டியர் முரளி,
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் சாதனைப்பட்டியலின் நீளம் மலைக்க வைக்கிறது. அது மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். அது போக பெரும்பாலோருக்கு அப்படத்தின் மூலமாக நடிகர்திலகத்துக்கு 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர்' விருது கிடைத்தது என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதனைகள் இன்றைய தலைமுறைக்கு (ஏன் அன்றைய தலைமுறைக்கே) தெரிந்திராத உண்மைகள். நடிகர்திலகம் என்னும் மாபெரும் கலைஞனின் எப்படிப்பட்ட சாதனைகள் எல்லாம் மறைக்கப்பட்டிருக்கின்றன...??.
சரியான நேரத்தில், சரியான ஒரு தொடரைத் துவங்கியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் சென்னை சித்ரா திரையரங்கிலும் வெள்ளி விழாவைத்தாண்டி ஓடியிருக்கிறது.
சென்னை சித்ராவில் கட்டபொம்மன் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இதே போன்று சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட, மருது பாண்டியர்களின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'சிவகங்கைச்சீமை' படம் சென்னை பாரகனில் திரையிடப்பட்டிருந்ததாம். (ONLY WALKABLE DISTANCE BETWEEN THE TWO THEATRES). அப்போது, கண்ணதாசன் சார்ந்திருந்த ஒரு அரசியல் கட்சியினர் (1961-ல் கண்ணதாசன் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்), கட்டபொம்மனுக்கு காங்கிரஸ் படம் என்ற சாயம் பூசி, மக்கள் மத்தியில் எடுபடாமல் செய்யவேண்டுமென்பதற்காகவும் தங்கள் கட்சியைச்சேர்ந்த நடிகர் கதாநாயனாக நடித்த சிவகங்கைச்சீமை வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவும், ஒவ்வொரு காட்சி முடிந்தபின்னும் சித்ரா திரையரங்கிலிருந்து பாரகன் திரையரங்கு வரை சைக்கிள்களில் "கட்டபொம்மன் படம் அவுட்" என்று கத்திக்கொண்டே போவார்களாம். சித்ரா அரங்கிலும் டிக்கட் வாங்கும் கியூவில் நின்றுகொண்டு, வேண்டுமென்றே கட்டபொம்மன் படத்தை கேலிசெய்து பேசுவார்களாம். அப்போது பேச்சாளர்கள் (ஏச்சாளர்களும் கூட) நிறைந்த கட்சி அது. அவர்களுக்கு பதில் சொல்ல காங்கிரஸில் ஆள் இல்லாதது வசதியாகப்போய்விட்டது.
ஆனால் கடைசியில் எந்தப்படம் வெற்றி மகுடத்தைச்சூடியது, எந்தப்படம் தோல்வியைத்தழுவியது என்பது சரித்திரம் காட்டும் உண்மை. (ஆனால், அதற்காக சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட 'சிவகங்கைச்சீமை' படம் தோல்வியடைந்ததில் நமக்கு மகிழ்ச்சியோ உடன்பாடோ இல்லை. ஒரு திரைப்படம் தயாரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை அறிந்த எவரும் எந்த ஒரு படமும் தோல்வியடைவதைக் கொண்டாட மாட்டார்கள்).