ஆதியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தில்லா கூட்டத்தால் தோழர் கடத்தப்பட்டு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்படுகிறார். அவரிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தையும், சங்கரபாண்டியனால் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும் கேட்டு முதலில் ஆசை வார்த்தை காட்டப்படுகிறார். அதற்கு மசியாமல், கை கால் கட்டப்பட்டு, சுற்றிலும் உருக்கட்டைகளுடன் அடியாட்கள் நிற்கும் நிலையிலும் சாமர்த்தியமாகப்பேசி தப்பிக்க எண்ணாமல், அந்நிலையிலும் வீர வசனம் பேசி அடி வாங்குகிறார். அவரது வசனங்கள் கதையோடு சம்மந்தப்பட்டதாக இல்லை. இலங்கைப்போராளிகளுக்கு ஆதரவான பொதுவான வசனங்கள். தில்லாவினால் துப்பாக்கியால் அடிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறார்.
தோழர் கடத்தல் பற்றி வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் அபி புகார் செய்ய அவர்கள் வழக்கம்போல பாராமுகம் காட்டுகின்றனர். மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஆதிக்கு ஏவல் செய்வதாக காட்டுவது ரொம்பவே நெருகிறது.
அபியின் கம்பெனியைப்பற்றிய அவதூறு செய்தி இன்னொரு புதிய பத்திரிகையில் வர, கொதிப்படைந்த அபியும் விஸ்வநாதனும் அந்தப்பத்திரிகை அலுவலகத்துக்குப்போய் விளக்கம் கேட்க, அந்த செய்தியைத்தந்த துணையாசிரியரை ஆசிரியர் அறிமுகப்படுத்த, அந்த துணையாசிரியை வேறு யாருமல்ல, அபியின் தங்கை ஆனந்திதான். அபிக்கும் ஆனந்திக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. ஆனந்தி, தான் கொடுத்த செய்தி உண்மைதான் என்று சாதிக்க, அபியின் நிலை சங்கடம்.
கதையை நீட்டிக்க அதே பழைய அரைத்தமாவு சம்பவங்களே, புதுப்பிக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன. இந்தப்பத்திரிகை விவகாரம் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். அதற்குள் வேறு ஐடியாக்களை யோசித்துக்கொள்ளலாம்.