http://i45.tinypic.com/2z8w7xj.jpg
Printable View
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி