ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.... முரளி அவர்கள், தன்னுடைய பின்னுரையில், 'சிவாஜியின் சாதனை சிகரங்கள்' என்ற இந்த தொடர் எழுதத்துவங்க நேர்ந்ததற்கான காரணத்தை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
அதாவது, இந்த கணிணி யுகத்தில் சிலர் வலைப்பூக்கள் எழுதுகிறேன் என்ற போர்வையில் மற்றவர்கள் மீது சேற்றை வாரியிறைப்பதும், அவர்கள் பற்றிய தவறான, அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைத்தந்து அவர்கள் இமேஜ் எனப்படும், மற்றவர்கள் அவர்கள் மேல் கொண்டுள்ள அபிமானத்தை சிதைப்பதுமான வேலைகளில் இறங்கியுள்ளனர். நடிகர்திலகத்தைப்பற்றி மட்டும்தான் என்பதில்லை, பலரைப்பற்றிய தங்கள் அரைகுறையான, அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளை வெளியிட்டு அதில் ஆத்ம திருப்தியடைகின்றனர். (வலைப்பூக்கள் எழுதும் எல்லோரையும் நான் குறிப்பிடவில்லை. அதில் கணிசமான எண்ணிக்கையுள்ள சிலர் இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியுள்ளனர்).
அதில் ஒரு பகுதியாகத்தான், நடிகர்திலகத்தின் படங்களை தோல்விப்படங்களாக சித்தரித்து, அவர் 'பாக்ஸ் ஆஃபீஸில்' எதையும் சாதிக்கவில்லை என்ற ஒரு வதந்தியை, புரளியை, பொய்த்தகவல்களை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படத்துவங்கியுள்ளனர். முதலில் அவரது சாதாரண வெற்றிப்படங்களை தோல்விப்படங்கள் என்று சொல்ல ஆரம்பித்து, பின்னர் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' போன்ற மாபெரும் வெற்றிப்படங்களையெல்லாம் தோல்விப்படங்கள் என்று எழுதத்துவங்கினர். (மொத்தம் 21 அரங்குகளில் 100 நாட்களையும், பல அரங்குகளில் 140 நாட்களையும் கடந்து, சில இடங்களில் வெள்ளிவிழாவையும் கண்ட அந்தப்படம் தோல்வியென்றால், வேறு எதுதான் வெற்றிப்படம் என்பதை அவர்கள் விளக்குவார்களா?).
வருங்கால சமுதாயம், இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களில் மயங்கி, 'ஒட்டுமொத்தத்தில் நடிகர்திலகம் ஒரு தோல்வி நடிகர்' என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்துதான், முரளி அவர்கள் இப்படி ஒரு தொடரைத்துவங்கி, முழுக்க முழுக்க உண்மைச்செய்திகளை அடிப்படையாகக்கொண்டு அவரது படங்களின் சாதனைகள் பற்றி எழுதத்துங்கினாரே தவிர.......
..........இதைக்கொண்டு வேறு யாருடைய சாதனைகளோடும் ஒப்பிடுவதற்காக அல்ல.
மற்றபடி தோல்விப்படங்களை, அவரே தோல்விப்படங்கள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் 50 நாட்களைக்கூட தொட முடியாமல் போன (அன்பே ஆருயிரே, வைரநெஞ்சம், சித்ரா பௌர்ணமி போன்ற) பல படங்களை அவர் பட்டியலுக்கே கொண்டுவரவில்லை.
தமிழ் சொன்னதுபோல, இங்கு எல்லா நடிகர்களுக்குமே தனித்தனி த்ரெட்கள் இருக்கின்றன. சிவாஜியின் சாதனைப்பட்டியலை முரளி இங்கே எழுதியதுபோல, ஆர்வமுள்ள மற்றவர்கள் அவ்ர்கள் அபிமான நட்சத்திரங்களின் சாதனைப் பட்டியலை அவர்களது த்ரெட்டில் உள்ளது உள்ளபடி, உண்மையாக எழுதலாம். ஒப்பீடு செய்ய விரும்புபவர்கள் இரண்டு த்ரெட்களையும் படித்து ஒப்பீடு செய்துகொள்வார்கள்.
அதைவிடுத்து, எல்லா ஒப்பீடுகளையும் நடிகர்திலகத்தின் த்ரெட்டிலேயே செய்ய வேன்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு போதுமான அளவு இருக்கிறது.