Quote:
படிக்காத மேதை
திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960
மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.
ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.
அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.
கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.
இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.
மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்
சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்
அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.
சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.
அன்புடன்
பாகம் 2
நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.
NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.
கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")
ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.
இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.
கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.
கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.
சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்
பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது
சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது
இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.
ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை
உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.
எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.
படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.
இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.
இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.
அன்புடன்.
மேற்காணும் பதிவுகளுக்கான இணைப்பு