டியர் முரளி சார், சகோதரி சாரதா & நண்பர் Plum,
1963-ம் ஆண்டு "குங்குமம்" திரைப்படம் வெளியான சமயத்தில் ["குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963], திராவிட முன்னேற்றக் கழக இதழ் ஒன்றின் கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி:
"குங்குமம்" படம் பார்த்தீர்களா?
கேள்விக்கு பதிலளித்தவர் அப்படத்தைப் பற்றி தனது மனதில் பட்ட கருத்தையோ அல்லது நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிததோ அல்லது அப்படத்தில் இடம்பெற்ற மற்ற கலைஞர்களின் பங்களிப்பு பற்றியோ எழுதியிருக்கலாம். அது ஜனநாயக முறை. ஆனால் அவர் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா?! அதை அறிந்தால் அனைவருக்குமே அதிர்ச்சியாயிருக்கும் ! ஆம், அவர் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்:
"இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்பது தான்.
நமது நடிகர் திலகம் இன்றும் வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார். பதிலளித்தவர் தான் காலியாகியிருப்பார்.
அவருடைய காலத்தில், அவர் வாழ வேண்டும் என அவரை நேசித்த ஒரு பெரிய கூட்டமும், அவர் வீழ வேண்டும் என அவரைக் கண்டு அஞ்சிய ஒரு கூட்டமும் முழக்கமிட்டு கொண்டிருந்ததது மறுக்க முடியாத உண்மை. அவரைப் பிடிக்காத கூட்டததையும் இரு வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று - அவரது சினிமாக் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு ஒரு முகாமுக்கு அச்சம்
மற்றொன்று - அவரது அரசியல் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு இன்னொரு முகாமுக்கு பயம்.
இவை தவிர, கூட இருந்தே குழிப்பறிக்கும் துரோகிகளும் இருந்தனர். எண்ணிலடங்கா எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சமாளித்து ஜெயக்கொடி நாட்ட அவர் போட்ட எதிர்நீச்சல் இருக்கிறதே, அப்பப்பா.....அது அவரால் மட்டுமே முடியும். ஆரம்பமுதற்கொண்டே கலையுலகிலும் சரி, அரசியலிலும்
சரி, நடிகர் திலகம் எதிர்நீச்சல் போட்டேதான் சாதித்துக் காட்டினார். எந்த நிலையிலும், எந்த சமயத்திலும், எந்தவொரு காலகட்டத்திலும் அவர் தன்னை எதிர்த்தவர்களையோ, துரோகம் செய்தவர்களையோ பழி வாங்கியதில்லை. பழிவாங்கும் எண்ணம் கூட அவருக்கு கிடையாது. அப்பேர்ப்பட்ட ஒரு தெய்வப்பிறவி அவர்.
நமது நடிகர் திலகம் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தது மார்கழி 1954 [அதாவது 16.12.1954 - 13.1.1955] காலகட்டம். "பராசக்தி" [17.10.1952] வெளியான பிறகு சிவாஜி அவர்கள் சற்றேறக்குறைய இரண்டே கால் வருடங்களே கழகத்தில் இருந்திருக்கிறார். "பராசக்தி" முதல் "தூக்கு தூக்கி" [26.8.1954] வரை அவரது எல்லா பட விளம்பரங்களும், செய்திகளும் கழக ஆதரவு ஏடுகளில் வந்திருக்கிறது. அதன் பின்னர் அத்திபூத்தாற் போலத்தான் அவரது செய்திகளும், பட விளம்பரங்களும். கழகத்தை விட்டு அவர் கிளம்புவதற்கு முன்பு வெளியான படம் "எதிர்பாராதது" [9.12.1954]. எதிர்பாராத விதமாக அவர் திருமலை திருப்பதிக்கு திடீரென புனிதயாத்திரை செல்ல அதன் பின்னர் எதிர்பார்த்தது, அந்தப் பெருமாள் நினைத்தது நல்லபடியே நடந்தது. மொத்தத்தில் திரையுலகிற்கு அவர் வரக் காரணமும் பெருமாள், திரையுலகில் அவருக்கு சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் பெருமாள். கழகத்துக்குள்ளே குடத்துக்குள் நீராய் இருந்து வந்த அவர், புதுவெள்ளமாய்ப் பொங்கி "காவேரி"யாய்ப் பெருக்கெடுத்தார். ஆம், கழகத்தை விட்டு வெளிவந்த பின், வெளிவந்த படம் "காவேரி" [13.1.1955]. "காவேரி" 100 நாள் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. முந்தைய படமான "எதிர்பாராதது"வும் 100 நாள் வெற்றிப்படம். மேலும், 1955-ல் "மங்கையர் திலக"மும்[100 நாள்], "கள்வனின் காதலி"யும் சிறந்த வெற்றிப்படங்களாக வலம் வந்தன. "முதல் தேதி", "உலகம் பல விதம்", "கோடீஸ்வரன்" ஆகியவை Average ரகத்தில் ஓடியவை.
1956-ல், "அமரதீபம்", "பெண்ணின் பெருமை" இரண்டும் 100 நாள் பெருவெற்றிப்படங்கள். "நான் பெற்ற செல்வம்" நேரடியாக 100 நாள் ஓடவில்லை என்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. பகைமை பாராட்டாமல், ஏற்கனவே கழகத்தில் இருந்த போதே, ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த படங்களான "ராஜா ராணி", "ரங்கோன் ராதா" ஆகிய படங்களை பிரச்னை ஏதுமின்றி முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். "ரங்கோன் ராதா" வெற்றி பெற்றது. தி.மு.கழக முக்கியப் பிரமுகரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் கதை-வசனத்தில் "வாழ்விலே ஒரு நாள்" படத்தில் நடித்தார்.
1957-ல், "வணங்காமுடி" 100 நாள் பெருவெற்றிக்காவியம். அதற்கு அடுத்த நிலையில், "மக்களைப் பெற்ற மகராசி", "தங்கமலை ரகசியம்", "பாக்கியவதி" ஆகியவை அமோக வெற்றியைப் பெற்றன. "புதையல்" நல்லதொரு வெற்றிப்படம். "அம்பிகாபதி" ஓட்டத்தில் OK.
1958-ம் ஆண்டு குறித்து முரளி சாரும், 1959 பற்றி சகோதரி சாரதாவும் கூறி விட்டார்கள். அதற்கு பின்னர் அவர் சாதித்த விண்ணளந்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே.
அவர் மண்ணை விட்டு மறைந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் என்றென்றும் வான்புகழ் கொண்டு,
அவர் வாழ்கிறார் ! வாழ்கிறார் !! வாழ்ந்து கொண்டேயிருக்கிறார் !!!
அன்புடன்,
பம்மலார்.