'சிவந்த மண்' நினைவுகள்.......
வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக்குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார். எடுத்தவரையில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தியளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.
1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.
சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளேக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.
அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர். குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது. அதிலும் புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக்கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.