-
**
சிந்து வருவதற்கு – ஷண்முகா
..சிந்தை வரவில்லையே
விந்தைக் கற்பனைகள் – மனதில்
..வித்தை கூட்டுதய்யா
சொந்தக் காரியவள் – அழகை
…சொக்கி வார்ப்பதற்கு
பந்தக் காலிட்டுக் – கற்பனை
வாயிலில் தேக்கிவைத்தேன்
என்ன எழுதுவது – ஷண்முகா
…எனக்கே சொல்லிவிடு
வண்ண மயிலழகை – நானும்
வார்த்தையில் மெல்லுதற்கு
கன்னக் குழியிங்கே – கண்கள்
சிமிட்டிக் காட்டுதய்யா
எண்ணக் குரலினையே – ஓசை
இயல்பாய்க் கூட்டுதய்யா..
பண்ணாய் இசைத்திடவே – பல
பாடல் வகையுண்டே
வண்ணக் கவியழகாய் – சிந்து
திண்ணமாய் நிற்குதய்யா
கண்கள் திறந்துவிடில் – கற்பனை
கொட்டும் அருவியென
உண்மை சொல்லிவிடு – ஷண்முகா
உணர்ந்தே பாடல்நெய்வேன்..
-
ஏழு மலைதனிலே – அவன்
நின்றிருப் பானருள் தந்துநிற்பான்
மேலும் வேண்டிநின்றால் – நம்
மேன்மைகள் துலங்கிட வழியும் செய்வான்
சூழும் துன்பங்களை – தூளாய்
தூற்றியே மாற்றியே காட்டிடுவான்
வீழும் வேதனைகள் – மாறி
விந்தையாய் இன்பமும் தந்திடுவான்
-
போதுமா கல் நாயக் புதுசான கவிதைகள் :) சிந்துப் பாவியலில் ட்ரைப் பண்ணிப்பார்த்தேன் :)
-
பதறிடப் பதறிட நிற்கும் – மனம்
பணிவினைக் கூட்டியே சொக்கும் –இது
அடியேன் அறியாத சந்தம்- இதில்
ஆழ்ந்தே – நெஞ்சும்
சூழ்ந்தே – கொஞ்சி
படித்தபின் மேலெழுதிப் பார்க்கும்
-
மோகமாய் வந்தனள் ராதை – கண்ணன்
வேகமாய்ப் போகின்ற பாதை – பார்த்து
தேகத்தில் கொண்டாளே கோதை – கொஞ்சம்
வாதை பின்னர்
சூதை மேலும்
வெட்கியே அவன்பின்னே ஓடியது காதை
-
பெண்ணை பூவை என
புனைந்தது ஏனோ
புரிந்திட விழைந்ததில்
அறிந்திட்டேன் இவ்வொற்றுமை
சொந்தகாரன் மண்ணோடு
எடுத்து கொடுப்பது
நிச்சயித்த திருமணம்
புது மண்ணில் நட்டாலும்
பழய மண்ணின் வாசம்
சில/பல காலம் வீசும்
(வேரோடு வந்த மண்ணின் அளவை பொருத்து)
வேரோடு பிடுங்கி
செல்வது காதல் திருமணம்
வேரோடு மண் ஒட்டுவதும் உண்டு
மண் வேரை வெட்டுவதும் உண்டு
ஒட்டிய மண் மனப்பதும் இல்லை
வெட்டிய வேர் உயிர்ப்பதும் இல்லை
(இருதரப்புக்கும் பொது)
(தரம்)
தோட்டத்தில் செழித்த செடி
வீட்டினில் வாடியது ஏனோ
மண்ணின் மகத்துவம்
புரியாது மகசூல் செய்யலாமோ
(ஆதரவு/அரவணைப்பு)
தண்ணீரை ஊற்றுகிறேன் என்று
வெந்நீரை ஊற்றினால்
வாடித்தான் போகும்
தண்ணீரை தாராளமாய்
ஏராளமாய் ஊற்றினால்
அழுகிதான் போகும்
(கண்டிப்பு)
பூச்சியை கொல்லும்
பூச்சி கொல்லியின்
தெளிச்சல் தரம் தாண்டினால்
செடி மரமாகும் ஆனால்
மரம் விஷமாகும்
சத்தில்லா மண்ணால்
மரம் மலடகும்
மண் பற்றா வேரால்
மண் கரைந்து மறைந்திடும்
செழித்த மண்ணும்
அதில் திளைத்த வேரும்
அளவாய் தெளித்த நீரும்
என்றும் இன்பமாய் சுகித்திடும்.
(வெகு நாளாய் எழுத நினைத்தது ...சிறு கவிதையாய் எழுத காத்திருந்தேன் ஆனால் முடியவில்லை கட்டுரையாகி போனது...மன்னிக்கவும்)
-
கிறுக்கன்
-
கிறுக்கண்ணா,
அருமை. அருமை. இப்படித்தான் எழுதணும் பெருசு பெருசா, அழகு அழகா. நல்ல விஷயத்தை தெளிவா சொல்லனும்னா எப்படி வேணுமென்றாலும் சொல்லலாம்.
-
சி.க.,
நிறைய, நிறைய கவிதைகள் எழுதியதற்கு நன்றிகள். ஆனால் போதும் என்றுமட்டும் சொல்லிவிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஷண்முகனையும், எழுமலையானையும் சிந்துப்பாவில் அழைத்தது அருமை. அருமை.
-
வினோதினி..
**********************
(முன்பு மரத்தடி.காமில் எழுதியது..2004 இன்று அகப்பட்டது)
********
*********************
கமலா ராமச்சந்திரன்:
*********************
பிறந்த போது கண்கள் மட்டும்
உருட்டி உருட்டி விழித்துப் பார்க்க
உடலோ பூஞ்சை ஒருகை அகலம்
எடுத்துக் காட்டிய நர்ஸோ சொன்னாள்
கவலைப் படாதே கூடிய சீக்கிரம்
நல்ல உணவில் உடம்பு தேறும்
***
பார்த்துக் கொள்ள ஊரில் இருந்து
வந்த அம்மா அவளைப் பார்த்து
என்னடீ இப்படி தவளைக் குட்டியை
பெத்துப் போட்டு இருக்கே' சொல்லி
எடுத்துக் கொண்டே கொஞ்சினாள் நன்றாய்
***
வேலை பாதி நிறுத்தியே வந்த
ராமுவின் முகத்தில் திமிறும் சிரிப்பு
என்னோட ஏஞ்சல் எவ்ளோ அழகு
தாங்க்ஸ்டீ கமலா' கன்னந் தட்ட
வெளிறிய முகத்தில் வெளிறிச் சிரித்து
'என்ன கொஞ்சம் கருப்புதான் இல்ல'
'வாயை மூடு நீமட்டும் அழகோ..
குழந்தை எப்படி முழிக்குது பாரு'
சீறிய வாறே அடக்கினர் என்னை..
என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ
கண்கள் மூடி சிரித்தது அதுவும்
***
திருமண மாகிப் பத்து வருடம்
தவமாய்க் கிடந்து கோவில் டாக்டர்
சாமியார் ஜோஸ்யம் விரதம் எதையும்
விட்டு வைக்காமல் இருந்ததில் வந்த
அத்திப் பூவிற்கு அழகுக் குட்டிக்கு
என்ன பேரை வைக்கலாம் என்று
பலப்பல யோசனை செய்த பின்னால்
அவரும் சொன்னார் வினோதினி என்று
எனக்கும் பெயரது பிடித்து விட்டது..
***
குட்டி ராட்சசி அப்பா செல்லம்
கொஞ்சம் கூட மதிக்கலை என்னை
வளர வளர பிடிவாதம் கோபம்
மிஞ்சினால் அழுகை கண்மட்டும் சிரிக்கும்
வாயும் நீளம் நாக்கும் நீளம்
காரம் வேண்டும் உப்பும் வேண்டும்
இனிப்பா வேண்டாம் என்ன அம்மாநீ
எனக்குப் பிடிச்சதைப் பண்ணித் தாயேன்..
***
இன்றும் கூட எங்களுக் குள்ளே
குடுமிப் பிடியாய் அடிதடி சண்டை
அழகாய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து
ஒருதுளி மோரை விட்டுப் பின்னர்
நல்ல மாவடு இரண்டை வைத்தால்
சாதமா வேண்டாம் போர்ம்மா நீதான்
***
இருப்பது என்னவோ கால்ஜாண் வயிறு
இதிலே பாதியும் வைத்து விடுவாய்
சும்மா சும்மா தோசை வருமா
இன்னிக்கு மட்டும் சாப்பிடு கண்ணே
கொஞ்சி குழைந்து பாக்ஸில் வைத்து
புத்தகம் எல்லாம் பையில் வைத்து
டாட்டா பைபை செல்லக் குட்டி
என்றே சொல்ல குட்டியும் திரும்பி
அதிசய மாக கன்னத்தில் ஒன்று
கொடுத்து விட்டு ஓடி விட்டாள்..
மிச்சம் மட்டும் கொண்டு வந்தால்
மாலை அவளுக்கு அடிதான் தருவேன்..
***************
ராமச் சந்திரன்
***************
பக்கத்தில் உள்ள மில்லில் எனக்கு
இயந்திரம் இயக்கும் அறுவை வேலை
ஏதோ வாழ்க்கை ஓடுது தன்னால்
என்று இருந்த வாழ்வில் அழகாய்
வசந்தம் போலே வானவில் போலே
பளிச்சென மின்னும் நட்சத் திரமாய்
வினோதினி பிறந்தாள் வண்ணக் கலவையாய்
***
சின்னக் குட்டி செல்லக் குட்டி
என்னை மாற்றிய வெல்லக் கட்டி
ஒருகணம் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம்
கொடுத்துக் கொஞ்சுவாள் பின்னர் நன்றாய்க்
கிள்ளியும் விட்டு சாரிப்பா என்பாள்..
போடி போடி கறுப்பி என்று
சமயத்தில் இவளும் சீண்டி விட்டால்
நீதான் கறுப்பு பாட்டி கறுப்பு
அப்பா நானா அட்டைக் கறுப்பு
என்றே கேட்டால் இல்லை கண்ணே
நீகொஞ்சம் சிவப்பில் சற்றே கம்மி
போப்பா என்றே கோபம் கொண்டு
பெரிய மனுஷியாய் முகத்தைத் தூக்கிப்
பேச மாட்டாள் பின்னர் அவளைத்
தூக்கிக் கொஞ்சி பலப்பல விதமாய்
சமாதான வார்த்தை சொல்ல வேண்டும்..
***
அன்றொரு நாளில் எனக்கோ தலைவலி
வேலை சீக்கிரம் முடித்து வந்தால்
இவளைக் காணோம் வினுமட்டும் வீட்டில்
அப்பா அப்பா என்னப்பா ஆச்சு
முகமே னப்பா வாடி இருக்கு
அம்மா எங்கே செல்லக் குட்டி
பக்கத்து வீட்டு மாமி கூட
எங்கோ போனாள் அப்பா உனக்கு
தலைவலி யாப்பா இந்தா தைலம்
தலையைக் கொஞ்சம் பிடிச்சு விடட்டுமா
படபட வார்த்தைகள் துள்ளி வந்திட
முகமோ உம்மென மாறி நின்றிட
எனது தலைவலி போயே போச்சு..
***
நேற்றுக் கூட ஆசைப் பட்டு
பென்சில் பாக்ஸ்தான் வேண்டும் என்றாள்
அழகாய் யானை வரைந்த பெட்டி
வாங்கிக் கொடுத்து அவளிடம் மெல்ல
பத்திர மாக வச்சிரு செல்லம்
எப்படி யும்இதை தொலைக்கக் கூடாது
என்றே சும்மா சொல்லி வைத்தேன்
குட்டியும் தீவிர முகத்துடன் என்னிடம்
சரியெனச் சொல்லி முத்தமும் கொடுத்தாள்..
(..தொடரும்..)
-
வினோதினி...தொடர்ச்சி..
**
************
வினோதினி..
************
இந்த அம்மா எப்பவும் மோசம்
அடிக்கடி சாதம் வைக்கிறாள் லஞ்ச்க்கு
பக்கத்து வீட்டு ராகுல் எல்லாம்
எப்பவும் புதுசாய் கொண்டுதான் வர்றான்
நேத்த்க்கு கூட கொஞ்சம் போண்டா
கொடுத்தான் நானும் தோசை தந்தேன்.
அப்பா கொடுத்த பென்சில் பெட்டி
அடடா அழகு.. அந்த யானை
ஹிஹி சொல்லிச் சிரிப்பதாய் இருக்கு
இன்னும் ஏதோ வாங்கணும்னு நினச்சேன்
மறந்து போச்சு அச்சோ முதல்கிளாஸ்
மீசை வச்ச மல்லிகா டீச்சர்
அம்மா கேட்டால் அடிப்பாள் அடியே
அப்படி எல்லாம் சொல்லப் படாது
ஏன்மா லேசா இருக்கே அவர்க்கு
சிரித்துத் தலையில் குட்டியும் விடுவாள்..
***
ஹோம்வொர்க் எல்லாம் பண்ணி விட்டேன்
டீச்சர் வேற என்னவோ சொன்னாள்
ஏண்டா கோபு அதுதான் என்ன..
இந்தக் கணக்கும் தலையைக் குழப்புது
***
அதுசரி அங்கே மேலே என்ன
ஹையா நெருப்பு என்னது இப்படி
சடசட வென்றே கூரையில் போகுது..
பயந்த நாங்கள் எழுந்து ஓடி
வாசல் பக்கம் முட்டி மோத
என்னது இந்தக் கதவு திறக்கலை
பதறி அழுதே பலப்பல குரல்கள்
உதவி உதவி என்றே கத்த
உள்ளே சூடு அய்யோ எரியுதே..
கோபு சொல்றான் கத்தா தேன்னு
நீட்டி அவனது கையைப் பிடித்தேன்
மோதிய மோதலா யாரோ திறந்தாரா..
ஏதும் தெரியலை தெரிந்து தான்என்ன
நாங்கள் எல்லாம் ஒண்ணாய் வெளியில்
போவதற் காக கத்தியே முந்த
வெளியில் மாடிப் படியில் இன்னும்
மத்த கிளாஸின் பசங்களின் கூட்டம்
அப்பா ஒருவழி நானும் வெளியில்
வந்தாச்சு என்றே நினைத்தால் அய்யோ
என்னோட ஆனை பென்சில் பாக்ஸ்தான்
அப்பா கேட்டா திட்டு வாளே
போகா தேடீ கோபி சொன்னான்
ம்ம் மாட்டேன்..அப்பா சொன்னா
என்றே சொல்லி கையை உதறி
மறுபடி மோதி கிளாஸிக்குள் போனால்
ஒரேயடி யாகப் புகையும் நெருப்பும்
புக்ஸீம் பாக்ஸீம் சிதறி இருக்க
ஹையா அங்கென் பென்சில் பாக்ஸே
வேகமாய் ஓடி எடுக்க அச்சச்சோ
என்னது இப்படிக் கூரை விழுதே..
அம்மா..அப்பா...அய்யோ..ஆஆ..
*********************
ஜெயஸ்ரீ சேஷாசலம்..
*********************
இறைவன் ஒருவன் இருக்கின் றானா..
எதற்காக இப்படி இவ்வளவு உயிரை
ஒரேயடி யாக எடுத்து இருக்கணும்
எண்பதுக்கும் மேலே சின்னப் பிஞ்சுகள்
பொசுங்கி நொறுங்கிய அவலம் என்னே..
பேசி முடித்து விழியைத் துடைக்க
காமெரா மேனோ கட்பணணி விட்டான்..
***
எனக்கு வேலை டிவியில் செய்திகள்
சுடச்சுட நடக்கும் இடத்தில் எடுக்கணும்
பலப்பல விபத்துகள் பலப்பல தேர்தல்கள்
பலப்பல ஊழல்கள் பலப்பல நிகழ்வுகள்
எல்லா வற்றையும் கண்டே மனமும்
மரத்துப் போய்த்தான் ஓடுது பொழுது
***
திரும்பிப் பார்த்தால் அமுதம் அஜயன்
ஹல்லோ அஜயா என்ன இங்கே..
சரிசரி எல்லாம் ரிப்போர்ட் எடுத்தாயா
எனிதிங்க் ஸ்பெஷலா சொல்லுப்பா எனக்கும்
கையில் என்ன ஹைக்கூவா கொண்டா
வெள்ளை மனங்கள்.. கறுப்பு உடல்களாய்..
வண்ணப் படங்களில்... அபாரம் அஜயா..
அங்கே பாரேன் அழுதே வறண்டு
அந்த மூலையில் அமரும் தம்பதி..
ஆஸ்பிட்டல் வாசம் குடலைப் புரட்டுது
வாவா போய்த்தான் விஷயம் கேட்போம்..
***
மேடம் நான் தான் இந்த டீவி..
உங்கள் துயரைச் சொல்ல முடியுமா..
கணவன் சொன்னான்: எங்கள் பொக்கிஷம்
கறுப்புத் தங்கம்; வீட்டின் ராணி..
காற்றில் கருகிக் கரைந்தே விட்டாள்
பெயரும் வினோதம் செய்யும் லீலைகள்
எல்லாம் வினோதம் இப்போ பார்த்தால்
கறுப்பாய்க் கருகிக் கரைந்ததும் வினோதம்..
***
விம்மல் அடுக்கிப் பேசிச் செல்ல
'உங்கள் நஷ்டம் பெரிதெனத் தெரியும்
சிலபல லட்சம் ஈடாம் சொன்னார்..'
'பணத்தை நானே உங்களுக்குத் தருவேன்
எங்கள் சின்னக் குட்டியைத் தாங்கள்.."
வெடித்தாள் மனைவி; கணவனோ சொன்னான்
அந்தப் பணந்தான் எங்களுக்கு வேண்டும்..
***
அடடே இதுவோர் ஸ்கூப்நியூஸ் ஆச்சே..
சொல்லுங்கள் ராமு உங்கள் எண்ணம்..
இந்தப் பணத்தை இந்தப் பள்ளிக்கு
கொடுப்பேன் நன்றாய் மறுபடி கட்ட..
இன்னும் பலவாய் பள்ளிகள் உண்டு
'நோநோ ராமு மேலிடம் இப்போ
எல்லாப் பள்ளிக்கும் கடுமை விதிகள்
போட்டு இருக்கு கவலை வேண்டா.."
***
'இனிமேல் என்ன கவலை வாழ்வில்
இருக்கும் பிடிப்போ கருகிப் போச்சு
உங்களுக் கென்ன இதுவோர் செய்தி
அடுத்த விபத்தில் இதுவொரு கோப்பு
எத்தனை விதிகள் போட்டால் என்ன
மறுபடி இதுபோல் பள்ளிகள் முளைக்கும்
விதியை மீறி விதியை அழைக்கும்..
இந்தக் காயம் எங்கள் வாழ்வில்
முழுதும் முழுதும் வலித்தே இருக்கும்..
இன்னும் ராமு ஏதெதோ சொல்ல..
***
மெல்லத் திரும்பி காமிரா மேனிடம்
'நிறுத்துப்பா அப்புறம் வம்பாப் போயிடும்
எதுக்கும் ஒண்ணுசெய் இந்தாள் பேச்சை
வெட்டி விட்டுடு' என்றே சொல்லி
திரும்பி ராமு கமலா விடமே
நன்றி நவின்று இடம்விட் டகன்றேன்..
(முற்றும்)