Originally Posted by
makkal thilagam mgr
An explanation sent to 'NAKKHEERAN' - Tamil Bi-weekly, in reply to their article published in the recent issue.
For the kind information of the Viewers and the Thread Hubbers.
மதிப்பிற்குரிய நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கங்கள் பல !
தங்களின் பிப்ரவரி 14-17 இதழில் பிரசுரமான "இடைத்தேர்தல் கிளைமாக்ஸ்" கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட ஒரு சிறு வாக்கியம் குறித்து, எங்கள் விளக்கத்தை அளிக்க விரும்புகிறோம்.
எங்கள் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் , திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியையும் , அதன் மூலம் எம். ஜி. ஆர். அவர்களது சக்தி என்னவென்று, அப்போதைய ஆளுங்கட்சியாக விளங்கிய தி. மு. க. வும், மத்தியில் ஆட்சி புரிந்தும் டெபாசிட் தொகையை பறிகொடுத்த இ. காங்கிரஸ் கட்சியும் புரிந்து கொண்டன, என்று எழுதியமைக்கு எங்களது முதற்கண் பாரட்டுக்கள் கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து எழுதப்பட்ட "எம். ஜி. ஆர். ஆட்சி காலத்தில் 1984ம் வருடம் அண்ணா நகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, உப்பிலியாபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. எம். ஜி. ஆர். நேரடியா நாலு தொகுதியிலும் பிரச்சரம் செஞ்சாரு, தேர்தல் முடிவு வந்தப்ப அண்ணா நகரிலும், மயிலாடுதுறையிலும் தி. மு. க. ஜெயிச்சுது. உப்பிலியாபுரம் அ. தி.மு. கவுக்கு, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தஞ்சாவூரு இரண்டு தொகுதிகளில் தி,மு.க. ஜெயிச்சதை தாங்க முடியாம ஊட்டிக்கு போய் 15 நாள் ரெஸ்ட் எடுத்தாரு எம். ஜி. ஆரு"
என்ற வாக்கியத்தில் சிறு திருத்தம் : :
1. எங்கள் கலியுக கடவுள் எம். ஜி. ஆர். ஆட்சி செய்த 1984ம் வருடத்தில், இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் , அரசு எந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படவில்லை. அடக்குமுறைகள் கையாளப்படவில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை. சென்னை அண்ணா நகரில் 9000 கள்ள வாக்குகள் போடப்பட்டன என்ற செய்தியும், அப்போது பரபரப்பாக பேசப்பட்டு, பேட்டிகளும் வெளிவந்தது.
2. அந்தந்த கட்சிகள், இந்த 4 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டனவேயன்றி, எந்த கட்சியும் எந்த தொகுதியையும் இழக்கவில்லை. அந்த வகையில், எங்கள் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். தோற்றுவித்த அ. தி.மு. க. தோல்வியே பெறவில்லை.
3. மேலும், எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் எந்த காலத்திலும் ஊட்டிக்கு சென்று " ரெஸ்ட் " எடுத்தது கிடையாது. உடல் நலம் குன்றிய போதிலும் ஓய்வு எடுக்காதவர்தான் ஒப்பற்ற எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள். மக்கள் நலனே பெரிது என்று நினைத்து, அவர்களுக்காகவே ஒய்வின்றி பாடுபட்ட எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள், அவ்வப்போது ஓய்வு எடுத்திருந்தால் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்திருப்பார்.
4. 1984 மே மாதம் 16ம் தேதி நடைபெற்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களின் முடிவுகள் 20ம் தேதி வெளியாயின. அதே மே மாதம் 25ம் தேதியன்று மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார். நடிகர் ராதாரவி அவர்களுக்கு விரலில் மோதிரம் அணிவித்து கவுரவித்தார். வெற்றியை கண்டு மமதை கொள்வது, தோல்வியை கண்டு துவண்டு விடுவது என்பது எங்கள் வள்ளலுக்கு என்றுமே இருந்தது கிடையாது.
எனவே, "ஊட்டிக்கு சென்று 15 நாள் ரெஸ்ட் எடுத்தார் எம். ஜி. ஆர்." என்ற தவறான தகவல், "நக்கீரன்" என்ற பெயரில் வரும் தங்கள் பத்திரிகையில் பிரசுரமானது வருந்தத்தக்கது.
இன்றைய தலைமுறையினருக்கு, இந்த தவறான தகவல், மனதில் பதியக்கூடாது என்ற எண்ணத்தில், மேற்கூறிய எங்கள் விளக்கத்தை, தயவு செய்து , உடனடியாக தங்களின் அடுத்த இதழில் பிரசுரிக்கும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எங்களது இந்த பணிவான வேண்டுகோளை தாங்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டு, எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி !
என்றும் தங்கள் நிரந்தர வாசகன்
சௌ. செல்வகுமார்
செயலாளர், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்,
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.