courtesy- மின்னல்திரை : கடல்புறாவும் ஆயிரத்தில் ஒருவனும்..!
http://i62.tinypic.com/358p3et.jpg
சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.
இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.
படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.
வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.
இத்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
படம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்! படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)
நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!
ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!