தெய்வ மகனுக்கு ஒரு சிறு அஞ்சலி.
http://i1087.photobucket.com/albums/..._007022920.jpg
உள்பக்கம் தாழ்ப்பாள் அசைகிறது. கதவு திறக்கிறது. ஒரு விகார முக இளைஞன் ரூமுக்குள் நுழைகிறான். அவன் பெயர் கண்ணன். கையில் ஒரு செக் வைத்திருக்கிறான். அவன் நடை அவன் தந்தையை நோக்கி. தந்தை தாழ் திறக்கும் சப்தம் கேட்டு இருக்கையில் இருந்து எழுந்திருக்கிறான். மகன் நெருங்கி விட்டான். இருவருக்குமான முதல் சந்திப்பு!
வந்து நிற்கும் மகனை தவிப்போடும், திகைப்போடும், ஆச்சரியத்தோடும் பார்த்து அவனை எதிர் கொள்வது எப்படி என்று தடுமாறி நிற்கிறான் தந்தை. இருவருக்குமிடையே ஆழமமான, அர்த்தம் பொதிந்த பார்வைகள்.
மகன் ஆரம்பிக்கிறான் அமைதியாக.
"தேவையில்லைன்னு நெனச்ச தந்தையும், அவரை தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தரையொருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சி"
மகனின் முதல் குத்தலிலேயே நிலை குலைந்து போகிறான் தந்தை. வாய் பேச எத்தனிக்கிறது. வாரத்தை வரவில்லை. பேச்சு எழவில்லை. நுனி நாக்கும், உதடுகளும் துடிக்கின்றன. ஆனால் பிரயோஜனமில்லை.
"ஏன் பேச மாட்டேங்கறீங்க? எப்படி பேசறதுன்னு உங்களுக்கு தயக்கம். எதைப் பேசறதுன்னு எனக்குக் கலக்கம். நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா? ("தெரியுது" என்று மெளனமாக, மெதுவாக தலையாட்டுகிறான் தந்தை கலங்கியபடியே.)
என் பெயர் கண்ணன்" என்று தந்தையிடம் தனயன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் உலகில் எங்கும் நடக்காத புதுமையாக.
தொடர்கிறான்....
"நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்க புரிஞ்சிக்க வேண்டிய நிலைமை"
தந்தையின் தவிப்பு அதிகமாகிறது. மகனைப் பார்த்தவாறே வேதனையுடன் ஒவ்வொரு கண்ணும் ஒவ்வொருவிதமாகக் கலங்க நிற்கிறான். மகன் பின் பக்க இருபுறங்களிலும் யாராவது இருக்கிறார்களா என்று கவனித்துப் பார்க்கிறான்.
"இங்கு நம்மளைத் தவிர வேறு யாருமில்லையே?"
'இல்லை' என்று தலையசைவில் பதிலளிக்கிறான் தந்தை.
யாருமில்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்ட மகன் தைரியமாக தன் அப்பாவை பாசத்தோடு நோக்குகிறான்.
'அப்பா' என்று தயக்கம் காட்டி நிறுத்துகிறான். (அப்படிக் கூப்பிட அப்பா என்ற அந்த நபர் சம்மதிப்பாரா?)!சற்று இடைவெளி விட்டு "அப்படின்னு உங்களை நான் கூப்பிடட்டுமா" என்று பெர்மிஷன் கேட்கிறான். அதனால்தான் "ஒரு தடவை...ஒரே ஒரு தடவை" என்ற கெஞ்சலில். "ஒரே ஒரு தடவை" எனும்போது அவன் குரல் உடைந்து ஒரு சிறு நடுக்கம்.
தந்தை தன்னையறியாமல் 'கண்ணா' என்று வாஞ்சையுடன் அழைக்கிறான். மகன் பாச உணர்ச்சி மேலிட்டவனாய் வந்த நோக்கத்தை ஒருகணம் மறந்து "அப்பா" என்று ஆரத் தழுவிக் கொள்கிறான். அப்பனோ இன்னும் அதிகமாக உணர்ச்சிகள் ஆட்கொள்ள மகனை தழுவிக் கொள்கிறான். மகனின் தோள்களில் முத்தங்கள் சிந்துகிறான். அப்பாவுக்கும், மகனுக்கும் ஏற்படும் முதல் தொடு உணர்வு. ஸ்பரிசம். தழுவியவர்கள் ஒருமுறை விலகி ஒருவரையொருவர் உணர்ந்து பார்த்து மீண்டும் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். தழுவிய மகன் ஒரு கணம் யோசிக்கிறான். "எதற்காக வந்தோம்?... இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்?"...என்று அவனுக்குள்ளேயே எழும் கேள்வியை அவன் முகம் உணர்த்துகிறது. பாசத்தில் சில வினாடிகள் தடுமாறியவன் சட்டென தந்தையைப் பிடித்துத் தள்ளிவிட்டு தானும் விலகி விடுகிறான்.
சற்று தூரத்தில் நின்று "என்னை மன்னிச்சுடுங்க....இதைக் குடுத்துட்டுப் போறதுக்காகத்தான் நான் உங்ககிட்ட வந்தேன். இந்தாங்க... நீங்க டாக்டர்கிட்ட குடுத்த பிளாங் செக்" என்று செக்கை விரல்களால் சுண்டிக் காட்டுகிறான்.
"கண்ணா...அது உனக்காக...உன் எதிர்காலத்துக்காக" என்று மகனுக்கான உரிமையை அவனுக்கு எடுத்துச் சொல்கிறான் தந்தை.
மகன் ஒத்துக் கொள்ளவில்லை. செக்கை தலைக்கு பக்கத்தில் அலட்சியமாக கொண்டு சென்று திரும்ப கைக்குக் கொண்டு வந்து சொல்கிறான்
"எதிர்காலம் கடந்தகாலம் எதுவுமே எனக்குக் கிடையாது... இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு? இல்ல குடுக்கத்தான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?"
முள்ளாய்த் தைக்கிறான் தந்தையை. (அருகதையற்ற தந்தை நீ... என்னைக் கொல்லச் சொன்னவன் நீ.. இப்போது என்ன பாசம் வேண்டிக் கிடக்கிறது?)
தந்தை அழகாக பதிலுரைக்கிறான்.
"கொடுக்கறதுக்கு எனக்கு அருகதை இல்லன்னாலும் வாங்கிக்கிறதுக்கு உனக்கு உரிமை இருக்கு... (எனக்கு அருகதை இல்லைதான்... அதற்கு லாயக்கற்றவன்தான்.. ஆனால் உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது... எடுத்துக்கோ)
"நீ என்னுடைய பிள்ளை... நான் உன் அப்பா!" (முதன் முதலாக உரிமை சொந்தம் கொண்டாடுகிறான் போலித்தனமில்லாமல்)
மகன் வேதனைகளில் மூழ்கி எழுந்திருத்தவன். ஒத்துக் கொள்வானா? இதுவரை அனாதையாகக் கிடந்தானே...
"நீங்க என் அப்பாவா? நான் உங்க பிள்ளையா? இதுவரைக்கும் நாம அப்படியா உறவு கொண்டாடினோம்".. என்று
இரு தொடைகளையும் வேகமாக இரு கைகளால் தட்டிக் கொள்கிறான். அருகிலிருக்கும் கண்ணாடி பீரோ பக்கம் சென்று கண்ணாடியை 'படாரென' தட்டி ஆத்திரத்தை காட்டி ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயல்கிறான்.(என்னய்யா புதுசா உனக்கு பாசம் பொத்துகிச்சு... என்கிட்டே வேஷம் போடுறியா") பின் திரும்பி வந்து "போகட்டும்...ஏதோ வந்ததுதான் வந்துட்டேன்....உங்ககிட்டே சில கேள்விகள் கேட்கலாமா? என்று அனுமதி வேண்டுகிறான்.
வார்த்தைகளால் தான் தெரியாமல் அறியாமல் செய்த தவறை சுட்டிக் காட்டிக் குத்திக் கிழிக்கப் போகிறான் மகன் என்று தகப்பனுக்கு நன்றாகத் தெரிகிறது. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அனுபவித்துதானே ஆக வேண்டும். "ம்" என்று தலையாட்டுகிறான்.
மகன் அஸ்திவாரங்களை வார்த்தைகளில் தொடுக்க ஆரம்பித்து விட்டான். முதலிலிருந்தே ஆரம்பிக்கிறான்.
"நான் உங்களுக்கு முதல் குழந்தைதானே?"
தந்தை குற்ற உணர்ச்சியால் மகனைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து "ஆமாம்" என்கிறான். தனயனை உற்று நோக்கும் தைரியம் துளியும் அவனிடம் இல்லை.
"முதல் குழந்தை... அதுவும் ஆண் குழந்தை பொறந்துட்டா அப்பா அம்மா அது மேல அளவு கடந்த பாசம் வச்சிருப்பாங்கன்னு சொல்லுவாங்களே! (அதைக் கேட்ட மாத்திரத்தில் டேபிளில் இரு கைகளாலும் குத்திக் கொண்டு செய்வதறியாது பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறான் தந்தை) அது உண்மையா?"
மகனின் கேள்விக்கு "உண்மைதான்" என்கிறான் தந்தை.
மகனுக்கு வருகிறதே ஒரு கோபம். "இல்லை... பொய்... என் வரைக்கும்" என்று உரக்க குரல் ஓங்குகிறான். மீண்டும் கேட்கிறான் "ஏம்ப்பா!நான் பொறக்கும் போது கூட நீங்க இதே மாதிரி பணக்காரனாகத்தானே இருந்தீங்க?" என்று பாயிண்ட்டைப் பிடிக்கத் துவங்குகிறான்.
மகனின் எந்தக் கேள்விக்கும் நிமிந்து பதில் சொல்ல முடியவில்லை. அப்படியே சொன்னாலும் "ஆமாம்" என்றுதான் சொல்ல வேண்டிய சூழ்நிலை.
"நான் விகாரமா பொறந்தேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் வேண்டாத பொருளை குப்பைத் தொட்டியிலே வீசி எறியிற மாதிரி என்னை எறிஞ்சிட்டீங்களா?
நீங்க பொறந்தப்ப உங்கப்பாகூட இதே மாதிரிதான் செய்தாரா?"
ஒன்றுமே பேசத் தோன்றாமல்,மகனுடைய குற்றச் சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் சும்மா மேலுக்கு நாக்கு "எது?" என்று ஏனோதானோ என்று வெறுமனே உச்சரிக்கிறது. முழுமையாக தந்தையை குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு விட்டது.
இரண்டு போக்ரான் அணுகுண்டுக் கேள்விகளை கேட்டுவிட்டான் மகன். எதை தன்னிடம் மகன் வளர்ந்து கேட்கக் கூடாது என்று தந்தை நினைத்தானோ அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மகன் வளர்ந்து ஆளாகி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது மகனாலேயே எதிரியாய்ப் பார்க்கப்பட்டு விட்டான் அவன் நினைத்தது மாதிரியே.
"இல்ல...நீங்களும் என்ன மாதிரிதானே இருக்கீங்க? அதனால உங்கப்பா உங்களை வேணான்னு சொல்லிட்டாரா.....ன்னு கேட்டேன்" என்று வெந்த புண்ணில் வெந்நீர் பாய்ச்சுகிறான் மகன்...
தந்தை மகன் பாசப் போராட்டக் காட்சி நீடித்துக் கொண்டே போகும். இப்போது நான் நிறுத்தி வைக்கிறேன். அப்பாவின் குரல் அனுதாபப்பட வைக்கிறதென்றால் மகனின் குரல் மன்னிப்பை வழங்காமல் மிரள வைக்கிறது. மகனின் முகம் சற்று அகலமாக இருந்தால் அப்பாவின் முகம் நீளமாகத் தெரிகிறது. மகன் சற்று குள்ளமாகத் தெரிகிறான்.. அப்பா சற்று உயரமாகத் தெரிகிறார். அந்த மூத்த மகன் கண்ணா யாரோ? அந்தக் கண்ணனைப் பெற்ற அப்பா(வி) யாரோ? யாரோ இரு மிகச் சிறந்த நடிகர்கள் இருவர் இந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்கள். யாரென்று அந்த இரு நடிகர்கள் பெயரையும் தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன்.
(இன்னொரு விளையாட்டு வித்தகன் விஜய் இருக்கிறான். இரண்டிற்கே, இந்த ஒரு காட்சிக்கே இரண்டு வருடம் ஆகும் ஆய்வளிக்க. அதில் இவனையும் சேர்த்தால் என் கதி அதோகதிதான். என் பாடு பரவாயில்லை. வியட்நாம் பாடுதான் படு திண்டாட்டம்.)