நன்றி ப்ரியா & ஆனா.....
அலுவலகத்துக்குள் வரும் அபி, தன்னுடைய அறைக்குச் செல்லாமல், ஏதோ நினைவில் ஃபைல் ரூமுக்கு வந்துவிடுகிறாள். (அபியின் அலுவலகம் என்று காட்டப்படும் அறை, ஏகப்பட்ட சீரியல்களில் இடம்பெறுவதால், ஷூட்டிங் நேரத்தில் கிடைகாமல் இருந்திருக்கக்கூடும்). அப்போது அபியைப்பார்க்க வரதராஜன் வருகிறார். சும்மா அபியைப் பார்த்துவிட்டுப் போவதாகவும், மாலை அசோஸியேஷன் அலுவலகம் வருமாறும் சொல்லிப்போகும் அவரை நிறுத்தும் அபி, தேர்தலன்று அவரைக்கடத்தியவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்று கேட்க, அந்த ரவுடிகள் அசந்த நேரம் பார்த்து தப்பியதாகச்சொல்லும் அவர், அபி மீண்டும் துருவித்துருவிக்கேட்க, அதற்குமேல் பொய் சொல்ல முடியாமல், தன்னை தொல்காப்பியன்தான் ஆட்களுடன் வந்து மீட்டு, அசோஸியேஷன் அலுவகம் வரை காரில் கொண்டு வந்து விட்டுச்சென்றதாகவும், இந்த விவரங்களை அபியிடம் சொல்ல வேண்டாம் என்று அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார். இப்போது அபிக்கு தொல்காப்பியன் மீதுள்ள மதிப்பு மேலும் உயர்கிறது. தன்னை விட்டு விலகியிருக்கும்போதும் கூட தன்னுடைய உயர்வுக்காக தொல்ஸ் செய்து வரும் காரியங்கள் அவளை பெருமையடைய வைக்கின்றன.
அபியில்லாத நேரத்தில் ஆர்த்தி கம்பெனி பணத்தை சொந்த விஷயத்துக்கு உபயோகப்படுத்திய விஷயம் பற்றி சுரேஷ் சொன்னது நினைவுக்கு வர, உடனே கிருஷ்ணனை அழைத்த அபி, சஸ்பென்ஸ் அக்கவுண்ட்டில் உள்ள 25 லட்சம் பற்றி ஏன் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க, அவர் அபி அமெரிக்கா சென்ற நேரத்தில் ஆர்த்திதான் எம்.டி. யாக இருந்ததால் ஆர்த்தி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று கூறுகிறார். உடனே அபி 'எல்லாம் தொல்காப்பியனால் வந்தது. நான் அமெரிக்கா செல்லும்போது அவரைக் கம்பெனியைப் பார்த்துக்கொள்ளச்சொன்னதற்கு, அவர்தான் இந்த ஆர்த்தியை பொறுப்பில் வைக்கும்படி சொன்னார்' என்று முணுமுணுக்க, கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி. ஆர்த்தி வரக்கூடாதென்று தொல்ஸ் சொன்னதாகவல்லவா இதுவரை நினைத்துக்கொண்டிருந்தார்?.
கிருஷ்ணன் அங்கிருந்து போனதும் ‘ஆர்த்தி மேடம்’ பரபரவென்று ஓடி வந்து தனக்கு உடனடியாக 20 லட்சம் பணம் வேண்டுமென்று கேட்க, அபியோ அவள் முதலில் கம்பெனியில் எடுத்த 25 லட்சத்துக்கு கணக்கு என்னாச்சு என்று கேட்கிறாள். ஆர்த்தி மேடம் அதிர்ச்சியுடன், அதைப்பற்றி பின்னர் விவரமாக சொல்வதாகவும் இப்போது அவசரமாக பணம் தேவையென்றும் சொல்ல, அபி பிடிவாதமாக மறுக்கிறாள். முதலில் 25 லட்சத்துக்கான விவரம் வேண்டுமென்று அபி கண்டிப்புடன் கூற, உடனே ஆர்த்தி மேடத்துக்கு கோபம் தலைக்கேறுகிறது. 'நீயெல்லாம் ஒரு அக்காவா?. இனிமேல் உன் கம்பெனி பக்கமே தலை வைத்துப்படுக்க மாட்டேன்' என்று சாபமிட்டு வெளியேறுகிறாள்.
திருவேங்கடத்தின் திட்டத்தின்படி தமிழகத்தின் முக்கியமான நகரமெங்கும் ஆதியை விடுதலை செய்யக்கோரி பேரணிகள் நடக்கின்றன (சும்மா ஊருக்கு பத்து பதினைந்து பேர்). ஆதியை ஜட்ஜ் முன் நிறுத்தி ரிமாண்ட் செய்ய கமிஷனர் அழைத்துப்போகும்போது, சீஃப் செக்ரட்டரியிடமிருந்து அவருக்கு போன் வருகிறது. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைவதால் ஆதியை விடுதலை செய்யுமாறு சீஃப் செக்ரட்டரி கூற ஆதி விடுதலை செய்யப்படுகிறான். தன்னை அரெஸ்ட் செய்த போலீஸாரை ஒருகை பார்ப்பதாக ஆதி எச்சரிக்கை செய்துவிட்டுப்போகிறான்.