-
முத்தண்ணன் பக்கத்து வீடு
சிறு வயது முதலே பயம்..
நேரில் வந்தால் ஓடி ஒளிவோம்
அவர் தம்பி மட்டுமல்ல
தெரு நண்பர்கள் அனைவரும்..
கண்டிப்பு ஜாஸ்தி..
முப்பது வருடம் கழித்து
தளர்ந்திருந்த அவரைப்
பார்த்த போதும் பேசவில்லை..
முறுவலித்து நகரப் பார்க்க..
அவர் தான் இழுத்து நிறுத்தி..
எப்படி இருக்கே இருக்கீங்க தம்பி..
பார்த்து நாளாச்சு
ஒல்லியாப் பார்த்தது உஙகளை..
இப்போ அகலமாய்ட்டீங்க..
பதிலுக்கு அவர் தம்பியை
என் பழைய தோழனைக் கேட்டால்..
ஒன்றும் சொல்லாமல்
பெருமூச்சு விட்டு
சின்ன வயசு பயம்
உங்க கிட்ட இன்னும் இருக்கு..
அவன் நினைக்கலியே
கோவிச்சுக்கிட்டுப் போனவன் தான்..
பாத்துப் பேசியே பத்து வருசம் ஆச்சு
என்றவர் மறுபடி என்னை மேல் கீழாகப்
பார்த்து
தாங்க்ஸ்பா உன்னில்
என் தம்பியப் பார்த்துட்டேன்..
எனச்சொல்லி
திரும்பி நடந்தார் தளர்நடையில்
-
தளர்நடையில் தங்க மேனியில்
கொடியிடையில் கோவையிதழில்
சொக்குவான் அரசகுமாரன்
போகுமிடமெல்லாம் ஒருத்தி
அவ்வண்ணமே இருக்கிறாள்
அலுக்கிறது பழைய புதினம்
-
பழைய புதினம் தான்..
அழகான உயிர்ச் சித்திரங்கள்
கொஞ்சம் பழுப்படைந்து..
சில பல துணுக்குகள்,
பாதி மட்டும் இருக்கும்
சினிமா விமர்சனம்,
பாதி இருக்கும் வாசகர் கடிதம்,
என
அத்தியாயம் பிசகாமல்
பைண்ட் செய்யப் பட்டு
இருந்தது கிடைத்தது..
அக்காவுடையது தான்..
படிக்கப் படிக்க சுவாரஸ்யம்..
ஒரு அத்தியாயத்தின்
முதுகுப் பகுதியில்
சுஜா ஐ லவ்யூ ரமேஷ்
எனக் கிறுக்கியிருக்க..
சுஜா அக்கா பெயரில்லை
ரமேஷீம் யார் எனத்தெரியாது..
அக்காவிடம் கேட்க வேண்டும்..
வருடங்கள் பலவானதால்
நினைவிருக்குமா தெரியவில்லை..
ம்ம்
கதையைவிட இதில்
கூடியது சுவாரஸ்யம்
-
சுவாரஸ்யம் குன்றிப் போகும் உறவுகள்
சுவடுகள் கலைந்துபோன நினைவலைகள்
சுழியில் மாட்டித் திசைமறந்த சருகுகள்
சுழன்று வரும் வெறுமைப் பொழுதுகள்
-
வெறுமைப் பொழுதுகள் தேன்கூட்டில் இல்லை
சுறுசுறுப்பான மூளைக்கு ஓய்வென்பதில்லை
தேடலும் ஆர்வமும் ஆராய்ச்சியும் உந்தும்போது
அயர்வில்லை அலுப்பில்லை ஆனந்தம் மட்டுமே
-
ஆனந்தம் மட்டுமே தெரிய
வந்தவளிடம்
அம்மா எதுவும் பேசவில்லை..
மெளனமாய்க் காஃபி கலந்து
கொடுக்க
குடித்துவிட்டு
நான் அவருக்குக் கலக்கறேம்மா..
கொஞ்சம் டிகாக்*ஷன் தூக்கலா
சர்க்கரை கம்மியா இருக்கணுமாம்..
உனக்குத் தெரியாது..
எனச் சொல்ல
கோபத்தில்பார்த்த அம்மாவின் கண்களில்
தெரிந்தது சந்தோஷம் உள்ளூர..
-
சந்தோஷம் உள்ளூர பறந்தது வானுயர
பெற்றோரின் மனம். மகளுக்கு மணம் .
கடைசி நிமிடத்தில் மூத்தவளின் காதலரிய
படையாய் வந்தவர் இளையவளை பெண்கேட்க
திகைத்துரைத்த மௌனத்தை சம்மதத்திற் கறிகுறியாய்
திரித்துணர்ந்து மேடையில் அமர்த்தி விட்டாரே.
வாயை அடைத்து வாழ்வை கெடுத்து
கனவை கலைத்த கூட்டம் விடுத்து
கண்டம் தாவி சென்றது தம்பதி
நெஞ்சமொன்று சேராததை குறிப்பதை போல
தஞ்சம் புகுந்தனர் கண்டத்தின் இருமூலையில்
காதலால் இணையாத அவ்விரு உள்ளங்களை
காலம் வந்து பிணைக்க முடியுமாயென்ன ?
விவாகரத்தில் முடிந்தது சோகக் கதை
தாய்தந்தைய ருள்ளம் உற்றது வதை
-
வதை செய்கின்றான் என்னை
நொடிக்கொரு கேள்வி வருது
ஒன்றுக்குமே விடை கிடையாது
சின்னக் கண்ணை உருட்டியே
சிற்றேவல் புரிய வைக்கிறான்
தூங்காது தூங்கவிடாது படுத்தி
இன்பமான துன்பமிதை பெற
பாட்டியாகவேண்டும் ஒருத்தி
-
ஒருத்தி அங்கே தலைமேலே..
..ஒழுங்காய் அழகாய் அமர்ந்திருக்க
ஒருத்தி பாதி உடலினிலே
..உள்ளம் கொடுத்தும் தானிருக்க
கருவம் ஏதும் கொள்ளாமல்
..களிப்பாய்ச் சிரிக்கும் சிவனேயுன்
புருவம் சற்றே தான் நிமிர்த்திப்
..பார்த்தே அருள்வாய் உலகினையே.
-
உலகினையே சிறு பந்தாக்கி
உள்ளங்கையிலதைத் தாங்கி
விரல் நுனியிலதை இயக்கி
விந்தை புரியும் விஞ்ஞானமே
மந்திரம் போட்டது போலவே
மக்கட்தொகை கிடக்குதே
இணையில்லா இணையத்திலே
இணைந்தன நெஞ்சங்களே