நான் தவழ்ந்த என் தாய் வீடு
=====================
“சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல். நான் வாலிபனாக பதினைந்து ஆண்டுகள் தவழ்ந்து திரிந்த என் தாய் வீடு. அது ஒரு அரங்கம் மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இதயத்துடிப்பு. ஒவ்வொரு நாள் மாலையின் சந்தோஷம். மறக்க முடியுமா அதன் மணியான நாட்களை. பள்ளி, கல்லூரி, அலுவலகம் இவற்றுக்கு கூட வாரம் ஆறு நாள், ஐந்து நாள் என்று போனது உண்டு. ஆனால் வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தின் முப்பது நாட்களும் தவறாமல் ஓடிசசென்ற, தேடிசசென்ற, நாடிசசென்ற ஒரே இடம் அது “சாந்தி” மட்டுமே. பெயர் வைத்தவர் தீர்க்கதரிசி. அங்கே சென்றால் மட்டுமே எங்களுக்கு சாந்தி என்று உணர்ந்து வைத்திருக்கிறார்.
அங்கு பார்த்து மகிழ்ந்த திரைக் காவியங்கள்தான் எத்தனை, எத்தனை. அதை விட பல மடங்கு அதிகமாக சாந்தி வளாகத்தில் நின்று, அமர்ந்து பேசிய, பகிர்ந்துகொண்ட, சுகமாக உரையாடிய, சூடாக விவாதித்த விஷயங்கள்தான் எவ்வளவு. அங்கு எத்தனை மணி மணியான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களுடன் பேசித் தீர்த்த விஷயங்கள் எவ்வளவு, தகவல் பரிமாற்றங்கள், ஆவண பரிமாற்றங்கள், வரப்போகும் படங்களுக்கு எந்த எந்த மன்றங்கள் சார்பில் என்ன என்ன அலங்காரங்கள் செய்வது என்று எங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்ட பாங்கு. (பெரும்பாலும் மெயின் கட் அவுட்டுக்கு ராட்சத மாலை போடும் உரிமை எங்கள் மன்றத்துக்கே கிடைக்கும்).
வேறு அரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்கள் ரிலீஸாகி இருந்தாலும் அவற்றைப்பற்றி கருத்து பகிர்வுகள், விவாதங்கள், வெளியூர் நிலவரங்கள் குறித்த அலசல்கள் அனைத்தும் நடைபெறும் இடமாக விளங்கியது சாந்தி வளாகம். அந்த அளவுக்கு ரசிகர்களின் சந்திப்பு கேந்திரமாக, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்து வந்தது. தற்போது மூடப்பட்ட வண்ணமுகப்பு கொண்ட சாந்தியைவிட, உடலெங்கும் “சந்தனவண்ணம்” பூசிக்கொண்டு கம்பீரமாக நின்ற அன்றைய சாந்திதான் எங்கள் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த வளாகத்தில் எங்கள் கால்கள் படாத இடமே இல்லையெனலாம். அங்கு ‘இருந்த’ தண்ணீர் பவுண்டன் தொட்டியின் ஓரம் அமர்ந்து கலந்துரையாடிய அந்த பதினைந்து வருடங்களும் பசுமையானவை. கல்வெட்டாக மனதில் பதிந்து விட்டவை.
அங்கு கிடைத்த அற்புதமான நண்பர்களை மறக்க முடியுமா?. கோவை சேது, தி.நகர் வீரராகவன், மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், நமது ராகவேந்திரன் சார், வடசென்னை வாத்தியார் ராமன், பாம்குரோவ் சந்திரசேகர், மாரீஸ் சந்திரசேகர், குருஜி, சிவா, பல்லவன் விஜயகுமார், கும்பகோணம் ஸ்ரீதர், கவிஞர் கா மு ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி, புரசைவாக்கம் ஆனந்த் என்று இன்னும் எத்தனை எத்தனை நண்பர்கள் (1971 முதல் 1984 வரை) தினமும் மாலை 5 மணிக்கு உற்சாகத்துடன் ஒன்று கூடுவதும் 9 மணிக்கு மேல் பிரிய மனமில்லாமல் பிரிவதும், இடைப்பட்ட நேரத்தில் நடிகர்திலகத்தின் சாதனைகளை அலசோ அலசென்று அலசுவதும் மறக்க முடியுமா அந்த நாட்களை.
இதோ நாங்கள் கூடிக்குலாவிய எங்கள் தாய் வீடு மூடப்பட்டு விட்டது. இன்னும் சிறிது நாட்களில் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அழியாத சுவடுகளாக நினைவுகள் மட்டுமே இதயங்களில் தங்கியிருக்கும் மண்ணறைக்கு செல்லும் வரை.