Originally Posted by
makkal thilagam mgr
நமது பொன்மனச்செம்மலின் 5வது படமாகிய "மாயா மச்சீந்திரா" படத்தின் கதைச்சுருக்கம் :
அநீதி, அபலைகள் என்பது பொய். வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பது பிசகு. அடிமைத்தனம் இனி இல்லை, இனியும் கூடாது என்று அலறுகிறாள் காம்ரூபதேச மஹாராணி ஊர்மிலா. இதுவே சமயம், நாம் அடிமைகள் அல்லவென்பதை அவன் உணரட்டும் புறப்படுங்கள், புருஷர் தலைகள் உருளட்டும், ராணி ஊர்மிலாவுக்கு ஜேய் என்ற கோஷத்துடன் ஸ்திரீ ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது. போர் முரசின் ஆரவாரம். மனிப்பூர் அரசன் விசாலாக்ஷனின் படையெடுப்பு. போர்க்களத்தில் ஸ்திரீ
புருஷனை எதிர்க்கிறாள். (இங்கு புருஷன் என்ற வார்த்தை ஆண் வர்க்கத்தை குறிக்கும் சொல்லாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் என்று பொருள் கொள்ளக் கூடாது.)
மற்றொரு புரம், அமைதி முக்தி மார்க்கத்தை நாடுபவர்களின் சமுகம். மச்சீந்திரநாதரின் குருகுலம். சம்ஸார மாயை உணர்ந்தவர் சிலர் உணராதவர் பலர். ஸ்திரீகளுக்கு அங்கே இடமில்லை.. " சங்கனாத் ! ஏ கபட சந்நியாசி! எனக்கு சேர வேண்டியதை கொடு. பிறகு உன் ஜபம் நடக்கட்டும்" என்கிறாள் தாசி லலிதா. தீவிர பிரம்மச்சாரி கோரக் இந்த காட்சியை கண்டு அவ்விருவரையும் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேற்றுகிறான். தான் கண்ட ஸ்திரீ சொருபம் அடிக்கடி தோன்றி மறைய, கோரக் குருவை நாடிச் செல்கிறான்.
"கோரக் - நீ கண்டது ஸ்திரீ சொருபம், சமுக மாயையின் காரணம் அதுவே. போகப் போக உனக்கு அது தெரியும். அதை மறந்து உன் மனதை ஆண்டவன்பால் செலுத்து. கோரக்கின் குனிந்த தலை நிமிர்கிறது. மச்சீந்தரர் அங்கில்லை.
காம்ரூபதேசத்தில் வெற்றி முழக்கம் . தர்பாரில் ஆரவாரய். யுத்த கைதி விசாலாக்ஷனை கொண்டு வருகிறார்கள். "என்னை மணக்க விரும்புவதாக பாசாங்கு செய்து மும்முறை படையெடுத்தாய். ராணி ஊர்மிலாவின் சிஷ்யை எதிர் பார்க்கிறாய் தலை வணங்கி மன்னிப்பு கேள் என்று கர்ஜிக்கிறாள் ஊர்மிலா. "கடவுள் ஸநநிதானத்திலும் என் தந்தை முன்னிலையிலும் தான் இந்த சிரம் வணங்கும் என்கிறான் விசாலாக்ஷன்.
உயிருடன் வணங்காத முடி வெட்டுண்டு ராணியின் காலடியில் உருளுகிறது. காம்ரூபதேசத்தில் நுழையும் ஒவ்வொரு புரு ஷனின் கதியும் அதுவேயென ஆஞ்ஞை (ஆணை) பிறக்கிறது.
கோட்டை வாயிலில் - புருஷர்கள் இந்த தேசத்துக்கு வர அனுமதி கிடையாது என்பது தெரியாதா - என சமேலி மச்சீந்தர ரையும் சங்கனாத்தையும் கைது செய்து கொண்டு போகிறாள். மச்சீந்தரரின் கழுத்தில் ஒரு வட்டக்கல் வைக்கப்படுகிறது. பாவம் சங்கனாத், ஒரு முள் கூட்டினுள் அவஸ்தைப்படுகிறான். ஊர்மிலா, விஜ்யதேவி மோகங்கொண்டதாக பழிக்கிறாள். தன ஜன்ம சத்ருவை தண்டிக்க புறப்படுகிறாள்.
" ஜேய், அலக் நிரஞ்சன்" கல் மாலை வெடிக்கிறது. ஓங்கிய வாள் புஷ்பமாகிறது. ஜடை நீங்கி மச்சீந்திரர் சுந்தர புருஷராக மாறுகிறார். ஊர்மிலாவின் கோபமும் காதலாக மாறுகிறது. தன்னை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறாள். மச்சீந்திரர் மறுக்கிறார்.
தன் உயிரையும் விட முற்படுகிறாள். மீண்டும் போர் முரசு. விசாலாக்ஷனின் அகால மரணத்துக்கு பழி வாங்க அவன் சகோதரன் சூரியகேது வருகிறான். ராஜ்யத்தை காப்பாற்றும் பொறுப்பு இனி தங்களுடையது. " என்கிறாள் ராணி ஊர்மிலா. மச்சீந்திரர் அவளை ஏற்றுக்கொண்டு ராணியைக் கைது செய்ய வந்த சூரியகேதுவையும் அவன் சேனையையும் மந்திர சக்தியால் வதைக்கிறார். சூரியகேது மன்னிப்பு கேட்க, அபலைகள் மேல் படையெடுப்பது அநீதி என அவனுக்கு சொல்லி அனுப்புகிறார். தர்பாரில் ராணி சபையோரிடம் இனி மச்சீந்தரரே ராஜாவென அறிவிக்கிறாள். நாட்டிலும் எங்கும் கொண்டாட்டம்.
சங்கனாத் குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன். சமேலியை மணக்க தீர்மானிக்கிறான். பிரம்மச்சாரி சங்கனாத் சர்வாதிகாரி சங்கனாத் ஆகிறான். குரு மறைந்ததிலிருந்து கோரக்னாத் காடுகளிலும், நகரங்களிலும் இரவு பகலாக அவரைத் தேடி அலைகிறான்.
காலம் கடந்தது. குருவின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நாட்டில் சூரியகேதுவின் சைன்யம் எதிர்படுகிறது. கோரக்கின்
"அலக் சப்தம்" அவனது சைன்யத்தை அலங்கோலம் அடையச்செய்கிறது. சூரியகேது கோரக்கிடம் சரணாகதி அடைந்து தன் எதிரியை வெல்ல அவரது உதவியை நாடுகிறான். சூர்யகேதுவின் எதிரி குரு மச்சீந்தரரே என அறிந்து கோரக் காம்ரூப் தேசம் போகிறான்.
காம்ரூப் தேசத்தில் வஸந்தோத்ஸவம் கொண்டாட்டம். நாட்டில் பெரியவர், சிறியவர், மச்சீந்திரர், ஊர்மிலா, அவர்களது புத்திரன் மௌனினாத் யாவருக்கும் எங்கும் ஒரே குதுகூலம். அதை கெடுக்க வருகிறான் கோரக். பாடகனைபோல் மாறு வேஷத்துடன் மச்சீநதிரருக்கு அவரது முந்திய வாழ்வை ஞாபகப்படுத்துகிறான். வேஷம் கலைத்து ஆஸ்ரமத்துக்கு புறப்பட வற்புறுத்துகிறான். ராணி மறுக்கிறாள். அவனை வெறுக்கிறாள். கைது செய்ய உத்தரவு இடுகிறாள். மச்சீந்திரர் ஆறுதல் சொல்லி வஸந்தோத்ஸவம் முடிந்ததும் புறப்படுவதாக சொல்லுகிறார்.
ராணி, சங்கனாத் இருவரும் தீவிர சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர் கோரக்கின் மன நிலையை கெடுக்க மோஹினி ஏவப் படுகிறாள். கோரக் சங்கனாத்தை பெண்ணாகும்படி சபிக்கிறான்.
மோஹினியை தாய் என நமஸ்கரிக்கிறான். சங்கனாத்திற்கு வீட்டில் இடமில்லை. சமேலி அவனது ஸ்திரீ சொரூபத்தை கண்டு தன் கணவனை கெடுக்க வந்தவள் என வசை மொழிகிறாள். சங்கனாத் கோரக்கையே புருஷனாக கொள்ள ஆசைப்படுகிறாள். சாப விமோசனம் கிடைக்கிறது.
கோரக் மச்சீந்தரரை மீண்டும் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மௌனினாத் உடம்பு முழுவதும் சாயத்துடன் அங்கு காக்ஷியளிக்கிறாள். அது கண்டு மச்சீநதிரர் கோரக்கை, தனது பையனை சுத்தம் செய்து வா - ஏவுகிறார்.
குரு ஆணை சிறை மேற்கொண்ட கோரக் மௌனினாத்தை குளத்தில் நனைத்து அடித்து துவைக்கிறான். வெய்யிலில் உலர வைக்கிறான். ராணி மௌனியை தேடி அலைகிறாள். கோரக்கிடம் சங்கதி அறிந்து புலம்புகிறாள்.
மச்சீநதிரர் மௌனினாத்தின் சவத்தை கட்டி கண்ணீர் வடிக்கின்றார். கோரக் குருவின் லௌகீகப் பற்றுதலை கண்டு கலக்கமுற்று அவரது சக்தியை உபயோக்கிக்க செய்கிறான். மச்சீநதிரரின் தபோ வலிமை குழந்தையை உயிர்ப்பிக்க முடியாமல் போய் விடுகிறது. கோரக் தன் சக்தியை பிரயோகிக்க மௌனி எழுந்த பாடில்லை. இறுதியில் கோரக் தன் குருவின் மீது ஆணையிட்டு கூப்பிட மௌனினாத் உயிர் பெற்று எழுகிறான். குழந்தையை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லி கோரக் மச்சீநதிரரை ஆஸ்ரமத்துக்கு புறப்பட மன்றாடுகிறான்.., ராணியும் சம்மதிக்கிறாள். மீண்டும் சூரியகேது நாட்டில் படையெடுக்கிறார். ராணியை தன்னை மணக்குமாறு தூண்டுகிறான். மறுப்பின், மௌனினாத்தை கொள்ளுவாதாக சொல்லுகிறான். ஆஸ்ரமத்தில் மச்சீநதிரர் இதை அறிந்து கோரக்கை அனுப்புகிறார். மீத விவரத்தையும், கோரக்கின் வீர பிரதாபங்களையும், மாய நாடகத்தின் முடிவினையும் வெள்ளித்திரையில் கண்டு களிக்கவும்.
சுபம் சுபம் சுபம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : இது ஒரு மாய ஜால மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம். கதைச்சுருக்கத்தில் பல வட மொழி வார்த்தைகளு டன், வல்லின இடையின வேறுபாடுகள் இன்றி பெயரும் (உதாரணமாக : ஊர்மிளா என்பதற்கு பதில் ஊர்மிலா என்று பிரயோகிக்கப்பட்டுள்ளது) கலந்துள்ளது. அதை அப்படியே அக்கால நடைமுறையில் உள்ள தமிழ் வார்த்தைகளால், பொருள் மாறாமல் தரப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்