அந்த நாள் ஞாபகம் - தொடர்ச்சி.
நடிகர் திலகம் படங்களின் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதுங்கள் என்று சொன்னபோது, அதை பற்றி மட்டும் எழுதாமல் தொடர்ச்சியாக வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அந்த படங்கள் வெளியான காலக் கட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் எழுதியிருந்தேன். அது ராஜா வரை வந்து நின்றது. அதன் பின் வெளியான படங்களை பற்றியும் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். அதை ஒரு சில பாகங்களாக (அதாவது நேரம் கிடைக்கும் போது) எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன குறிப்பு. அந்த காலக் கட்டத்தைப் பற்றி எழுதும் போது ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட வேண்டிய சூழல் வரும். அது நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமே தவிர, உயர்த்துதல், தாழ்த்துதல் என்ற அளவிற்கு போகாது. இனி விட்ட இடத்திற்கு, அதாவது 1972 -ம் ஆண்டுக்கு செல்வோம்.
ராஜா ஒரு மிகப் பெரிய வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. அது வரை பாலாஜி எடுத்த படங்களிலே மிக பெரிய வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் தடவையாக படம் வெளியான ஐந்து வாரங்களில் நான் ஐந்து முறை பார்த்த படம். சிவாஜி ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த நேரம். காரணம் போட்டியில் தொடர்ந்து இரண்டு படங்கள் ஜெயித்த சந்தோஷம். 1971-ம் வருட தீபாவளியன்று பாபுவும், நீரும் நெருப்பும் வெளியானது. அதில் பாபு வெற்றி. 1972 -ல் ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஒரு வாரம் கழித்து பிப் 4 அன்று சங்கே முழங்கு வெளியானது. ராஜா மிகப் பெரிய வெற்றி. அந்த நேரத்தில் அடுத்த படமும் போட்டியில் தான் வெளியாகப் போகிறது என்றவுடன் த்ரில் + எதிர்பார்ப்பு. ஆம், ஞான ஒளியும் நல்ல நேரமும் போட்டி போடப் போகின்றன என்ற சேதி வருகிறது.
இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 1971 அக்டோபர் 18 தீபாவளியன்று ரிலீஸான பாபுவும், நீரும் நெருப்பும் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் கடைசியாக ஒரே நாளில் வெளியான படங்கள். அதற்கு பிறகு இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவில்லை. மிக கிட்டத்தில் வெளியானது என்று சொன்னால் அது ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள் தான்.
1972 -ம் வருடம் மார்ச் 10ந் தேதி வெள்ளிக்கிழமை நல்ல நேரம் ரிலீஸ். மறு நாள் 11ந் தேதி சனிக்கிழமை ஞான ஒளி ரிலீஸ். இதற்கு பிறகு நெருங்கிய இடைவெளி என்றால் 1975 -ம் வருடம் அக்டோபர் 31 வெள்ளியன்று பல்லாண்டு வாழ்க வந்தது, இரண்டு தினங்கள் கழித்து நவம்பர் 2 தீபாவளியன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. அது போல் 1974 -ம் வருடம் நவம்பர் மாதம் 7ந் தேதி உரிமை குரல் வெளியானது. 6 நாட்களுக்கு பிறகு 13ந் தேதி தீபாவளியன்று அன்பை தேடி ரிலீஸ் ஆனது. மற்ற நேரங்களில் இருவர் படங்களுக்கும் இடைவெளி இருந்தது.
மீண்டும் 1972-க்கு வருவோம். சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை குறிப்பிட்டேன். மதுரை சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்துவது போல சில நிகழ்வுகள் நடந்தன. சங்கே முழங்கு பிப் 4 அன்று மதுரை சிந்தாமணியில் வெளியானது. அந்த நேரத்திலே நல்ல நேரம் விளம்பரம் வருகிறது. மார்ச் 10 முதல் என்று. அதுவும் மதுரை சிந்தாமணியில் என்று. எங்களுக்கு சந்தோஷம் அதிகமானது. அந்த நேரத்தில் ராமன் தேடிய சீதை ஏப்ரல் 14 முதல் ரிலீஸ் என்று விளம்பரம். அதுவும் மதுரை சிந்தாமணி. இது அனைத்தும் அறிவித்தபடி ரிலீசானால் சங்கே முழங்கு 35 நாட்களில் மாற்றப்படும், நல்ல நேரம் அதே 35 நாட்களில் தூக்கப்படும். ஆக ரிலீசிற்கு முன்பே போட்டி படங்கள் இரண்டும் மதுரையில் அவுட்.
இதைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்செட் ஆகி இதை மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு உதவவில்லை. சங்கே முழங்கு வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம். ஆகவே ரிலீஸ் மாற்ற முடியாது. நல்ல நேரம் தேவர் படம். அவரிடம் சென்று தேதியை மாற்றுவது என்பது impossible. ராமன் தேடிய சீதையோ 1970 -ம் வருடம் மாட்டுக்கார வேலன் வெளி வந்த உடனே அதே தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ் ஆரம்பித்த படம். 1971 பொங்கலன்று வெளி வருவதாக விளம்பரம் செய்ப்பட்ட படம். ஆனால் டிலே ஆகி கடைசியாக 1972 -ம் வருடம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் முடிவு செய்யப்பட்டது. தவிரவும் மாட்டுக்கார வேலன் சிந்தாமணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் சென்டிமென்டாக அவர்கள் சிந்தாமணியில் தான் திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆகவே அவர்களும் மாற்ற தயாரில்லை. தவிரவும் இந்த பிரச்சனை மதுரையில் மட்டுமே இருந்தது. ஒரு ஊரில் ஏற்படும் சிக்கலுக்காக மொத்த ரிலீசையும் தள்ளி போட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
பிறகு நல்ல நேரத்தின் மதுரை விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அந்த படத்தை சிந்தாமணியில் இருந்து மாற்றி வேறு தியேட்டர் தேட ஆரம்பித்தார்கள். மெயின் தியேட்டர்கள் எல்லாம் ஏற்கனவே புக்ட் [booked]. சென்ட்ரலில் ராஜா ஓடிக் கொண்டிருக்கிறது. தேவியில் அகத்தியர் ஓடிக் கொண்டிருக்கிறது. நியூசினிமாவில் ஞான ஒளி வெளியாக போகிறது. சிந்தாமணிதான் பிரச்சனை. கடைசியில் அலங்கார் தியேட்டர் புக் செய்யப்பட்டது. ரசிகர்கள் அவ்வளவாக திருப்தி படவில்லை என்பதால் மூவிலாண்ட் [பின்னாளில் ஜெயராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது] அரங்கமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
(தொடரும்)
அன்புடன்
