http://s30.postimg.org/mxf4osioh/grr5.jpg
Printable View
கனவுப்படம் 'சிவகாமியின் சபதம்' எம்.ஜி.ஆர். கைவிட்டது ஏன்
கல்கி எழுதிய மகத்தான சரித்திர கதை 'சிவகாமியின் சபதம்'. இதை பிரமாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர் விரும்பினார். எந்த வேடத்தில் யார் நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை.
காவியம்
'ஒரு காவியம் அளவுக்கு உயர்ந்த கதை' என்று தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரால் புகழப்பட்ட கதை 'சிவகாமியின் சபதம்'.
காஞ்சியை மகேந்திர பல்லவர் ஆண்ட போது கதை நடைபெறுகிறது. மகேந்திர பல்லவனின் மகனான பட்டத்து இளவரசன் நரசிம்மவர்மர், சிற்பி ஆயனரின் மகளும் நடனக்கலை அரசியுமான சிவகாமியை காதலிக்கிறார்.
அப்போது வடக்கே இருந்து படையெடுத்து வரும் வாதாபி புலிகேசி, மகேந்திர வர்மனுடன் சமாதானம் பேசுவது போல் நடித்து, நாட்டுக்கு திரும்பிச் செல்லும் போது, பல்லவ நாட்டின் பல பகுதிகளை சூறையாடி செல்கிறான். சிவகாமியும் சிறைப்பிடிக்கப்பட்டு, வாதாபிக்கு கொண்டு செல்லப்படுகிறாள்.
புலிகேசியின் உடன் பிறந்த சகோதரன் புத்த பிட்சு நாகநந்தி அடிகள், கதையின் முக்கிய கதாபாத்திரம். நரசிம்மவர்மர் மாறுவேடத்தில் வாதாபிக்குச் சென்று சிவகாமியை மீட்டு வர முயற்சிக்கிறார்.
'புலிகேசியை பழிக்குப்பழி வாங்கினால் தான் காஞ்சித் திரும்புவேன்' என்று சிவகாமி கூறிவிடுகிறாள். ஏமாற்றத்துடன் திரும்பும் நரசிம்மவர்மர் தன் தந்தையார் கட்டளைப்படி மதுரை இளவரசியை மணக்கிறார்.
நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் ஒன்பது ஆண்டுகள் பாடுபட்டு படைதிரட்டி வாதாபி மீது படையெடுத்துச் செல்கிறார்கள். போரில் புலிகேசி கொல்லப்படுகிறான்.
காஞ்சிக்குத் திரும்பும் சிவகாமி நரசிம்மவர்மருக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிகிறாள். அவள் இதயம் உடைந்து சிதறுகிறது. யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் இறைவனை கணவனாக வரித்து கொள்கிறாள்.
போட்டா போட்டி
தமிழில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜ சோழனை தயாரித்த தொழில் அதிபரும், ஆனந்த் தியேட்டரின் உரிமையாளருமான ஜி.உமாபதி, ராஜராஜ சோழன் 100-வது நாள் விழாவில் பேசும்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
'அடுத்தபடியாக சிவகாமியின் சபதம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கப்போகிறேன். இதில் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடிப்பார்கள். மற்ற நடிகர்-நடிகைகள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள்'.
இது தான் உமாபதியின் அறிவிப்பு.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் எம்.ஜி.ஆரிடம் இருந்து பத்திரிகை ஆபீஸ்களுக்கு போன் வந்தது. 'சிவகாமியின் சபதத்தை படமாக்கும் உரிமையை நான் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறேன். அது தெரியாமல் உமாபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர், நாகநந்தி, புலிகேசி, பரஞ்சோதி ஆகிய ஐந்து வேடங்களிலும் நானே நடிப்பேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
இதைத்தொடர்ந்து சிவகாமியின் சபதத்தைத் தயாரிக்கும் திட்டத்தை உமாபதி கைவிட்டார். எம்.ஜி.ஆரும் அப்படத்தை தயாரிக்கவில்லை.
மீண்டும் முயற்சி:
சில ஆண்டுகள் கழித்து சரோஜாதேவி புகழின் உச்சத்தில் இருந்தபோது 'சிவகாமியின் சபதம்' படத்தை எடுக்கும் முயற்சியை மீண்டும் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.
நரசிம்மவர்மர் வேடத்தில் மட்டும் தான் நடிப்பதென்று முடிவு செய்தார். சிவகாமியாக சரோஜாதேவி, மகேந்திரவர்மராக ரங்காராவ், பரஞ்சோதியாக ஜெமினி கணேசன், புலிகேசி, நாகநந்தி ஆகிய இருவேடங்களில் எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பது என்று முடிவாகியது.
இதற்கெல்லாம் மாதிரி ஓவியங்கள் வரையப்பட்டன. பிரபல ஓவியர் சங்கர்லீ இந்த ஓவியங்களை வரைந்தார். ஆனால் குறித்த காலத்தில் படத்தை தொடங்க முடியவில்லை. பிரமாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். விரும்பியதால் வருடங்கள் உருண்டோடின.
கடைசி முயற்சி:
இதற்கிடையே சரோஜாதேவி திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.
ஆயினும், எம்.ஜி.ஆர். தன் கனவுப்படத்தை கைவிட விரும்பவில்லை. பரதநாட்டியத்தில் புகழ் பெற்று விளங்கிய பத்மா சுப்பிரமணியத்தை (டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகள்) சிவகாமியாக நடிக்க வைத்து படத்தை தயாரிக்க விரும்பினார்.
இதை பத்மா சுப்பிரமணியத்துக்கு தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று பத்மா சுப்பிரமணியம் மறுத்துவிட்டார்.
'இல்லே, நீ நடிக்கிறே! இந்தக் கதாபாத்திரத்துக்கு நீதான் பொருத்தமாக இருப்பாய். நீ நடிக்கலேன்னா இந்தப்படத்தை நான் எடுக்கவே மாட்டேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
'அது உங்கள் விருப்பம். எனக்கு நடிக்க விருப்பம் இல்லை' என்று உறுதியாக கூறிவிட்டார், பத்மா சுப்பிரமணியம்.
இதற்கிடையே எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்துடன் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார், எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் ‘பொன்னியின் செல்வன்’
'கல்கி'யின் 'பொன்னியின் செல்வன்' கதையையும் எம்.ஜி.ஆர். திரைப்படமாகத் தயாரிக்க விரும்பினார். அந்தத் திட்டமும் நிறைவேறவில்லை.
எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான 'நாடோடி மன்னன்' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று பத்திரிகைகளில் கலர் விளம்பரம் கொடுத்தார்'.
'பொன்னியின் செல்வன்' கதையில் வந்தியத்தேவன் தான் கதாநாயகன். 'பொன்னியின் செல்வன்' என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மனுக்கு (பிற்காலத்தில் ராஜராஜ சோழன்) இந்தக்கதையில் பாகம் குறைவு. எனவே, வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் ஆகிய இருவேடங்களையும் ஏற்று நடிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார்.
பத்மா சுப்பிரமணியம்.
பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.
ஆயினும், 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்கும் உரிமை எம்.ஜி.ஆரிடமே இருந்தது. அதன் காரணமாக, வேறு எவரும் இக்கதையை படமாக்குவது பற்றி சிந்திக்கவில்லை.
இதன்பின், 'கல்கி'யின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. இதனால் யார் வேண்டுமானாலும் 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
'பொன்னியின் செல்வன்' கதையை பிரமாண்டமாகத் தயாரிக்க கமலஹாசன் எண்ணினார். இதற்காக, திரைக்கதை குறித்து பலருடன் கலந்தரையாடல்களும் நடத்தினார்.
கதையில் சம்பவங்கள் அதிகமாக இருந்ததால், அதை 3 மணி நேர சினிமாவாகத் தயாரிப்பது இயலாது என்பது தெரியவந்ததால், அம்முயற்சியை அவர் கைவிட்டார்.
பிறகு, மணிரத்னமும் இதுபற்றி ஆலோசித்தார். அவரும், 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
மாபெரும் இதிகாசமான 'மகாபாரதம்', பல்வேறு காலகட்டங்களில் டெலிவிஷன் தொடராகத் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. அது போல், 'பொன்னியின் செல்வன்' கதையை டெலிவிஷன் தொடராகத் தயாரிக்கலாமா? என்று இப்போது சிலர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. ?
தினதந்தி செய்தி
Only One EMPEROR of CINEMA-WORLD, FIELD also... MAKKALTHILAGAM MGR.,'S " OLI VILAKKU" Running too successfully...in Madurai... Rerelese Emperor...& Collection Emperor...