-
(From Murali)
நீல வானம்
தயாரிப்பு: பட்டு பிலிம்ஸ்
கதை வசனம் : கே. பாலச்சந்தர்
இயக்கம் : பி.மாதவன்
வெளியான நாள்: 10.12.1965
நாயகன் பாபு ஒரு அநாதை. ஒரு செல்வந்தர் உதவியினால் படித்து பட்டம் பெறுகிறான். வேறு வேலை கிடைக்காததால் தியேட்டரில் வேலை செய்கிறான். ஒரு சமயம் ஒரு பெண் ஒட்டி செல்லும் காரில் லிப்ட் கேட்டும் ஏறும் பாபு நாளைடைவில் அந்த பெண் விமலாவை காதலிக்க ஆரம்பிக்க அவளும் அவனை விரும்புகிறாள். அவளுக்கு தாய் இல்லை. தந்தை மட்டுமே இருக்கிறார். ஒரு மாமனும் இருக்கிறான். தினம் விமலாவின் காரில் ஏறி செல்லும் பாபு ஒரு நாள் தவறுதலாக விமலாவின் கார் என்று நினைத்து வேறு ஒரு காரை நிறுத்தி விட அதிலிருப்பது வேறொரு பெண் கௌரி. வெகுளியாக பேசும் அவள் தன் பிறந்த நாளுக்கு அவனை அழைக்க பாபுவும் செல்கிறான். அங்கே செல்லும் போதுதான் தன்னை படிக்க வைத்த செல்வந்தர் மில் ஓனர் சோமநாதனின் ஒரே மகள்தான் கௌரி என்பது அவனுக்கு தெரிய வருகிறது. பிறந்தநாள் விழாவில் வைர நெக்லஸ் காணாமல் போக, பாபு மீது சந்தேகப்பட்டு சிலர் கேள்வி கேட்க, சிலர் அவன் அணிந்திருக்கும் கோட்டை கழட்ட, சட்டையில்லாமல் வந்திருக்கும் பாபு அவமானத்தில் வெளியேறுகிறான்.
அவன் வீடு தேடி வந்து வந்து மன்னிப்பு கேட்கும் கௌரியும் அவளது தந்தையும் அவனுக்கு அவர்களது நிறுவனத்தில் வேலை தருகின்றனர். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு, பக்கத்து வீடு தோழியுடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டு வளைய வரும் கௌரியின் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது. அடிக்கடி வயிற்று வலியினால் அவதிப்படும் அவளை டாக்டர் பரிசோதித்து விட்டு அவளுக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் கர்ப்பப்பையையும் பாதித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். அனால் அவள் பெற்றோர்கள் கௌரியிடமிருந்து இதை மறைத்து விடுகிறார்கள்.
இதனிடையே பாபு விமலா கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். விமலாவின் மாமன் பிரகாஷ் கௌரியை திருமணம் செய்ய நினைக்கும் போது யாரோ சொல்வதை கேட்டு பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட கல்யாணத்தை பற்றி மிகுந்த கற்பனை செய்து வைத்திருக்கும் கௌரி மிகுந்த வருத்தம் அடைகிறாள். பாபு விமலாவை காதலிக்கும் விஷயம் தெரியாமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கௌரி கேட்க பாபு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, இதை கேட்டுக்கொண்டிருக்கும் சோமநாதன் பாபுவை தனியாக கூட்டி சென்று தன் மகளின் நிலைமையை விளக்கி சொல்லும் சோமநாதன், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பாபுவை மன்றாடி கேட்டுக் கொள்கிறார். பாபு தன் நிலைமையை எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் வற்புறுத்தவே, தனக்கு வாழ்வளித்த அவரை மீற முடியாமல் பாபு கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான். கௌரியின் நோய் பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையினால் அவன் பணத்திற்கு ஆசைப்பட்டு கௌரியை மணந்து கொள்வதாக நினைத்து கொள்ளும் விமலா, பாபு மீது மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைகிறாள். திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு பிறகு பாபுவையும் கௌரியையும் சந்திக்கும் விமலா அவர்கள் கொடைக்கானல் செல்வதை தெரிந்து கொண்டு அங்கும் வந்து விடுகிறாள். தினசரி கடிதங்களை அனுப்பி வைக்கிறாள். பாபுவை நேரிலும் சந்தித்து தொல்லை செய்ய அவன் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சென்னை திரும்பும் பாபு, சோமநாதனின் உடல் நல குறைவு காரணமாக கம்பெனியின் நிர்வாக பொறுப்பை ஏற்கிறான். கௌரி மூலமாக அங்கே வேலையில் சேரும் விமலா அங்கும் தன் திட்டத்தை தொடருகிறாள்.
கௌரிக்கு இப்போது வலி அதிகமாகவே டாக்டரிடம் காண்பிக்க அவர் நோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அவளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் சொல்கிறார். சூழ்நிலையை சமாளிக்க கௌரியிடம் அவள் கர்ப்பமாக இருப்பதாக பாபு சொல்கிறான். குழந்தைக்காக ஏங்கிய கௌரிக்கு இது மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது. அதை உண்மை என்றே நம்பும் கௌரி தனக்கு வளைகாப்பு நடத்த சொல்கிறாள். வளைக்காப்பு நடை பெறுகிறது. அந்த நேரத்தில் பன்னாட்டு மருத்துவர்களின் காஃன்பிரன்ஸ் டெல்லியில் நடப்பதை அறிந்து கொள்ளும் பாபு அங்கு சென்று டாக்டர்களை சந்திக்கிறான். முதலில் மறுக்கும் அவர்கள் பிறகு சென்னை வந்து கௌரியை பரிசோதிக்க ஒப்புக் கொள்கின்றனர்.
இதற்கிடையே தன் கணவனின் வாடிய முகத்தையும் இரவில் தனியாக கண் கலங்குவதையும் பல முறை பார்க்கும் கௌரி, பாபு கிழித்து போட்ட ஒரு போட்டோ-வின் ஒரு பகுதியை பார்த்து விட அவளுக்கு சந்தேகம் அதிகமாகி விடுகிறது. இதைப் பற்றி விமலாவிடம் விலாவரியாக பேச மனம் பொறுக்க முடியாமல் விமலா தான் அந்த பெண் என்பதை உணர்த்தி விட்டு போய் விடுகிறாள்.
டெல்லியிலிருந்து திரும்பும் பாபுவை எதிர்கொண்டு ஏன் இந்த உண்மையை மறைத்தீர்கள் என்று கௌரி கேட்க, தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்ற உண்மை புரியாமல் அவளுக்கு நோய் பற்றி தெரிந்து விட்டது என்று நினைத்து பாபு உண்மையை சொல்லி விட கௌரிக்கு மீண்டும் மிக பெரிய அதிர்ச்சி. அவளை மிகுந்த பாடுபட்டு சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கும் நேரத்தில், நோய் முற்றி கௌரி இறந்து போகிறாள். அவள் நினைவாகவே பாபு தொடுவானத்தை நோக்கி நடந்து போவதோடு படம் நிறைவு பெறுகிறது.
இயக்குனர் சிகரம் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் இணைந்த படம். மாதவன் இயக்கத்தில் பாலச்சந்தர் கதை வசனம் எழுதினார். கான்சர் எனப்படும் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை அடிப்படையாக வைத்து ஒரு இயல்பான கதை கே.பி எழுதியிருக்க அதை தெளிவாக கையாண்டிருந்தார் மாதவன்.
நடிகர் திலகத்தை பொறுத்தவரை அனாயாசமாக செய்த படங்களில் ஒன்று நீலவானம். எப்போதும் அவரது படங்களில் அவரது வேடங்கள் பலதரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதிலும் அப்படியே. ஹாப்பி கோ லக்கி கய்-யாக ஆரம்பிக்கும் அவரது பாத்திரம் பிறகு நன்றி, தியாகம், குற்ற உணர்வு, கோபம், நேசம், தவிப்பு, துடிப்பு, இயலாமை, முனைப்பு, ஏமாற்றம் என பல உணர்வுகளில் பயணித்து இறுதியில் சோகம் மற்றும் விரக்தியில் முடியும். இவை அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பார் சிவாஜி.
காரில் லிப்ட் கேட்டு போய் விட்டு, தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் போது ராஜஸ்ரீயிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது, ராஜஸ்ரீயின் கார் என்று நினைத்து தேவிகாவின் காரை நிறுத்தி விட்டு பிறகு அந்த காரிலும் பயணம் செய்யும் போது வெகுளியாக பேசும் தேவிகாவிடம் தானும் வெகுளியாக பேசுவது, தன் ஒண்டு குடித்தன போர்ஷனுக்கு வரும் தேவிகா உடைந்து போன சேரில் உட்கார்ந்து விடாமல் இருக்க அவர் காட்டும் முகபாவங்கள், தேவிகாவின் பிறந்த நாள் விழாவில் நகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அணிந்திருக்கும் கோட்டை கழட்ட வெறும் உடலோடு நிற்கும் அவரை அனைவரும் கேலி செய்து சிரிக்க அவமானம் தாங்காமல் கூனி குறுகி வெளியேறுவது, செய்த தவறுக்கு பரிகாரமாக தேவிகாவின் மில்லில் வேலை போட்டு கொடுக்க அதை ராஜஸ்ரீயிடம் வந்து ஸ்டைலாக சொல்வது, என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்கும் தேவிகாவை பார்த்து பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நிற்க அந்த நேரம் அங்கு வரும் சகஸ்ரநாமத்தை பார்த்து விட்டு தன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ என்று அவர் காட்டும் பதைபதைப்பு, தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி யாசகம் கேட்கும் சகஸ்ரநாமதிடம் மறுத்து பேச முடியாமல் தவிப்பது, பணத்திற்காக விலை போய் விட்டதாக குற்றம் சாட்டும் ராஜஸ்ரீயிடம் உண்மையை சொல்ல முடியாமல் துடிப்பது, கல்யாணத்திற்கு பிறகு தன்னை பழி வாங்குவதற்காக கடிதங்களையும் போட்டோகளையும் ராஜஸ்ரீ அனுப்ப அதை பார்க்கும் தேவிகாவிடம் மென்று முழுங்கி சமாளிப்பது, தான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசை ஆசையாய் சொல்லும் மனைவியிடம் அவள் கொஞ்ச நாட்கள் தான் உயிரோடு இருக்க போகிறாள் என்பதை சொல்ல முடியாமல் மருகுவது, அவளின் வயிற்று வலிக்கு காரணம் கர்ப்பம் என்று பொய் சொல்ல அப்போது கல்யாணத்திற்கு முன்பும் வலி வந்ததே என்று கேட்கும் தேவிகாவிடம் சமாதானம் சொல்வது, குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று சொல்லும் தேவிகாவிடம் விளையாட்டாய் பேர்கள் சொல்லி விட்டு அந்த பேச்சை ரிகார்ட் செய்து வைத்து பிறகு போட்டு காட்டி கிண்டல் செய்வது, எப்போதும் மனக் கவலையில் முழுகி இருக்கும் தன்னிடம் விஷயம் தெரியாமல் விஷம் கக்கும் ராஜஸ்ரீயிடம் கோபத்தை வெளிக் காட்ட முடியாமல் துடிப்பது, வாய் தவறி பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று தேவிகாவிடம் பாடி விட்டு சட்டென்று உண்மை உறைக்க கலங்குவது, சர்வதேச டாக்டர்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் டாக்டர்கள் தேவிகாவின் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்று கை விரிக்க, தன் மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று மன்றாடுவது, டெல்லி சென்று திரும்பி வரும் தன்னை எதிர்கொண்டு என்கிட்டேந்து இந்த உண்மையை ஏன் மறைச்சீங்க என்று தேவிகா கேட்க தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்பது தெரியாமல் "நீ கூடிய சீக்கிரம் சாக போறங்கற உண்மையை உன்கிட்டயே நான் எப்படிமா சொல்லுவேன்" என்று போட்டு உடைக்க இப்படி வேறு ஒன்னு இருக்கா என்று தேவிகா கேட்க அப்போதுதான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று துடித்து போவது, ட்ரீட்மென்ட்-கு ஒத்து கொள்ள வைக்க மனைவியிடம் முன்பு அவள் சொன்ன டெய்லி பீச்சுக்கு போகலாம், சினிமாக்கு போகலாம், நிறைய கடலை உருண்டை சாப்பிடலாம் என்று சொல்லி சிரிக்க முயன்று முடியாமல் உடைந்து போய் அழுவது, தேவிகா எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வர மறுக்கும் சகஸ்ரநாமதிடம் "எனக்கு மட்டும் வருத்தமில்லை, சோகமில்லை சந்தோஷமாக இருக்கு" என்று கோபமாக கத்தி விட்டு ஒரு முறைப்போடு "வாங்க" என்று சொல்லி விட்டு போவது, இப்படி படம் முழுக்க நடிகர் திலகம் பிச்சு உதற, நமக்கு சரியான நடிப்பு விருந்து.
தேவிகாவின் நடிப்புலக வாழ்க்கையிலே மிக சிறந்த படம் நீலவானம் என்றால் அது மிகையாகாது. ஒரு வெகுளியான அனைவரையும் நம்பும் பெண்ணாக,நோய் பாதிக்கப்பட்டு அனால் அதை பற்றி தெரியாதவராக, டாக்டர் என்றால் பயந்து நடுங்குபவராக, பக்கத்து வீடு தோழி தம்பட்டம் அடித்து கொள்வதை வந்து அப்பாவிடமும் கணவனிடமும் சொல்லி குறைப்பட்டு கொள்வதாகட்டும் ["அவ கல்யாணத்திலே கை கழுவுற தண்ணியிலே கூட ஏலக்காய் போட்டிருந்தாங்களாம்"], தன் அறையில் பாம்பு எப்போதாவது வரும் என்று சிவாஜி சொன்னவுடன் பயந்து கொண்டே அப்படி இப்படி பார்த்து கொண்டு பேசுவதிலும் சரி, வலி பொறுக்க முடியாமல் துடிப்பதிலாகட்டும், அதை குழந்தை உதைப்பதால் ஏற்படும் வலி என்று சொல்லி சிரிப்பதிலாகட்டும், தன் கணவன் தங்கு பிடித்த முறையில் தலை சீவ வேண்டும் என்று ஹேர் ஸ்டைல்-ஐ மாற்றி அமைப்பது, பிறகு தான் இறந்து போக போகிறோம் என்று தெரிந்தவுடன் கல்யாணத்திற்கு முன்பு இருந்த அந்த பழைய ஸ்டைல்-ஐ மீண்டும் அமைப்பது, கொடைக்கானலில் கணவனோடு வருங்காலத்தை பற்றி ஏராளமான கனவுகளுடன் ஆடிப் பாடி மகிழ்வது, தன்னை கேட்காமல் ராஜஸ்ரீயை ஏன் வேலைக்கு சேர்த்தாய் என்று கோவப்படும் கணவனை பார்த்து பயந்து போய் அழுவது, தன் கணவன் கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருப்பான் என்ற சந்தேகத்தை மன வருத்ததோடு ராஜஸ்ரீயிடம் பேசுவது, "ஆறிலே சாகலாம் அறியா வயசு, நூறிலே சாகலாம் அனுபவிச்ச வயசு ஆனா பதினாறிலே மட்டும் சாக கூடாது அது ரொம்ப கொடுமையான விஷயம்ங்க" என்று கதறுவது, தன் நோய் பற்றி உண்மை தெரிந்தவுடன் அவரிடம் வரும் ஒரு விரக்தி கலந்த முதிர்ச்சி என பல்முக பரிணாமம் காட்டியிருப்பார். தன்னுடைய படங்களை பற்றிய one liner -ல் "திருமதி தேவிகாவின் மிக சிறந்த நடிப்பை இதில் காணலாம்" என்று நடிகர் திலகம் குறிப்பிட்டிருப்பார். வஷிஷ்டரே பிரம்மரிஷி பட்டம் கொடுத்து விட்டார் எனும்போது அதற்கு மேல் சிறப்பாக நாம் என்ன சொல்லி விடப் போகிறோம்?
நடிகர் திலகத்தோடு இந்த படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தன் பங்கை சரியாக செய்திருப்பார். சகஸ்ரநாமத்திற்கு ஏற்ற பாத்திரம். படத்தில் ராஜஸ்ரீயின் தந்தையாக வி.கே.ராமசாமியும், மாமனாக நாகேஷும் இருந்தாலும் இந்த கதைக்கு சற்றும் ஒட்டாத காமெடி அவர்களோடது. சீரியஸான கதைக்கு ஒரு outlet என்ற முறையில் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் கே.பியிடமிருந்து இப்படி ஒரு அபத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மற்றபடி அவரது வசனங்கள் வெகு இயல்பு. தன் மகளுக்கு வாழ்வளிக்க சொல்லி சிவாஜியிடம் சகஸ்ரநாமம் பேசும் காட்சிகள் கூட மெலோ டிராமாவாக செய்யாமல் இயல்பாக இருக்கும். அது போல் அந்த கால படங்களில் வரும் டாக்டர்கள் போல் இல்லாமல் யதார்த்தமாக நோய் பற்றி பேசுபவர்களாக அமைத்திருப்பார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் "ரொம்ப வலி அதிகமானா நோவல்ஜின் கொடுங்க" என்று டாக்டர் சொல்லும் போது அந்த காலத்திலேயே தியேட்டரில் பயங்கர சிரிப்பொலி கேட்கும்.
காமிரா கர்ணன். அவரின் பிற்காலத்தில் அவர் செய்த ஆங்கில் (angle)சேட்டைகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருக்கும். மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பிறகு முதன் முதலாக எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் [இன்னும் சொல்ல போனால் இதுதான் முதல் படமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் கலங்கரை விளக்கம் தான் தனியாக எம்.எஸ்.வி இசையமைத்து வெளி வந்த முதல் படம் என்று சொல்கிறார்கள். க.வி. ரிலீஸ் தேதி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்]. அந்த பிரிவு தன்னை பாதிக்கவில்லை என்பதை மெல்லிசை மன்னர் உணர்த்தியிருப்பார்.
ஒ லட்சுமி ஒ மாலா - நீச்சல் குளத்தில் ராஜஸ்ரீ பாடும் பாடல் - ஈஸ்வரி
ஒ லிட்டில் பிளவர் - நடிகர்திலத்திற்கு இந்த படத்தில் இந்த ஒரே பாடல் தான். அவரது ஸ்டைல் நடை பற்றி கேட்க வேண்டுமா.? சரணத்தில் உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே என்று ஸெல்ப் மாக்கிங்-ம் (self mocking) உண்டு.
ஓஹோ ஒ ஓடும் எண்ணங்களே - கொடைக்கானலில் வைத்து எடுத்திருப்பார்கள். தேவிகா தன் ஆசையை எல்லாம் பாடலாக பாட உள்ளுக்குள் நடிகர் திலகம் மருகும் காட்சி. குறிப்பாக
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மோதும் பனியில் அலைவோம் இங்கே
என்ற வரிகளும்
நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
என்ற வரிகளும் மனதை வாட்டும். பாடலின் போது Round ஹாட், கூலிங் கிளாஸ் சகிதம் நடிகர் திலகம் நிற்க தியேட்டரில் கைதட்டல் + விசில் பறக்கும்.
மங்கல மங்கையும் மாப்பிளையும் வந்து - வளைக்காப்பு பாடல் - சுசிலா + ஈஸ்வரி. "தாமரை கோயிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகை செண்டாக" என்று கண்ணதாசனின் தமிழ் விளையாடலை இதில் கேட்கலாம்.
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - சுசிலாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று. சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று கண்ணதாசன் எழுதிய வரிகள்.
மலரில்லாத தோட்டமா
கனியில்லாத வாழையா
மகனில்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
என்ற வரிகளின் போது சுசிலாவும் தேவிகாவும் கிளப்பியிருப்பார்கள்.
இவை அனைத்தும் இருந்தும் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை இந்த படம் தொட முடியாமல் போனது வருத்தமே. நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆனால் 100 நாட்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போன படங்களில் ஆண்டவன் கட்டளைக்கு அடுத்தபடியாக நீலவானம் இடம் பிடிக்கும். படத்தின் மைய இழையே சோகம் என்பதால் மக்களுக்கு அதை ஏற்பதில் ஒரு தயக்கம் இருந்ததா, இல்லை திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் ஏற்படுத்திக் கொண்டிருந்த தாக்கத்தினால் இந்த படம் பாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை[திருவிளையாடல் வெளியாகி 132 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக் கொண்டிருந்த போதுதான் அடுத்த படமாக நீலவானம் வெளியானது].
எப்படி இருப்பினும் நடிகர் திலகத்திற்காகவும் தேவிகாவிற்கும் வேண்டியே பார்க்க வேண்டிய படம் நீலவானம்.
-
17th Dec '2007 by Prabhu Ram.
படிக்காத மேதை பற்றி: என்னை எப்போதும் ஈர்க்கும் படம் படிக்காத மேதை. பல இடங்கள் சிவாஜியின் நடிப்பு வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும். நினைவிலிருந்து சில உதாரணங்கள்
கல்யாணம் நின்று போனதும் ரங்காராவை அவர் மகள் சற்று கடுமையாக பேசுவாள். அதனால் அவர் கண் கலங்குவார். சிவாஜியும் அவளை மன்னிப்பு கோரும் படி புத்தி சொல்லுவார். "மாமா அழுவுறார் பாரு" என்று சொல்ல ஆரம்பிக்கும்போது சிவாஜி குரலும் இயல்பாக தழுதழுக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி: வீட்டில் நெடுநாள் வேலை செய்தவரை அசோகன் அடித்ததால் வேலையை விட்டு நீங்கிவிடுவார். அவர் வெளியே செல்லும்பொழுது சிவாஜி சந்தையில் இருந்து வீட்டுக்குள் வந்து அசோகன், அவர் மனைவி, சுந்தரிபாய் ஆகியோரை விசாரிப்பார். அப்போது முத்துராமன் இடையில் ஏதோ சொல்ல முற்பட "தே போட சின்னப பயலே..." என்று அதட்டி வாயை அடிப்பார்.....பேசி முடித்து கிளம்பும்போழுது : "டேய் போடா... நான் ஒன்னை அப்பவே போகச் சொன்னேன்ல.. ..என்னடா முளிச்சிக்கிட்டுருக்க ?"
அந்த குடும்பத்தில் ரங்கன் எடுத்துக்கொண்டிருக்கும் (அதிகமான) உரிமையை இதைவிட அழகாக காட்ட முடியாது.
"(அசோக)னையும் ராஜம்மாவையும் பிறத்தியார்னா சொன்ன நீ ?? என்ன தைரியம் உனக்கு....நாங்க இன்னிக்கு சண்டை போட்டுக்குவோம் நாளைக்கு சேர்ந்துக்குவோம்"
என்று, புத்தி சொல்லும் சௌகாரை கடிந்து கொள்ளும் பொழுது பார்க்கும் எல்லோருக்கும் அந்த வெள்ளந்தித்தனம் கஷ்டமாக இருக்கும். எல்லோரையும் 'பல்லை உடைப்பேன்' என்றே மிரட்டும் ரங்கன், அந்த கோவத்தில் கூட மனைவியை அப்படி சொல்லவில்லை. "எப்படி எல்லாம் பேசுனா .....அப்புறம் உன்னை எனக்கு பிடிக்காது ஆமா...".குழந்தைத்தனத்தை நிலைநாட்டும் வசனம்.
இந்தப் படத்தில் வசனங்கள்
சிவாஜி கால் அமுக்குவதை ரங்காராவ் மறுக்கொம்போது: இருபது வருஷமா ...வேலை செஞ்சவனை போக சொல்லிட்டீங்க ...இவ்வளவு நாள் அனுபவிச்ச சுகத்தை போன்னு சொன்னா போயிடுமா ?
ரங்காராவின் "அவனைப் பொருத்த வரைக்கும் அவன் கரெக்டு", நகையா, முதிர்ச்சியா ரெண்டுமா ?
" உங்களுக்கு யார் தான் கரெக்ட் இல்லை ?"
" நாம ரெண்டு பேரும் தான். "
சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் காட்சி, பிரமாதம்.
நீ ஆம்பளைதானே ?
ஆமாம்
உன் சம்சாரத்தை வச்சு காப்பாத்த முடியாது ?
முடியாது
எனக்கு மிக மிக பிடித்த வசனம். அக்கறையையும், யார் யாருக்குத் வேண்டும் என்ற உறவையும் சொல்லும் இடம்:
உங்களுக்கு விஷயம் தெரியாது மாமா.....நான் வெளிய போநேன்ன எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது மாமா
இனிமேலாவது தெரிஞ்சிக்கத்தாண்டா வெளிய போக சொல்றேன்
இருவரும் பின்னியிருப்பர்கள். மறக்க முடியாத படம்.
-
கோபால்,
என்ன தீடிரென்று நீல வானம்? டிசம்பர் 10 கூட இல்லையே. எப்படி இருப்பினும் நீல வானம் எப்போதும் நீல வானம்தான். நினைத்துப் பார்க்க எப்போதும் சுகம்தான். அதுவும் அன்று நான் எழுதியதை இன்று படித்து பார்க்கும்போது அதே சந்தோஷம். மனதிற்கு மிக மிக நெருக்கமான படங்களில் ஒன்றல்லவா! மீள் பதிவு செய்ததற்கு நன்றி!
அன்புடன்
-
முரளி,நேத்து ராகவேந்தருக்காக விஸ்வரூபம் பாட்டை முடித்து ரிலாக்ஸ் பண்ண,நீலவானம் ஒரு மணி நேரம் பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்று.
கார்த்திக் சொன்னது போல,அவர்கள் இணைவில் மிக சிறந்த படமே ,கடைசி படமாக அமைந்தது சோகம். சத்யம் ஏனோதானோ. பாரத விலாசில் தேவிகாவை சிவாஜிக்கு ஜோடியாக்கி ,சுந்தரராஜனுக்கு கே.ஆர்.விஜயாவை தானம் செய்திருக்கலாம் .
அந்த inspiration தான் மீள்பதிவில் முடிந்தது.
-
கடந்த 15 ஆகஸ்ட் முதல் சென்னை மகாலச்மியில் தினசரி 2 காட்சிகள் என்று வெளிவந்த அண்ணன் ஒரு கோவில் திரையரங்கு விழா கோலம் கண்ட காட்சி. - OPENING SHOW
http://i501.photobucket.com/albums/e...psc42ead05.jpg
-
-
-
-
-