தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்....
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் சார், திரு. ராமமூர்த்தி சார், திரு. கலிய பெருமாள் திரு.யுகேஷ்பாபு ஆகியோரின் ஆவணப் பதிவுகள் அருமை
நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நேரமின்மையால் முடியவில்லை.
நேற்று முன்தினம் இரவு ஜெயா தொலைக்காட்சியில் விக்கிரமாதித்தன் திரைப்படம் பார்த்தேன். ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது. பத்மினி, ராகினி நாட்டியப் போட்டியில் தீர்ப்பு சொல்ல கோமாளி வேடத்தில் தலைவர் வரும் காட்சியில் அவரிடம் ‘நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?’ என்று மன்னராக வரும் திருப்பதிசாமி கேட்க, தமிழகத்தின் சிறப்பை பற்றி ஒவ்வொருவரிடமும் சென்று படுவேகமாக தலைவர் கூறும் வசனங்களைக் கொண்ட நீண்ட காட்சியில் தலைவரின் நடிப்பு அற்புதம்.
படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது டி.எம்.எஸ்.சின் தேவகானக் குரலில் ‘தீ்ர்மானம் சரியாக ஆடாவிட்டால்..’’ பாடல். கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்தது இந்தப் பாடல். நான் முறைப்படி சங்கீதம் கற்றவனல்ல. ஏதோ சிறிதளவு கேள்வி ஞானம். அதுவும் திரைப்படப் பாடல்களில் இருந்துதான். புதுமைப் பித்தனில் ‘உள்ளம் ரெண்டும் ஒன்று’ பாடல் கல்யாணி ராகம் என்று யாராவது கூறி தெரிந்து கொண்டால் அதன் சாயலில் உள்ள பாடல்கள் கல்யாணி ராகம் என்று தெரிந்து கொண்டு, சங்கீதம் தெரிந்தவர்களிடம் அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆனால், கேட்க மிகவும் இனிமையாக இருக்கும் ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்...’ பாடல் என்ன ராகம் என்று தெரியவில்லை.
ஒன்று ஆரம்பித்தால் நினைவலைகள் எவ்வளவோ வந்து மோதுகிறது நண்பர்களே. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. அதன் மூலம் நானும் recall செய்து கொண்டது போலிருக்கும். மேலும், குடும்ப பொறுப்புகளாலும் பணிச்சுமையாலும் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்ட இன்றைய சூழலில் அந்தக் காலத்தைப் போல நண்பர்களுடன் அளவளாவுவதே அரிதாகிவிட்டது. உங்களுடன் இப்படியாவது தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் எனக்கு தெரிந்ததை அதுவும் இளைய சகோதரர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
‘உள்ளம் ரெண்டும் ஒன்று...’ பாடலைப் பற்றி கூறியதும் பாடல் மற்றும் புதுமைப் பித்தன் படத்தோடு தொடர்புடையவர்களைப் பற்றி சில நினைவுகள். தலைவருக்காக குரல் கொடுத்துள்ள இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் மு.கருணாநிதியின் மைத்துனர். சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதிதான் கருணாநிதியின் முதல் மனைவி. அவருக்குப் பிறந்தவர்தான் தலைவரின் ரசிகரான மு.க.முத்து.( இவர் ஏற்கனவே தலைவர் இருக்கும்போதே அதிமுகவில் சேர வந்தார். அவரை தலைவர்தான் திருப்பி அனுப்பி வைத்தார். பின்னர், 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு அதிமுகவில் சேர்ந்தார். எனது தந்தை எனக்கு மாத செலவுக்கு ரூ.8,000தான் பணம் கொடுக்கிறார் என்று பேட்டி வேறு கொடுத்தார். அவருக்கு குடும்ப நல நிதியாக ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார் என்பது தனிக்கதை)
http://i58.tinypic.com/1r901j.jpg
புதுமைப் பித்தன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணா, அந்தக் கால கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரியின் சகோதரர். ராமண்ணாவுக்கு இரு மனைவிகள். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு பேருமே நடிகைள். இரண்டு பேர் பெயருமே சரோஜா. புதுமைப் பித்தனில் தலைவருக்கு ஜோடியாக நடித்த பி.எஸ்.சரோஜா ஒருவர். மற்றவர் கொடுத்து வைத்தவள் படத்தில் தலைவருக்கு ஜோடியாக நடித்த ஈ.வி.சரோஜா. (இங்கே நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவரைப் பற்றி கலைத்துறை, அரசியல்துறை எதுவாக இருந்தாலும் அவரோடு தொடர்புடையவர்கள் பற்றிய தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பதிவிடுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகள் கழித்து பார்த்தால் நமது திரி ஆவணக் களஞ்சியமாக இருக்கும். குறிப்பாக, தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர், சகோதரர் கோவிந்தராஜ் அவர்கள் தனது தந்தையிடம் கேட்டு ஆதாரத்துடன் நிறைய தகவல்களை வெளியிட வேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.)
சரி... விட்ட இடத்துக்கு வருகிறேன். தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடலில் தலைவர்தான் எவ்வளவு அழகு. மேலே உள்ள புகைப்படம் அந்த பாடல் காட்சியின் ஒரு காட்சிதான். எந்தப் படமாக இருந்தாலும் தனது கட்சியையும் கொள்கைகளையும் திரைப்படத்தின் மூலம் வெகுமக்களிடம் எடுத்துச் செல்வதில் தலைவருக்கு நிகர் அவர்தான். அதற்கு இந்தப் புகைப்படத்தில் அவரது நெற்றியில் உள்ள பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் வடிவிலான திலகமே சான்று. தாளக்கட்டுக்கு ஏற்றபடி விரல்களில் அவர் தாளம் போடும் லாவகம்தான் என்ன?
‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும், சன்மானம் ஏது சொல்?
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்...’
வாழ்க்கையின் எவ்வளவு பெரிய தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். உலகமென்னும் நாடகமேடையில், நமக்கு நாமே ஆயுளை நிர்ணயித்துக் கொள்ள முடியாத வாழ்க்கைக் களத்தில், நாம் ஒவ்வொருமே ஏதாவது ஒரு பாத்திரத்தில் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கையின் அந்த ஆட்டத்தில் தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் சன்மானம் கிடைக்காது. சன்மானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தன்மானம் இழந்து எவ்வளவு இன்னல்களுக்கும் பாதிப்புகளுக்கும் மனிதர்கள் ஆளாக வேண்டியுள்ளது? இது எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய அனுபவ மொழிகள்.
இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள் நினைவுக்கு வந்தார். தேக்குமர தேகம் என்று மக்கள் திலகத்தை அவர் விமர்சித்தாரே. அந்த தேக்கு மர தேகத்தில் பாதியை இந்தக் காட்சியில் தரிசிக்கலாம். (சமீபத்தில் கே.பி.எஸ்.சுடன் தலைவர் இருக்கும் படத்தையும் செய்தியையும் வெளியிட்டிருந்ததற்காக நன்றி திரு. கிருஷ்ணா சார். அந்தப் படத்தில் விபூதி, குங்குமத்துடன் தலைவரின் முகத்தில்தான் என்ன ஒரு தெய்வீகம்) உயர்ந்த ரசனையும் சிறந்த சங்கீத ஞானமும் உள்ள திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள் இந்தப் பாடலை ஆய்வு செய்து நமது திரியில் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு உடனடியாக இப்போது நேரம் கிடைக்காவிட்டாலும் கூட இப்போதைக்கு, பாடல் என்ன ராகம் என்று தெரிவிக்குமாறு பணிவன்புடன் கோருகிறேன்.
வாழ்க்கையில் தீர்மானம் சரியாக ஆடுவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்