தில்லாவிடம் அடைபட்டிருக்கும் தோழரிடமிருந்து, ஆதாரங்கள் எங்கேயிருக்கின்றன என்ற உண்மையை வரவழைக்க தில்லா எவ்வளவோ கேட்டும் பலனில்லை. (தில்லாவின் முயற்சிகளும் பேச்சும், அவற்றுக்கு தோழரின் பதில்களும் எரிச்சலூட்டுகின்றன). ஒரு சமயம், ஆதியிடமிருந்து போன வர, தில்லா எழுந்துபோகிறான். அவர்களுடைய உரையாடல்களை மறைந்திருந்து கேட்கும் தோழருக்கு, ஆதி ரேகாவை தீர்த்துக்கட்டப்போகும் விவரம் தெரிகிறது. ரேகாவைக் காப்பாற்றி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்ற உந்துதலில், நள்ளிரவில் காவல் இருக்கும் இருவரை ஏமாற்றி, அங்கிருந்து தப்பிக்கிறார். போகும்போது, அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு தடியனுடைய செல்போனையும் யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடுகிறார் (எப்படியாவது அபிக்கு விவரத்தைச்சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்). அவர் தப்பித்த விவரம் அறிந்தவுடன் தில்லாவின் கூட்டம் அவரைத்துரத்த, புதர்களுக்குள்ளும் இடிபாடுகள் நிறைந்த மண்டபங்களிலும் புகுந்து மறைந்து அவர்கள் கண்களில் படாமல் இதுவரை சுற்றியலைகிறார். அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பித்துவிட்டாரே தவிர, முற்றிலும் கடல் சூழ்ந்த அந்த தீவிலிருந்து தப்பிக்க முடியாமல், அங்கேயே மறைந்து சுற்றிக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே, தன்னைச்சுற்றிலும் தில்லாவின் ஆட்கள் தேடியலையும் நிலையிலும், புதர்களுக்குள் மறைந்து கொண்டு அபிக்கு போன செய்கிறார். ஆனால் அங்கே...?.
தோழரைத்தேடி அவருடைய அம்மா வந்திருக்கிறார் என்றறிந்து அவரைப்பார்க்க அபி, விஸ்வநாதன், உஷா, கிருஷ்ணன் ஆகியோ வருகின்றனர். காரிலிருந்து இறங்கும் போது அபியின் செல்போன் கார் சீட்டிலேயே தங்கி விடுகிறது. டிரைவரும் இறங்கி வெளியே நிற்க, தோழர் பலமுறை போன் செய்து எடுக்க ஆள் இல்லை.
(தான் ஒரு பெரிய பிஸினஸ் உமன் என்றும், எந்த விஷயத்தையும் சமாளிப்பவள் என்றும் தன்னைப்பற்றி பீற்றிக்கொள்ளும் அபி, ஒரு சாதாரண விஷயத்துக்குக்கூட லாயக்கில்லாதவள் என்று அடிக்கடி நிரூபித்து வருகிறாள். (அதாவது இயக்குனர் அந்தக் கதாபாத்திரத்தை அவ்வளவு பலவீனமாக படைத்திருக்கிறார்). இந்தக்காலத்து பிஸினஸ் மேன்/பிஸினஸ் உமனுக்கு கையில் ரேகைகூட இல்லாமல் இருக்கலாம், ஆனால் கையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்றிருக்கும் நிலையில், தொல்காப்பியனையும் காணோம், தோழரையும் காணோம், மேனகாவும் என்ன ஆனாள் என்பது தெரியவில்லை, தன்னைச்சுற்றிலும் கோர்ட் கேஸ், விசாரணை என்று நடந்துகொண்டிருக்கிறது, எந்த நேரத்திலும், எந்தப்பக்கமிருந்தும், எந்த தகவலும் வரக்கூடும் என்றிருக்கும் நிலையில், அபி, தன்பாட்டுக்கு செல்போனை காரில் மறந்துவிட்டுப் போகிறாளாம். இதுபோன்ற விஷயங்களில் தான், ஆதித்யாவின் காலில் அல்ல, அவன் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசிக்குக்கூட சமமில்லை என்பதை அபி அவ்வப்போது நிரூபணம் செய்கிறாள்).
தோழரின் அம்மா, தன் மகன் என்ன ஆனானோ என்று புலம்பி அழுதுகொண்டிருக்க, தான் அவரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதாக அபி சொல்கிறாள் (கிழிச்சே...., நீ எதைத்தான் உருப்படியா பண்ணினே. தொல்காப்பியன், தோழர், விஸ்வநாதன், பாதிரியார், வழக்கறிஞர் போன்றவர்களின் உதவியால் உனது பிரச்சினைகள் களையப்படும் நேரங்களில் ஆதியிடம் சொடுக்குப்போட்டு, நீ கிழிச்சதாய் சவால் விடுவாய். மற்ற நேரங்களில் அம்மாவின் வாரிசாக அழுது தொலைப்பாய். இதுதானே ஆறு வருஷமாய் நடக்கிறது?).
ஒரு கட்டத்தில், காரில் இருக்கும் செல்போன் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் டிரைவர், அதை அபியிடம் கொண்டு வந்து கொடுக்க, அந்நேரம் தோழரின் அம்மா ஏதோ சொல்ல, அபி ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுகிறாள். அங்கே உயிரைப் பணயம் வைத்து போன் செய்யும் தோழருக்கு போன் இணைப்பு கிடைக்காதது மனச்சோர்வை அளிக்கிறது. (நான் சொன்னது சரியா போச்சா?. அதாங்க... அபி-ஆதி- செருப்பு-தூசி).
தில்லா கூட்டம் தோழரைத் தேடியலைவதையும், தோழர் அவர்களிடமிருந்து மறைந்து ஓடுவதையும் சாக்காக வைத்து, ஒரு அழகான கடற்கரை கிராமம் நம் கண்ணுக்கு விருந்தாக காண்பிக்கப்படுகிறது. முன்பு மேனகாவின் தாய் செல்லம்மா எபிசோட்டில் வந்தது போன்ற, பழைய கோட்டைகள், இடிபாடுகள், சிதிலமைந்த கட்டிடங்கள், அழகான கடற்கரை இவற்றோடு கூடிய அழகான இடம் (தமிழில் :லொக்கேஷன்)
ரேகாவை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்ல சி.பி.ஐ.குழு வருகிறது. போலீஸ் தரப்பில் (ஆதியின் கையாள்) இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, உடன் செல்வதாக ஏற்பாடு. ஜெயந்தியின் முதல் பேச்சிலேயே, சி.பி.ஐ. வெற்றிமாறனுக்கு அவள் மீது சந்தேகப் பார்வை விழுந்து விடுகிறது. அதனால், கோர்ட்டுக்குப்போகும் வழக்கமான வழியை விட்டு வேறு வழியில் போக சி.பி.ஐ.முடிவெடுக்கக்கூடும்... (என் யூகம்தான்).
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.