Hi All
Was muthal Mariyathai Shivaji Sir's last movie as a 'hero' ?
Printable View
Hi All
Was muthal Mariyathai Shivaji Sir's last movie as a 'hero' ?
ராமன் எத்தனை ராமனடி - கடைசி இருபது நிமிடங்கள்
இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தது. குறைந்தது முப்பது தடவையாவது (தியேட்டரில் மட்டும் இருபது!) பார்த்திருப்பேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. படத்தின் டைட்டில் காட்சி (அது மட்டும் தான்) எங்களது ஊரில் எடுத்தார்கள். இன்னொரு காரணம் - அவர் நடிகனான பின்னர் - முக்கியமாக - அவர் நம்பியார் வீட்டில் - செந்தாமரை (அவர் முதலில் நடிகர் திலகத்தின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து அழுதும் போது - நாங்கள் அலறிய அலறல்! - மற்றும் இன்னும் இரு நடிகர்கள் (அதில் ஒருவர் எப்போதும் எதிர் அணி படங்களில் வருவார் - மற்றவர் நடிகர் திலகத்தின் பல படங்களில் நடிப்பார் - திரு Joe அவர்கள் பதிவிறக்கம் செய்த வீர பாண்டிய கட்டபொம்மன் - நாடக ஸ்டில் - ஐ கவனித்தால் அவரது வலது பக்கம் ஓரமாக நிற்பவர் - அவர் தான் அவர்). நம்பியார் வீட்டில் அவர் செய்யும் ஸ்டைல் - கள் - அப்பப்பா. The way he takes on them with his inimitable style - சவுக்கை ஓங்குவார் - ஆனால் நம்பியாரை அடிக்க மாட்டார் - அவர் கோபம் மற்றும் லாகவத்துடன் - செய்யும் அந்த பாவனை - நூறு அடி அடித்ததற்கு சமம் - மற்ற கலைஞர்கள் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு காண்பிக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை - வெறும் முக பாவனைகளால் காண்பிப்பவராயிற்றே!.
இப்பொழுது ராமன் எத்தனை ராமனடி படத்தின் கடைசி இருபது நிமிடங்களுக்கு வருவோம்.
இந்த கடைசி இருபது நிமிடங்கள் ஒரு அற்புதமான கோர்வையுடன் ஓடும். அதாவது காட்சி அமைப்புகள் அந்த படத்தின் முடிவை அழகாக ஆனால் சரளமாக இழுத்து செல்லும். அவரது வளர்ப்புப் பெண் dinner பார்ட்டி ஒன்றில் எக்குத் தப்பாக ஒருவனிடம் மாடிக் கொண்டு கடைசி நேரத்தில் - நடிகர் திலகம் வந்து விடுவார். அப்போது ஆரம்பமாகும் இந்த கோர்வையான காட்சி அமைப்பு. நடிகர் திலகம் கோபத்துடன் அந்த வெறியனை அடித்து ஒரு நேரத்தில் காகா வலிப்பு வந்த பிறகு தன்னை அறியாமல் அவனை ஆணியில் அறைந்து - அவனைத் தொடுவார். தொட்டவுடன் அவன் பிணமாக விழுவான் - உடனே அவர் காட்டும் முக பாவம் - அதன் பின்னர் - அவர் காரில் வந்து அமர்ந்து சிறிது நேரம் வரையில் - ப்ரமை பிடிதார்ப் போல் இருப்பார். இங்கு ஒரு விஷயம் - எல்லோரும் வியக்கும் விஷயம் - அதாவது நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் கூறுகிறோமே - அது. ஒருவர் திடீரென்று ப்ரமை பிடித்து விட்டால் எப்படி ஆவானோ - மிகச் சரியாக அந்த பாவனையை - காண்பிப்பார். சிறிது நேரம் காரில் பயணம் செய்தவுடன் - கார் டிரைவர் - முத்துராமன் - அவரை "சார், நான் யார் என்று தெரிகிறதா?" மிக மிக லேசாக கண்ணை திறந்து பார்த்து "ம். " என்று சொல்லுவார். ஆனால் அவருக்கு தெரியும் முத்துராமன் தான் KR விஜயா - வின் கணவர் என்று. அவர் வீடு வரும். உள்ளே வந்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். இது தான் சரியான தருணம் - அனைவரும் (அவரைத் தவிர!) ஒன்று சேர்வதற்கு என்று. உடனே யாருக்கும் தெரியாமல் போலீஸ் - க்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு ஹால் - க்கு வந்து. பேச ஆரம்பிப்பார். திடீரென்று நினைவுக்கு வந்து முத்துராமன்- ஐ அழைப்பார். அப்போது அவரது குரலில் இருக்கும் ஒரு வகையான ஒரு இறுக்கம் நிறைந்த ஒரு குரல். உள்ளே வந்தவுடன் அவர் முத்துராமன்-ஐ எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு மற்றும் அந்த கம்பீரம் நிறைந்த லாகவம். உடனே போலீஸ் வந்து விடும் - இப்போழோது ஒவ்வொருவரிடமும் விடை பெறும் கட்டம். முதலில், கோபி (ஒரு மலையாள நடிகர்) அவரிடம் ஒரு வகையான நடிப்பு, அடுத்து முத்துராமன் - இப்பொழுது ஒரு கடமை உணர்வுடன் - அடுத்து ஆயா (ஆப்பக்கார ஆயா!........), அடுத்து KR விஜயா - "தேவகி ...." அவர் தேவகி என்ற பெயரை உச்சரிக்கும் விதம் - உணர்ந்து பாருங்கள்! ஆஹா! இப்பொழுது - மகள். இப்பொழுது இரண்டு கைகளை ஒரு மாதிரி தூக்கி - மெல்ல நெருங்கி - மகள் அழுவார் - இவர் - சைடு pose - இல் நமக்கு வலது பக்க முகம் தெரியும். அந்த வலது புருவத்தை - அவரது characteristic /inimitable ஸ்டைல்-இல். இந்த ஸ்டைல் அந்த இடத்துக்கு மெருகை மேலும் ஊட்டுமே தவிர சிதைக்காது. புருவத்தை உயற்றி - "போகட்டுமா" என்று கேட்பார். இப்பொழுது தந்தை மகளிடம் எப்படி பேசுவானோ - அதுவும் மிகவும் செல்லம் கொடுத்தபிறகு எப்படி பேசுவானோ - அப்படி - அதாவது ஒவ்வொரு கேரக்டர்-இடம் விடை பெறும் பொழுதும் அந்தந்த உறவுக்கு ஏற்றார்ப் போல் - நடிப்பு - பிரியாவிடைக்காக. கடைசியில் - யாரும் அழைக்க கூடாது - No cry - என்று அப்பொழுதும் தவறாக - ஆங்கில உச்சரிப்பு - அந்த characterisation - அந்த கடைசி காட்சியில் கூட - அதையும் maintain செய்து. ஒத். Don 't cry என்று சிரித்துக் கொண்டே அழுது நம் எல்லோரையும் - அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து - அவர் வாயில் இருந்து - வணக்கம் என்று வரும்.
இந்தக் கடைசி இருபது நிமிடங்கள் நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும் மற்ற அனைத்து முக்கியப் பாத்திரங்களையும் சுற்றி நிகழும். ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால், அந்த முடிவை நோக்கி நடிகர் திலகம் தான் இழுத்துச் செல்வார். அதுவும் எப்படி - சரளமாக மற்றும் ரொம்ப casual - ஆக ஆனால் மிக மிக அழகாக மற்றும் ஆழமாக.
இப்போதெல்லாம், இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது மறக்காமல் அந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் - ஐ பார்த்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறேன்.
நன்றி,
Parthasarathy
கலக்கறீங்க சாரதி! நடிகர் திலகத்தின் படங்களை இப்படி இனம் பிரித்து ரசிப்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தொடருங்கள். ராமன் எத்தனை ராமனடி கிளைமாக்ஸ் பற்றிய அலசல் நன்றாக வந்திருக்கிறது. அண்மையில் நானும் அதைப் பற்றி எழுதியிருந்ததால் வெகுவாக ரசிக்க முடிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் channel surfing செய்துக் கொண்டிருந்த போது ஒரு இந்தி சானலில் சட்டென்று நிறுத்தினேன்.காரணம் அப்போது அங்கே oh o meri raja பாட்டு ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. ஜானி மேரா நாம் திரைப்பட பாடல் காட்சி.நமது ராஜாவின் மூலப்படம். தேவ் ஆனந்த் மற்றும் ஹேமா. அதைப் பார்த்த போது நமது நடிகர் திலகம் எவ்வளவு ஸ்டைலாக செய்திருப்பார் என்ற ஏக்கமே விஞ்சியது. பாடல் காட்சியை கிட்டத்தட்ட அதே போல் எடுத்திருப்பார் சி.வி.ஆர். இந்தி பாடலில் மூன்றாவது சரணத்தில் கேபிள் காரில் [ரோப் கார்?] போவதாக எடுத்திருப்பார்கள். அது ஹிமாச்சல் பிரதேஷ் என்று நினைக்கிறேன். அப்போது தமிழகம்/கேரளத்தில் கேபிள் கார் இல்லாததால் அதை தமிழில் கொண்டு வரவில்லை. அது போல் தன் தந்தையை தேடி ரங்காராவ் மாளிகைக்கு போகும் நாயகி சித்தாள் வேடத்தில் உள்ளே நுழைவதாக வரும். இந்தியில் பாடல் உண்டு. அது தமிழில் இல்லை. இரண்டில் ஒன்று பாடல் முடிந்தவுடன் உடனே வரும் காட்சி என்பதாலும் படத்தின் நீளம் கருதியும் அந்த பாடலை தவிர்த்து விட்டார்கள்.
டி.வியில் பாடலை பார்த்துக் கொண்டிருந்தபோது என் நினைவுகள் பின்னோக்கி போனது. நான் ஜானி மேரா நாம் பார்த்த நினைவுகள். 1971 அக்டோபர் 18 தீபாவளி தினம். பாபு வெளியான நாள். மதுரையில் ஸ்ரீதேவியில் படம் வெளியாகி இருக்கிறது. தியேட்டருக்கு காலையில் நானும் என் கசினும் அவன் நண்பர்கள் சிலரும் செல்கிறோம். கூட்டம் அலை மோதுகிறது. மன்ற டிக்கெட், இல்லை வேறு ஏதாவது டிக்கெட் கிடைக்காதா என்று எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. அன்று 5 காட்சிகள். சரி மாலையில் பார்த்துக் கொள்வோம் என திரும்பி வருகிறோம். தியேட்டரிலிருந்து எங்கள் வீட்டிற்கு மேல மாசி வீதி வழியாக வரும் போது ஜானி மேரா நாம் மீனாட்சியில் வெளியாகி இருக்கிறது என்ற பேச்சு வருகிறது. அதைதான் பாலாஜி தமிழில் ராஜா என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியும் என்பதால் நேராக மீனாட்சி டாக்கிஸ் செல்கிறோம்.
அங்கும் ஓரளவிற்கு நல்ல கூட்டம். டிக்கெட் கிடைத்து உள்ளே செல்லும் போது கஸினின் நண்பர் ஒருவரை உள்ளே பார்க்கிறோம். என்ன உங்க படத்திற்கு போகவில்லையா என்று என் கஸின் கேட்க நண்பர் நான் ரசிகன்தான் வெறியன் இல்லை என்று பதில் சொன்னார். அதே கேள்வியை நானும் உங்களை கேட்கிறேன் என்று நண்பர் சொல்ல அதே பதிலை நானும் சொல்கிறேன் என்று என் கஸின் சொல்ல ஒரே சிரிப்பு. சந்தித்த நண்பர் எம்.ஜி.ஆர். ரசிகர். அன்று எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் வெளியாகி இருக்கிறது. முன்பே இங்கே சொன்னது போல் அந்த தீபாவளி நாள்தான் சிவாஜி படமும் எம்.ஜி.ஆர். படமும் கடைசி முறையாக ஒரே நாளில் வெளியானது. அதன் பிறகு இரண்டு பேரின் படங்களும் ஒரே நாள் ரிலீஸ் நடக்கவில்லை.
ஜானி மேரா நாம் படம் பிடித்திருந்தது. தமிழில் படம் நன்றாக போகும் என்று தோன்றியது. படம் முடிந்து வீட்டிற்கு வருகிறோம். கஸினின் நண்பன் ஒருவன் காத்திருக்கிறான். 3 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியிருந்ததாகவும் அதில் ஒருவர் வராததால் என் கசினை கூட்டி போக வந்ததாக சொல்லி அவனை மட்டும் கூட்டிக் கொண்டு போனார். நான் அன்று பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்தே பார்க்க முடிந்து. இந்த நினைவுகளெல்லாம் அந்த பாடல காட்சி முடிவதற்குள் மனதில் மின்னலாக ஓட அதை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது!
அன்புடன்
திரு. பார்த்தசாரதி,
பல புதிய கோணங்களில் நம் நடிகர் திலகத்தின் பெருமையை மேலும் மேலும் பரவ உங்களுடைய பங்களிப்பும் பதிவுகளுமே சாட்சி. தொடரட்டும் உங்களுடைய சேவை.
டியர் முரளி,
உள்ள உணர்வுகளின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).
முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).
படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.
அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்விடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.
அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............
(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே)
டியர் பார்த்தசாரதி,
'ராமன் எத்தனை ராமனடி' கிளைமாக்ஸ் காட்சியின் அலசல் வெகு அருமை. சீன் பை சீன் மிக அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். ஒரே காட்சி ஒவ்வொருவர் கோணத்திலும் எப்படி பரிணமிக்கிறது என்பதற்கு உங்கள் ஆய்வு சிறந்த உதாரணம். ஒவ்வொருவரும் காட்சிகளை பார்க்கும்போது, ஒவ்வொரு உத்தி மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும்... அதுதான் நடிகர்திலகதின் தனிப்பெருமை.
உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்... இன்னும்.... இன்னும்...
திருமதி சாரதா அவர்களுக்கு,
நன்றி. நாம் மட்டுமல்ல கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நடிகர் திலகம் ரசிகர்கள் மூன்றாவது வகைப் படங்களின் மூலம்தான் அவரது ரசிகர்களாயினர் என்று கூறினால் அது மிகையாகாது. அறுபதுகளுக்குப் பின்னர் பிறந்தவர்கள் அவர்களுக்கு புத்தி தெரியும்போது பார்க்க ஆரம்பித்த படங்கள் தங்கை-யில் இருந்துதான் தொடங்கும். முன்னர் ராகவேந்திரன் சார் அவர்கள் குறிப்பிட்டது போல் இந்தப் படங்கள் தான் நம் அனைவரையும் அவரது முந்தைய படங்களுக்கு ஈர்த்தது.
ராஜா படத்தைப் பொறுத்தவரை, ஒரிஜினல்-ஐ விட நூறு பங்கு அமர்க்களமாகவும் சுவாரஸ்யமாகவும் CVR - NT - பாலாஜி கூட்டணி செய்திருப்பார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
நீ வரவேண்டும் பாடலில் முதலில் JJ ஒ ராஜா ... என்றவுடன் படிகளின் மேல் நின்று கொண்டு நடிகர் திலகம் அந்த கோட் டை பறக்க "ராஜா" என்று அவருக்கே உரித்தான ஸ்டைல்- இல் சொல்லுவார். உன்னிப்பாக ஒரிஜினல் ஜானி மேரா நாம் - ஐயும் ராஜா-வையும் கவனித்தால், ராஜா-வில் ஒவ்வொரு இடத்திலும் - ஒரு இடம் விடாமல் நடிகர் திலகம் வேறு விதமான ஸ்டைல்-இல் உணர்வு பூர்வமாகவும் (ஆம். அந்த கடைசி காட்சியிலும் தான் - ஒரு மாதிரி சிரிப்பாரே - பண்டரிபாய் -ஐ மனோகர் சவுக்கால் அடிக்கும் போது. எத்தனை சில்லறை எறிந்திருப்போம் அந்தக் காட்சிக்கு மட்டும்!) கலக்கி இருப்பார். இதற்கு முக்கியமான காரணம் அநேகமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ரீமேக் படங்கள் மற்றவர்கள் நடிக்கும்போது அநேகமாக ஒரிஜினல் படத்தைப் பார்க்க தயங்குவார்கள் காரணம் ஒரிஜினல்- in சாயல் வந்துவிடக்கூடாதே என்று. ஆஅனால் நடிகர் திலகமோ ஒரிஜினல்-ஐ குறைந்தது பத்து முறையாவது பார்ப்பாராம். அப்படிதான் மேஜர்-in ஞான ஒளி நாடகத்தை பத்து முறை வந்து பார்த்தாராம். மேஜர் கேட்டதற்கு நடிகர் திலகம் சொன்ன பதில் "ஒரிஜினல்-in சாயல் கொஞ்சம் கூட வராமல் பார்க்கத்தான் குறைந்தது பத்து முறை பார்க்கிறேன்" என்று.
நடிகர் திலகம் & ரீமேக் படங்கள் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பதிய முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் Abkhlabhi (தங்களின் பெயர்?),
நன்றி. நடிகர் திலகத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் மேலும் பல ஆயிரம் பேர் வித்தியாசமான கோணங்களில் அலசிக்கொண்டே போகலாம். அவரது வீச்சு அந்த அளவிற்கு காலம் கடந்து நிற்கிறது. இல்லையென்றால், எனது காலேஜ் படிக்கும் மகள்களும் அவரது மோட்டார் சுந்தரம் பிள்ளை-ஐயும், வியட்நாம் வீடையும், தில்லானா மோகனாம்பாளையும், ஏன், உத்தம புத்திரனையும் ரசிப்பார்களா. இந்த நான்கு படங்களின் வித்தியாசம் மட்டும் போதும், நடிகர் திலகம் யாரென்று சொல்ல, (நாங்கள் சொல்லுவோம் நடிப்புலக மன்னர் மன்னன் என்று - செல்லமாக - கணேசா என்றும் கூட)
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் முரளி சார்,
நன்றி. ஜானி மேரா நாம் படத்தை நானும் சில முறை பார்த்திருக்கிறேன். அண்மையில் கூட ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். வட இந்தியாவில் அவரை ஸ்டைல் மன்னன் என்று கூறுவர் - மற்றும் எவர்க்ரீன் ஹீரோ என்றும் debonair என்றும் கூட. ஆனால், நம் நடிகர் திலகம் அவரை விட வித்தியாசமாக ஆனால் அழகாக மற்றும் ஆழமாக ராஜா படத்தில் நடித்திருப்பார். எங்களது குரூப் ராஜா படத்தை முதல் நாள் ஓபனிங் ஷோ தேவி பாரடைஸ் திரை அரங்கத்தில் பார்த்தோம். இரண்டு விதங்களில் நாங்கள் (நாங்கள் மட்டுமா) அரங்கத்தில் அமர்க்களம் செய்து கொண்டிருந்தோம். ஒன்றும் நடிகர் திலகம் மறுபடியும் james bond type படத்தில் நடிக்கிறார் என்று. இன்னொன்று, அவர் சண்டை காட்சிகளில் காட்டிய ஸ்டைல் கலந்த வேகம். முதலில் தாரா சிங்க் (தானே?) ஆனால், எங்களின் அலப்பறை விண்ணை முட்டியது அவர் கே. கண்ணனுடன் மூடும் போது (எல்லோருக்கம் தெரியும் ஏன் என்று). மூன்றாவது, நடிகர் திலகத்தின் படம் மறுபடியும் தேவி பாரடைஸ்-இல் ரிலீஸ் ஆகிறது என்று. தேவி பாரடைஸ் அரங்கில் முதலில் ரிலீஸ் ஆன படம் சொர்க்கம். நடுவில், ரிக்ஷாக்காரன் மறுபடியும். இப்போது ராஜா. என்ன ஆகும் எங்கள் கலாட்டா.
அன்புடன்,
பார்த்தசாரதி
சாரதி,
பயில்வான் தாரா சிங் அல்ல, அவரது தம்பி 'ரந்தாவா' (என் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்).
கதையை மட்டுமல்ல, ரந்தாவா மற்றும் பத்மா கன்னா இருவரையும் கூட ஜானி மேரா நாம் படத்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி.
இன்னொரு விஷயம், தேவி பாரடஸில் நாலாவது தமிழ்ப்படம் ராஜா. ஏற்கெனவே சொர்க்கம், ரிக்ஷாக்காரன் மட்டுமல்லாது 71 தீபாவளிக்கு 'நீரும் நெருப்பும்' படமும் அங்குதான் ரிலீஸானது.