-
1 Attachment(s)
பல ஆண்டுகளுக்கு முன் ‘வசந்த்’ தொலைக்காட்சியின் ‘சந்திப்போமா’ நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட, நாடக, சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான நித்யாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டி கண்டவர் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரமான ஐஸ்வர்யா. பேட்டியின்போது ‘நடிகர் திலகத்தை’ப் பற்றி நித்யா சொன்னது:
“பாலாஜி சாருடைய ‘தீர்ப்பு’ படத்தில் சிவாஜி சாருடைய மகளாக நடித்திருந்தேன். சரத்பாபு, விஜயகுமார் இருவரும் என் அண்ணன்கள். படத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகும் காட்சி வரும். என் உடலை தகனம் செய்யும் காட்சி சத்யா ஸ்டுடியோவின் வெட்டவெளி பொட்டலில் நடந்தது. என்னைக் கற்பழித்தவனைக் கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் என் தந்தை சிவாஜி சார், பரோலில் வந்து என் சிதைக்கு தீ வைப்பதாக காட்சி.
விறகுகளால் சிதை அமைத்து அதில் என்னைப் படுக்க வைத்து, உடல் முழுக்க வரட்டி அடுக்கி முகத்தை மட்டும் திறந்து வைத்து குளோசப் ஷாட்டுகளை எடுத்தனர். பின்னர் முகத்தையும் வரட்டியால் மூடி சிவாஜி அப்பா தீ வைப்பது போல காட்சி. அதை எடுத்து முடித்ததும் டைரக்டர் , சிவாஜி சாருடைய குளோசப் காட்சிகளை எடுத்து முடித்து அனுப்பி விடலாம் என்று மும்முரமானார்.
அதைக் கவனித்த சிவாஜி சார் டைரக்டரிடம், ‘ஏப்பா, அந்தப் பொண்ணை என்ன மலர்ப்படுக்கையிலா படுக்க வைத்திருக்கிறீர்கள்? பாவம், சிதையில் படுத்திருக்குப்பா! முதல்ல அதோட ஷாட்டுகளை எடுத்து முடிச்சு குழந்தையை அங்கிருந்து கிளப்புங்கப்பா. அப்புறம் என்னோட ஷாட்டுகளை எடுத்துக்கலாம். அந்தப் பெண்ணோட சீன்கள் முடிய எவ்வளவு நேரமாகும்?’ என்று கேட்டார்.
‘ஒரு மணி நேரம் ஆகும் அண்ணே’ என்று இயக்குனர் சொன்னதும், ‘இரண்டு மணி, மூன்று மணி நேரம் ஆனாலும் அப்பா நான் வெயிட் பண்றேன். முதல்ல அந்த குழந்தையோட சீன்களை முடிச்சு சிதையிலிருந்து எழுப்புங்க’ என்று சொன்னவர், அந்த வெட்டவெளியில் ஒரு குடையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
திரைப்படங்களில் இது போன்ற சாவுக்காட்சிகள் எடுத்தால் அது முடிந்ததும் அதில் நடித்தவருக்கு திருஷ்டி கழிப்பார்கள். என்னுடைய காட்சிகள் எடுத்து முடித்ததும் எழுந்து வந்த சிவாஜி சார், ‘குழந்தைக்கு நான் திருஷ்டி கழிக்கிறேன்’ என்று திருஷ்டி கழித்தவர், ‘உனக்கு சாவே வரக்கூடாதுன்னு ஆசிர்வதிக்கிறேன்மா’ என்று ஆசிர்வதித்தார்.”
இந்த இடத்தில் நித்யாவின் கண்கள் பனித்தன. “அவரோடு ஒப்பிடும்போது நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களில் சின்னவங்க, பெரியவங்க என்ற வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் அவர் மதிப்பு கொடுப்பதில் எல்லோரும் அவர்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்.”
அப்போது பேட்டி கண்ட ஐஸ்வர்யா சொன்னது: “அவரோட படங்களைப் பார்க்கும்போது சிவாஜி அங்கிள் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய கலைஞர், எவ்வளவு பெரிய சாதனையாளர் என்றுதான் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவரோடு பழகிய உங்களைப் போன்றவர்கள் சொல்லும் இது போன்ற சம்பவங்கள் மூலம் தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் நமக்குத் தெரிகிறது. இனி வரும் தலைமுறைகளும் அவரைப் பற்றி அறிந்து வியக்கத்தான் போகின்றன.”
Attachment 6232
Thanks Senthilvel Selvaraj
-
1 Attachment(s)
Attachment 6233
தமிழ் திரையுலகில் 'நடிகர்திலகம்' என்றாலே நவரச நடிப்பும், கணீரென்ற வசன உச்சரிப்பும்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், அவரது நடிப்பின் பிரம்மாண்ட நிழலில் நாம் கவனிக்கத் தவறிய அல்லது அதிகம் சிலாகிக்காத ஒரு பக்கம் அவரது 'ஆக்ஷன்' காட்சிகள். மிகைப்படுத்தப்பட்ட வித்தைகள் இன்றி, பார்ப்பவர் மெய்சிலிர்க்கும் வகையில் அவர் கையாண்ட அந்த 'யதார்த்த வேகம்' ஒரு தனிப் பாடப்புத்தகம்.
சிவாஜியின் சண்டைக்காட்சிகளில் அந்தரத்தில் பறக்கும் 'ரோப்' வித்தைகளோ, அடி வாங்காமலே பத்து பேரைத் தூக்கி எறியும் மாயாஜாலங்களோ இருக்காது. அவரது அடிகளில் ஒரு கனம் இருக்கும்; அது 'நிஜ அடி' என்பதைப் பார்ப்பவர் உணரும்படி இருக்கும்.
மிகை உத்திகள் இல்லாத சண்டைக்காட்சிகள் தான் நடிகர்திலகத்தின் படங்களிலே அமைந்திருக்கும்.அடிகள்தான்.அடி விழுந்தது போலிருக்கும்.பாவ்லா அடிகள் எல்லாம் கிடையாது .
நிஜ அடி போலிருக்கும்.
சில படங்களில் ஒரே அடியில் எதிரியை அடிக்கும் போது பொறி கலங்கும்.நம் தலையில்தான்.இதற்கு உதாரணமாக ஞான ஒளியில் ஸ்ரீ காந்தை அடித்து வீழ்த்தும் காட்சியை சொல்லலாம்.
எம்பி குதித்து ஓங்கி ஒரே அடிதான்.
அந்தஅடிக்கு ஆள் காலியாகி விட்டாரோ என்று நம்ப வைக்கும் அடி.இந்த மெத்தட்டை கொண்டு வந்தவர் நடிகர்திலகமே. இதையே சாதாரணமாகவும் ,வசந்த மாளிகையில் செய்திருப்பார்.
சண்டைக் காட்சிகளில் நாலு பேரை தூக்கி எறிவது,அடி வாங்காமலே பத்து பேரை புரட்டி எடுப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறாது நடிகர்திலகத்தின் படங்களில். ஒன்றிரண்டு படங்களில் இருக்கலாம்.
சிவந்தமண்.ஆக்ஷனின் உச்சம் எனலாம்.
ஆக்ஷன் என்பது கூட்டத்துடன் சண்டை போடுவதல்ல.அந்த டைமிங்கான விலகல், தற்காப்பான செய்கைகள், சரியான இடத்தில் அடித்தல் போன்ற சமாச்சாரங்களே.சிறைச்சாலை சண்டைக் காட்சி அன்றைய தமிழ் சினிமாவுக்கு புதிது .
சிறைச்சாலையில் ,கை விலங்கை நீள் துப்பாக்கி கொண்டு உடைப்பது, வீரர்களின் துப்பாக்கிகளை காலால் தள்ளி சிறைக்குள் உதைப்பதில் ஒரு லாவகம்,
எம்பி உதைப்பது என்று நிறைய செய்திருப்பார் அதில் . டைமிங்கில் பிசிறடிக்காத காட்சிகள் அவை.
பாபு படத்தில் தென்னந்தோப்பு சண்டைக் காட்சி ஆக்ஷன் காட்சியில் ,டைமிங்கில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தாலும் முதுகில் விழுந்திருக்கும் அரிவாள் வெட்டு.காட்சி தொடர்ச்சியின் பரபரப்பு நெடுகிலும்.நாடக மேக்கப்பை கலைக்காத கோலத்தில் அவர் நின்று வெறியுடன் பார்ப்பதே படு ஆக்ஷனாக இருக்கும்.புட்பாலை உதைப்பது போல் மாறி மாறி காலை நிலத்தில் உதைத்து எதிரியை உதைக்கும் காட்சி ஆக்ஷன் அமர்க்களமே.விலகல்களும், அதை தொடர்ந்த அடிகளும் நிஜசண்டையை பார்ப்பது போலிருக்கும்.
சரித்திர படங்களை பொறுத்த வரையில்
இப்படிப்பட்ட ஒரு ஆக்ஷன்காட்சிக்கு ஈடாகுமா என்று நான் சொல்லவருவது உத்தமபுத்திரனின் க்ளைமாஸ் காட்சியைத்தான்."தாயாக இருந்தாலும் பார்க்காதீர்கள் ,தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தலை மண்ணிலே உருளட்டும் "என்ற முழக்கத்துடன் முக கவசத்துடன் வந்து வெடிக்கும் காட்சியை விடவா பெரிய சண்டை காட்சிகள்? என்ன வேகம்? என்ன துடிப்பு? அவ்வளவு பரபரப்பிலும் இருவருக்கும் தனிதனியேயான ஆக்ஷனை காட்டியிருப்பார்.விக்ரமன் பாணி ஒரு தனித்த உலகம் .அதனுடன் ஒப்புமை செய்ய பார்த்திபனை கூட தள்ளி வைக்கத்தான் நேரிடும்.(வஞ்சப் புகழ்ச்சி.)
அடித்து துவைத்து காயப்போடு, என்றெல்லாம் போலியான காட்சி அமைப்புகளை காட்டித்தான் அட்டகாசமான ஆக்ஷனை காட்ட முடியும் என்பதெல்லாம் நடிகர்திலகத்திடம் இல்லை.கன்னத்தில் அறையும் அறையிலேயே கூட வீரமான நடிப்பு தெரியும்.
பிற்காலங்களில் வந்த ரிஷிமூலம், நேர்மை படங்களில் ,சண்டைகாட்சிகளில் அவருடைய வேகமான
மூவ்மென்ட்கள் அபாரமாக இருக்கும்.
நேர்மையில் சின்ன வயதில் கூட செய்யாத பன்ஞ் அட்டாக் ஆச்சர்யமாய் இருக்கும்.இடது கையால் விடாமல் பன்ஞ் செய்யும் ஷாட்டிலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.
அந்த காலகட்டத்தில் ,சற்று பருமனான உடலமைப்பை வைத்துக் கொண்டே இதை செய்திருப்பார்.
ரிஷிமூலத்தில் க்ளப் சண்டைகாட்சியில் வேகம் அதிகமாகவே இருக்கும்.கனத்த சரீரத்தில் அவர் செய்யும் சண்டை, நம்பகத்தன்மையில் குறையில்லை.
அந்த உடலமைப்பில் எந்த கதாநாயனும் இல்லையென்றாலும் ,இருந்திருந்தாலும் இப்படி செய்திருக்க முடியுமா என்றும் யோசிக்க வைக்ககத்தான் செய்கிறது.
மற்ற நடிகர்களுக்கு சண்டை காட்சிகள் வியாபாரம் சார்ந்த தேவையாய் இருந்தது.அடித்தட்டு ரசிகர்களுக்காகவும் அவர்களுக்கு அதை செய்ய வேண்டிய கட்டாயமும் இருந்தது.இந்த பார்முலாவெல்லாம் நடிகர்திலகத்திற்கு தேவையில்லை.ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய ஸ்டைலிஸ் மூவ்மென்ட்கள் வெகு ரசனையானவை.
குதிரை சவாரியில் மனிதர் அட்டகாசப்படுத்துவார்.நடிப்பே வராத சிலர் தான் குதிரைச்சவாரியில் அந்த காலத்தில் சிறந்திருந்தனர்.மற்றபடி இந்த விஷயத்தில் நடிக வேந்தனுக்கு ஈடு இணை எவருமில்லை.சத்ரபதி சிவாஜி வேடத்தில் குதிரையில் அமர்ந்து செய்த வாள் சண்டைக்காட்சியில் அமர்க்களப்படுத்தியிருப்பார்.
இன்னும் சில படங்களில் பெரும் சண்டைக்காட்சிகள் கொடுக்காத வீர உணர்வை அவரின் அசைவும், பேச்சும் கொடுக்கும்.கட்டபொம்மனில் வாள் சண்டைகள் இருந்தாலும், ஜெய் ஜக்கம்மா வாளை உறையிலிடும் ஒரு சிறு செய்கையிலேயே நம்மை சிலிர்க்க வைப்பார்.மனோகராவில் இதையே அசால்ட்டாக செய்வார்.சிறு நொடியில் கடந்து விடும் ஷாட்தான்.ஆனாலும் கம்பீரமமான வீர உணர்வை தரும்.
தொழில் நுட்ப உத்திகள் வளராத காலகட்டத்தில் அவர் செய்தவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.அதிரடியான சண்டைக் காட்சிகள் மட்டுமே கொண்ட படங்களும் கிடையாது.கதைக்கு தேவையானதை செய்த களம் கண்ட கலைஞன்.
மக்களை பெற்ற மகராசியில் வயல்காட்டு சண்டை ,வணங்காமுடி, புதையல் படத்தில் ஆட்களை அலேக்காக தூக்கி வீசுவது ,நான் வணங்கும் தெய்வத்தில் அகோர உருவ காட்சிகள், ரத்தத்திலகத்தில் போர்க்கள காட்சிகள், நவராத்திரி ,தங்கை, என்தம்பி சாட்டை வீச்சு, தங்கச்சுரங்கம் ,தெய்வமகனில் கடைவீதி சண்டை, திருடன், விளையாட்டுப் பிள்ளை, சொர்க்கத்தில் ரயிலுக்குள் நடக்கும் சண்டை, ராஜா புல் எபிசோட், பட்டிக்காடா பட்டணமா, தங்கப்பதக்கம் கம்புச் சண்டை, தர்மம் எங்கே, எங்கள் தங்க ராஜா ,என் மகன் ,வைரநெஞ்சம், உத்தமன், தியாகம் ,திரிசூலம், விஸ்வரூபம், சங்கிலி, தீர்ப்பு, திருப்பம்,
படங்கள் தவிர இன்னும் குறிப்பிடாத படங்களிலும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கும்.
நடிகர்திலகத்தின் ஆக்ஷன் காட்சிகளை பற்றி எழுத நிறைய இருக்கிறது.ஆக்ஷன் முடிந்ததும் அடுத்து வரும் காட்சிகளில் அவரின் நடிப்பு நம்மை ஆட்கொண்டு விடுதலும் ,நம்மவர்களே அவருடைய நடிப்பை மட்டுமே சிலாகித்துப் பேசுவதும் ,நடிகர் திலகம் என்றாலே நடிப்பு என்ற வரையறைக்குள்ளேயே வைத்து பிரமிக்க வைத்து விட்டதாலும், அவருடைய ஆக்சன் காட்சிகள் அவருடைய நடிப்பு ஆளுமையில் மறக்க வைத்து விடுவதும் தான் நடிகர்திலகத்தின் ஆக்சன் காட்சிகள் அதிகம் சிலாகிக்க படாமல் இருப்பதற்கு காரணமோ?
நன்றி!
செந்தில்வேல் சிவராஜ்..
-
1 Attachment(s)
Attachment 6234
நாகை தர்மன் ஒரு பத்திரிகையாளர். இவர் சிவாஜிக்கு நெருக்கமானவர். இவர் முதன்முறையாக சிவாஜியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, சிவாஜி அவர்கள் அவர் ஊர் பேரை கேட்டதும் தன்னடக்கமாக, “நான்தான் சிவாஜி கணேசன், உங்க ஊர் சம்மந்தி” என்று தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டார். சிவாஜியின் இந்த தன்னடக்கப் பண்பு நாகை தர்மனை கவர்ந்துவிட்டது. அந்த சந்திப்பு முதல் நாகை தர்மன் அவர்கள் சிவாஜியிடம் மிகவும் நெருக்கமானார். சிவாஜியைப் பற்றி சிறப்பான பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
15.12.1973-ல் வெளியான "மதி ஒளி" வெளியிட்ட ராஜபாட் ரங்கதுரை சிறப்பு மலரில் ஒரு அருமையான கட்டுரை ஒன்றை எழுதினார். அந்த கட்டுரையில் சிவாஜி மகள் சாந்தியின் கல்யாணம் மற்றும் பல சுவையான தகவல்களை எழுதினார். சுவையான அந்த கட்டுரையை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம். நாகை தர்மன் எழுத்திலேயே உங்களுக்குச் சொல்கிறேன்:
“எந்தத் துறையில் ஒரு மனிதன் இருந்தாலும் அவன் வளரத் தொடங்கிவிட்ட பிறகு, பொதுமக்கள் கவனத்திற்குப் பதிந்த பின் பொறுப்போடு இருந்து தீர வேண்டும். அடக்கமும் பண்பும் இல்லாவிட்டால் அவைகளைத் தேடியாவது பெற வேண்டும். நட்சத்திர கவர்ச்சியால் நல்லவர் கெட்டவர் யார் என்று கூட அறியாமல் மயங்கிக் கிடக்கும் காலம் இது. ‘இன்று இந்த நடிகர் ஏழு தடவை தும்மினார், மூன்று தடவை இருமினார்; அந்த நடிகை கொட்டாவி விட்டால் கோலார் தங்கச் சுரங்கம் போல இருக்கும்’ என்று ரசிக மகா ஜனங்கள் நட்சத்திரங்களை அளந்து வைத்திருப்பதைச் காணுகிறோம்.
அவ்வளவு அக்கறையும் கவனமும் வைத்திருக்கும் உங்களை வாழ வைத்த ரசிக மக்களிடம் எத்தனை நட்சத்திரங்கள் முறையோடு மரியாதையோடு பழகுகிறார்கள்? விரல் விட்டுச் சொல்லிவிடலாமே! அப்படி நமது விரல்கள் நிமிரும்போது, கலைச் சாம்ராஜ்யத்தில் ஏகோபக நடிப்புச் சக்ரவர்த்தியாகி மக்களின் இதய சிம்மாசனத்தில் கொலுவீற்றிருப்பவர் ஒருவர் முன்னணியில் நிற்கிறார். மொழி, கட்சி வேறுபாடுகளை மறந்துவிட்டு அந்த கலைச் சிகரத்தை ஏற்றிப் போற்றிப் பாராட்டாதவர்களே கிடையாது. பாராட்டக் கூடியவர்கள் சிலர் இருக்கக்கூடும் என்று எண்ணலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் நாவும் பேனாவும் பாராட்டாமல் இருக்கிறதே தவிர, மனம் புகழாமல் இருக்க முடியாது. ஏனெனில் எந்த மனிதனாலும் தனது உள்மனதை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு மனங்கூடவா இருக்காது?
அப்படிப்பட்டவர் யார்? அவர் அந்த ஒருவர்... ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ என்று சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் இல்லை. ஆனால் ‘எங்கள் ஊர் சம்மந்தி’ என்பதைச் சொன்னால்தான் சிலருக்குத் தெரியும். திரு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் செல்வ மகள் திருமதி சாந்தியை மணந்து கொண்டவர் எங்கள் ஊர் திரு. குஞ்சுப்பிள்ளையின் மகன் திரு. நாராயணசாமி அவர்கள்.
‘எங்கள் ஊர் சம்மந்தி’ என்று பெருமையோடு சொல்லும் இடத்தில் அவர் இருக்கிறார். பணத்தை வைத்துச் சொல்லவில்லை; பண்பையும் திறமையையும் புகழையும் வைத்துச் கூறுகிறேன். முதன்முதலில் நான் சிறுவனாக இருக்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் அவர் நடித்த நாடகம் ஒன்றைப் பார்த்தேன். அப்போது அவர் திரையுலகிற்கு வரவில்லை. அதன்பின் ‘பராசக்தி’ வெளிவந்த பின் டாக்டர் கலைஞர் அவர்களுடன் திருவாரூருக்கு வந்தபோதும் கண்டிருக்கிறேன். எங்கள் ஊர் பிள்ளையை அவர் மகளுக்கு அவர் மணம் முடித்துக் கொண்டார்.
திரு. நாராயணசாமி திருமண வரவேற்பு நாகையில் ஒரு பங்களாவில் நடந்தது. குஞ்சுப்பிள்ளை அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். வெள்ளை உள்ளமும் கொண்ட அவர் என்னிடம் அதிகப் பற்று கொண்டவர். ‘சம்மந்தி நடிகர் திலகம் அவர்களை’ அவர் தங்கியிருந்த நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து மேளதாளத்துடன் அழைத்து வந்தார்கள். கரம் கூப்பியபடி வந்த அவரை நாராயணசாமி எதிர்கொண்டு அழைத்துச் செல்கிறார். வந்திருந்தவர்களையெல்லாம் பார்த்து அலுக்காமல் சிவாஜி வணங்குகிறார், நலம் விசாரிக்கிறார். நடிப்பு அல்ல, நடப்பு! அலங்கரித்துப் புது மணப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட மகள் சாந்தியை கண்ணீர் மல்கத் தட்டிக் கொடுக்கிறார். ஆனந்தப் பரவச நிலையில் பாசமுள்ள ஒரு தந்தையாக அங்கே அவரைத் காண்கிறேன். அவை யாவும் பசுமையாக என் நினைவில் பதிந்துள்ளன. மறக்கக் கூடியவையா இவை?
பைலட் ஸ்டூடியோவில் படப்பிடிப்பாரங்கம் ஒன்றில் உடன்பிறவாச் சகோதரர் ‘மதி ஒளி’ சண்முகம் அவர்கள் நடிகர் திலகத்திடம் என்னை அறிமுகப்படுத்துகிறார். ‘இவர்தான் நாகை தர்மன்’ என்கிறார். ‘அப்படிங்களா... ரொம்ப மகிழ்ச்சி. உங்க ஊர் சம்மந்தி நான்தான்... நான்தான் சிவாஜி கணேசன். ஒரே மாவட்டம், ஒரே ஊர்க்காரங்க... இப்படிச் சந்திச்சாலே தனி சந்தோஷம் தானே!’ இப்படி திரு. சிவாஜி கணேசன் அவர்கள் என்னிடம் வாஞ்சையுடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
அப்புறம் ஒருமுறை தம்பியின் திருமண அழைப்பிதழைக் கொடுத்து அவர் வராததைச் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டேன். ‘நீங்க நாகையில திருமணம் வெச்சதால எனக்கு வேலைத் தொந்தரவால வர முடியல. நான் இந்த பெரிய மனிதர் வீட்டு கல்யாணங்களுக்குப் போறதை விட நம்ம போன்ற நண்பர்கள் வீட்டுக்கு போறதையே விரும்புகிறேன். அதுகூட சுயநலம்தான்... நான் உங்க வீட்டுக்கு வந்தா நீங்க என் வீட்டுக்கு வருவீங்க அப்படினுதான். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்’ - இது அவருடைய பதில்.
‘அடடா! நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்பதா?’ என்கிறேன் நான். குறை இருந்தால் அதை யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்வதுதான் மனிதத் தன்மை. எனக்கு மெய்சிலிர்த்தது. பேச அடுத்த வார்த்தைகள் இல்லாமல் திணறுகிறேன்.
அடுத்து ‘அவன்தான் மனிதன்’ படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் செல்வதை ஒட்டி ‘உட்லண்ட்ஸ்’ ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு. சிவாஜி அவர்கள் வருவதைக் காண என் கண்கள் தயாராகிறது. வந்தபின் அவர் பேசுகிறார்: ‘படப்பிடிப்பு முடிஞ்சுதான் வருவேன் என்று சொல்லி இருந்தேன். என்றாலும் என் பொருட்டு இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்ததால் உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன்.’
மற்றவர்களை மணிக்கணக்காகக் காக்க வைத்திருப்பதுதான் தனக்குப் பெருமை, தனக்காகக் காத்திருப்பது அவர்கள் கடமை என்பது போல சில மகானுபாவர்கள் இருக்கும்போது இவர் மட்டும் ஏன் இப்படி? குறையை ஒப்புக்கொண்டால் கிரீடம் இறங்கிவிடும், தவற்றை வெளிப்படையாக ஏற்பது மதிப்புக் குறைவு என்று சிலர் எண்ணும்போது இவர் மட்டும் ஏன் இப்படி? என் இதயத்தில் இப்படிப் பல கேள்விகள் எழுந்தன.
தன்னை உணர்ந்து பிறரை மதிக்கும்போதுதான் மனிதன் முழுமை பெறுகிறான். தன்னை மனிதன் என்று வெளிப்படுத்துகிறான். பணிவும் கனிவும் தான் அவரது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் காரணமாய் அமைகின்றன. அவருடைய அடக்கமும் பண்பும் என்னை அதிகமாகக் கவர்ந்ததன் விளைவே இந்தக் கட்டுரை.”
செந்தில்வேல்.
நன்றி! செந்தில்வேல்.
-
1 Attachment(s)
Attachment 6235
சோத்துல எங்கடா இருக்கு சாதி?" - இந்த கேள்வியை கேட்டது ஒரு தமிழ் சினிமா பாட்டு.இது என்ன பாட்டு அது கேட்டவிதம் எப்படிங்கறதை பத்திதான் இந்த பதிவுலே நாம பாக்கப் போறோம்.
1971-ல வெளிவந்த படம் 'பாபு'. 'சிவாஜி கேரியர்ல இது ரொம்ப முக்கியமான படம். ஏன்னா, இதுல அவர் ரிக்*ஷா ஓட்டுற ஒரு விசுவாசமான வேலைக்காரனா வாழ்ந்திருப்பாரு.
ரிக்*ஷா ஓட்டுறப்போ ஒரு நடிப்பு , அப்புறம் வீட்டு வேலைக்காரனா வரும்போது ஒரு நடிப்புன்னு மனுஷன் அசத்தியிருப்பாரு. அந்தப் படத்துல வர்ற 'வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா' பாட்டை ஒரு புதிய பார்வையில ரசிக்கலாம் ..வாங்க ...
வாலியின் வாதம் , எம்.எஸ்.வி யோட மெல்லிசை, நடிகை விஜயஸ்ரீயோட துள்ளல்... இது எல்லாத்தையும் தாண்டி சிவாஜி கணேசன் அப்படிங்கிற ஒரு 'நடிப்புப் பூகம்பம்' அந்த நாலு நிமிஷத்துல என்ன பண்ணியிருக்காருன்னு பார்ப்போம்!"
"பாட்டு ஆரம்பிக்கும்போதே ஒரு பிஜிஎம் வரும் பாருங்க... 'டான்ட டன்டட...'. அப்போ சிவாஜி சார் ஒரு நடை நடப்பாரு. அந்த நடையில ஒரு ராஜகம்பீரம் இருக்கும். ஆனா அந்த கம்பீரம் ஒரு பணக்காரனோடது இல்ல... அடுத்த வேளை சோறு கிடைக்கப்போகுதுன்னு தெரிஞ்ச ஒரு ஏழை தொழிலாளியோட 'கிங்' ஸ்டைல் நடை அது!
'வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...'
இங்க ஒரு சின்ன விஷயம் கவனிச்சீங்களா? 'வரதப்பா'ன்னு ஏன் சொல்றாரு? இதுக்கு ஒரு குட்டிக்கதை சொல்லலாம். ஒரு ஊர்ல பெரிய பஞ்சம் வந்தப்போ, மக்கள் எல்லாரும் வானத்தையே பார்த்து 'மழை வராதா?'ன்னு காத்துட்டு இருந்தாங்களாம். ஆனா ஒரு ஏழை மட்டும் நிலத்தையே பார்த்து 'சாப்பாடு வராதா?'ன்னு காத்துட்டு இருந்தானாம். அவனுக்குக் கஞ்சி கிடைச்சப்போ, அவன் சொன்னானாம், 'வானத்துல இருந்து வர்றது தான் மழை... ஆனா என் வயிறு காக்க நேர்ல வர்றது தான் வரப்பிரசாதம்'னு. அதுதான் இங்க சிவாஜி சாரோட மனநிலை. கஞ்சி வர்றதையே ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுவாரு."
"இப்போ சரணத்துக்குள்ள போவோம். கவிஞர் வாலி அஷ்டலட்சுமிகளைப் பத்திப் பேசறாரு.
'நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி...'
இந்த வரியில சிவாஜி சார் தன் விரலை சுழற்றி ஒரு மேனரிசம் பண்ணுவாரு. 'காசு இருந்தா யாரு வேணா லட்சுமிதான்டா'ங்கிற அந்த நக்கல் அவர் சிரிப்புல இருக்கும்.
'நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி...'
இந்த வரியில அப்படியே கைகளை விரிச்சு அந்த வரிக்கான நடிப்பை காட்டுவாரு.
ஆனா, ஹைலைட்டே இந்த இடம்தான்: 'படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா!'
விஜயஸ்ரீயைப் பார்த்து கைகளைத் தூக்கி ஒரு கும்பிடு போடுவாரு. ஒரு ரிக்*ஷாக்காரனோட பார்வையில, தங்கம் பெருசில்லை, நிலம் பெருசில்லை... பசிக்கு சோறு போடுற அந்த மனுஷி தான்டா தெய்வம்னு அவர் சொல்லும்போது, அந்த இடத்துல தியேட்டர்ல விசில் பறக்கும். அங்க விஜயஸ்ரீயோட அந்த எதார்த்தமான அசைவுகளும் சிவாஜிக்குச் செம ஈடு கொடுக்கும்."
"அடுத்த வரியில, 'தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது...'
இதைப் பாடும்போது சிவாஜி சார் காதுகளைத் தீட்டிக்கிட்டு அந்தச் சத்தத்தை ரசிப்பாரு.
'வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது...'
விஜயஸ்ரீயோட நடையை வாழைத்தண்டுக்கு ஒப்பிடுவாரு. இங்க கேமரா ஆங்கிளை கவனிச்சீங்களா? இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர், சிவாஜியை ஒரு மாபெரும் மனிதனா காட்ட கேமராவை லோ-ஆங்கிள்ல வச்சிருப்பாரு.
'பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது... பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம் தானா குறையுது'
இந்த இடத்துல சிவாஜி ஒரு மேஜிக் பண்ணுவாரு. மயக்கம் வர்ற மாதிரி கண்ணைச் சுழற்றிட்டு, அடுத்த செகண்ட் அவங்க பேசின உடனே முகம் அப்படியே பிரகாசமாகும். பசிங்கிற கொடுமையை அந்த முக பாவனையில கொண்டு வர்றதுக்கு ஒரு சிவாஜியால தான் முடியும். 'வயிறு காலி ஆனா கண்ணு சுத்தும்... வாய் பேசினா மனசு முட்டும்'கிற எதார்த்தத்தை அங்க பார்க்கலாம்."
"இப்போ ஒரு உவமை சொல்றேன் கேளுங்க. ஒரு நல்ல மீன் குழம்பு வாசனை வந்தா நாம என்ன பண்ணுவோம்? மூச்சை இழுத்து அந்த மணத்தை ரசிப்போம்ல?
'மீன் கொழம்பு போல மணக்குறா...'
சிவாஜி சார் அந்த வரிகளைப் பாடும்போது, அந்த மீன் குழம்பு வாசனை நம்ம வீட்டுக்குள்ள வர்ற மாதிரி ஒரு ரியாக்ஷன் கொடுப்பாரு.
'ரசத்தப் போல கொதிக்கிறா...'
ரசத்தை அடுப்புல வச்சா டக்குன்னு நுரைச்சுப் பொங்கும்ல? அவளோட கோபமும் அப்படிதான்னு சொல்லும்போது, தன் கைகளை வச்சு ரசம் கொதிக்கிற வேகத்தைச் சைகையில காட்டுவாரு. ஒரு நடிகன் தன் உடம்பையே ஒரு இசைக்கருவி மாதிரி பயன்படுத்துறதுக்கு இது ஒரு கிளாசிக் உதாரணம். விஜயஸ்ரீ செல்லமா கோபப்பட்டு முகத்தைத் திருப்புறப்போ, சிவாஜி சார் ஒரு சிரிப்பு சிரிப்பாரு... அதுல ஒரு ஊரே அடங்கிடும்!"
"பாடலோட உச்சக்கட்டம் இதுதான். இங்கதான் வாலியும் சிவாஜியும் சேர்ந்து 'சமத்துவப் புரட்சி' பண்றாங்க.
குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது…
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது…
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது.
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கெடக்குது…
சமையல் எல்லாம் கலக்குது…
அது சமத்துவத்தை வளர்க்குது…
சாதி சமய பேதமெல்லாம்…
சோத்தைக்கண்டா பறக்குது…
யோசிச்சுப் பாருங்க, 1971-ல ஒரு இஸ்லாமியர் வீட்டு உணவும், ஒரு பிராமணர் வீட்டு உணவும் ஒண்ணுன்னு சொல்ல எவ்வளவு தைரியம் வேணும்?
'மேரியம்மா கேரியரில் எறா இருக்குது... அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கெடக்குது...'
இங்க ஒரு குட்டிக்கதை: ஒருமுறை ஒரு பெரிய அறிஞர்கிட்ட 'சாதி எங்க இருக்கு?'ன்னு கேட்டாங்களாம். அவர் சொன்னாராம், 'மனுஷன் மண்டையிலயும், அவன் மனசுலயும் இருக்கு... ஆனா அவன் வயித்துக்குள்ள இல்ல'ன்னு. அந்தத் தத்துவத்தைத்தான் இங்க சிவாஜி ஆணித்தரமா சொல்றாரு.
'சோத்தைக்கண்டா பறக்குது!' - இந்த வரியைப் பாடும்போது கைகளை விரிச்சு அந்தச் சாதி மதமெல்லாம் பறந்து போற மாதிரி ஒரு நடிப்பு. அந்த இடத்துல அவர் ஒரு நடிகனா இல்ல, ஒரு தீர்க்கதரிசியா தெரிவாரு. 'பசிக்கு எதுக்குடா மதம்?'னு அவர் கேட்குற கேள்வி இன்னைக்கும் தேவையானது!"
"கடைசியா இந்தப் பாட்டைப் பத்தி யோசிச்சா, இது ஒரு வெறும் மியூசிக்கல் வீடியோ இல்ல. இது ஒரு காலப் பெட்டகம். விஜயஸ்ரீயோட அந்த இளமைத் துள்ளல் ஒரு பக்கம்னா, சிவாஜி கணேசனோட அந்த முதிர்ச்சியான, எதார்த்தமான நடிப்பு இன்னொரு பக்கம்.
சிவாஜி சார் ஒருமுறை சொன்னாராம், 'நான் ரிக்*ஷாக்காரனா நடிக்கும்போது என் உடம்புல அந்த ரிக்*ஷாக்காரனோட வேர்வை மணம் வீசணும்'னு.
அந்த கஞ்சி கலயத்தை அவர் பார்க்கும் பார்வையில இருக்குற அந்த ஏக்கம்... அது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தோட ஏக்கம்.
எம்.எஸ்.வி சாரோட அந்த நாட்டுப்புற 'மெலடி'யும், வாலியோட 'சமத்துவத்' தமிழும், சிவாஜியோட 'சிகர' நடிப்பும் சேர்ந்ததாலதான் 50 வருஷம் தாண்டியும் இந்தப் பாட்டு அழியாம நிக்குது. இன்னைக்கு நாம பெரிய ஹோட்டல்ல ஏசி-யில உட்கார்ந்து சாப்பிட்டாலும், ஒரு தெருவோரம் அந்த ரிக்*ஷாக்காரர் கஞ்சி குடிக்கிறப்போ கிடைக்கிற அந்தத் திருப்தியை இந்த 'வரதப்பா' பாட்டு நமக்கு அப்படியே கடத்தும்.
சிவாஜியோட நடிப்பும்,வாலியின் வரிகளும்,MSV யின் இசையையும் பாருங்க.
அதுல ஒரு கலைக் காவியமே ஒளிஞ்சிருக்கும்.
உங்கள் எல்லோருக்கும் அன்னலட்சுமியின் ஆசி கிடைக்கட்டும்! நன்றி, வணக்கம்!"
செந்தில்வேல் சிவராஜ்....
நன்றி! Sivaji Murasu
-
1 Attachment(s)
Attachment 6236
டிசம்பர் 1966 பேசும் படம் பத்திரிக்கையில் எல்லாம் வல்லவர் என்ற தலைப்பில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய சுவையான செய்திகளில் ஒரு பகுதி
திரைப் படத் துறையில் நடிப்பைப் பொருத்த வரையில் ஈடு இணையற்ற கதாநாயகனாக விளங்கு பவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர்தான். அவரது வரவுக்குப் பிறகு தான் நடிப்பில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது அவரைப்போல நடக்கவும் நடிக்க வும் பேசவும் முயற்சித்தவர்கள் பலர். அந்த முயற்சி இன்னும் தொடருவதால், அவர் தனித்துப் பிரகாசிக்கிறார் என்பது தெள் ளத் தெளியப் புலனாகிறது
சிவாஜி கணேசன் 1952-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று திரையிடப்பட்ட “பராசக்தி படத்தின் மூலம தமிழ்ப் பட ரசி கர்களுக்கு அறி முகமானார். அதே படத்தின் மூலம் அவர் நக்ஷத்திர நடிகராகவும் மதிக்கப்பட்டார். மற்ற எந்த நடி கருக்கும் கிட் டாத வாய்ப்பு ஒன்று நடிகர் திலகத்திற்கு கிடைத்துள்ளது
பிரதி வருடமும் ஏதாவ தொரு புரட்சிகரமான படத்தில் புதுமையான பாத்திரத்தில் நடித்து தனியே ஒளிவீசுகிறார்,
"பராசக்தி" படத்தில் அவரது நடிப்பும், கணீரென்று தெளிவாக வசனம ் பேசும் திறனும் அவரை நக்ஷத்திர நடிகராக்கி விட்டன.
மறு ஆண்டில் அவர் சில படங் களில் நடித்தார். ஆனாலும் மாடர்ன்தியேட்டச் ஸீன் "திரும்பிப் பார்" படம் ஒரு பரபரப்பை ஏற் படுத்தியது. வில்லனையே கதா நாயகனாகக் கொண்ட அந்தப் படத்தில் காமுக னாகத் தோன்றி அபூர்வ மாக நடித்தார். இந்த இரண்டு படங் களுக்கும் மு. கருணாநிதி வசனம் எழுதி யிருந்தார் . அவரது அழகு தமிழ் வசனங்களை (கடமுடா வசனம் என்றே பலரும் குறிப்பிட்டார்கள்) கவர்ச்சிகரமாகவும் பாவம் குன்றாமலும் பேசி நடிக்கக் கூடியவர் கணேசன் ஒருவர்தான் என்று பலரும் அபிப்பிராயப் பட்டார்கள்
Thanks RajaLuxmy (Sivaji Murasu)
-
1 Attachment(s)
Attachment 6237
தமிழ் சினிமாவின் பொற்காலம்...
1000 கோடி என்ன? 5000கோடி என்ன ?எத்தனையோ கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில் பேசப்படுவான்.
அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை
ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்
முதலில் வரும்.
உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும்.
ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட நவராத்திரி நடிப்புக்கு ஈடு செய்ய எவராலும் முடியாது.
அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை ஆராய்ச்சி செய்தால் ,
அது கூட " error " என்று தான் காட்டும்.
இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை
சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது
சொல்ல வேண்டியது வரும்.
எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின் "பா "
வரிசை படங்கள் சொல்லிய பண்பு பண்பாடு பாசம் பந்தம் பரிவு பக்தி பாவம் பரோபகாரம் படிப்பினை பகுத்தறிவை எளிமையாக ,அழகாக எடுத்துச் சொல்ல எந்த டிஜிட்டலும் உத்திகளும் உதவாது.
மனிதக்குரலில் இடிமுழக்கம் என்று திரைக்கலையை ஆய்வு செய்தால் சிவாஜியின் படங்களே வரிசை கட்டி வரும்.
சிங்கமது பேசும் சக்தி பெற்று வீர கர்ஜனை செய்யும் போது அது கர்ணனின் குரலை கேட்டால் சப்தநாடியும் ஒடுங்கும்.
நூற்றாண்டு நிகழ்வுகளின் வளர்ச்சி நம்மை நிலாவுக்கு புலம் பெயர வைத்தாலும் "அந்தநாள் ஞாபகம் "
என்பதை தமிழன் நினைக்கும் போது உயர்ந்த மனிதனின் பாடலலைத்தான் நெஞ்சம் நினைக்கும்.
இன்னும் ஆயிரம் வருடங்கள் கழிந்து ,
ராஜ ராஜ சோழனின் 2000 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் போதும் நடிகர்திலகத்தின் திருமுகம் தான் நினைவுக்கு வரும்.
இந்தியாவின் 500 வது சுதந்திர தினவிழாவானாலும், 1000 வது சுதந்திர தின விழாவானாலும் தொலைக்காட்சிகள் தேசபக்தி பாடலாக "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை தான் ஒளிபரப்பும்.
காலங்கள் கரைக்கும் காட்டு இரைச்சல் இசைகளினூடே, பட்டிக்காட்டு ராகங்களில் "கேட்டுக்கோடி உருமிமேளம் "பாடலுக்கு என்றும் தனி மதிப்பிருக்கும் .
வெஸ்டர்ன் காதலும்,வெட்கம் மறந்த காதலும் சமுகத்தின் கலாச்சாரமாய் மாறும் , இன்னும் சில காலங்களில்.
அப்போதும் வசந்த மாளிகையை பார்ப்பவன் வியப்பான்.
ரசிகனை உருவாக்கும் சக்தி எப்போதும்
வசந்தமாளிகைக்கு உண்டு.
அடுத்த நூற்றாண்டில் மட்டுமல்ல ,அனைத்து தலை முறையிலும் தலை சிறந்த கலைஞன் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜிக்கு இருக்கும்.
60 வயது காதலை 20 வயதும் ரசிக்கும் படமாக ஒரே ஒரு படம்தான் எக்காலத்திலும் நினைக்கப்படும்.அது முதல் மரியாதை.
உலகின் பாதியை வியப்படைய வைத்த ஒரு பிராந்திய மொழி கலைஞன் என்ற கேள்வி வருமானால் அது சிவாஜி என்ற ஓரே ஒரு பெயரோடு முற்றுப் பெற்று விடும்.
இறக்கை கட்டிக் கொண்டு மனிதன் பறக்கும் விஞ்ஞான வளர்ச்சி தோன்றினாலும் ,திருவிழாக்களிலும் , கோவில் விழாக்களிலும் , திருவிளையாடல் ஒலிச்சித்திரம் தான்
ஒலிக்கும்.
Big bang எனப்படும் பெருவெடிப்பை தமிழ்சினிமாவில் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் 1952 ஆம் வருடத்தைதான் சொல்ல வேண்டும்.
சினிமாவே பார்க்காதவர்களையும் பார்க்க வைத்ததில் அதிக ஆற்றல் படைத்த கலைஞர்களின்புள்ளி விபரங்களை எடுத்தோமானால் அதில் நடிகர்திலகமே முதலில் இருப்பார்.
ட்ரெண்ட் செட்டிங் எனப்படும் இப்பொழுது வெளியாகும் ஒரு திரைப்பாடல் உதாரணமாக 100 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தாலும், இன்று பார்த்த நடிகர்திலகத்தின் திரைப்பாடல் 2099 வருடத்திலும் பார்க்கப்படும்.உண்மையான ட்ரெண்ட் செட்டிங் என்று இதை தான்கூற வேண்டும்.
ஒரு சரித்திரம் இதோடு முடிந்து விட்டது என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டியது வரும்.எந்த வகையிலே என்றால் தமிழனின் சிறந்த கலாச்சார படமாக இதை விட இனி எதுவும் எடுக்க முடியாது என்பதில்தான்.
காவல் துறைக்கு பெருமை சேர்த்த படங்களாக பலவற்றை சொல்வதுண்டு.ஆனால் ,காவல்துறையே
தங்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக தங்கப்பதக்கத்தை தான் சொல்லும்.
மேலும் ,காவல்துறை தன் கொள்கை விளக்க படமாக சொல்ல விரும்பினால் தங்கப்பதக்கத்தை சொல்வதில் தான் பெருமை கொள்ளும்.
காவல்துறை அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாடமெடுக்க விரும்பினால், s.p.சௌத்ரீயை முன்னுதாரணமாக காட்டி
பாடமெடுத்தால் காவல்துறையின் பாடச்சுமை குறையும்.
பாடல்களே இல்லாத படங்கள் புதிது புதிதாய் எந்த நாளும் வரலாம்.பாடல்களே படங்களாக வந்த காலத்தில் வந்த "அந்த நாளை"ப் போல் புதுமையாகுமா? .
ஆயிரக்கணக்கான கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு நூறு வருடங்கள் கடந்த பின்னும், இணையங்களில் தமிழ் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் பற்றிய 'சர்வே ' எடுக்கப்படுமானால் அதிகமாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களே இருக்கும்.
தேசபக்தி சார்ந்த ஆவண திரைப்படங்களாக இந்தியநாடு பத்திரப்படுத்த விரும்பினால் நடிகர்திலகத்தின் பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் தான் அதற்கு கை கொடுக்கும்.
மேக்கப் கலை வளர்ச்சியை வைத்து ஒரு டாக்குமென்டரி தயாரிக்கும் போது, கடந்தகாலங்களில் மேக்கப் எப்படி செய்யப்பட்டது என்று ஆராயப்பட்டால்
40, 50 வருடங்களுக்கு முன்பு வந்த குழந்தைகள் கண்ட குடியரசு, நான் வணங்கும் தெய்வம், திருவருட்செல்வர் படங்களை பார்த்தால் ,இன்றைய வளர்ச்சி
கொடுத்த பிரமிப்பை விட அது அதிகமாகவே இருக்கும்.
டிஜிட்டல் தொழில் நுட்ப உத்திகளும், வளர்ச்சிகளும் அதிமாகிக் கொண்டே இருக்கலாம்.
எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருந்தாலும்,
நடிப்பை தேட மட்டும் நடிகர்திலகமே பயன் தருவார்.
நன்றி..
செந்தில்வேல் சிவராஜ்.