On this 5th day of TbM [Thiruvaasagam by mAnicka vAsagar!] Lyrics issue, it will be 'yenakku "PIDITHTHA PATHTHU", the 10 verses describing the bliss of Liberation and merging with the Lord by Saint MAnickavAsagar.
As you know this is the 4th song in the TbI CD which is available at www.tis-usa.com !! :idea:
'ilavasa iNaippu' [meanings]continues during this DiipAvaLi time!
YIA!!
திருவாசகம் -- மாணிக்கவாசகர்.
திருவாசகம் (Thiruvasagam அல்லது Thiruvasakam) சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
பிடித்த பத்து/உரை
(திருத்தோணி புரத்தில் அருளியது)
அடிகள், இறைவனைத் தாம் விடாது பிடித்த செயலைக் கூறும் பத்துப் பாடல்களாதலின், இது 'பிடித்த பத்து' எனப்பட்டது.
முத்திக்கலப்புரைத்தல்
முத்தியில் கலந்த அனுபவத்தைக் கூறுதல்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : உம்பர்கட்கு அரசே - தேவர்களுக்கு அரசனே, ஒழிவு அற நிறைந்த யோகமே - எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே, ஊத்தையேன் தனக்கு - அழுக்கு உடம்பை உடையேனாகிய எனக்கு, வம்பு எனப் பழுத்து - புதிய பொருள் போலத் தோன்றி, என் குடி முழுது ஆண்டு - என் குடி முழுவதும் ஆண்டருளி, வாழ்வு அற - உலக வாழ்வு நீங்க, வாழ்வித்த - சிவப்பேறு உண்டாகும்படி வாழ்வித்த, மருந்தே - அமுதமே, செம்பொருள் துணிவே - துணியப்பட்ட செம்பொருளே, சீர் உடைக் கழலே - சிறப்பையுடைய திருவடியை உடையவனே, செல்வமே - அருட்செல்வமாயிருப்பவனே, சிவபெருமானே - சிவபிரானே, எம்பொருட்டு - எங்கள் பொருட்டாக, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்: இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : விடை விடாது உகந்த - இடபத்தை விடாமல் விரும்பின, விண்ணவர் கோவே - தேவர் பெருமானே, வினையனேன் உடைய - வினையை உடையேனாகிய எனது, மெய்பொருளே - உண்மையான பொருளே, அடியேன் - அடியேனாகிய யான், முடை விடாது - புலால் நாற்றம் நீங்காது, முழுப் புழுக்குரம்பையில் கிடந்து - முழுவதும் புழு நிறைந்த கூட்டினிற்கிடந்து, அறமூத்து - மிகவும் முதுமை எய்தி, மண்ணாய் - பாழாய், கடைபடா வண்ணம் - கீழ்மையடையா வகை, காத்து என்ன ஆண்ட - தடுத்து என்னை ஆண்டருளின, கடவுளே - எல்லாம் கடந்தவனே! கருணை மாகடலே - கருணையாகிய பெருங்கடலே, இடைவிடாது - இடையறாமல், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - 'உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : அம்மையே - தாயே, அப்பா - தந்தையே, ஒப்பு இலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே, அன்பினில் விளைந்த - அன்பாகிய கடலில் உண்டாகிய, ஆர் அமுதே - அருமையான அமுதமே, பொய்ம்மையே பெருக்கி - பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து, பொழுதினைச் சுருக்கும் - காலத்தை வீணாகக் கழிக்கின்ற, புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, செம்மையே ஆய - மிக மேன்மையான, சிவபதம் அளித்த - சிவபதத்தைக் கொடுத்தருளின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இம்மையே - இவ்வுலகிலேயே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினி¢யே.
பதப்பொருள் : அருள் உடைச் சுடரே - அளியையுடைய சுடரே, அளிந்தது ஓர் கனியே - பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே, பெருந்திறல் - பேராற்றலையுடைய, அருந்தவர்க்கு - அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசே - அரசனே, பொருள் உடைக் கலையே - மெய்ப்பொருளை விளக்கும் நூலானவனே, புகழ்ச்சியைக் கடந்த போகமே - நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே, யோகத்தின் பொலிவே - யோகக் காட்சியில் விளங்குகின்றவனே, தெருள் இடத்து - தௌ¤வாகிய இடத்தையுடைய, அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இருள் இடத்து - இருள் நிறைந்த இவ்வுலகில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அளியா வீறிலி யேற்கு விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : உனக்கு ஒப்பு இல்லா - உனக்கு ஒருவரும் நிகரில்லாத, ஒருவனே - ஒருத்தனே, அடியேன் உள்ளத்துள் - அடியேனது மனத்தில், ஒளிர்கின்ற ஒளியே - விளங்குகின்ற ஒளியே, மெய்ப்பதம் அறியா - உண்மையான நிலையை அறியாத, வீறு இலியேற்கு - பெருமையில்லாத எனக்கு, விழுமியது - மேன்மையாகிய பதத்தை, அளித்தது - கொடுத்ததாகிய, ஓர் அன்பே - ஒப்பற்ற அன்பானவனே, செப்புதற்கு அரிய - சொல்வதற்கு அருமையான, செழுஞ்சுடர் மூர்த்தி - வளமையான சுடர் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, எய்ப்பு இடத்து - இளைத்த இடத்தில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது?
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண் டளவிலா ஆனந்தம் அருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : அறவையேன் மனமே - ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே, கோயிலாக் கொண்டு - கோயிலாகக் கொண்டு, ஆண்டு - ஆட்கொண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி - எல்லையற்ற இன்பத்தை அளித்து, பிறவி வேர் அறுத்து - என்னுடைய பிறப்பின் வேரைக் களைந்து, என் குடி முழுது ஆண்ட - என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட, பிஞ்ஞகா - தலைக்கோலமுடையவனே, பெரிய எம் பொருளே - பெருமையான எமது மெய்ப்பொருளே, திறவிலே கண்ட காட்சியே - திறந்த வெளியிலே காணப்பட்ட காட்சிப் பொருளே, அடியேன் செல்வமே - அடியேனது அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இறவிலே - இறுதியிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : பாசவேர் அறுக்கும் - பற்றுகளின் வேரைக் களைகின்ற, பழம்பொருள் தன்னை - பழமையான பொருளை, பற்றும் ஆறு - பற்றிக்கொள்கின்ற வழியை, அடியனேற்கு அருளி - அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, பூசனை உகந்து - எனது வழிபாட்டினை விரும்பி, என் சிந்தையுள் புகுந்து - என் சித்தத்துள் புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே, தேசு உடை விளக்கே - ஒளியையுடைய விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தி - விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, ஈசனே - இறைவனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : அத்தனே - தந்தையே, அண்டர் அண்டமாய் நின்ற - தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற, ஆதியே - முதல்வனே, யாதும் ஈறு இல்லா - சிறிதும் முடிவு இல்லாத, சித்தனே - ஞான வடிவினனே, பத்தர் சிக்கெனப் பிடித்த - அடியார்கள் உறுதியாகப் பற்றின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, பித்தனே - அன்பர்பால் பேரன்பு கொண்டவனே, எல்லா உயிருமாய்த் தழைத்து - எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும், பிழைத்து - நீங்கி, அவை அல்லையாய் நிற்கும் - அவை அல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற, எத்தனே - மாயம் உடையவனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கெழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : பால் - பாலை, நினைந்து ஊட்டும் - காலமறிந்து கொடுக்கின்ற, தாயினும் - தாயைக்காட்டிலும், சாலப்பரிந்து - மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய, ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி, உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் ஞானத்தைப் பெருக்கி, உலப்பிலா - அழியாத, ஆனந்தம் ஆய - இன்பமாகிய, தேனினைச் சொரிந்து - தேனைப் பொழிந்து, புறப் புறம் திரிந்த - நான்கு புறங்களிலும் உடன் திரிந்த, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் : புன்புலால் யாக்கை - அற்பமாகிய புலால் உடம்பு, புரைபுரை கனிய - மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியடைய, அது, பொன் நெடுங்கோயிலா - பொன்னாலாகிய பெரிய கோயிலாகும்படி, புகுந்து - அதனுள் எழுந்தருளியிருந்து, என் என்பு எலாம் உருக்கி - என்னுடைய எலும்புகளையெல்லாம் உருகும்படி செய்து, எளியை ஆய் - எளியவனாகிய, ஆண்ட - ஆட்கொண்டருளின, ஈசனே - ஆண்டவனே, மாசு இலா மணியே - குற்றமற்ற மாணிக்கமே, துன்பமே - துன்பமும், பிறப்பே - பிறப்பும், இறப்பொடு - இறப்பினோடு, மயக்கும் ஆம் - மயக்கமும் ஆகிய, தொடக்கு எலாம் அறுத்த - பற்றுகளெல்லாம் அறுத்தருளின, நல் சோதீ - மேலான சோதியே, இன்பமே - ஆனந்தமே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
திருச்சிற்றம்பலம்