வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் – (சிறுகதை) பகுதி -2
2010-Dec-03
அன்பு வாசக நெஞ்சங்களுக்கு,
01 டிசம்பர் 2010 அன்று வெளியான "வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்" சிறுகதையின் இரண்டாவது பகுதி இது.
முதல் பகுதியை இது வரை படிக்காதவர்கள் இங்கே சென்று படியுங்கள்
இரு பகுதிகளையும் படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள்
ஆசிரியர்....
************************************************** ***********************************
"சீக்கிரம் கிளம்புடி, ப்ளேன் வர்ற நேரமாச்சு. இங்கின இருந்து வேன் போறதுக்கே ஒரு மணி நேரமாகுமாம். சுணங்காம கிளம்பு". வேலுவின் தாயார், அரக்க பரக்க அடுப்படிக்கும் தாழ்வாரத்துக்குமாய் நகர்ந்து கொண்டிருந்தார்.
வேலுவின் அக்கா, அந்த அதிகாலையிலேயே குளித்திருந்தார். வீட்டுக்கு உடுத்தும் சேலை கட்டியிருந்தார். அம்மாவை பார்த்து "ஏம்மா, வேலு எவ்வளவு காசு கொண்டு வர்றதா சொன்னான்" என லேசான கவலையுடன் கேட்டாள். அம்மா திரும்பி அவளை பார்த்து, "நீயேண்டி கவலை படுறே, காசு பிரச்சனைய பாத்துக்கிறது எங்க வேலை. எல்லாம் நல்லபடியா நடக்கும்". இடைமறித்து அக்கா சொன்னாள், "இல்லம்மா நகையும் ரொக்கமுமா மூணு லட்சம் முகூர்த்ததுக்கு முன்னால கொடுத்துறலாம்ன்னு அவன் சொன்னானே அதுக்கு கேட்டேன்."
"எல்லாம் சரியா இருக்கும்டீ. பணம் வர வேண்டிய நேரத்துல கரெக்ட் டைமுக்கு வந்து சேரும்."
***
விமானம் கிளம்பி, வானத்தில் மிதந்ததும், மனமும் லேசாகி, எண்ணமும் கூட இறக்கை கட்டி அந்த விமானத்துடன் பறந்தது. "சோதனைகள் தாண்டினால் தான்யா சாதனை" என்று ரஜினி அவர்கள் ஏதோ ஒரு விழாவில் சொன்னாரே... அது எவ்வளவு நிதர்சனமான உண்மை... இப்போது என் மனம் எதையோ சாதித்து விட்டதை உணர்கிறதே. விர்ரெனும் விமான ஓசையும், உயர்தர உணவும் உறக்கத்தை அன்பளிப்பு செய்தன. கால் நீட்டி, உடலை குறுக்கி வேலு உறங்கினான். உறங்கும் போது தொடர்பில்லாமல் நிறைய கனவுகள் அலை மோதின.
கனவில் ரஜினி வந்தார், பட்டென்று கை பிடித்து, படபடவென நிறைய அறிவுரைகள் கூறினார்.... பல பழைய படங்களில் இருந்து தன்னம்பிக்கை ஊட்டும் பல பாடல்களை கேட்க சொன்னார்.... இன்னமும் என்னன்னவோ நிகழ்வுகள் வரைமுறையின்றி மனதுள் சுழற்றி அடித்தது...
திருச்சியில் விமான பணிப்பெண் தட்டி எழுப்பிய பின் தான் விழித்தான்.., நினைவுகளை தட்டி எழுப்பினான்... துள்ளி எழுந்தான்.. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து தன்னுடைய பெட்டிகளுடன் தாய் மண்ணில் கால் வைத்தான்.... உடல் சிலிர்த்தது....கம்பீரமாக நடை போட்டு வாசல் நோக்கி விரைந்தான். அன்றைய காற்றுக்கு உயிர் இருந்தது. மெல்ல அவன் உடலை வருடி கொடுத்தது.... பாசமாய் தலை கலைத்தது.... முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றையை மெல்ல விலக்கினான்.... பார்வை பளிச்சிட்டது....
வரவேற்க யார் வந்திருப்பார்கள் என கண்ணாடி தடுப்பின் வழியே பார்க்க முயற்சித்தான். வாசலில் வேலுவின் குடும்பத்தார் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை,, ஆனால் மிகவும் பரிச்சயமான ஒரு முகம், துளசி, துளசியா? ஆம் அது துளசிதான். அந்த முகத்தை எப்படி மறக்க முடியும்.... சாமான்யனான என்னை எவ்வளவு கவிதைகள் எழுத வைத்த முகம் அது.... இந்த மூன்று வருடங்களில் இன்னும் பூசினது போல் இருக்கிறாள். அருகில் யார் புதுசாய் இருக்கிறதே? இவ்வளவு நெருக்கமாக இருப்பதை பார்த்தால், அது துளசியின் கணவனா….. இவர்கள் சேர்ந்து வரவேற்க வந்ததைப் பார்க்கும் போது,இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா ? இங்கு ஏன் வந்தார்கள். கேள்விகள் கண்ணாமூச்சி ஆடியது. . நெஞ்சு லேசாக வலித்தது போல் உணர்வு.. தொண்டை அடைத்தது.... பளிச்சிட்ட கண்களில் லேசாக இருள் சூழ்ந்தது...அருகில் வந்தாகிவிட்டது..
"நான்தான் சரவணன்", துளசியின் அருகில் இருந்தவன் தான் தொடங்கினான், "வாங்க வேலு" ரொம்ப நேரமா காத்துக்கிட்டுருக்கோம்.. துளசி எந்த சலனமும் இல்லாமல் உடன் வந்தாள். கண்ணில் மட்டும் மகிழ்ச்சி மின்னியது. வேலுவுக்கும் வார்த்தைகள் சண்டித்தனம் செய்தன. "நல்லாயிருக்கீங்களா சரவணா,"
பளிச்சென்று மின்னியது. சரவணா…. சரவணா,,,, சரவணகுமார் என் தங்கைக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை அல்லவா, ஆம் அவர்கள் அனுப்பிய போட்டோவில் வந்த முகம்தான். நேரில் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சரி இவர் எதற்காக உள் வந்தார் மற்றவர்கள் எங்கே. துளசி எப்படி உடன் வந்தாள்.
கேள்விகள் விடை காணாது நிற்க, வாசலுக்கு வெளியே வந்தாகிவிட்டது.. அதோ அம்மா, அக்கா , கூட்டத்தில் தள்ளிக்கொண்டுவருகிறார்கள்..
"அம்மா எப்படிம்மா இருக்கீங்க.." வார்த்தை வரவில்லை, உதடுகள் துடித்தன, இதயம் பொங்கியது, நெஞ்சடைத்தது, வார்த்தை முட்டியது. கண்களால் அதை கேட்க, தாயுள்ளம் அதை புரிந்து அவனை அணைத்து கொண்டது. இத்தனை நாள் பார்க்காத ஏக்கம் கண்ணீராய் எட்டி பார்த்தது. உடல் குலுங்கியது. தாய் தன் மகனை தோள் தடவி ஆசுவாசப் படுத்தினாள். "ஜம்முன்னு ராஜா மாதிரி இருக்கேடா, வெள்ளக்கார துரை மாதிரி பூட்டிஸ், முழுக்கை சட்டை எல்லாம். துளசி ரொம்ப கொடுத்து வைச்சவ." கடைசி வார்த்தையில் நிமிர்ந்து வேலு தன் தாயை பார்த்தான்.
"துளசி இங்கே வாம்மா" - இது அம்மா.. "என்னடா வேலு பாக்கிறே . 'உன் துளசி' டா. உன்னை பாக்கணும்னு பிடிவாதமா சண்டை போட்டுவந்தா.. சரவணன் தான் இங்க யாரோ பிரண்ட பிடிச்சு, நான் உள்ளே கூட்டிட்டு போறேன்ன்னு கூட்டிட்டு போனான். வேலு முதல்ல துளசியை பாக்கட்டும்னு சொன்னான்."
"எனக்கும் வயசாயிருச்சு, இந்த கல்யாணத்தோட, உன் கல்யாணத்தயும் முடிச்சுறலாம்ன்னு யோசனை. உனக்கு சரின்னா, துளசிக்கும் உனக்கும் அதே முகூர்த்தத்தில ஒரே மேடையில கல்யாணம். என்ன அம்மா சொல்றது ரைட்டுதான." சிரித்தாள் அம்மா,
துளசி வெட்கத்தால் தலை குனிந்தாள், குனியும் அந்த ஒரு நொடியில் வேலுவின் கண்ணை சந்தித்தாள். உலகின் உச்சகட்ட சந்தோசம் அவர்கள் இருவருக்கும் வாய்த்தது. இதுதான் காதலின் உன்னதம். புனிதம்.
அனைவரும் வாடகை வேனில் அமர, டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்து, டேப்பை ஒலிக்க விட்டார், உச்ச பட்ச குரலில் ஒரு அட்டகாசமான சூப்பர் ஹிட் பாடல் ஒலித்தது.
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு ,
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
வேலு தலை திருப்பி, துளசியை பார்த்தான், துளசியின் கனிந்த பார்வையில் அவன் சிகரத்தை அடைந்தான். வாழ்க்கை அர்த்தமும் இனிமையாகவும் உள்ளதாய் வேலு உணர்ந்தான்.
….முற்றும்….
************************************************** ************************************************** ***************
கதாசிரியர்கள் லாரன்ஸ் & கோபி இருவருமே சென்னைக்காரர்கள். தற்போது வசிப்பது துபாய். இருவரும் இணைந்து இணையத்தில் எழுதிய ஏராளமான கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டவர்கள். இவர்கள் வளைகுடா ரஜினி ரசிகர்களின் முகங்கள். துபாய் ரேடியோ மற்றும் ரஜினிபேன்ஸ்.காம் இணைந்து நடத்திய சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் சென்றவர்கள்.தங்களது எண்ணங்களை எழுத்துக்களாக்குவதன் மூலமாக வளைகுடா வாழ் தமிழர்களின் மனதில் பெரும் கவனத்தை பெற்று வருகிறார்கள்
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1558
