Thanks a lot to Moderators RR and NOV, and their support team for regaining and retaining this thread and the whole forum, after that 'Black Incident' last week.
Printable View
Thanks a lot to Moderators RR and NOV, and their support team for regaining and retaining this thread and the whole forum, after that 'Black Incident' last week.
வாசுதேவன் சார்,
தங்களின் கைவண்ணத்தில் அனைத்து படங்களின் (சிவந்த மண், பாரம்பரியம், அனபைத்தேடி, அன்னை இல்லம், செல்வம், லட்சுமி கல்யாணம்) புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்புகள் அனைத்தும் அட்டகாசம். ரொம்ப சிரமப்பட்டு தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.
முத்தாரம் பத்திரிகையில் வந்த நடிகர்திலகத்தின் பேட்டியை அளித்தமைக்கு மிக்க நன்றி.
ராமஜெயம் சார் & சாரதா,
என்னை விட தீவிர தேவிகா ரசிகர்களும் இங்கே இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பம்மலார் சார்,
கப்பலோட்டிய தமிழன் படத்தின் விளம்பரங்கள் மட்டுமல்லாது, வேறு பல அரிய ஆவணங்களையும் சிறப்பாக அளித்துள்ளீர்கள். தங்கள் சேவையால் இத்திரி பல உயரங்களைக்கடந்து நிற்கிறது. வெளிவந்த காலத்திலேயே கப்பலோட்டிய தமிழனுக்கு பத்திரிகைகளில் சிறப்பான விமர்சனங்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக நடிகர்திலகத்தின் நடிப்பாற்றலை ரொம்பவே புகழ்ந்து எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தும் மக்கள்தான் ஏமாற்றி விட்டனர். ஆனால் இப்போது உணர்ந்து ஆதரவளிக்கின்றனர்.
முன்னொருமுறை (ஜூலை முதல் வாரத்தில்) எனது வேண்டுகோளுக்கினங்க 'சிவந்த மண்' திரைக்காவியத்தின் முதல் வெளியீட்டு விளம்பரத்தையும், 100வது நாள் விளம்பரத்தையும் தந்து அசத்தியிருந்தீர்கள்.
தற்போது 'சிவந்த மண்' வெளியீட்டு வாரமென்பதால், மேலும் பல விளம்பரப்பதிவுகளையும், படம் வெளிவந்த காலத்தில் வந்த பேசும் படம், பொம்மை இதழ்களின் அரிய ஆவணப்பதிவுகளையும் தந்து மகிழ்விப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். (அப்படத்தின் ஏராளமான ஸ்டில்களையும், பாடல் இணைப்புகளையும் ஏற்கெனவே வாசுதேவன் சார் தந்து திக்குமுக்காட வைத்து விட்டார்). எனவே வழக்கம்போல தங்களிடமிருந்து அரிய ஆவணப் பொக்கிஷங்களுக்காக காத்திருக்கிறோம்.
தங்களின் அன்பான, விலைமதிப்பற்ற சேவைகளுக்காக மீண்டும் மீண்டும் நன்றிகள்.
ராமஜெயம் & சாரதா,
மேகலா தியேட்டரில் சிவந்த மண் வெளியானது பற்றி நீங்கள் இருவரும் தெரிவித்த கருத்துக்கள் சரியே. அந்த அரங்கில் அதுதான் நடிகர்திலகத்தின் முதல் படமாக ரிலீஸானது, பெரிய வெற்றியும் பெற்றது. சிவந்த மண்னை அங்கு வெளியிட மேகலா தியேட்டர் நிர்வாகமே விரும்பியது என்று ராமஜெயம் சார் சொல்லியிருப்பது புதிய செய்தி. சிவந்த மண் அங்கு வெளியானதால் நம்நாடு சரவணா தியேட்டருக்குப் போனதும் உண்மை.
ஆனால் அதன்பிறகு மேகலாவில் நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளியானபோதும், வெற்றி வாய்ப்புள்ள படங்களை அனைத்தும் (சாரதா சொன்னது போல) புவனேஸ்வரிக்கும், அதை விட்டால் ராக்ஸிக்கும் போய்விட்டதால், நடிகர்திலகத்தின் படங்களை திரையிட மேகலா நிர்வாகம், தியேட்டர் வழங்கியும் படங்கள் வெற்றிகரமாக ஓடவில்லை.
சிவந்த மண்ணுக்குப்பின் மேகலாவில் வெளியான படங்கள் இவைதாம்....
விளையாட்டுப்பிள்ளை
இருதுருவம்
மூன்று தெய்வங்கள்
தர்மம் எங்கே
தவப்புதல்வன்
அன்பைத்தேடி
நான் வாழ வைப்பேன்
எனவேதான் மேகலாவில் தொடர்ந்து வெற்றி வாய்ப்பு அமையவில்லை (இவற்றில் தவப்புதல்வன் 'பைலட்' அரங்கிலும், நான் வாழ வைப்பேன் 'சித்ரா' அரங்கிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடின).
அன்பு முரளி சார்,
தங்களுடைய அன்புக்கு என் பணிவான நன்றிகள்.
'மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்' பாடலை தாங்கள் கவித்துவமாக சிலாகித்து வர்ணித்துள்ள அழகு அருமை! என்ன ஒரு கிளாசிக் டூயட்! உங்களால் மீண்டும் நானும் அக்காவியப் பாடலை பலமுறை பார்த்து ரசித்தேன். அதற்காக உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
டியர் கார்த்திக் சார்,
தங்கள் உயரிய பாராட்டுதல்களால் என்னைத் திக்கு முக்காட வைத்து விட்டீர்கள். தங்கள் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் இதயம் நிறைந்த பாராட்டுதல்கள் என்னுள் ஆனந்தக் கண்ணீரையே வரவழைத்து விட்டது. தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆசிகளும், நமது இதய தெய்வத்தின் ஆசிகளும் துணையாக என்றும் இருக்கையில் எங்களுக்கு என்ன குறை?...
தங்களுக்கு மிகவும் பிடித்த 'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா"...பாடலைத் தங்களுக்காகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா" வீடியோ வடிவில்.
http://www.youtube.com/watch?feature...&v=4n1ZQfVfD0c
முன்னொருமுறை தங்களை சென்னையில் நேரில் சந்தித்தபோது 'அன்னை இல்லம்' திரைப்படத்தில் வரும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ரசனையான
காட்சியைப் பற்றி தாங்கள் என்னிடம் மிகவும் ரசித்துப் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. இப்போது நீங்கள் மறுபடியும் நடிகர்திலகத்தின் அந்த அட்டகாசமான நடிப்புக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியேசொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)
தாயிடம் அமைதி...
தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.
இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...
அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .
இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....
முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..
ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....
ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
என்று சொல்லிவிட்டு
"இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!
"உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை ஆட்டிக்கொள்வது அதியற்புதம்.
இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...
அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zNE0LicphLM
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
அன்னை இல்லம் படத்தில் நீங்கள் குறிப்பிட்ட காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று, அதேபோல் சிறையில் தன் தந்தையை (s.v.ரங்காராவ்) சந்திக்கும் போது அவர் நம்பியாரை பழிவாங்க போவதாக கூறும் போது ரங்கராவ் வேண்டாம் நீ உனக்காக இல்லாவிட்டாலும் உன் தாய்க்காக வாழ வேண்டும் என்று கூறி அவர் தாய் யார் என்பதை சொல்லி, நீ யார் என்பதை வெளியிடவேண்டாம் என்று சொன்னவுடன் "இது கொடுமைப்பா கொடுமை! விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தாய் அன்பு என்னன்னு தெரியாம ஏங்கி கிடந்த எனக்கு தாய் யாருன்னு தெரிஞ்ச பிறகு அம்மா நான் தான் உங்க மகன்னு ஓடி போய் என் கண்ணீரால் அவங்க பாதத்த கழுவுற பொன்னான சந்தர்ப்பத்த
குடுக்காம என் வாய்க்கு பூட்டு போட்டுடீங்களே அப்பா? என்று கதறும் போது என் கண்ணீரை கட்டு படுத்தவே முடியாது. அதே போல் தன் தாயிடம் உங்கள் கணவர் பெயர் என்ன என்று கேட்க mvராஜம்மா சிவபெருமான் படத்தை காட்டி இவர் பெயர் தான் என் கணவர் பெயர் என்று கூற உடனே இவர் பரமசிவம், கௌரி, குமரேசன், சண்முகம் என்று சொல்லி அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறுவார் பாருங்கள் , என்ன அற்புதமான நடிப்பு, நீங்கள் சொல்வது போல் சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது
டியர் வாசுதேவன் சார்,
அன்னை இல்லம் காட்சியைத் தரவேற்றியதோடு மட்டுமல்லாமல், அந்தக் காட்சியைப் பற்றி விரிவாக அலசி அசத்தி விட்டீர்கள். இந்த ஒரு காட்சிக்கே உலகில் உள்ள எல்லா நடிகர்களும் அன்னை இல்லத்தின் வாசலில் தவமிருந்து அவருடைய அருளைப் பெற்று அதற்குப் பிறகு நடிக்க வந்திருக்க வேண்டும்.
எல்.ஐ.சி. கட்டிடத்தில் மொட்டை மாடியில் படமாக்கப் பட்ட ஒரே படம் அன்னை இல்லம் திரைப்படம் என்று நினைக்கிறேன். யாராவது உறுதிப் படுத்த்லாம்.
வரும் 20.11.2011 - அன்று வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பின் சார்பில் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விவேகாநந்தர் கூடத்தில், மாலை 6.30 மணிக்கு நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் ராணி லலிதாங்கி திரையிடப் படுகிறது. உறுப்பினர் அல்லாதவர்க்கு நுழைவுக் கட்டணம் உண்டு.
http://4.bp.blogspot.com/-GuZ46po9U9...invitation.jpg
டியர் வாசுதேவன் சார், அன்னை இல்லம் நிழற்படம் மற்றும் பாடல் காட்சிகள் பிரமாதம். காட்சிகளை நீங்கள் வர்ணித்திருக்கும் விதம் அற்புதம். நன்றி.
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
அன்னை இல்லம் படத்தில் தலைவர் சிறையில் தன் தந்தையை சந்திக்கும் காட்சியை நானும் பலமுறை கண்டு ரசித்திருக்கிறேன். அன்னை இல்லம் நடிகர்திலகத்தின் அற்புத நடிப்புக் கொண்ட அசத்தலான காவியம்.
அன்பு சந்திரசேகரன் சார்,
தங்கள் அன்பு பாராட்டுக்கு நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் உயர்ந்த பாராட்டுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி. ராணிலலிதாங்கியின் சிவதாண்டவ நடனம் கண்முன்னே வந்து நிற்கிறது.
அன்புடன்,
வாசுதேவன்.