‘தமிழகத்தின் தீபாவளி’
தலைவரைப் பற்றி சிந்தித்தால் வரலாறு பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. பேசினாலும் எழுதினாலும் அப்படியே. தலைவரையும் வரலாற்றையும் பிரிக்க முடியாது. காரணம், அவரே ஒரு வரலாறுதானே. ஆறு என்றால் பாதை என்ற பொருள் உண்டு. வரல்+ஆறு = வரலாறு. வரும் பாதைதான் வரலாறு. அவர் வந்த பாதையில் வந்தவர்கள் நாம் என்பதாலும் அவர் நமக்கு வரலாறே.
இதை ஏதோ அவரது புகழை தூக்கிப் பிடிக்க சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல. எல்லாரும் சேர்ந்து தூக்கிப் பிடித்துத்தான் உயர்த்தக் கூடிய நிலையில் அவரது புகழ் இல்லை. உண்மையில், பேய் மழையில் இருந்து ஆயர்களைக் காக்க கோவர்த்தன மலையை தூக்கிய கோபாலன் (இவர் என் எழுத்தில் முதிர்ச்சி தெரிவதாக பாராட்டும் நண்பர் திரு. கோபால் அல்ல. பகவான் கிருஷ்ணன்) போல தலைவர் தூக்கிய அவரது புகழ் குடையின் கீழ் நாம் இருக்கிறோம். எனவே, அவர் இல்லாமல் வரலாறு இல்லை.
திரைத் துறையோ, அரசியல் துறையோ மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் புகழ் வானில் உச்சத்தில் இருந்தவர்களை வரலாறு பார்த்திருக்கிறது. சில, பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர்கள் பின்னர் படிப்படியாக புகழேணியில் இருந்து கீழே இறங்கியதற்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் துயர வாழ்வை அனுபவித்து இறந்த திரு. தியாகராஜ பாகவதர், திரு. பி.யு.சின்னப்பா, திரு.டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பலரை உதாரணம் காட்ட முடியும். அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புகழின் உச்சியில் இருந்தவர்கள் செல்வாக்கு இழந்து போனதையும் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.
ஆனால், என்றுமே புகழ் வானில் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாக விளங்குபவர் தலைவர் மட்டுமே. இன்றும் அவரது புகழ், செல்வாக்கு, அவர் கண்ட கட்சி, கொடி, சின்னம் காரணமாகத்தான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. கருவில் இருக்கும் சிசுவும் சொல்லும்.
http://i61.tinypic.com/rbks21.jpg
தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் 10 வார்த்தைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்ததைப் போல அவரது பெயரை தினமும் உச்சரிக்காத தமிழர்களே இல்லை. இதில் வியப்பு என்னவென்றால் MGR என்ற ஆங்கில வார்த்தைகளை தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழாக்கி அணைத்துக் கொண்டது அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் அற்புதம்.
அலகாபாத் தொகுதியில் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி. ஏற்கனவே இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் சரியான சமயத்தில், சரியான வார்த்தைகளை, சரியான நபர்கள் சொல்லும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே தனி. அந்த சமயத்தில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறிய வார்த்தைகள் ‘விநாச காலே விபரீத புத்தி’.
அதாவது, அழிவு தோன்றும் நேரத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பது பொருள். அந்த விநாச காலத்தை 1972 அக்டோபர் 10ம் தேதியன்று தத்தெடுத்துக் கொண்டவர் கருணாநிதி. திமுகவினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து கணக்கு கேட்டதற்காக அன்றுதான் தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தீயவை அழிந்தால்தானே நன்மை பிறக்கும். நரகாசுரன் அழிவிலே இருந்து அடுத்த வாரம் நாம் கொண்டாடப்போகும் தீபாவளி பிறக்கவில்லையா? தீபாவளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பல பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. தீபாவளி மட்டுமே ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், காரிருளை விரட்டி தீப ஒளியை ஏற்ற, தீயசக்தியை அழிக்க அதிமுவை தொடங்கிய புரட்சித் தலைவர் பின்னே ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் சக்தி திரண்ட தமிழகத்தின் தீபாவளி அக்டோபர் -17. கொண்டாடுவோம்.
http://i57.tinypic.com/2m3ib0j.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்