண்டவம் ஆடுவார். தெரியுமோன்னோ ?"

அம்மா யோசித்து விட்டு "ஏண்டா ! பத்திரிகை என்னத்துக்கு ? அதான் அப்பா சொன்னாரே ! பஸ் ஸ்டாண்டுல எறங்கி மருந்துக்கடை மகாதேவன் அப்படின்னு விசாரி. கல்யாண வீட்டுக்கு அவாளே கொண்டு விட்டுட மாட்டாளா ? "

அம்மாவை சந்தோஷமாகப் பார்த்து "அம்மா.. நீ ஒரு சூப்பர் மாம்.. எப்படித்தான் எங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிண்டியோ ?"

"அது முதல் தப்புடா.. ஒன்ன புள்ளையா பெத்தேனே அது அதை விட பெரிய தப்பு"

"நான் பேசியே இருக்க வேணாம்"

"என்னமோ போ... நேக்கு வரப்போற மாட்டுப் பொண்ணாவது சமத்தா, புத்திசாலியா, கெட்டிக்காரியா இருந்தா நன்னா இருக்கும்"

"அப்படியே அழகா, செழிப்பா, கொழுகொழுன்னு, மொழு மொழுன்னு இருக்கணும் அப்படின்னு வேண்டிக்க மாட்டியா ?"

"நான் என்ன வெண்ணைத்தாழி கிருஷ்ணன் பொம்மையா வாங்கப் போறேன். கடங்காரா... அந்த மடிப் புடவையிலே கையைத் தொடைக்காதே" அம்மா கத்த ஆரம்பிக்குமுன் நான் எஸ்கேப் ஆகிவிட்டேன்.

****************************

வெள்ளி காலையில் எட்டு மணிக்கு திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இறங்கி நான் மருந்துக்கடை மகாதேவன் என்று விசாரித்ததுமே "கல்யாண வீட்டுக்கா சார்?" என்று ஒரு ஆட்டோகாரர் கேட்டு பத்து நிமிடத்தில் ஊருக்கு சற்றே வெளியே மெயின் ரோடிலேயே இருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில் இறக்கி விட்டார்.

வாசலில் பெரிய மாக்கோலமும், அதைச் சுற்றி செம்மண் பார்டருமாக கலை வண்ணம் மின்னியது. தோளில் தொங்கிய பையை இறுகப் பிடித்துக் கொண்டு ( அதற்குள் என் சர்டிபிகேட், அதன் காப்பிகள் எல்லாம் வைத்திருக்கிறேனே.. நாளைக்கு சேலத்தில் இண்டர்வியூ அல்லவா ) முன்னேறினேன்.

மண்டபத்தில் அதிகமாக கூட்டம் இல்லை. எத்தனை மணிக்கு கல்யாணம் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. நல்ல வேளையாக வாசலில் இருந்த போர்டிலேயே ஒரு பத்திரிகையை ஒட்டி வைத்திருந்தார்கள். ஓரமாக நிற்பது போல நின்று அதைப் படித்து வைத்துக் கொண்டேன். நல்ல வேளை. ஒன்பது மணிக்குதான் கல்யாணம். பத்தரை மணிக்கு ராகுகாலம் என்பதால் அதற்குள் முடித்து விடுவார்கள். விருந்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு மத்யானம் சேலம் போய்விடலாம்.

ஒரு மடிசார் மாமி என்னைத் தாண்டிப் போக மல்லிகை வாசனை மூக்கில் நுழைந்து மூச்சடைக்க வைத்தது. திரும்பியபோது "யார்டி னீ மோய்னீ"... மன்னிக்கவும் பார்க்கும்போதே அப்படி ஒரு கிறக்கம்... "யாரடி நீ மோகினி?" என்பது போல ஒரு அழகுப் பெட்டகம் என்னை நோக்கி வந்தது. இந்தக் காலத்தில் பட்டுப் பாவாடையும் தாவணியும் யார் அணிகிறார்கள். ஆனால் அவள் உடுத்தி இருந்தாள். இந்தக் காலத்தில் குடை ஜிமிக்கி யார் போடுகிறார்கள். ஆனால் அவள் போட்டிருந்தாள். இந்தக் காலத்தில் பஃப் கை வைத்த ரவிக்கை யார் அணிகிறார்கள். ஆனால் அவள் அணிந்திருந்தாள்.

நான் அப்படியே இருக்க அவள் என்னருகே வந்து "வாங்கோ வாங்கோ" என்றாள்.

"வந்துட்டேன். வந்துட்டேன்"

"நீங்க புள்ளையாத்துக்காரளா ?"

கொஞ்சம் குழம்பிவிட்டு "இல்லே.. என் அப்பா கல்யாணப் பொண்ணோட அப்பாவுக்கு கிளாஸ்மேட். இன்னைக்கு அவரால வர முடியாம போச்சு. அதனாலே என்னை அட்டெண்ட் பண்ண சொன்னார். அதான் சென்னையிலிருந்து இருட்டோட கிளம்பி வந்துட்டேன்"

அவள் முகம் மலர்ந்தது. "ஓ.. மெட்ராஸ்லேருந்து வரேளா ? பஞ்சு மாமா சொல்லி அனுப்பினவரா ?" அவள் முகத்தில் ஒரு சிவப்பு கலர் ஒளி தெரிந்தது. ஓ அதுதான் நாணமோ என்று நினைத்தபோது என் பின்னாலிருந்து ஒரு சின்னப் பையன் வந்து கையிலிருந்த சிவப்பு பேப்பர் மூடிய கண்ணாடியைக் காட்டி "அக்கா.. நாணாவுக்கு இன்னொண்ணு வேணுமாம்" என்றான். அடச்சே.. இதுல வந்த ரிஃப்ளெகஷன்தானா ?

"வரேண்டா.. வந்து செஞ்சு தரேன். இப்போ போய் விளையாடுங்கோ" என்றவள் "ஏன் அப்படியே நின்னுண்டு இருக்கேள். உள்ளே வாங்கோ. டிபன் தீர்ந்து போயிடும்" என்றாள். அவள் உட்கார வைத்த இடத்தில் பொம்மை போல உட்கார்ந்து போட்டதை தின்றேன். கை கழுவி விட்டு வந்தபோதுதான் அவள் மறுபடி எதிரில் வந்தாள்.

ஐந்தடி ரெண்டங்குலம் இருப்பாளா ? அவள் செயல்கள் எல்லாம் அவள் அணிந்திருந்த பாரம்பரிய உடையிலும் பத்தாம்பசலித்தனம் இல்லாத நடவடிக்கையாக இருந்தன. நான் அவளையே பார்த்தபடி இருக்க என்னை யாரோ தட்டி அழைப்பது போல இருந்தது. ஒரு குட்டிப் பெண் குழந்தை.

"மாமா.. என் டிரஸ்ஸை சரி பண்ணி விடுங்கோ"

நான் திருதிருவென்று விழித்தபடி இருக்க அந்த பாரம்பரிய அழகி என் அருகில் வந்து "பயந்துட்டேளா.. என் கசின் பொண்ணுதான். அவளுக்கு அவசரம்னா பக்கத்துல இருக்கறவா கிட்டே இப்படித்தான் கேப்பா" என்றபடி அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினாள்.

"ஒருவேளை எனக்கு இவள் மேல் லவ் வந்துவிட்டதா ?" என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கும்போதே ரெண்டு மாமாக்களும், ஒரு மாமியும் என்னிடம் வந்தார்கள்.

"வாங்கோ வாங்கோ. டிபன் சாப்டேளா ? நன்னா இருந்துதா ? பஞ்சு சொல்லி விட்டிருந்தான். நீங்க வருவேள்னு. என்னமோ மகாதேவன் இப்படி சட்டுனு போயிடுவார்னு யார் நெனச்சா ? ஆனாலும் எட்டு மாசத்துக்குள்ள முதல் பொண்ணுக்கு கல்யாணம் தகைஞ்சது. இப்போ மைதிலிக்கும் நீங்க கெடச்சிருக்கேள்"

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. பஞ்சு மாமா எனும் கல்யாண புரோக்கர் மூலமாகத்தான் அக்காவுக்கு கல்யாணம் நிச்சயமானது. இப்போ நான் இங்கே வரும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவர் நைசாக சொல்லி விட்டிருக்கிறார் போலிருக்கு. அப்பாவுக்கு இன்னும் என் கல்யாணம் பற்றிய நினைவு வந்ததாக தெரியவில்லை. அம்மாவுக்கு நான் கல்யாணம் செய்து கொள்வதை விட ஒரு புத்திசாலி மருமகள் வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது.

யார் அந்த மைதிலி ?

"இல்லே.. எனக்கு ஒண்ணும் தெரியாது. அப்பா என்னை கல்யாணத்தை மட்டும் அட்டெண்ட் பண்ணச் சொல்லியிருந்தார். அதான் வந்தேன்" என்றேன்.

குண்டு மாமா சிரித்துக் கொண்டு "அதெல்லாம் பெரியாவா நாங்க பேசிக்கறோம். இந்தக் காலத்துல யாரு சொஜ்ஜி, பஜ்ஜி சாப்டுட்டு பொண் பாக்கறா ? இது மாதிரி ஒரு ஃபங்ஷன்ல மீட் செஞ்சுண்டா சரியா போச்சு. நீங்க பொண்ணைப் பாத்து பேசி புடிச்சிருந்தா போய் உங்க அப்பா கிட்டே சொல்லுங்கோ, மத்ததை அப்புறம் பேசிக்கலாம்" என்றபடி அப்போதுதான் திரும்பி வந்து கொண்டிருந்த என் அழகு தேவதையை "மைதிலி.. இங்கே வாம்மா. இவருக்கு வேணுங்கறதை எல்லாம் கொடுத்து கவனிச்சுக்கோ" என்றார்.அவள் தலையைக் குனிந்து கொண்டு புன்னகைக்க அவர்கள் நகர்ந்தனர்.

"அட.. இவதான் மைதிலியா ? இவளைத்தான் பஞ்சு மாமா எனக்காக பார்த்து வச்சிருக்காரா ? மாமவுக்கு டபுள் கமிஷன் குடுக்கலாமே " என்று நினைத்துக் கொண்டேன்.

"நீங்க மத்யானம் சென்னைக்கு திரும்பணுமா?"

நான் அவள் கன்னத்தையே பார்த்தபடி "இல்ல இல்ல.. நாளைக்கு எனக்கு சேலத்துல ஒரு இண்டர்வியூ. அதை முடிச்சுட்டு அப்படியே நேரே சென்னை போயிடுவேன்"

"அப்படின்னா நீங்க நாளைக்கு காலம்பர இங்கேருந்து கிளம்பினா போறுமே. ராத்திரியே சேலத்துக்கு போகணுமா என்ன ?"

ஒரு அசட்டு முழியுடன் "ஆமா.. நீங்க... நீ சொல்றது சரிதான். நாளைக்கு காலம்பர கிளம்பினா போறும்" என்றேன்.

"இங்கேயே மொட்டை மாடியில் ஒரு ரூம் இருக்கு. அதுல தங்கிக்கோங்கோ. நான் போய் ரெடி செஞ்சு வைக்கிறேன். இதோ எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டா. காசி யாத்திரை ஆரம்பிச்சுடும். வேஷ்டி கட்டிண்டு வந்துடுங்கோ" என்றாள்

"வேஷ்டியா ?"

நான் இண்டர்வியூவுக்காக ஒரு செட் ஃபார்மல் டிரஸ் கொண்டு வந்திருந்தேன். நைட்டுக்கு ஒரு பெர்முடாஸ் மட்டுமே"

என் முழியைப் பார்த்துவிட்டு "ஓ.. கொண்டு வர்லியா .. நான் கொண்டு தரேன். என்னோட வாங்கோ" என்றாள்.

அவள் நடக்கும்போது நீண்ட பின்னல் ஆடி ஆடி இரண்டு பக்கமும் அசையும் அழகைப் பார்த்தபடியே அவள் பின்னே ஓடினேன்.

மத்தியான சாப்பாட்டின்போதும், மாலை நலங்கின்போதும் எல்லோருமே வந்து வந்து உபசரித்த போதும் அவள் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டதை என் மனம் புரிந்து கொண்டது. அடுத்த நாள் விடியற்காலையில் கிளம்பி சேலம் போய்விட எண்ணிக் கொண்டு அம்மாவுக்கு போன் செய்து திருப்பத்தூர் கல்யாணத்தை அட்டெண்ட் செய்து விட்டதாக மட்டும் சொல்லி விட்டேன்.

மொட்டை மாடி அறையில் தனியாக கட்டிலும் அதன் மேல் ஒரு மெத்தையுமாக வசதியாகவே இருந்தது. ( அப்பாடா ! சேலத்து ஹோட்டல் ரூம் வாடகை மிச்சம் ! )

லேசாக குளிர் காற்று வீச கட்டிலின் மேல் கண்களை மூடி அப்படியே சாய்ந்து கொண்டேன். காஷ்மீர், ஈஃபில் டவர், நயகரா ஃபால்ஸ் என்று மைதிலியுடன் டூயட் பாடி கனவு கண்டபடியே மல்லாந்து புரண்டபோது என் முகத்தில் பன்னீர் தூறல் விழுந்தது. சட்டென்று கண்ணை விழித்துப் பார்த்தேன். என் முகத்திற்கு நேரே மைதிலியின் முகம். கையில் ஒரு டம்ளரின் தண்ணீர்.

"கும்பகர்ணன் மாதிரி குறட்டை விட்டுண்டு தூங்கினா பஸ் பிடிச்சு போக முடியாது. பல்லைத் தேய்ச்சுட்டு வாங்கோ. காபி ரெடியா இருக்கு"

நான் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து ரெடியானபோது அவள் என் பையைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.

"கண்ட எடத்துல பையை வச்சுட்டு போறேளே ! ஏதாவது தொலைஞ்சு போயிடப் போறது"

தொலைந்து போனது என் மனசு மட்டும்தான் என்று அப்படி அவளிடம் சொல்வேன ?

சேலத்தில் இண்டர்வியூ முடிந்து காத்திருந்தேன். அதிகாரி என்னை அழைத்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும் முதலில் எல்லா சர்டிபிகேட்டுகளுக்கும் காப்பி மட்டுமே கொடுத்திருந்ததால் இப்போது எல்லா ஒரிஜினல் சர்டிபிகேட்டுகளையும் காட்டி கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். என் பையைத் திறந்தேன். அதிலும் வெறும் காப்பிகள் மட்டுமே இருந்தன. கிளம்பும் அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டேன் போலிருக்கிறது. எப்படியும் அம்மா, அப்பாவிடம் பேசி விட்டு ஞாயிறு மீண்டும் திருப்பத்தூர் வர திட்டம் இருக்கிறதே !

அதிகாரியிடம் திங்களன்று எல்லா ஒரிஜினல் சர்டிபிகேட்டுகளையும் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு நேரே கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். வீட்டுக்குள் நுழையும்போதே அப்பா கத்தும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

"என்ன நெனச்சுண்டு இருக்கான் அவன் ? எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அதுக்கெல்லாம் சரி சரின்னு மண்டையை ஆட்டிட்டு உன் கிட்டேயும் திருப்பத்தூர் போறதா சொல்லிட்டு எங்கேயோ ஊரைச் சுத்த போயிருக்கான்"

"நேக்கு அங்கே மணடபத்துலேருந்து போன் செஞ்சானே.." அம்மா பதில் சொல்கையில் நான் நுழைந்ததும் அப்பா ஒரு நிமிடம் மௌனமாகி முறைத்தார்.

"ஏதுக்குப்பா இப்படி கத்திண்டு இருக்கேள் ?"

"நான் உன்னை மகாதேவன் பொண்ணு கல்யாணத்துக்கு போயிட்டு வரச் சொன்னேனோல்லியோ ? ஏண்டா போகலை ?"

எனக்கு அப்பா சொல்வது சத்தியமாகப் புரியவே இல்லை.

"என்ன சொல்றேள் ? நான் போகலையா ? நேத்திக்கு காலம்பரையே அங்கே போயிட்டேன். அவாத்துக்காரா எல்லாரையும் கூட பாத்து பேசினேன்."

அம்மா முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டிருக்க கொல்லைப் பக்கம் அம்முலு ரமேஷை சாப்பிடச் சொல்லி மிரட்டுவது கேட்டது. எனக்கும் விஷயத்தை வெளியிட இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது.

"அம்மா.. இதைக் கொஞ்சம் கேளேன். அப்பாவோட ஃப்ரண்டு மகாதேவனோட ரெண்டாவது பொண்ணை எனக்கு தரணும்னு ஆசைப்படறா "

அப்பா இடி விழுந்தவர் போல நின்றார்.

"என்னடா சொல்றே ? அவா கூட நமக்கு சம்பந்தமா ?"

"ஏன் கூடாதா ? அவா ஸ்ரீவத்ச கோத்ரம்தான், அதையும் கேட்டுண்டு வந்துட்டேன்"

"என்ன தத்து பித்துனு பேசறே ! அவளுக்கெல்லாம் தெனம் ரெண்டு வேளை ஆடு கோழி திங்காட்டி சாப்பாடே எறங்காது"

என் கண் முன் பட்டையும், பட்டுமாக நின்ற மாமாக்களின் உருவம் வந்தது. யம்மாடியோ.. படா தில்லாலங்கடி குடும்பம்தான் போலிருக்கு.

"அவாளுக்கு புடிச்சிருந்தா எதை வேணாலும் திங்கட்டும். ஆனா அந்த பொண்ணு திங்காது. நான் கேரண்டி"

"டேய்... ரெண்டாவது பொண்ணா ? அவனுக்கு ஒரே பொண்ணுதானேடா"

"இல்லேப்பா .. ரெண்டு பொண்ணாம். முதல் பொண்ணுக்குதான் இப்போ கல்யாணம். அடுத்தவதான் மைதிலி"

"பேர் திவ்யமா இருக்கே ! ஏன்னா... எதுக்கும் நாமளும் ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடலாமா?"

அப்பா அம்மாவை முறைத்தார்.

"என்னடி சொல்றே ! மகாதேவன் நம்மவா கிடையாது. அதுவும் அவனுக்கு ஒரே பொண்ணுதான். இவன் என்னவோ உளறிண்டு இருக்கான்"

"என்னப்பா சொல்றேள் ? அவா எல்லாம் நம்பள விட ஆசாரமா இருக்கறவா ! அதுவும் உங்க ஃப்ரெண்டும் போய்ச் சேர்ந்தாச்சே ! நாந்தான் நேத்தி பூரா அவா ஆத்து மனுஷாளோட இருந்துட்டு இன்னிக்கு காலம்பரதானே கிளம்பி சேலத்துக்கு இண்டர்வியூவுக்கு போய் சேர்ந்தேன்"

"என்னடா சொல்றே ? மகாதேவன் போயிட்டானா ? அவன் கல்லு குண்டு மாதிரி இருக்கானேடா.. அது சரி.. திருப்பத்தூர்லேருந்து காலம்பர கிளம்பி சேலத்துக்கு போனியா ? அது எப்படி முடியும் ?"

"ஏன் ? ஒரு ரெண்டு மணி நேர டிராவல்தானே ?"

"என்ன உளர்றே ? நீ எந்த திருப்பத்தூரை சொல்றே ?"

"நீங்கதான் உளர்றேள்.. ஜோலார்பேட்டை பக்கத்துல இருக்கே.. அதானே திருப்பத்தூர்"

"அட கிரக்சாரமே... என் ஃபிரண்டு இருக்கறது காரைக்குடி பக்கத்துல இருக்கற திருப்பத்தூர்டா.. ராமநாதபுரம் ஜில்லான்னா அது"

எனக்கு தலையே சுற்றியது. இரண்டு திருப்பத்தூரிலும் இரட்டையாக மருந்துக்கடை மகாதேவன் இருக்கலாம் என்பதும் அவர்களின் பெண்ணுக்கு ஒரே நாளில் கல்யாணம் செய்வார்கள் என்றும் நான் நினைத்துக் கூட பர்ர்க்கவில்லை.

"இதைப் பாத்தியா ? யாராத்து விசேஷத்துக்கோ போயிட்டு பணத்தை ஒதியிட்டுட்டு வந்திருக்கான் நம்ம புள்ளையாண்டான். நன்னா சமத்தா பெத்து வச்சிருக்கே"

"அப்பா... எது எப்படி போனாலும் நான் மைதிலியைத்தான் பண்ணிப்பேன்"

அம்மா பூரிப்பாக "மைதிலிங்கற பேரே நன்னா இருக்கே ! அப்பவே ஆலங்குடி ஜோசியர் சொன்னார். உங்காத்துக்கு வரப்போற பொண்ணு மகாலட்சுமி அம்சம்னு"

அப்பா கடுப்புடன் "நிறுத்துடி.. அம்சம், வம்சம்னு பேசினா துவம்சம் பண்ணிடுவேன். டேய் விஷயத்தை ஒழுங்கா சொல்லு"

நான் அப்பாவுக்கு விளக்கிக் கொண்டு இருக்கும்போதுதான் வீட்டு டெலிபோன் மணி அடிக்க அம்மா எடுத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்பா ஒரு வழியாக விஷயத்தைப் புரிந்து கொண்ட சமயம் அம்மா "நிறுத்துங்கோ உங்க கத்தலையும் ஆர்பாட்டத்தையும்." என்று ஒரு கர்ஜனை செய்ய அப்பா அடங்கி ஒடுங்கி நின்றார். அம்மா போனை அப்படியே வைத்துக் கொண்டு "டேய்.. உன் ஒரிஜினல் சர்டிபிகேட் எல்லாம் எங்கேடா ? இண்டர்வியூல கேட்கலையா?" என்றாள்.

"கேட்டாளே... ஆனா அதை எடுத்துண்டு போக மறந்துட்டேன்"

அம்மாவின் முகத்தில் ஒரு மந்தகாசம் . "இதோ பாருங்கோ.. என் மாட்டுப் பொண்ணு மைதிலிதான் இப்ப போன் செஞ்சா. இந்த முட்டாள் அவன் ஒரிஜினல் சர்டிபிகேட்டை எலலாம் கல்யாண ஆத்துலேயே விட்டுட்டு வந்துட்டானாம். அவ பார்த்து எடுத்து வச்சிண்டு அதிலேருந்து நம்ம ஆத்து போன் நம்பரையும் கண்டு புடிச்சு கூப்பிட்டு சொல்லிருக்கா. இது மாதிரி சமத்து பொண்ணுதான் இந்த ஆத்துக்கு ஏத்த மாட்டு பொண்ணு.. டேய் நோக்கும் அவளைப் புடிச்சிருக்கு இல்லையா ? . நானும் அப்பாவும் ரெண்டு பேரும் நாளைக்கே திருப்பத்தூர் போய் பேசி முடிக்கப்போறோம். இதுல ரெண்டாவது பேச்சுக்கே எடம் கெடையாது. புரிஞ்சுதா"

நான் ஓடிப்போய் அம்மாவிடமிருந்து போனைப் பிடுங்கி "தாங்க்ஸ் மைதிலி" என்றேன்.

எதிர் முனையில் அந்த சின்னப் பெண்ணின் குரல் "மாமா. என் டிரஸ்ஸை சரி பண்ணி விடுங்கோ " என்றது.

பின் கதவு வழியாக வந்த என் அக்கா அம்முலுவையும், ரமேஷையும் பார்த்தபடி "இன்னும் பதினஞ்சு வருஷம் பொறுத்துக்கோ. என் அக்கா பையனை அனுப்பறேன்." என்றேன்.

( கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை பிறந்தபிறகு இன்னும் கூட அன்னைக்கு திருப்பத்தூர் கல்யாணத்தில் அவளைப் பார்க்க வருவதாக இருந்த வரன் வரமுடியாமல் போன விஷயம் தெரிந்ததும் நான் யாரென்று தெரிந்து கொள்ள என் பையிலிருந்து எல்லா சர்டிபிகேட்டையும் எடுத்து செக் செய்வதற்காக வைத்துக் கொண்ட தில்லாலங்கடி வேலையை செய்தாள் என்பதை மைதிலி சொல்லவே இல்லை. பின்னே எனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னே கேக்கறேளா ? இண்டர் நெட்டுல ஹப் போரம்ல என் கதை பப்ளிஷ் ஆகி வந்திருந்தது. அதைப் படிச்சபோது முடிவுரையிலே இந்த விஷயத்தை எழுதி இருந்தா.. .ம்ம்ம் என்ன இருந்தாலும் எங்காத்து மாட்டுப் பொண்ணு சமத்துதான் )

Madhu Sree
17th August 2012, 07:03 PM
PM paakuradhuku munaadiye padichitten :D
good one :D oralavukku naan ellaathaiyume guess pannitten story title veche :)

madhu
17th August 2012, 07:08 PM
:ty: mayilamma.. appadinna title-ai mathaNumO ? :think:

adutha story-la paathukkalaam :yes:

Shakthiprabha
17th August 2012, 09:41 PM
:D madhu.........romba rasichen.... edho sondha kadhai pola irukke :cough cough: athavathu.......sondha kathai mathiri anubavichu ezhutirukeenga....

yaaradi nee moini yum (kirakkam)
pathrigai thedum sandhadi saakkil aagam suthamaanathum pidithirunthathu...
nice aaga sidela ninnu pathirigai padichathelaam so realistic :D

kittathatta "aaN paavam" kathaiyoda karu....but light hearted....
besh besh! romba romba nanna irukku

btw, 26 year old payyan irukara yaarukkum ippolaam akhilandam gara mathiri old fashioned per irukarathilla...times are changing :D

looking forward for ur next story. :D

VinodKumar's
17th August 2012, 10:04 PM
Good one. But as Madhu Sree said I could also guess the story line from the title.

""மாமா.. என் டிரஸ்ஸை சரி பண்ணி விடுங்கோ"

நான் திருதிருவென்று விழித்தபடி இருக்க அந்த பாரம்பரிய அழகி என் அருகில் வந்து "பயந்துட்டேளா.. என் கசின் பொண்ணுதான். அவளுக்கு அவசரம்னா பக்கத்துல இருக்கறவா கிட்டே இப்படித்தான் கேப்பா" என்றபடி அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினாள்." - Ithu super.

I liked this. Kalyana veetla kozhanthainga kooda veladurathu :happydance:.

madhu
18th August 2012, 03:58 PM
:ty: power... sondha kadhai ippadi ellaam thrilling-a illaiye :cry2:

ennadhu ? en neighbour paiyanukku vayasu 22. avan amma peru akilandam. :rotfl:

:ty: vinod..

pavalamani pragasam
19th August 2012, 07:08 AM
வயசுப் பையன்கள் அழகான பொண்ணைப் பார்த்து வழிகிற/விழுகிற சாதாரண கதை! ஆனா, சுவையான, ரசிக்க வைக்கும் நடை! ரொம்ப ஜாலியான கலட்டா கல்யாணம்! விதி என்னமாய் விளையாடியிருக்கிறது, நல்ல விதமாக, சுபமாக!

madhu
19th August 2012, 06:50 PM
:ty: PP akka

chinnakkannan
19th August 2012, 08:28 PM
ஈத் ஹாலிடேஸ் - என்பதினால் ஊரிலிருந்து வந்த நண்பர்களுடன் சுற்றி பின் அரடடை என இருந்ததில் வலைப்பக்கம் உட்காரவில்லை. இப்போதுதான் வந்து படித்தேன்..
நல்ல நடைங்க.. அப்புறம் பஃப் கை , பாவாடை சட்டை தாவணி இதுவும் எனக்குப் பிடிக்கும்..

திருப்பத்தூர் - மதுரையிலிருந்து தஞ்சாவூரி போகும்வழியில் வரும் ஒன்று - அதைத்தான் காரைக்குடி போகும் வழியில் என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்..

சுவாரஸ்யமான கதைக்கு நன்றி..இன்னும் எழுதுங்கள்.. விரைவில் நானும் வருவேன்..ஒரு... உடன்..