பாலாடை PART II
இந்தப் படத்தைப் பொருத்தவரை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படம் எனபது ரசிகர்களை தவிர பொது மக்களுக்கு பரவலாக தெரியுமா என்றால் தெரியாது என்றே பதில் வரும். காரணம் படத்தை பற்றிய சரியான விளம்பரமின்மை. அதை பற்றி பேசுவதற்கு முன் நமது நடிகர் திலகத்தின் performance பற்றி பார்த்து விடலாம்.
நாம் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் படங்களில் சொன்ன அதே வரிதான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் வெகு இயல்பான நடிப்பை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தியிருப்பார். மனைவி மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் ஒரு கணவன்தான் இந்த சேகர் என்பதை முதல் காட்சியிலேயே establish பண்ணி விடுவார். நீ இதுவரை எதுவுமே என்னிடம் கேட்டதிலையே என்று அவர் கேட்கும் காட்சியிலே படத்தின் நடுவில் வரப்போகும் முடிச்சிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விடும்.
நண்பனின் வீட்டிற்கு நவராத்திரி கொலுவிற்கு மனைவியுடன் செல்கிறார். நண்பனின் நண்பன் insurance ஏஜென்ட் பாலிசி எடுப்பது பற்றி பேச ஆரம்பிக்கிறார். அப்போதுதான் பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்ற செய்தி சேகரின் நண்பனால் சொல்லப்படுகிறது. ஏன் சார் டாக்டரை பார்க்கலாமே என்ற கேள்வி வருகிறது. குழந்தை இல்லை என்பதே sensitive ஆன விஷயம். அதை பற்றிய ஒரு discussion வரும்போது அதிலும் குறிப்பாக அறிமுகமில்லாத முதன் முறை சந்திக்க நேர்கிற ஓர் மனிதனுக்கு முன்பு பேச வேண்டும் என்கிறபோது பாதிக்கப்பட ஒரு ஆண் மகன் எப்படி தர்மசங்கடப்படுவான், பதில் சொல்ல எப்படி தடுமாறுவான் என்பதை அச்சு அசலாக காட்டியிருப்பார் நடிகர் திலகம். அடுத்து டாக்டர் கிளினிக். உள்ளே மனைவிக்கு பரிசோதனைகள் நடந்துக் கொண்டிருக்க வெளியே உட்கார்ந்து அங்கே இருக்கும் ஒரு பருவ இதழில் வந்துள்ள குழந்தைகளின் புகைப்படங்களை ரசிக்கும் அந்த மனிதன் மனதில் உள்ள குழந்தை ஆசை பார்வையாளனக்கு உணர்த்துவார். வெளியே வரும் மனைவியின் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் டாக்டரை பார்க்க நான் ஜானகிகிட்டே சொல்லியிருக்கிறேன்-னு சொல்ல பத்மினி குழந்தை பிறக்கும்னு சொல்லியிருக்காங்க என்றவுடன் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் போகலாம் என்று மனைவியை கூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டு சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தது போல் திரும்பி உள்ளே வந்து டாக்டரிடம் Thank You டாக்டர் என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த elegance, அழகாய் செய்திருப்பார்.
பின்னாளில் பொருட்காட்சியில் வைத்து டாக்டரின் மகனைப் பார்த்து பேசும்போது உண்மை தெரிய வர அந்த அதிர்ச்சியை அவர் மறைக்கும் விதம் பிரமாதம். என்ன சொல்றது ராமு என்று ஆரம்பித்து விட்டு என்ன சொல்றது என்று மட்டும் சொல்லி ஒரே வார்த்தையை வேறு அர்த்தத்தில் அவர் சொல்லும்போது ஏமாற்றப்பட்ட கையாலாகாத அந்த முகபாவம் எல்லாம் வெகு இயல்பு.
வீட்டிற்கு வந்து யாரோ ஒருவருடன் பேசுவது போல தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்ப்பது [எப்படிப்பட்ட விஷயம் அதை யார்ட்டே மறைக்கிறது? கட்டின கணவன்கிட்டேவா?], குழந்தை மட்டுமே தன்னுடைய ஆசை இல்லை மனைவியும் அவள் மேல் இருக்கும் அன்பும்தான் முக்கியம் என்பதை மனைவியின் மனதில் பதிய வைக்கும் அந்த காட்சியும் அவர் நடிப்பில் பரிமளிக்கும்.
அவரின் நடிப்பில் icing of the cake என்று இந்த படத்தில் சொல்ல வேண்டும் என்றால் அவர் தான் கண்ட கனவு பற்றி கே.ஆர்.விஜயாவிடம் விவரிக்கும் அந்தக் காட்சியைத்தான் சொல்ல வேண்டும். ரூமிலிருந்து நடந்து வரும் சிவாஜி. ரேடியோவில் ஒலிப்பரப்பி கொண்டிருக்கும் மலர்ந்தும் மலராத பாடலை நிறுத்தி விட்டு ஒரு வெறித்த பார்வையுடன் வந்து உட்காரும் சிவாஜி. இதை பார்த்தவுடன் தன்னுடைய அறையிலிருந்து வந்து என்ன ஆச்சு என்று கேட்கும் விஜயா. கனவை விவரிக்கும் சிவாஜி. வாசலிலே பெல் சத்தம். போய் பாக்கறேன் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு குழந்தை அப்படியே ஓடி வரான் இந்த சோபாவிலே வந்து உட்காறான் என்று ஆரம்பிப்பார். அப்போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே. இங்கேயா என்று விஜயா கேட்க, yes இந்த இடத்திலிருந்து ஓடி அங்க மாட்டியிருக்கிற கண்ணாடி மேல இந்த சாமானை எறியறான். கண்ணாடி உடைந்து சிதறுது. வாயெல்லாம் ரத்தம். ஏன்பானு கேட்க கடகடன்னு சிரிக்கிறான். ரத்தத்தை துடைக்கலாம்னு போறேன்" என்று பேசிக்கொண்டே அந்த அறையை சுற்றி வருவார். Mesmerising என்று வார்த்தையின் அர்த்தத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்தல் போதும். இந்தக் காட்சியைப் பொறுத்தவரை கவனித்தோம் என்றால் ஒன்று புலப்படும். உளவியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஒரு பொருளை ஒரு விஷயத்தை நாம் அளவிற்கு அதிகமாக விரும்புகிறோம் ஆனால் நமக்கு அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் ஆழ் மனது hallucinations எனப்படும் ஒரு வித பிரமையில் சிக்கிக் கொண்டு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நிகழ்வுகளை கனவு வடிவத்தில் கற்பனை செய்யும் என்கிறார்கள்.[உடல் நிலை சரியில்லாத போது உட்கொள்ளும் strong anti biotics கூட எப்போதும் ஏதாவது பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் சஞ்சல மனம் உடையவர்களுக்கு இது போன்ற hallucinations-ஐ கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்].அத்தகைய illusions மிகவும் weird ஆக இருக்கும் என்றும்
உளவியாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு மனோநிலையில்தான் நமது நாயகன் இருக்கின்றான் என்பதை இப்படி ஒரு காட்சியமைபபின் மூலமாக திரைக்கதையில் கொண்டு வந்த கதாசிரியருக்கும் அதை சரியான விதத்தில் கையாண்ட இயக்குனருக்கும் அதை அழகாய் உள்வாங்கி தன அற்புதமான நடிப்பால் திரையில் ஒரு காவியமாக உருவாக்கிய நடிகர் திலகதிற்கும் ஒரு royal salute.
இதை தவிர அவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் கே.ஆர்.விஜயாவிடம் கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் அவர் பழகும் விதம் பற்றி சொல்ல வேண்டும். கல்யாணத்திற்கு முன் மனைவியின் தங்கை என்ற உரிமையில் கிண்டல் செய்வது கேலியாக கமண்ட் அடிப்பது என்று ஜாலியாக இருக்கும் அவர் உடல் மொழி. அதே பெண் சந்தர்ப்ப சூழல் காரணமாக தன மனைவியாக வந்தவுடன் அவளிடம் ஓட்ட முடியாமல் விலகி விலகி போவதை அருமையாக செய்திருப்பார். அந்தப் பெண்ணும் மனைவிதான். ஆனாலும் முதல் மனைவியிடம் உள்ள attachment இரண்டாவதில் இல்லை எனபதை அவர் உணர்த்தும் விதம் நேர்த்தி.
இறுதிக் காட்சியில் உயிருக்குயிராய் நேசித்த மனைவி தான் விரும்பிய குழந்தையை கொடுத்துவிட்டு இறந்து விடும் போது அந்த scene ஒரு melodrama-வாக மாறி விடக் கூடிய அனைத்து சாத்தியங்களும் இருந்தும் அதற்கு இடம் கொடுக்காமல் அடக்கி வசிப்பது அவர் எந்தளவிற்கு பல படங்களில் subtle acting செய்திருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்.
ஒரு சில நடிகர் திலகத்தின் படங்களில் அவரை தவிர வேறு யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள் பாலாடை படமும் அதில் ஒன்று. மனைவியாக வரும் நாட்டியப் பேரொளியும் சரி இரண்டாவது மனைவியாக தோன்றும் புன்னகை அரசியும் சரி மனதில் தங்குகிற மாதிரி பெரிதாக ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.
படத்தின் கதையைப் பற்றி எழுதிய முதல் பார்ட்டில் நான் குறிப்பிடாத நகைச்சுவை பகுதியும் உண்டு இந்தப் படத்தில். அன்றைய நாட்களில் படவுலகில் எழுதப்படாத சட்டப்படி நாகேஷ் மனோரமா நகைச்சுவை பகுதியும் உண்டு. படத்தின் கதைக்கு தொடர்பு வேண்டும் என்பதற்காக சிவாஜியின் சித்தப்பாவாக வரும் வி.கே.ஆர் பாத்திரத்தையும் இந்த நகைச்சுவை காண்டத்தில் சேர்த்திருப்பார்கள். ஆனால் நீலவானம் படம் போல இந்தப் படத்திலும் நகைச்சுவை ஒட்டாது என்பது மட்டுமல்ல ரசிக்கும்படியாகவும் இருக்காது.
(தொடரும்)
அன்புடன்