தேவி வார இதழில், "பொன் விழாக் கமல்" என்கின்ற தலைப்பில், நடிகர் கமலஹாசனைப் பற்றிய தொடர் கட்டுரை , அதன் தீபாவளி இதழிலிருந்து வருகிறது. இதனை எழுதுபவர் திரு. குகன். லேட்டஸ்ட் (28.10.2009) இதழில் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து சில வரிகள் :
"குழந்தை நட்சத்திரமாக 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் சிவாஜியுடன் இணைந்தது, மாபெரும் கெளரவத்தையும், அந்தஸ்தையும் கமலுக்குக் கொடுத்தது. காரணம் கமலுக்கு அதில் இரட்டை வேடம்! அதுவும் நடிப்புலக மாமேதையுடன்!
முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல் தான். நம் சிற்றறிவுக்கு எட்டிய வரை உலக சினிமாவிலேயே அதற்கு முன்பு எந்தக் குழந்தை நட்சத்திரமும் இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. (பின்னாளில் தமிழிலேயே குட்டி பத்மினி 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்).
கமல் தன் வாழ்நாளில் அடிக்கடி நினைத்துச் சிலிர்த்துப் பேசிய ஒரு சம்பவமும் , 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் நடந்தது. 'பிள்ளைக்குத் தந்தை ஒருவன்...' என்ற பாடல் காட்சி முழுவதும், கமல் நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்து , மார்பில் படர்ந்து , தோள் பட்டையைப் பிடித்துத் தொங்கியபடி நடித்திருப்பார். இல்லையில்லை, தனது நடிப்பு ஆசானின் முகத்தைக் கவனித்தபடியே இருப்பார்.
இப்போதும் அந்தப் பாடலைப் பாருங்கள் !
குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே நல்ல நடிகனாக இருந்த கமல், அந்தக் காட்சியில் , முகபாவனைகள் காட்டுவதையே மறந்து , சிவாஜியின் கன்னங்களின் நாட்டியத்தை , அந்தக் கண்கள் பேசும் மொழிகளை , அந்த உதடுகள் பாடல் வரிகளை உழுது விதைக்கும் அழகை , அண்ணாந்து பார்த்து மெய்மறந்து ரசித்தபடி சும்மாவே படுத்திருப்பார்.
நடிப்பில் இன்றும் கமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் , சிவாஜி கணேசன் தானே !"
சாதனைகளின் சக்கரவர்த்தியாகிய நடிகர் திலகம் , ஒரு திரைவானம். சாதனையாளர் கமல் போன்ற திரைச்சிகரங்கள் , அந்தத் திரைவானத்தை அண்ணாந்து பார்த்துத் தானே ஆக வேண்டும்.
அன்புடன்,
பம்மலார்.
