-
லஞ்சம் !
‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் சிக்னல் அருகே. லிங்கம் தனது ஆட்டோவை நிறுத்தினான், “சே! என்ன பேஜாருடா இது!” என்று புலம்பிக் கொண்டே.
“என்னய்யா! ரெட் சிக்னல் ஜம்ப் பண்றே! வண்டியை ஓரம் கட்டு”- போலீஸ் காரர் அதட்டினார். “அவசரம் சார், சாரி சார் ! இந்த தபா உட்டுடுங்க சார்! “- லிங்கம் போலீசுக்கு சலாம் போட்டபடியே. “என்ன அப்படி அவசரம்? சவாரியை வண்டியிலே வெச்சிக்கினு, மீட்டர் போடாமே வேறே ஓட்டறே?. எடு, எடு , பெர்மிட், லைசன்ஸ் எடு.”
கூட இருந்த சக போலீஸ் காரர், காதோடு சொன்னார். “இது நம்ம எஸ் ஐ. ஆட்டோ சார்”. “யாரா இருந்தா என்ன? ஐநூறு கறக்கலாமென்று இருந்தேன். சரி, செலவுக்கு 100 கொடுத்துட்டு போகச்சொல்லு”
லிங்கம் நூறு ரூபா அன்பளிப்பு அழுது விட்டு வண்டியை எடுத்தான். “ச்சே! என்னமா புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! இந்த போலீஸ் காரங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி சார் உருப்படும்?” லிங்கம், வண்டியில் இருந்த சவாரியிடம் அலுத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
***
அண்ணா நகர் சிந்தாமணி நிறுத்தம்.. மணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான்இன்று பார்த்து மணிக்கு மணியாகிவிட்டது. அதிகாரி அவனை திட்டப் போகிறார். பஸ் எதுவும் காணோம். ஒரு ஆட்டோ காலியாக வந்தது. மணி கை காட்டி நிறுத்தினான். "ஆட்டோ, புரசைவாக்கம் போகவேண்டும், வரியா?”
“நூறு ரூபா ஆகும் சார்” – ஆட்டோ ஓட்டுனர் லிங்கம், அசட்டையாக. “என்னது! பகல் கொள்ளையாக இருக்கே! மூணு கிலோ மீட்டர் தூரம், நாப்பது கூட ஆகாது. நூறா? மீட்டர் போடு.”, மணி கறாராக. அதற்கு கொஞ்சமும் அசைய வில்லை லிங்கம் . காதில் விரலை விட்டு நொண்டிக் கொண்டே அவன் சொன்னான். “சார், மீட்டர் கீட்டர் எதுவும் போட முடியாது. வரதுன்னா ஏறு, இல்லாகாட்டி என்னை விடு. வேறே சவாரி பாத்துக்கிறேன். பேஜாரு பண்ணாதே“.
மணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “டிரைவர், நான் யார் தெரியுமா? புகார் கொடுத்தா உன் பெர்மிட் காலி, நினைவிருக்கட்டும்”
“அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம். எங்களுக்கும் ஆளு இருக்கில்லே! இதோ பாரு சார், கொஞ்ச நேரம் பஸ் எதுவும் வராது. டிராபிக் ஜாம். சரி, எண்பது தரியா?”.
மணி பொருமினான். “சரி, போலாம். போ.! என்ன ஒரு அடாவடி ! என்னமா புடுங்கறீங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! சே ! இந்த ஆட்டோ காரங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி உருப்படும்?”
“அட சும்மா கம்முனு வா சார்!”
*****
மணி 11.00 . அரசு இளநிலை எழுத்தர் மணி, மும்முரமாக அன்றைய தினசரி தாளில் மூழ்கியிருந்தான். “சார்! மணி சார்!” – மேஜைஅருகில் யாரோ பணிவாக கூப்பிட்டார்கள். கூப்பிட்டவர், திரு வெங்கடேசன், தனியார் மருத்துவ கல்லூரியின் உதவி நிர்வாக அதிகாரி .
“வாங்க வெங்கடேசன்! சார் ! எப்படி இருக்கீங்க?”. தினசரியை மூடி வைத்தான் மணி. “நல்லா இருக்கேன் சார், என் பில்டிங் அப்ரூவல் விஷயம்..” வெங்கடேசன் இழுத்தார். “உங்க பேப்பர் இன்னும் கிளியர் ஆவலே வெங்கடேசன். பெரிய ஐயா ரொம்ப பிசி. எனக்கும் ரொம்ப வேலை. ஒரு வாரம் கழித்து வாங்களேன்”
“இல்லேங்க மணி சார், இத்தோட மூணு தடவை வந்துட்டேன். நாள் ஆக ஆக எனக்குத்தான் பிரச்சனை. கொஞ்சம் சீக்கிரம் உத்திரவு வாங்கி கொடுத்தால், நல்லாயிருக்கும் சார். கொஞ்சம் மனசு வையுங்க மணி சார். எவ்வளவு ஆகும்னு சொன்னா..” – தலையை சொறிந்தார் வெங்கடேசன்.
“சரி, வெங்கடேசன் சார், உங்களுக்காக நான் பெரிய ஐயா கிட்டே பேசறேன். பெர்மிட்க்காக ஒரு 7500, கவுண்டர்லே டிராப்ட் கட்டிடுங்க. அதிகாரி, அப்புறம் மற்ற ஆளுங்களை நான் சரிக் கட்டனும். அதுக்கு ஒரு 15000/- கொடுங்க. எனக்கு தனியா 5000 போதும். சாயந்திரம் வீட்டாண்டை வரேன். அங்கே வெச்சி அட்வான்ஸ் கொடுத்திட்டீங்கன்னா, மூணு நாளிலே காரியம் முடித்துடலாம்.” – மணி
“சரிங்க மணி சார், கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுங்க! உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கிறேன்”. வெங்கடேசன் பம்மினார். “கட்டாயம். கவலைப் படாதீங்க. இது என் கடமை . நான் பார்த்துக்கறேன்”- மணி
கல்லூரியின் நிர்வாக உதவி அதிகாரி வெங்கடேசன் மனத்துக்குள் அலுத்துக் கொண்டே வெளியே வந்தார். “சே ! என்ன ஒரு அடாவடியா, இழுத்தடிச்சி பணம் புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! இந்த அரசாங்க அதிகாரிங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி உருப்படும்?” – புழுங்கினார் வெங்கடேசன்.
****
தனது வேலையில் மூழ்கி இருந்தார் வெங்கடேசன், மருத்துவ கல்லூரியின் உதவி நிர்வாக அதிகாரி. அப்போது அலைபேசி அலறியது. “வெங்கடேசன் சார் ! நான் குமரேசன் பேசறேன்.! நினைவிருக்கா ? சார், என் பொண்ணு மெடிகல் சீட் விஷயம் கேட்டேனே? ஏதாவது நல்ல நியூஸ் இருக்கா சார் ”- வினயமாக கேட்டவர், குமரேசன், அரசு மேம்பால காண்ட்ராக்டர்.
“ ஓ! பண்ணிடலாமே! நான் ஏற்பாடு பண்ணிடறேன் ! எல்லாம் சேர்த்து 30 லட்சம் ஆகும். என் கமிஷன் 5 எல்...கொடுத்தீங்கன்னா முடிச்சிடலாம். ”- தன் பல் குத்திக் கொண்டே சொன்னார் வெங்கடேசன். “சரி சார், அதுக்கென்ன, எப்படி கொடுக்கணும்னு சொல்லுங்க, செஞ்சுடலாம்” – போனை வைத்தார் குமரேசன்.
“சே ! என்ன ஒரு அடாவடியா, பணம் புடுங்கறாங்க. இத்தனைக்கும் இது ஒரு தனியார் கல்லூரி. கல்வியை இப்படி கேவலமா ஒரு வியாபாரமா மாத்திட்டாங்களே ! இந்த நாடு எப்படி உருப்படும்? .” அலுத்துக் கொண்டே எம் எல் ஏ கோவிந்தனுக்கு போனைப் போட்டார்.
****
காரில் போகும் போது, கோவிந்தன் எம்.எல்.ஏ, தனது அலைபேசியில், அமைச்சர் அருணாசலத்துடன் தொடர்பு கொண்டார். “ தலைவரே, நல்லா இருக்கீங்களா தலைவரே ! வீட்டிலே எல்லாரும் நலன்தானுங்களே ! ! ஒரு சின்ன உதவி தலைவரே ! நம்ம மேம்பால காண்ட்ராக்டர் குமரேசன் விஷயம்.. ! அவருக்கு வெள்ளை மலை பாலம் காண்ட்ராக்டு கிடைக்க ஏற்பாடு செய்யணும்.. ஐம்பது கோடி ப்ராஜக்ட். ! . நீங்கதான் தலைவரே கொஞ்சம் மனசு வைக்கணும் “ இழுத்தார்.
அந்த பக்கம் அமைச்சர் “ வேணாம் கோவிந்தன்! அந்த குமரேசன் பேரிலே நிறைய புகார் இருக்கு. போக்குவரத்து துறை அமைச்சர் வேறே யாரையோ மனசிலே வெச்சிருக்காரு போலிருக்கு ! “
“இல்லீங்க தலைவரே, குமரேசன் பத்து பர்சென்ட் தரேன்னு சொல்லறார். கொஞ்சம் தயவு பண்ணனும் தலைவரே”
“ சரி நீ சொல்லிட்டே ! நான் பார்த்துக்கிறேன் “.
“ரொம்ப நன்றி தலைவரே! உங்க கமிஷன் விஷயம், நீங்க சொல்லனுமா என்ன? நான் பார்த்துக்கறேன் தலைவரே!”
***
ஆளும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளின் கூட்டம்.
“தேர்தல் வருது. நாம முக்கிய அறிக்கைகள் கொண்டு வரணும். மக்களைக் கவரும் விதமாக. இல்லாட்டி, நாம தோல்வியை தழுவ வேண்டி வரும்” – அமைச்சர் அருணாசலம்.
“ஐயா! நம்ம கட்சி பேரிலே இருக்கிற முக்கிய குற்றச்சாட்டு லஞ்சம். நம்ம ஆட்சியிலே லஞ்சம் தலை விரித்தாடுகிறதாம்”- கோவிந்தன் எம்.எல்.ஏ மக்கள் எண்ணத்தை மன்றத்தில் பகிர்ந்தார்.
“ஆமா! சொல்றவங்க யாரு, எதிர்க் கட்சிக் காரங்க தானே! அவங்க ஆட்சியிலே மட்டும் என்ன வாழ்ந்தது? அவங்க பண்ணாததையா நாம் பண்ணிட்டோம்?”– அமைச்சர் ஒரு போடு போட்டார்.
“இல்ல தலைவரே, ‘அவங்க பேரிலே ஊழல் புகார் இருக்குன்னு சொல்லித்தானே நீங்க ஆட்சிக்கு வந்தீங்க? நீங்க என்ன வாழ்ந்ததுன்னு’ மீடியா காரங்க மாத்தி மாத்தி கேக்குறாங்க. நான்தானே கட்சி மீடியா தொடர்பு, என்னை காய்ச்சி எடுக்கறாங்க! முடியலே தலைவரே! ஏதாவது பண்ணனும்! ”
“ சரி ஏதாவது யோசனை பண்ணுவோம் !”- அமைச்சர். அவருக்கும் இது ஒரு சவால் தான்.
“தலைவரே, நாம வேணா, இந்த ஊழல் ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் கொண்டுவரலாமா?”- கோவிந்தன் எம்.எல்.ஏ, பவ்யமாக கேட்டார். “என்னய்யா சொல்லறீங்க ? கொண்டுவந்துட்டு, நாம எல்லாரும் தலைலே துண்டு போட்டுக்கறதா?”- உடனே அதட்டினார் மற்றொரு எம்.எல்.ஏ,.
“சும்மா இருங்க! அவரை பேச விடுங்கய்யா! நல்லதா ஒரு ஐடியா சொல்லுங்க கோவிந்தன்”- அமைச்சர் குறுக்கிட்டார். “ஐயா! லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி, லஞ்சம் கொடுப்பவனுக்கு தண்டனை கொடுப்பது தான். கொடுக்கிரவன்தானே தானே, லஞ்சம் வாங்க ஊக்குவிக்கிறான்? லஞ்சம் கொடுப்பவனே இல்லையென்றால், லஞ்சம் எவன் வாங்குவான், எப்படி வாங்குவான்? அதனாலே ஐயா, லஞ்சம் கொடுப்பது தான் குற்றம், வாங்குவது அல்ல என சட்டம் போட்டு விட்டால் என்ன?”- கோவிந்தன்
“அட, இந்த ஐடியா கூட நல்லா இருக்கே! ”- அமைச்சர். உடனே கோவிந்தன் சொன்னார் “ஆமாங்கய்யா! லஞ்சம் கொடுத்தால், குறைந்தது ஐந்து வருட கடுங்காவல் என சட்டம் போட்டு அறிக்கை விடலாம். தண்டனைக்கு பயந்து எவனும் லஞ்சம் கொடுக்க தயங்குவான். தன்னால், ஊழல் ஒழிந்து விடும்”
“ரொம்ப பிரமாதம் கோவிந்தன். சிறப்பா சொன்னீங்க ! புகார் கொடுக்கரவனே இல்லைன்னா, குற்றத்தை எப்படி நிரூபிப்பாங்க? தண்டனை எப்படி கொடுப்பாங்க? அருமையான சிந்தனை !” அமைச்சர் ரொம்ப குஷியாகி விட்டார். “நன்றிங்க தலைவரே” – கோவிந்தனுக்கு நம்பிக்கை வந்து விட்டது. தனக்கு இந்த முறையும் தேர்தல் டிக்கெட் உறுதி.
“நான் இதை இப்பவே அமைச்சர் குழாம்லே எனது கருத்தா சொல்றேன். விவாதிக்கலாம். நீங்களும் என் கூட வாங்க கோவிந்தன். உங்களை மாதிரி சிந்திக்கிறவர் தான் இந்த கட்சிக்கு இப்போது தேவை. நன்றி நண்பரே!”
***
இரண்டு மாதம் கழித்து :
“ எதிரே பாரு சார்! அந்த போலீஸ் காரன் எப்படி மாமூல் வாங்கறான் ? ச்சே! என்னமா புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு ! இந்த போலீஸ் காரங்க அட்டூழியம் தாங்கலே. இந்த நாடு எப்படி சார் உருப்படும்?” லிங்கம், வண்டியில் இருந்த சவாரியிடம் அலுத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
பேசிக்கொண்டே, ஆட்டோ ஓட்டுனர் லிங்கம், இடது பக்கம் போக, தனது கை காண்பித்து விட்டு, சிகப்பு விளக்கு சிக்னலை பாராமல், வலது பக்கம் திரும்பியபோது, எதிரில் வந்த ப்ரேக் பிடிக்காத மண் லாரி மோதி, அந்த இடத்திலேயே அவனுக்கு மரணம் சம்பவித்தது,
அரசு மருத்துவமனை
“ஐயா! ஐயா! எப்பய்யா என் பையனை திருப்பி கொடுப்பீங்க?” – ஆட்டோ டிரைவர் லிங்கத்தின் அம்மா அரசு மருத்துவமனையில், இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
“ம்.. நேரம் ஆகும். உன்னை பார்த்தா பாவமா இருக்கு. சரி, எனக்கு ஐநூறு கொடு., பாடி தயார் பண்றேன் ” – மார்ச்சுவரி கிடங்கில், ஒரு சிப்பந்தி சொன்னார். “இந்தாங்க ஐயா! “ அழுது கொண்டே அம்மா
“மறைச்சி கொடம்மா. யாரவது பார்த்தா, லஞ்சம் கொடுத்தேன்னு உன்னை ஜெயில்லே போட்டுடுவாங்க. சரியான அப்பாவியா இருக்கியே!”. கிழவி விழித்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இப்போ புது சட்டம் கொண்டு வந்துருக்காங்கம்மா. தெரியாதா? லஞ்சம் கொடுக்கறது தான் குற்றம். வாங்கறது இல்லே. அதனால, வெள்ளந்தியா இருக்காத. மாட்டிக்குவே. மறைச்சி கொடு. அப்புறம், உள்ளே போய் ஆசுபத்திரியிலே மத்த அதிகாரிக கிட்டேயும் கையெழுத்து வாங்கணும்! நேரே போய் இடது பக்கம் போய், அங்கே கேளு. ரூபா 2000 வரை செலவாகும். போலிசுக்கு மாமுல் வேறே கொடுக்கணும். யாருக்கும் தெரியாம, மறைவா கொடு. புரிஞ்சிச்சா?“
“எதுக்கு ஐயா மாமூல்?”- அரசு இயந்திரம் புரியாத அம்மா.“எதுக்கா? உன் பையன் பாடி வாணாவா?”
மூதாட்டி அழுது கொண்டே, பணம் அழுவதற்கு சென்றாள். “சே ! என்ன ஒரு அடாவடியா, பணம் புடுங்கறாங்க. இதெல்லாம் ஒரு புழைப்பு! இப்படி பிடுங்கினா, இந்த நாடு எப்படி உருப்படும்?”
அந்த மூதாட்டிக்கு இப்படி நினைக்க தெரியவில்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இப்போது இல்லை. !
**** முற்றும்
http://dojoke.com/images1/39c5ffd0ra...3a6b2fd3f4.jpg
-
இந்த நாடு எப்படி உருப்படும்? :sigh2:
புரையோடிய புண்! அறுவை சிகிச்சை எப்போது? எப்படி? யாரால்?
-
நன்றி மேடம் !
ஊழலுக்கு உண்டு சிரச்சேதம்
உருளும் தலை அயல் நாட்டிலே !
உண்மைதானே அது: கேட்டதில்லே?
ஆனால் :
நிலைமை என்ன நம்ம நாட்டிலே?
ஊழலை எதிர்த்தால் உண்மையை கேட்டால்
உடையும் மண்டை ! உள்ளதை சொன்னால்
உண்டா இங்கே உயிருக்கு உத்திரவாதம் ?
அந்த இறைவன் தான் நம்மை காக்க வேண்டும் :(