-
Thanks to Mr Raghavendar
சித்ரா தியேட்டர் என்றைக்குமே நம் தியேட்டராகவே இருந்தது. சாந்தி தியேட்டருக்கு முன் அது தான் நம் ரசிகர்களை வளர்த்தது என்றால் மிகையில்லை. பாசமலர் உள்பட பல முக்கியமான படங்களை வெளியிட்ட தியேட்டர். அங்கே மோகன புன்னகை வெளியான அன்று பழைய நினைவுகளுடனும் படத்தின் ரிசல்ட்டுடனும் உரையாடிக்கொண்டிருந்த நாட்கள் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன என்றால், நீங்கள் அதையும் தாண்டி அடியேன் வைத்திருந்த சின்ன பேனருக்கே போய் விட்டீர்கள். எனக்கு ஞாபகம் உள்ள வரையில் உத்தமன் படத்திலிருந்து சின்னச் சின்ன சார்ட்டுகளை வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முதல் நாள் தியேட்டரே கதி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது. இதற்கெல்லாம் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த வேகம், அந்த ஆர்வம், அந்த வெறி, நடிகர் திலகத்தின் ஆகர்ஷண சக்தி நம் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. படிப்படியாக முன்னேறினேன்.. எதில் வாழ்க்கையிலா.. இல்லை.. சார்ட்டின் டிசைனை மெருகேற்றுவதில்... அதற்காக பிளாசா தியேட்டர் வாசிலில் இருந்த முதியவர் தான் ஆபத் பாந்தவர்.. வரும் ஸ்டில்களையெல்லாம் வாங்கி விடுவோம்.. அநைத்தும் சார்ட்டில் ஏறி விடும் (இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன். அவற்றையெல்லாம் இன்னொரு காப்பி எடுத்திருக்கலாமே என்று ). [அடியேன் ஆரம்பித்து சில வருடங்களில் கிரிஜா அவர்களும் துவங்கி விட்டார். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. அவருடைய உழைப்பைப் பாராட்டத் தனித்திரியே துவங்க வேண்டும்]. அப்படிப்பட்ட ஒரு சார்ட்டைத் தான் மோகனப் புன்னகைக்காக வடிவமைத்து அதைப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது. தங்களுக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
மோகனப் புன்னகைக்கு வருவோம். நானும் பைலட்டில் தான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே சிறப்புக் காட்சியில் பார்த்து விட்டோம். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு படம் முடிந்ததும் உடனே கிளம்ப முடியாமல் உணர்ச்சி மயமாய் அமர்ந்திருந்தோம்.
இப்போது பேசப் படும் Shuttle Acting, Method Acting, போன்றவற்றையெல்லாம் தன் முதல் படத்திலேயே ஊதித்தள்ளி விட்ட நடிகர் திலகம், மீண்டும் இப்படத்தில் அதற்கான பொருளை உணர்த்தினார். குறிப்பாக தலைவன் தலைவி பாடல் simply class.
சற்றே வித்தியாசமான கதையமைப்பு, புதிய ஜோடி, சிறந்த இசை, நல்ல ஒளிப்பதிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தன.
இவற்றையெல்லாம் மீறி படம் ஓடவில்லை என்றால்..
ஒரே காரணம்...
துர்ப்பிரச்சாரம்...
நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது உடலமைப்பைப் பற்றியும் கிளப்பப் பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் பரவலாகப் பரப்பப்பட்டதாலும் அவரது படங்களைப் பற்றி கிண்டலும் கேலியும் மிகப் பரவலாக செயற்கையாக உருவாக்கப் பட்டதாலும் பல நல்ல படங்கள் சரியான முறையில் சென்றடைய விடாமல் தடுக்கப் பட்டதாலும் தான் 80 களில் அவரது படங்கள் பாதிக்கப் பட்டன. அப்படிப் பட்ட படங்களில் ஒன்று தான் மோகன புன்னகை. குறை சொல்லுமில்லாத சிறந்த படம். 80களில் மிகச் சோதனையான காலங்களில் அவருடனேயே இருந்த பல கோடி ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் அந்த ஏளனங்களுக்கும் ஏகடியங்களுக்கும் பதில் கொடுத்து நின்ற ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் பல முறை இப்படிப்பட்ட நல்ல படங்கள் தோல்வியடைந்த போது மனம் வேதனை யடைந்திருக்கிறேன். அதே போல் தான் கார்த்திக்கும் உணர்ந்திருப்பார் என்பதை அவருடைய பதிவுகளில் அனைவரும் உணர முடியும்.
நம்மையெல்லாம் அந்த அளவிற்கு உணர்ச்சி மயமாக்கிய மோகனப் புன்னகை பாடலைப் பார்த்து நினைவுகளை அசை போடுவோமே..
-
Chithoor Vasudevan,
Your recent recap article of Mr. Karthik about Justice Gopinath is already re-published in the same thread HERE by Mr. Karthik himself in previous pages.
I think now you took it from Nadigarthilagam General thread. You also recap it twice.
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
தர்மம் எங்கே ரிலீஸ் நேரம் பார்த்த அனுபவம் தொடர்கிறது
கடந்த பதிவின் இறுதி பகுதி
சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
இடைவேளை நேரத்திலும் ஒரே ஆரவாரம் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அதே நேரத்தில் படம் தொடங்கவதற்கு முன்பு நடந்த ஒரு விஷயம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். படத்திற்கு வந்திருந்த ஒரு ரசிகரின் கைகெடிகாரம் காணாமல் போனது பற்றியும் அதன் காரணமாக அனைவரும் சோதனை செய்யப்பட்டதையும் சொல்லியிருந்தேன். இடைவேளை நேரத்திலும் அது தொடர்ந்தது. இதை பார்த்தவுடன் என் கஸின் நீ தனியாக உட்கார வேண்டாம். எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடு என்று சொல்லி கூட்டி போய்விட்டான். ஸ்ரீதேவியில் கீழே 90 பைசா டிக்கெட் சேர்கள் அதற்கு முந்தைய வகுப்புகளை விட சற்றே உயரமாக அமைந்திருக்கும். 90 பைசா சேரில் முதல் வரிசையில் அமர்ந்தால் முன்னால் அமரிந்திருப்ப்பவரின் தலை மறைக்கிறது என்ற பிரச்சனைக்கே இடமில்லை. இடைவேளைவரை அப்படி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த நான் இடைவேளைக்கு பிறகு பின் வரிசைக்கு சென்று கஷ்டப்பட்டு விட்டேன். 12 வயது சிறுவன் என்கின்றபோது இந்த பிரச்சனை அதிகமாகவே இருந்தது. இனி படத்திற்கு வருவோம்.
நடிகர் திலகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கூடி நிற்கும் போராளிகள் கோஷம் எழுப்புவார்கள். நாட்டை காத்த உத்தமன் வாழ்க! கொடுங்கோல் ஆட்சியை வேரறுத்த தலைவன் வாழ்க என்று வசனங்கள் வரும்போது இடைவேளையில் கிடைத்த நேரத்தில் மீண்டும் எனர்ஜி கிடைத்த மக்கள் இடைவேளைக்கு பிறகு வந்த இந்த முதல் காட்சியிலே மீண்டும் அலப்பரையை ஆரம்பித்து விட்டனர். இந்தக் காட்சி முடிந்தவுடன் ஜெஜெ பாடி ஆடும் நான்கு காலமும் உனதாக பாடல் வந்தது. [இந்தப் பாடல் காட்சி சில நாட்கள் இருக்கும். சில நாட்கள் இருக்காது. ஏன் என்று யாருக்கும் காரணம் தெரியாது] அழகாக படமாக்கப்பட்டிருந்த இந்த பாடல் காட்சியைப் பற்றி எங்களுக்கு ஒரு குறை. இந்த பாடலில் ஜெஜெ மற்றும் ஆண் வேடத்தில் குமாரி பத்மினியும் ஆடுவார்கள். குமாரி பத்மினியை ஆண் வேடத்தில் ஆட வைக்காமல் அந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் நடித்திருந்தால் மிகப் பிரமாதமாக அமைத்திருக்கும் என்பது எங்கள் எண்ணம்.
அதன் பிறகு முத்துராமன் தனக்கு பதவி கிடைக்கும் என நினைத்து சபைக்கு வருவது, அங்கே நான்கு திசைகளுக்கும் மார்த்தாண்ட நாயகர்களாக வேறு நபர்களை நடிகர் திலகம் அறிவித்து விட முத்துராமன் கோபமுற்று வெளியேறும் காட்சி. [இந்த காட்சியில் மார்த்தாண்ட நாயகர்களை நியமிக்கும்போது அவர்களை காட்டக் கூட மாட்டார்கள் என்று ஒரு முறை கோபால் எழுதியிருந்தார். ஆனால் அது தவறு. நான்கு பேர்களும் காண்பிக்கப்பட்டு அவர்கள் சுற்றி நிற்பவர்களின் கையொலியை ஏற்றுக் கொள்வதாகவே காண்பிக்கப்படும்]
முத்துராமன் தன கோபத்தை குமாரி பத்மினியிடம் காண்பித்து மெதுவாக நடிகர் திலகத்திற்கு எதிராக மாறும் காட்சிகள். அதற்கு நம்பியாரின் படையில் சிப்பாயாக இருந்த செந்தாமரை அவரிடம் சேர்ந்து அவரை மெதுவாக மாற்றுவது போன்ற காட்சிகள் வரும். இதற்கு நடுவில் நடிகர் திலகம் -ஜெஜெ இடையிலான ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி நன்றாக workout ஆகியிருக்கும். ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் ஜெஜெவிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்ல விழைய அவரும் என்ன என்று ஒரு ஹஸ்கி குரலில் கேட்பது நன்றாக ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று அவர்களை நெருங்க விடாமல் தடுக்க ஜெஜெ ஏமாற்றத்துடன் செல்வது எல்லாம் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.
குமாரி பத்மினி முத்துராமனை கூட்டிக் கொண்டு மாளிகைக்கு வரும் காட்சி. தங்கையை பார்த்தவுடன் பரவசமடையும் நடிகர் திலகம், முத்துராமன் ஏதோ ஒன்றை பேச விரும்புவதை உணர்ந்து என்ன என்பதை முகபாவத்திலே கேள்வியாக மாற்றும் அந்த லாவகம் படபடவென கைதட்டல்கள் விழுகிறது. முத்துராமன் எதிர்பார்ப்பது பதவி என்று தெரிந்ததும் நடிகர் திலகம் கேமராவைப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களே பதவியில் இருப்பது நாட்டிற்கு நல்லதில்லே என்பார். கைதட்டல் இடியாய் இறங்கியது. நான் பதவியில் இருந்தாலென்ன நீ இருந்தாலென்ன என்று நடிகர் திலகம் முத்துராமனிடம் சொல்லும்போது அதற்கு முத்துராமன் "சேகர் முன்னாடியெல்லாம் உனக்கு பேசவே தெரியாதுன்னு சொல்வாங்க! இப்போ எவ்வளவு அழகா பேசறே" என்றவுடன் ஒரு சிறு புன்னகையுடன் நடிகர் திலகம் "இப்போலாம் மக்கள் நான் பேசுவதை கவனித்து ஏற்றுக் கொள்கிறார்கள்" என்பார். தியேட்டரே இரண்டுபட்ட கட்டம் அது.
இதற்கு பின் முத்துராமன் மேலும் கொதிப்படைந்து போவது, நம்பியார் படை தலைவனாக இருந்த எஸ்வி ராமதாஸ் மற்றும் செந்தாமரையும் ஒரு கூட்டதை சேர்த்து முத்துராமனை தலைவராக்குவது என்று காட்சிகள் விரிந்தன.
இதன் பின் மக்கள் சிலர் ஒரு குழுவாக வந்து முத்துராமனின் அராஜகம் பற்றி சொல்ல முதலில் அவர்கள் சொல்வதை நம்ப மறுக்கும் நடிகர் திலகம் அவர்களை சத்தம் போட சட்டென்று அவருக்கே முன்னொரு நாளில் இதே போல் தானும் நம்பியாரிடம் மோதியது நினைவிற்கு வர, அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அனுப்பி விட்டு உள்ளே சென்று துப்பாக்கியை எடுப்பார். தடுக்கும் ஜெஜெவை தள்ளி விட்டு விட்டு போவார். உங்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்று கேட்கும் ஜெஜெவிடம் தனி மனிதன் போகலாம். ஆனால் என் கொள்கை தொடரும். அதை உயர்த்திப் பிடிக்க மனிதர்கள் வருவார்கள் என்பார் நடிகர் திலகம். மக்களுக்கு வேறொரு தலைவன் கிடைக்கலாம் ஆனால் எனக்கு என்று ஜெஜெ கேட்கும்போது இங்கே ஒரே ஆரவாரம்.
முறை தவறி நடக்கும் முத்துராமனை தட்டிக் கேட்டு [அப்போதும் ஒரு சண்டை உண்டு. நீளமாக இல்லாமல் உடனே முடிந்து விடும். இருந்தாலென்ன நமது ரசிகர்களுக்கு அலப்பரை செய்ய சொல்லியா கொடுக்க வேண்டும்?] அவரை கொல்லாமல் பிழைத்துப் போ என்று பார்வையாலே மிரட்டி விட்டு போவார் நடிகர் திலகம். கேட்கணுமா?
இதற்கு நடுவே நடிகர் திலகம் ஜெஜெவிடம் தன காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் வரும் பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே பாடல் காட்சி. மீண்டும் தியேட்டர் அதகளமானது. ஒரு காட்சியில் நடிகர் திலகம் ஜெஜெயிடையே நடக்கும் ஒரு உரையாடலின்போது ஜெஜெ நடிகர் திலகத்தைப் பார்த்து பெருந்தலைவரே என்பார். தியேட்டர் மீண்டும் அலறியது.
சூழ்ச்சிகாரர்களின் சதி புரியாமல் நடிகர் திலகத்தை ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கோட்டைக்கு தனியே வர சொல்லும் முத்துராமன், தனியே வரும் நடிகர் திலகத்தை கொல்ல ஆணையிடும் ராமதாஸ், திகைத்து போய் என்ன சொல்கிறாய் என்று முத்துராமன் கேட்க அதுவரை கூட்டத்திலே ஒரு ஆளாக மறைந்து நிற்கும் நம்பியார் தன்னை வெளிபடுத்திக் கொள்ள அந்த சஸ்பென்சை மக்கள் ரசித்தார்கள். துரோகி என்று நம்பியாரை பார்த்து முத்துராமன் சீற " நீதான் துரோகி. நாளை வரலாறு உன்னைத்தான் பழிக்கும்" என்று பதிலடி கொடுக்கும் வசனமெல்லாம் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இறுதிக் காட்சி. துப்பாக்கிகள் முழங்க கோட்டையின் திறந்த வெளி மைதானத்தில் நடிகர் திலகம் ஓடி தப்பிக்கும் காட்சி [இந்த காட்சியின் படமாக்கம் சற்றே சொதப்பியிருக்கும். சற்று மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்] கோட்டைக்கு உள்ளே ஒரு ஹாலில் தொட்டி போன்ற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில விஷப்பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்க மேலிருந்து ஜெஜெவை தொங்கவிட கயிறு மெதுவாக அறுந்து கீழே வர நடிகர் திலகம் நம்பியாரிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் த்ரில்லாகவே மக்கள் பார்த்தனர். இறுதியில் நம்பியார் தொட்டிலில் விழுந்து பாம்புக்கடி ஏற்று உயிர் துறப்பார். தர்மம் எங்கேன்னு கேட்டவங்களுக்கெல்லாம் தர்மம் இங்கேன்னு சொல்ல வச்சுட்டே சேகர் என்று முத்துராமன் சொல்ல கரகோஷம்தான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போதும் ஒரே ஆரவாரம்தான். படம் பெரும் வெற்றி பெறும் என்ற கணிப்பே எனக்கு இருந்தது. அதற்கேற்றார்போல முதல் வாரத்தில் தியேட்டர் பக்கமே போக முடியவில்லை, அப்படி கூட்டம் என்று கஸின் வந்து சொல்லிக் கொண்டேயிருந்தான். முதல் பத்து நாளைக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அதன் பிறகு படத்திற்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது என்ற பேச்சு வந்தது. படத்தின் கதை இடைவேளையோடு முடிந்து விட்டது. அதன் பிறகு வந்தவற்றை பொது மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. 1972-ஐ பொறுத்தவரை 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொடும் வாய்ப்பை இழந்த ஒரே படம் என்ற பட்டதை தர்மம் எங்கே பெற்றது. 8 வார படமாக ஆனாலும் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் படம் தர்மம் எங்கே!
படம் வெளிவந்து 36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் AC திருலோக்சந்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் படம் 100 நாட்கள் ஒடவிலையே என்ற வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். ஒரு ஆங்கிலப் படத்தின் inspiration-ஐ வைத்துதான் தர்மம் எங்கே படத்திற்கு திரைக்கதை அமைத்தோம். அதில் இறுதியில் கதாநாயகன் [Lawrence Oliver தான் நாயகன் என்று அவர் சொன்ன ஞாபகம்] துப்பாக்கி குண்டுகளால் சல்லடை கற்களாய் துளைக்கப்பட்டு உயிர் விடுவான். அவனின் நல்ல மனதை புரிந்துக் கொள்ளாமல் அவனை பழி வாங்க துணை போன அவன் மைத்துனன் தன தவறை உணர்ந்து திருந்துவதுதான் கிளைமாக்ஸ். ஆனால் நாங்கள் நாயகனை சாகடிக்க விரும்பவில்லை. அவன் தப்பிப்பதாக மாற்றி அமைத்தோம். ஒரு வேளை சோக முடிவாக அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ என்றார் ACT.
எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.
(தொடரும்)
அன்புடன்
-
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...5a15cdbb5775fe
கல்தூண் நூறாவது நாள் விழா..
மூப்பனாரின் பின்புறம் இருப்பவர் கொண்டல்தாசன். அவருக்கு இடப்புறம் இருக்கும் என் நண்பர் ரமணி... 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி...கொண்டல்தாசனுக்கு வலப்புறம் இருப்பவர் எம்.எல்.கான்.
முகநூல் நண்பரின் இணையப் பக்கத்திலிருந்து
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி
எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தர்மம் எங்கே இப்படி அலப்பரை கொடுத்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இதன் பாதிப்பு சிறிது கூட இல்லாமல் பட்டிக்காடா பட்டணமா தன வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதன் வசூல் சூறாவளியில் சிக்கி முன்னர் நிறுவப்பட்டிருந்த அனைத்து வசூல் மைல் கற்களும் தகர்ந்து வீழ்ந்தன.
இதனிடையில் 1971-ம் ஆண்டு திரைப்பட தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பின்னணியில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை துக்ளக் இதழ் தொடர்ந்து எழுதியது. அப்போது மாதமிருமுறையாக வெளிவந்துக் கொண்டிருந்த துக்ளக் [1972 ஜூலை 1,15 மற்றும் ஆகஸ்ட் 1 என்று நினைவு] மூன்று இதழ்களில் இது பற்றிய விவாதங்களும் பேட்டிகளும் இடம் பெற்றன. 1972 மே முதல் வாரத்திலேயே விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும் துக்ளக் இந்த விஷயத்தை கையிலெடுத்ததும் ஒரு பரபரப்பு நிலவியது. நடிகர் திலகத்திற்கு சவாலே சமாளி திரைப்படத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய சிறந்த நடிகர் விருது கிடைக்காமல் போனதில் ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தம் இருந்தாலும் இவற்றையெல்லாம் என்றுமே ஒரு பொருட்டாக கருதாத நடிகர் திலகம் தான் தலைவராக இருந்த தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் சார்பாக சிறந்த நடிகர் விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். ஜூலை 30 ஞாயிறன்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவின் மூலமாக தன் பெருந்தன்மையை நிறுவினார்.
விவசாயிகள் போராட்டம் அதன் காரணமாக நடந்த உயிரிழப்பு போன்றவற்றால் அந்த வருடம் ஜூலை 15 தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பெருந்தலைவர் முடிவெடுத்தார், வந்தது ஜூலை 23. அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பு அதே நாளில்தான் [1971 ஜூலை 23] ஒரு வருங்கால தூண் வெட்டி சாய்க்கப்பட்டது. மாணவர் திலகமாக திகழ்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர் உதயகுமார் அரசியல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நாள். 1971-ல் ரஷ்ய மையால் கிடைத்த வாழ்வை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தினர் மாற்று அரசியல் கட்சியினரை தங்கள் அரசியல் எதிரிகளாக பாவித்து அவர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
அரசு நிர்வாகத்தை செவ்வனே நடத்துவதை விட தங்களுக்கு தாங்களே பட்டங்கள் கொடுத்துக் கொள்வதிலும் பட்டங்களை தேடி சென்று வாங்குவதிலும் மிகுந்த விருப்பம் கொண்ட அன்றைய ஆளும் கட்சியினர் அன்றைய முதல்வருக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தனர். அரசின் தயவை வேண்டி நின்ற தனியார் பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகம் அதற்கு இசைவு தந்து பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. ஜனநாயக முறைப்படி கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த உதயகுமார் கொடூரமாக தாக்கப்பட்டு அங்கேயிருந்த குளத்தில் தூக்கி எறியப்பட்டு மறுநாள் காலை பிணமாக மிதந்தார். இறந்து போனது தங்கள் மகன்தான் என்று சொல்லி கதறி அழும் உரிமை கூட அந்த மாணவனின் பெற்றோருக்கு மறுக்கப்பட்டது. இறந்து போனது தங்கள் மகனே அல்ல என்று சொல்ல வைக்கப்பட்டார்கள். இப்படி பிணத்தின் மீது பட்டமளிப்பு விழா நடத்தி முடிந்தபின் மாணவர்கள், ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் அணி மற்றும் பொதுமக்கள் மற்றும் ஒரு சில நடுநிலை ஏடுகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பிக்க அரசு எந்திரம் பணிந்து ஒரு விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் என்றில்லை. தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவருக்கும் எதிராக வன்முறை அடக்குமுறை கட்டவிழுத்து விடப்பட்டது சேலத்திலே ராமர் முதலான இந்து கடவுள்கள் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்திய வீரமணி கூட்டத்தின் மேல் எந்த நடவடிக்கையும் கிடையாது. அந்த ஊர்வலத்தை புகைப்படம் எடுத்து போட்ட துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியையும் கட்சியையும் விமர்சிக்கும் படம் என்பதனால் முகமது பின் துக்ளக் படம் வெளிவர எத்தனை தடைகள் உண்டோ அத்தனையும் செய்யப்பட்டது. படத்தை வெளியிடாமல் இருக்க சோ அவர்கள் மீது சாம தான பேத தண்ட முறைகள் பயன்படுத்தப்பட்டது. திரையுலகை சேர்ந்த சிலரே சோவை அழைத்து படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். பின்னர் அதே நிலைக்கு தாங்களும் ஆளானார்கள் என்பது வரலாறு.
சிம்சன் தொழிற்சாலையில் தங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவை தொடங்க முடியாமல் போனபோது அங்கே தொழிற்சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த குருமூர்த்தியை நீக்குவதற்கு சதி செய்து தங்களது ஆளான காட்டூர் கோபால் அங்கே திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் வண்ணம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக ஸ்ட்ரைக் வந்தபோது வளாகத்திற்கு உள்ளே கொலைவெறி தாக்குதல் நடத்தி அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு நிறுவனம் லாக் அவுட் செய்ய 450 தொழிலாளிகள் வேலை இழந்த சாதனையை செய்த பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். இவையெல்லாம் கூட 1972 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த சம்பவங்கள்தான். இந்த பிரச்சனை நீண்ட காலம் தொடர்ந்து 1976 வரை போனது. 1974-ல் தொழிலாளிகளின் ரகசிய வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குசேலர் தலைவரானது அதன் பின் நடந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் எல்லாம் நீண்ட வரலாறு. அதையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது.
இதையெல்லாம் நடிகர் திலகத்தின் கலைப் பயணத்தில் குறிப்பிட காரணம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழலில் நடிகர் திலகம் சாதித்தார் என்பதையும் தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியினரால் உருவாக்கப்பட்ட வன்முறை நெருப்பாற்றில் எப்படி நீந்தி கரையேறினார் நடிகர் திலகம் எனபதையும் வாசகர்கள் உணரவே இந்த விஷயங்களையெல்லாம் கோடிட்டுக் காட்டுகிறேன். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விஷயங்களும் எப்படி பாதிக்கப்பட்டன என்பதற்கு உதாரணம் 1970 அக்டோபர் 25 அன்று சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டதும் தாக்கியவர்களை விட்டு விட்டு அப்போது தியேட்டர் வளாகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் கூற வேண்டும்.
ஒரு அரசாங்கத்தை தன் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சி அரசு நிர்வாகத்தை எந்தளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு மீகப் பெரிய உதாரணம் மதுரையில் ஆகஸ்ட் 4,5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற திமுக மாநாடு. அன்றைய மதுரை மேயர் முத்து மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஊழியர்களையும் கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்தியதை மக்கள் திகைத்துப் போய் பார்த்தனர். அங்கே மாநாட்டிற்காக விளையாடிய பணம் அன்றாடம்காய்ச்சிகளாக இருந்த ஆளும்கட்சியினர் எப்படி கோடிஸ்வரர்களாக மாறி விட்டனர் என்று பெருந்தலைவர் குற்றம் சாட்டுவது முழுக்க முழுக்க உண்மை என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டில் அன்றைய ஆளும் கட்சியில் இருந்த உட்கட்சி பூசலும் பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. மாநாட்டு ஊர்வலத்தை முதல் நாள் முக முத்து தொடங்கி வைத்தபோதே ஆரம்பித்த பிரச்சனை ஊர்வலத்தை விளக்குத்தூண் அருகே நின்று பார்வையிட்ட அன்றைய முதல்வர், அவர் நின்றிருந்த மேடைக்கு முன்னால் சென்று நின்றுக் கொண்டு நகராமல் ஒரு குழுவினர் எம்ஜிஆர் அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டது, முதல் நாள் ஊர்வலத்தை துவக்கி வைக்க வருவதாக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மட்டும் வந்துவிட்டு மேடையில் பேசி விட்டு புறப்பட்டு போய்விட அவருக்காக வந்த கூட்டம் அவர் சென்றவுடன் மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறி விட முதல்வர் திமுக தலைவர் மு.க. மேடையில் மயங்கி விழ அரசியல் பார்வையாளர்களுக்கு நடப்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு [அக்டோபர் 72-ல்] திமுகவின் முக்கிய தலைவர்கள் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டனர் என்று சொல்லி வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த மாநாட்டில் பேசும்போது வெளியேறியபோது அவர் யாரையெல்லாம் ஊழல் வாந்திகள் என்று சொன்னாரோ அவர்கள் அனைவரும் மேடையில் வீற்றிருக்க " இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என்று காமராஜர் கூறுகிறார். நீங்கள் சொல்லுங்கள் இவர்கள் ஊழல் செய்தவர்களா" என்று கூட்டத்தை பார்த்து கேட்க கூட்டம் இல்லையென்று சொல்ல " காமராஜர் வேண்டுமென்றே சொல்கிறார்" என்று ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். [மாநில சுயாட்சி கிடைக்காவிட்டால் ராணுவத்தை சந்திப்பேன் என்று சொன்னதெல்லாம் தனி கதை].
இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.
(தொடரும்)
அன்புடன்
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
சென்ற பதிவில் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் என்று குறிப்பிட்டிருந்தேன். மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் உயரிழந்தது பற்றி பேசினோம். அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் சுட்டிக் காட்டியது என்னவென்றால் தர்மம் எங்கே மூலமாக நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.
தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.
இந்த விழாவின் புகைப்படங்கள் 9 மாதங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன அந்த படங்களை மீண்டும் நான் இப்போது பதிவு
செய்திருக்கிறேன். இந்த புகைப்படங்களை 9 மாதத்திற்கு முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவிறக்கம் செய்த வினோத் சாருக்கு நன்றி.
இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
http://i61.tinypic.com/1zlrkpd.jpg
(தொடரும்)
அன்புடன்
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தவப்புதல்வன் - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. முக்தா ஸ்ரீனிவாசன் அதிகமாக பள்ளிப்படிப்பு படிக்காதவர். சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக நேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திலே இருந்தவர். பின் காங்கிரசின் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனதில் வேலை பார்த்து பின் எஸ். பாலச்சந்தர் போன்றவர்களிடம் assistant இயக்குனராக அந்த நாள் போன்ற படங்களில் பணியாற்றி முதன் முதலாக முதலாளி படத்தை இயக்கினார். பின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களான நினைவில் நின்றவள், தேன் மழை, போன்றவற்றை இயக்கிய பிறகு நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்தார். முதலில் நிறை குடம் அதன் பிறகு அருணோதயம். இதற்கு இடையில் ஜெய்சங்கரை வைத்து பொம்மலாட்டம், ஆயிரம் பொய் போன்ற படங்களையும் எடுத்தார். மிக மிக சாதாரண நிலைமையிலிருந்து முன்னேறி வந்தவர் என்பதால் படத்தயாரிப்பில் மிக கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இவருக்குண்டு. அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பட்ஜெட் போட்டு படத்தை சிக்கனமாக முடிக்கக் கூடியவர் என்ற பெயர் இவருக்கு திரையுலகில் உண்டு. இவரும் இவரது மூத்த சகோதரர் முக்தா ராமசாமியும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எந்த சூழலிலும் சரியாக பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்களின் கட்டுப்பாடான இந்த நடைமுறைதான் விசி சண்முகத்தை கவர்ந்தது என்று சொல்லுவார்கள். ஒரு முறை பிலிமாலயா மாத இதழில் ஜீனியஸ் கேள்வி பதிலில் சிவாஜியை வைத்து படமெடுக்க என்ன தகுதி வேண்டும் என்ற கேள்விக்கு "ஒன்று பாலாஜியை போல் இருக்க வேண்டும். இல்லை முக்தா ஸ்ரீநிவாசன் போல் நடக்க வேண்டும்" என்று பதில் சொல்லியிருந்தார்கள்.
முதலில் சொன்னது போல் முக்தா நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான அருணோதயம் 1971 மார்ச் 5-ந் தேதி வெளியானது. மிக சரியாக இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற்ற நேரத்தில் வெளியானதால் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த 1971 ஜனவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் வெளியான தகவலை பார்த்தோம். 90 நாட்களில் இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா பிராப்தம் சுமதி என் சுந்தரி என்று ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் பெருவாரியான ஊர்களில் 8 வாரங்களை கடந்து ஓடிய அருணோதயம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றது. உடனே தனது அடுத்த படத்திற்கு date வாங்கிவிட்டார் முக்தா.
முக்தா எடுத்த ஆரம்ப கால நடிகர் திலகம் படங்களிலெல்லாம் ஒரு நோயை அடிப்படையாக கொண்ட நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பார்கள். எனவே தவப்புதல்வன் படத்திற்கும் அப்படி ஒரு நோயை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருந்தார் தூயவன். மாலைக் கண் நோய் என்று தமிழில் சொல்லப்படும் Night Blindness தான் இங்கு மெயின் விஷயம். தன் குடும்பத்தில் பாரம்பரியமாக வரும் இந்த நோய் தன் ஒரே மகனுக்கும் வந்துவிடக் கூடாது என தவிக்கும் தாய், தனக்கு ஏற்கனவே அந்த நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் தாய் அதை தாங்க மாட்டாள் என்பதனால் தாயிடம் மறைக்கும் மகன், டாக்டராக பணிபுரியும் நாயகனின் முறைப்பெண், நாயகனின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவனின் இந்த நோயைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்யும் மற்றொரு பெண் என்று சுவையாக பின்னப்பட்டிருந்த கதை.
படம் வெளிவருவதற்கு முன் முழு கதையும் தெரியாது என்ற போதிலும் படத்தைப் பற்றிய ஒரு outline பல பத்திரிக்கைகள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. அன்றைய நாளில் நடிகர் திலகத்தை வைத்து ஆரம்பிக்கப்படும் புதிய படங்கள் அனைத்தும் வண்ணப் படங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும் அன்றைய நாட்களில் பத்திரிக்கைகளில் வெளிவந்த நடிகர் திலகத்தின் ஸ்டில்ஸ் அட்டகாசமாக இருந்தது. பல ஸ்டில்களில் ஜிப்பா அணிந்து காட்சியளித்த நடிகர் திலகம் நிச்சயமாக திராவிட மன்மதனாகவே தோன்றினார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் கூட ஒரு நம்பிக்கை இருந்தது.
சென்ற பதிவில் பார்த்தது போல் இந்த படம் 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு வெளிவரும் நேரம்தான் நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையார் ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.என்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஒரு சில ரசிகர்களுக்கு ஐயம் ஏற்பட்டபோதிலும் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் வெகு தெளிவாக இருந்த நடிகர் திலகமும் விசி சண்முகமும் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு சொல்லிவிட்டார்கள். அதன்படி 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி சனிக்கிழமை தவப்புதல்வன் வெளியானது.
மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களான காத்தவராயன், பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாசமலர், புதிய பறவை, தில்லானா என்று தொடர்ந்து வெளியான சிந்தாமணியில் நடுவில் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. 1968 ஜூலையில் வெளியாகி 132 நாட்கள் ஓடிய தில்லானாவிற்கு பிறகு சிந்தாமணியில் வெளியான நடிகர் திலகத்தின் படம் என்றால் அது தவப்புதல்வன்தான். இடையில் 1971 ஜூலையில் நடிகர் திலகத்தின் தேனும் பாலும் வெளியானது என்ற போதிலும் அது நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த காரணத்தினால் அதை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆகவே வெகு நாட்களுக்கு பிறகு சிந்தாமணியில் வெளியாகும் நடிகர் திலகம் படம் என்ற பெருமையையும் தவப்புதல்வன் பெற்றது.
ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். அந்த 1972-ம் வருடத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் சனிக்கிழமையன்றே வெளியானது. 1972 மார்ச் 11 சனியன்று ஞான ஒளி, மே 6 சனிக்கிழமை பட்டிக்காடா பட்டணமா, ஜூலை 15 சனிக்கிழமை தர்மம் எங்கே, ஆகஸ்ட் 26 சனிக்கிழமை தவப்புதல்வன் என்று வெளியானது. என் நினைவிற்கு எட்டியவரை வேறு எந்த வருடத்திலும் இது போல் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியானதாக தெரியவில்லை.
(தொடரும்)
அன்புடன்
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
படம் வெளியான அன்று எனக்கு ஸ்கூல் இருந்ததால் எனக்கு ஓபனிங் ஷோ போக முடியவில்லை. வழக்கம் போல் என் கஸின் போய் விட்டான். மதியம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் படம் எப்படி என்று அவனிடம் கேட்க அதற்குள் மார்னிங் ஒபனிங் ஷோ பார்த்து விட்டு வந்திருந்த அவன் படம் நன்றாக இருப்பதாக சொன்னான்.நான் அதற்கு முன்பு வந்த படத்தின் ரிசல்ட்டை மீண்டும் அந்த கேள்வியை கேட்க அவன் புரிந்துக் கொண்டு முந்தைய படமான தர்மம் எங்கே படத்தை மனதில் வைத்து இதை கேட்கிறாய். அந்த படம் சரியில்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ சில காரணங்களினால் படம் சரியாக போகவில்லை. அனால் இது அப்படி ஆகாது என்றான். அன்று மாலையே படம் பார்த்த வேறு சில நபர்களிடம் கேட்க அனைவருமே நல்ல ரிப்போர்ட் சொன்னார்கள். மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தர்மம் எங்கே படத்திற்கு வந்த கூட்டம் அன்று டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது அரசால் புரசலாக வீட்டிற்கு செய்தி போய் விட்டதால் முதல் இரண்டு நாட்களான சனி ஞாயிறு படத்திற்கு போக அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திங்களன்று ஸ்கூல். வருத்தமாகவும் கடுப்பாகவும் இருந்தது. முதல் வாரத்தில் ஆறாவது நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமையன்று ஸ்கூல் லீவ். அன்று பிள்ளையார் சதுர்த்தியா அல்லது கோகுலாஷ்டமியா என்பது நினைவில்லை. ஆனால் ஸ்கூல் லீவ். நினைவிருக்கிறது. அன்று போக வேண்டும் என்று வீட்டில் கேட்க ஓகே சொல்லி விட்டார்கள். எப்போதும் கஸினுடன் போகும் நான் இந்த முறை வித்தியாசமாக என் தந்தையுடன் சென்றேன். அன்று விடுமுறை என்பதனால் அவர் கூட்டி சென்றார். முதலில் கூட வருவதாக சொன்ன கஸின் வேறு வேலை வந்துவிட்டதால் எங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் கூட படத்திற்கு கூட்டம் எப்படி இருக்குமோ என்று யோசனையாக் போனேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறிய கூட்டம் . கீழ வெளி வீதியில் அமைந்திருக்கும் சிந்தாமணி டாக்கீஸின் இரண்டு பக்கவாட்டு சந்துகளில் மிக நீண்ட queue நிற்கிறது. கஸின் டிக்கெட் வாங்கி கொடுத்து விட்டதால் queueவில் நிற்காமல் நேரே உள்ளே போய் விட்டோம்.
அந்த வருடம் அது வரை வெளியான நான்கு படங்களுமே பெரிய அலப்பரையில் பார்த்த எனக்கு தவப்புதல்வன் படம் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவத்தை தந்தது. அன்றைய மாட்னி ஹவுஸ் புல். அதில் பெருவாரியான நபர்கள் பொது மக்களே. ரசிகர்கள் என்ற வகையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவுதான். அமைதியாக ரசிக முடிந்தது என்று சொன்னாலும் கைதட்டல்களுக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லை. நடிகர் திலகத்தின் பெயர் போடும்போது, அவரை முதலில் திரையில் காட்டும்போது அது போன்ற இடங்களில் பலமான கைதட்டல்கள் விழுந்தன. அதே போல் பாடல் காட்சிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் அனைத்து பாடல்களுக்கும் நல்ல response.
முதல் பாடல் Love is fine darling பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் சில நடக்கும், ஸ்டெப் வைக்கும், trumpet வாசிக்கும் அந்த போஸ் இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. அடுத்தது இசை கேட்டால் பாடல். ஹிந்துஸ்தானி பாடகர் அக்தர் கானுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விஜயாவிடம் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிறகு அக்தர் கானை போட்டியில் சந்திக்கிறேன் என்று சொல்லும் நடிகர் திலகத்திடம் அக்தர் கான் என்ன இப்போ உங்களை தான்சேன் கூட ஜெயிக்க முடியாது என்பார் விஜயா. யார் அது தான்சேன் என கேட்கும் நடிகர் திலகத்திடம் தான்சேன் கூறுவார் விஜயா. அப்போது கனவு பாடலாக விரியும் அற்புத பாடல் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல். [இது தீப் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தை அடிப்படையாக கொண்டது என்று சொல்லுவார்கள்]. முதலில் சிதார் வாசித்துக் கொண்டே பாட ஆரம்பிக்கும் நடிகர் திலகம் பல்லவி முடிந்ததும் எழுந்து விஜயா படுத்திருக்கும் படுக்கைக்கு அருகில் வந்து அங்கே நிற்கும் அரண்மனை வைத்தியரை பார்த்து கண்ணாலேயே எப்படி இருக்கிறது என்று கேட்க அவர் முன்னேற்றம் இல்லை என்ற வகையில் தலையசைக்க என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என்று சரணத்தை ஆரம்பிக்கும் நடிகர் திலகம் அப்போது காட்டும் சில கை அசைவுகள், அந்த சரணத்தை முடித்து விட்டு ஏழாம் கடலும் வானும் நிலவும் என்றவாறே ஸ்டைலிஷ் நடை போடும் நடிகர் திலகத்திற்கு விழுந்தது அப்ளாஸ். அது அடங்குவதற்குள்ளாகவே அங்கே சாத்தி வைத்திருக்கும் கம்பிக்களை வளைத்து இசை என்னிடம் உருவாகும் என்ற வரியில் நாணேற்றுவது போல் காண்பித்து இசை என்னிடம் உருவாகும் என்று கையை மேலே உயர்த்துவார். அதற்கும் செம அப்ளாஸ்,
உலகின் முதல் இசை தமிழிசையே பாடலில் வெள்ளை ஜிப்பா அணிந்து வேட்டி கட்டி இருப்பார். உண்மையிலே அந்த தோற்றத்தில் அவரை வெல்லக்கூடிய அழகு யாருக்குமே கிடையாது என்றே தோன்றும். இந்த போட்டி பாடலில் சரணத்தில் பாடும்போது இரண்டு வரி வரும்
மானிட ஜாதியும் மயங்கி வரும்; அந்த
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
அந்த இரண்டாவது வரியை அவர் இரண்டாவது முறை பாடும்போது ட்ராலியில் வரும் காமிராவைப் பார்த்து தலையை சாய்த்து கன்ன கதுப்பும் கண்களும் ஒரு போல அசைந்து ஒரு சின்ன மந்தகாச புன்னகையை உதிர்ப்பார். அதற்கும் பலமான கைதட்டல்கள்.
நான் எப்போதும் சொல்வதுண்டு. வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட வசீகரம் அவரது கை அசைவில் உண்டு என்று. அது பார்வையாளர்களை அப்படியே ஆகர்ஷித்து விடும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றபோதினும் ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது.
1980-களின் நடுப் பகுதி. நான் கேரளத்தில் வேலை நிமித்தமாக இருக்கும் காலம். கோட்டயம் நகரத்திற்கு சற்று வெளியே எர்ணாகுளம் போகும் பாதையில் நிர்மலா என்றொரு தியேட்டர் அமைந்திருந்தது. அங்கே முழுக்க முழுக்க தமிழ் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். நகரில் மொத்தமே ஐந்து திரையரங்குகள்தான் என்பதனாலும் அந்த ஐந்தில்தான் மலையாளம், தமிழ், ஹிந்தி சில நேரம் ஆங்கில படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதனால் நகருக்குள் தியேட்டர் கிடைக்காத தமிழ் படங்கள் இந்த தியேட்டரில் வெளியாகும். அவை இல்லாத போது இந்த நிர்மலா தியேட்டரில் பழைய தமிழ்ப் படங்களும் திரையிடுவார்கள். அப்படி அங்கே தங்க சுரங்கம், ரத்த திலகம், மூன்று தெய்வங்கள் போன்ற பல நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று தெய்வங்கள் போட்டிருந்தபோது ஒரு சாதாரண வேலை நாளன்று மாலைக்காட்சிக்கு போயிருந்தேன். ஓரளவிற்கு நல்ல கூட்டம். 99% பொது மக்கள். நடிகர் திலகத்தை முதன் முதலில் காட்டும்போது கூட வெகு சிலரே கைதட்டினார்கள். வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வந்தது. அதில் விஷ்ணுவாக வரும் நடிகர் திலகம் வலது கையை உயர்த்தி ஆசி கூறுவதாக வரும் அந்த ஷாட் திரையில் வந்தபோது படபடவென்ற பலமான கைதட்டல். அதுவும் spontaneous ஆக விழுந்த கைதட்டல்கள். ஜாதி,மத,இன, மொழி மாநில, நாடு போன்ற அனைத்து வித்தியாசங்களையும் தாண்டியவர் நடிகர் திலகம் என்பதற்கு அன்று நானே நேரிடை சாட்சியாக இருந்தேன்.
மீண்டும் தவப்புதல்வனுக்கு வருவோம். படத்தின் மற்றொரு பாடலான கிண்கிணி கிங்கிணி மாதா கோவில் மணியோசை பாடல் சற்றே உணர்சிகரமாக இருக்கும். சோகத்தை நகைசுவை போல் வெளிகாட்டி மற்றவர்களை சிரிக்க வைத்து தான் அழுவார். பெண்கள் பகுதியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு. பாடல்கள் தவிர தன் நோயை விஜயாவிடம் மறைக்கும் போதும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கும்போதும், விஜயாவிடம் உண்மையை சொல்கிறோம் என்று நினைத்து பேச அங்கே ஏ. சகுந்தலா நின்று கொண்டு இவரை கிண்டல் செய்து கோவமூட்ட சகுந்தலாவை அடிக்க பாய்ந்து எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழுந்து விடுவது போன்றவை தியேட்டரில் அனுதாபத்தை பெற்று தந்தது. அது போலவே டிஸ்பன்சரியை மூடப் போகிறேன் என்று சொல்லும் விஜயாவிடம் வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்ல பழிக்கு பழியாய் கோவத்தோடு அனைத்தையும் விஜயா நொறுக்க ஒன்றுமே பேசாமல் நடிகர் திலகம் திரும்பி நடக்கும் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் ரசிக்கப்பட்டது. [சண்டையின்போது அங்கே வைக்கோல்போரில் தீ பற்றிக் கொள்ள கண் ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் சிவாஜி அந்த வெளிச்சத்தில் எதிரிகளை இனம் கண்டு சண்டை போடுவதையும் மக்கள் ரசித்தனர்].
படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தி அனைவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. படம் வெற்றிபெறும், நூறு நாட்களை கடக்கும் என்று ரசிகர்கள் சொன்னது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அது போலவே சென்னை பைலட்டில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் வெற்றிகரமாக 70 நாட்களை நிறைவு செய்யும்போது வழக்கம் போல் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் வில்லனாக வந்து தேவர் படமான தெய்வம் படத்தை நவம்பர் 4 தீபாவளி முதல் திரையிட்டனர். ஆனால் தவப்புதல்வன் மதுரை விஜயலட்சுமி தியேட்டருக்கு ஷிப்ட் ஆகி 100 நாட்களை நிறைவு செய்தது.
வெகு எளிதாக 100 நாட்களை கடந்தது என்று சொல்கிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தோமென்றால் தவப்புதல்வனின் சாதனை சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா என்ற இமயம் மற்றொரு பக்கம் தவப்புதல்வன் வெளியாகி ஐந்தே வார இடைவெளியில் செப் 29-ந் தேதி வெளியான வசந்த மாளிகை என்ற மற்றொரு பிரம்மாண்ட இமயம், இந்த இரண்டு இமயங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கி விடாமல் வெற்றிகரமாக முன்னேறிய தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. மேலும் 45 நாட்களிலேயே அதாவது 1972 அக்டோபர் 10-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எந்த நேரத்தில் எங்கு வன்முறை வெடிக்குமோ என்ற பயங்கர சூழல் இப்படிப்பட்ட காலகட்டத்தையும் கடந்து, தீபாவளிக்கு வெளியான படங்களின் போட்டியையும் சமாளித்து தவப்புதல்வன் பெற்ற வெற்றி நிச்சயமாக பெரிய வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை.
(தொடரும்)
அன்புடன்
தவப்புதல்வன் படத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. காரணம் என் தந்தையோடு சென்றிருந்தேன் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் என் தந்தையோடு சேர்ந்து பார்த்த கடைசிப் படம் தவபுதல்வன்தான். எப்போதுமே ஒரு நிகழ்வு நடைபெறும்போது அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியாமல் போய் விடும். அதன் பிறகு நமக்கு நஷ்டமானதை நினைத்துப் பார்க்கும்போதுதான் இழந்ததன் magnitude புரியும். அந்த வகையில் தவப்புதல்வன் எனக்கு எப்போதும் மறக்க முடியாத மனதுக்கு நெருக்கமான படம்.
-
இந்த திரியில் நமது நடிகர் திலகத்தின் திரைக் காவியங்களை அவை முதன் முதலில் வெளியான காலகட்டத்தில் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், அன்றைய நிகழ்வுகள் போன்றவற்றை மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் ஒரு nostalgic திரியாக விளங்குவதால் இன்று முதல் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இந்த திரியின் பெயர் அந்த நாள் ஞாபகம் என்று மாற்றப்படுகிறது. நாம் இங்கே பதிவிடும் விஷயங்களுக்கு இந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்பதனால் இந்த முடிவு.
திரியை துவக்கிய ராகவேந்தர் சாரின் அனுமதியோடு நடந்த இந்த பெயர் மாற்றத்தை நிறைவேற்றிக் கொடுத்த NOV அவர்களுக்கு நன்றி. அனைவரின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடும்
அன்புடன்
-
http://i1146.photobucket.com/albums/...psj20xi2xv.jpg
சென்னை சாந்தி திரையரங்கில் அவன் தான் மனிதன் திரையிடப் பட்ட போது...
காட்சி இடம் பெற்ற திரைப்படம் அன்பே ஆருயிரே...
இந்நிழற்படம் முன்பே நம் நடிகர் திலகம் திரியின் வேறோர் பாகத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இருந்தாலும் ஓர் நினைவூட்டலாக, இங்கே மீள்பதிவு..