-
முந்தைய பதிவின் தொடர்ச்சி...
சகோதரி சாரதாவுக்கு "ராஜா"வைப் பற்றி எழுத 10 பக்கம் வேண்டும் என்றால், அடியேனுக்கு "வசந்த மாளிகை" குறித்து எழுத ஒரு தனித்திரியே தேவை. அடியேன் பூமிக்கு வந்த எட்டாவது நாளில்(29.9.1972) வெளிவந்த காவியம். அடியேன் நடத்திய (நடத்தப் போகிற) - முழுக்க முழுக்க வாழ்வியல் திலகத்தின் புகழ் பாடுகின்ற - பத்திரிகைக்கும் (வசந்த மாளிகை) பெயராக அமைந்தது. 'Hai Handsome!' என்று யாரைக் கூப்பிட முடியும் "வசந்த மாளிகை" ஆனந்தைத் தவிர. படம் முழுமையுமே - இன்பத்தில் மிதந்தாலும் சரி, துன்பத்தில் திளைத்தாலும் சரி - the most handsome heroவாகக் காட்சியளிப்பார். படத்தின் நடுவில் வரும் ஒரு காட்சியில், அவரது அறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் மேஜையின் மேல் இருக்கும் வசந்த மாளிகையின் வரைபடத்தை வனப்புடன் பார்த்து, பின் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சற்று அண்ணாந்து "வசந்த மாளிகை" என்பாரே, கோடி கொடுக்கலாம் அந்த ஒரு சீனுக்கு. மழை சோவென்று ஜோராகக் கொட்டிக் கொண்டிருக்க, ஒரு குடிசையில் சொட்ட சொட்ட ஜோடியாக நுழைவர் ஆனந்தும், லதாவும். நனைந்த முந்தானையை லதா ஒட்டப் பிழிய, ஆனந்தின் பற்கள் plumsஐ சாறு பிழியும். காதலி லதாவின் இளமையை, அழகை ஆனந்தின் காந்தக்கண்கள் சுவைத்து ரசிக்க, கண்களுக்கு போட்டியாக அவரது வாய் plumsஐ சுவைத்து மகிழும். பின்னர் அங்கு 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி?!' (Sorry Joe) என எடுத்து அந்தக் கொள்ளிக்கட்டையால் சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, அப்பப்பா... கொள்ளிக்கட்டையால் சிகரெட்டை ஸடைலாக பற்ற வைத்தவர் உலகிலேயே நமது ஸ்டைல் சக்கரவர்த்தி ஒருவராகத்தான் இருக்க முடியும்.
தெலுங்கில் "பிரேம நகர்(1971)" இமாலய வெற்றி என்றால், தமிழில் "வசந்த மாளிகை(1972)" விண்ணைத் தொடும் வெற்றி! இந்தியாவில் 200 நாட்களும், வெளிநாடான இலங்கையில் 287 நாட்களும் ஓடி மெகாமகாஹிட். இப்படி நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் 200 நாட்களைக் கடந்த இரண்டாவது படம் "வசந்த மாளிகை". முதல் படம், நடிகர் திலகத்தின் முதல் படம் "பராசக்தி(1952)". இந்தியாவில் 245 நாட்களும், இலங்கையில் 294 நாட்களும் ஓடியது. "வசந்த மாளிகை"யின் விண்ணை வீழ்த்திய வெற்றி, தெலுங்கு படத் தயாரிப்பாளர்களையெல்லாம் தமிழ்ப்படவுலகின் பக்கம் திருப்பியது. அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கலானார்கள். 1931- ம் ஆண்டு தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு தற்பொழுது முத்துவிழா ஆண்டு [80வது ஆண்டு]. இந்த 80 ஆண்டுகளில், மறுவெளியீடுகளில், தென்னகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் "வசந்த மாளிகை" ஓடியிருப்பதைப் போல் வேறு எந்தப்படமும் ஓடியதில்லை என அடித்துக் கூற முடியும். வெள்ளித்திரையில் மட்டுமா, சின்னத்திரையிலும் சரி, VCD-DVD விற்பனையிலும் சரி, மாளிகைக்கு நிகர் மாளிகையே. சிவாஜி அவர்களை நேரில் பார்க்காத கண்கள் இருக்கலாம். ஆனால் "வசந்த மாளிகை" திரைக்காவியத்தை திரையில் காணாத கண்கள் இருக்க முடியாது, இருக்கவே முடியாது.
ஆடல்-பாடல் இல்லாத படத்தில் நடிப்பார், காலில் செருப்பு அணியாமல் படம் முழுமையும் நடிப்பார், ஜோடியை நாடுவோரிடையே ஜோடியில்லாமல் நடிப்பார், படத்தில் பாட்டிருக்க தான் மட்டும் பாடாமல் நடிப்பார், வெறும் வேட்டி-சட்டையில் மட்டுமே மைல்கல்லை(150)த் தாண்டுவார்,
ஓரே பேண்ட்-ஷர்டிலும் படம் முழுவதும் வலம் வருவார், "நீதி(1972)"யை வாழ வைப்பதற்காக. நீதியைப் பொறுத்தவரை அதில் பங்கு கொண்ட எல்லோருமே நன்றாகச் செய்திருப்பார்கள். நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ! சிறந்த கலைஞரான சந்திரபாபு போன்றோரெல்லாம் சிதிலமடைந்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் அவருக்கு தொடர்ந்து நல்ல ரோல் கொடுக்கச் செய்திருப்பார். "நீதி" - 100 நாள் பெருவெற்றிப்படம்.
அமைதியையும், அதிரடியையும் ஓரே படத்தில் காண வேண்டுமா?! பாருங்கள் "எங்கள் தங்க ராஜா(1973)". பட்டாக்கத்தி பைரவன் அதிரடியின் உச்சம்! டாக்டர் ராஜா அமைதியின் உச்சம்! ஒரே நபர் இரு வேடங்களில் உச்சங்களைத் தொடும் போது மற்றவர்க்கு ஏது மிச்சம்?! "எங்கள் தங்க ராஜா" - 100 நாள் இமாலய வெற்றிப்படம். பாரிஸ்டர் மட்டும் சற்று தாமதித்திருந்தால், பைரவன் தனது பட்டாக்கத்தியை வெள்ளிவிழா வரை வீசியிருப்பார். ("பாரிஸ்டர் தாமதமாக வரணுமா, சொல்வது யார் பம்மலாரா, யோவ் பம்மலாரே, உடம்பு எப்படி இருக்கு?!" என பாரிஸ்டரின் மெய்க்காப்பளர் மோகனரங்கன் முணுமுணுப்பது காதில் விழுகிறது).
அகம் அழும், புறம் சிரிக்கும் : "அவன் தான் மனிதன்(1975)" ரவிகுமார். படம் முழுமையும் அவரது முகத்தில் கம்பீரமும், மிடுக்கும் சிலிர்த்தோடும். அதனூடே ஒரு மெல்லிய சோகமும் இழைந்தோடும். நூலின் மேல் நடப்பது போன்ற கடினமான கதாபாத்திரம். 'ஃப்பூ' என அதை ஊதித் தள்ளியிருப்பார் நடிகர் திலகம். இப்படம் தங்களின் மூன்றாவது பிரிவில் தான் சேர வேண்டும். ஏனெனில், இன்றளவும் பற்பல ரசிகர்கள் அவரது 288 திரைப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மட்டுமல்ல, தங்களுக்கு பித்து பிடித்த படமாகவும் கூறுவது இந்தப்படத்தைத்தான். 100 நாள் சூப்பர்ஹிட் காவியம் என்பதில் மாற்றுக் கருத்தும் உண்டோ!
'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.
இந்த எளியேனுக்கு தெரிந்த ஏதோ சில தகவல்களையும் சேர்த்து, தங்களது கட்டுரைக்கு பதில் பதிவாக பதிவிட, தங்களது கட்டுரையின் மூலம் ஒரு வாய்ப்பை நல்கியமைக்கு மனமார்ந்த நன்றி!
தங்களின் அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பாரத்தசாரதி,
நடிகர்திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றிய ஆய்வு மிகப்பிரமாதம். வெகு நேர்த்தியாக அச்லையும் நகலையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது, பம்மலார் சொன்னது போல, நடிகர்திலகம் ஒரு ரீமேக் படத்தில் நடித்துவிட்டாரென்றால், இவர் நடித்தது அசல் என்றாகி, ஒரிஜினல் படம் நகலென்றாகி விடும். அந்த அளவுக்கு மெருகேற்றி விடுவார்.
கூடவே தெலுங்கு, இந்தி, கன்னபடங்களின் மூலப்படம் பற்றிய அரிய தகவல்களும் சுவையாக உள்ளன. இத்தகவல்கள் நாங்கள் அறிந்திராதவை. அவன்தான் மனிதன் படத்தில், ஊஞ்சலுக்குப்பூச்சூட்டி பாடலின்போது, கால் சரியானதும், கையில் குடையைப்பிடித்துக்கொண்டு சிறுகுழந்தயைப்போல துள்ளி ஓடும் குதூகலம், மெரூன் கலர் டிரஸ்ஸில் (பம்மலாரிடம் நீங்கள் மேற்கோள் காட்டியிருந்த) மேட்டின் மீது ஒருமாதிரி கையை வீசிக்கொண்டு நடக்கும் அழகு இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதுபோல ஜெயலலிதாவை சந்திக்க இருக்கும் கட்டத்தில் கருப்பு கோட்டை செலக்ட் செய்து அணிந்துகொண்டு, கண்ணாடியைப்பார்த்து நெற்றியிலிருக்கும் ஒரே ஒரு நரைத்த முடியை பிடுங்கும் லாவகம், மற்றும் 'மனிதன் நினைப்பதுண்டு' பாடலில் கடற்கரையில் நடக்கும்போது தோளில் அமர்ந்திருக்கும் புறா விழுந்துவிடாமல் கவனமாக அதே சமயம் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல முகபாவம் காட்டுவது எல்லாமே ஏக அமர்க்களம்.(படத்தில் மேஜர்தான் சற்று லிமிட் தாண்டிவிட்டாரோ என்று எண்ணத்தூண்டும்).
பாபு படத்துக்கு 'விகடன்' எழுதியிருந்த விமர்சனத்தில், 'என்னதான் படத்தின் இளமைக்கும் காதல் காட்சிகளுக்கும் சிவகுமாரும் நிர்மலாவும் பொறுப்பேற்றிருந்தாலும், நம்மை மிகவும் கவர்வது படத்தின் துவக்கத்தில் சட்டென்று மின்னல் போல தோன்றி மறைந்த சிவாஜி விஜயஷ்ரீ காதல்தான்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து உங்கள் ஆய்வுக்கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
-
டியர் பம்மலார்,
சாரதியின் கட்டுரைக்கு பதில் சொல்லும் முகமாக, நீங்களும் அற்புதமான ஆய்வுக்கட்டுரை எழுதிவிட்டீர்கள். குறிப்பாக 'வசந்த மாளிகை' பற்றிய ஆய்வு. (என்ன இருந்தாலும், பல ஆண்டுகள் 'வசந்த மாளிகை'யில் குடியிருந்தவர் அல்லவா தாங்கள்).
கூடவே, நமக்கு எப்போதும் இனிக்கும் கற்கண்டாகத்திகழும், சாதனை விவரங்கள். எந்த எந்தப்படங்களுக்கு எந்தப்படங்கள் இடைஞ்சலாக வந்தன. அவை எப்படி ஒன்றையொன்று முந்தி சாதனைச் சுவடுகளைப்பதித்தன என்ற விவரங்கள்.
1970 படங்களைப் பற்றிச்சொல்லும்போது 'வியட்நாம் வீடு' வரை வந்தீர்கள். அதற்கடுத்துதான் நம் மனதில் தீராத வலியாக, நீங்காத வடுவாக அமைந்த ஒரு விஷயம்.... சிகரங்கள் சங்கமித்து, மிக அற்புதமான படமாக அமைந்தும் மக்களால் கொண்டாடப்படாத "எதிரொலி". சமீபத்தில்கூட அப்படத்தை ஒரு சேனலில் ஒளிபரப்பினர். என்ன அருமையான படம், என்ன அழகான கதைமுடிச்சு, எப்படிப்பட்ட நேர்த்தியான இயக்கம், நடிகர்திலகத்தின் இமாலய பெர்பார்மென்ஸ், அதற்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும்... சும்மா சொல்லவில்லை... ஒவ்வொருவரும் நடித்திருந்த விதம், எவ்வளவு நட்சத்திரங்கள்.... நடிகர்திலகம், புன்னகை அரசி, இலட்சிய நடிகர், மேஜர் (வில்லன்), டி.எஸ்.பாலையா, சிவகுமார், லட்சுமி, நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர், வி.எஸ்.ராகவன், ரோஜாரமணி.. இவர்களோடு, தங்கள் வழக்கமான கவர்ச்சி நடிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு, குணசித்திர நடிப்பில் அசத்திய விஜயலலிதா, ஜோதிலட்சுமி... இவர்களோடு இப்படமெனும் கப்பலை மிக சிறப்பாக செலுத்திய இயக்குனர் சிகரம் கே.பி....
தமிழக மக்கள் எதை எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.....????????????????????????.
//'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.//
மிகச்சரியாகச்சொன்னீர்கள். முன்பெல்லாம் 1965 பொங்கல், 1970 பொங்கல் இவற்றோடு போரிட வரும் மாற்று முகாமினரைத்தாக்க, நான் கைக்கொள்ளும் பிரம்மாஸ்திரம் 1971 தீபாவளிதான். இந்தப்பக்கம் கருப்புவெள்ளை, ஓட்டைக்குடிசை, கைரிக்ஷா.. அந்தப்பக்கமோ வண்ணம், பிரம்மாண்டம், இரட்டை வேடங்கள். (இப்போது எதிர்ப்புக்கள் நீர்த்துப்போய் விட்டதால் நானும் பேசுவதில்லை).
நீங்கள் சொன்னதுபோல 'பாரிஸ்ட்டர்' தாமத்திக்க வேண்டியது கூட அவசியமில்லை. வேறு கோர்ட்டுக்கு (அரங்குக்கு) போயிருந்தால் கூட, டாக்டரும் பைரவனும் வெள்ளிவிழாவைக் கண்டிருப்பார்கள். ஆனால் உயர்நீதி மன்றத்துக்குத்தான் வருவேன் என்று வந்ததாலேயே 119 நாட்களில், மக்கள் ஆதரவு இருந்தும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. இப்படி தவறவிட்டவை நிறைய.
வழக்கம்போல அசத்துகிறீர்கள். மேலும் மேலும் அசத்திக்கொண்டேயிருங்கள்.
-
டியர் பம்மலார் சார்,
தங்களின் பாராட்டுதல்களுக்கு நன்றி. உங்களைப் போன்ற தொடர்ந்து அரிய தொண்டாற்றி வருபவர்களா தங்களை "எளியேன்" என்று சொல்வது. இது உங்கள் அவை அடக்கத்தைக் காட்டுகிறது. பல புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தங்கள் முன் நான் முன் எம்மாத்திரம்? இருப்பினும், இந்தக் கட்டுரை உங்களை மேலும் விரிவாக நடிகர் திலகத்தின் சாதனைகளையும் அவரது அற்புத நடிப்பினையும் எழுத தூண்டியதற்கு நான் கடவுளுக்கும் கலைக்கடவுள் நடிகர் திலகத்துக்கும் நன்றி கூறுகிறேன்.
இந்தக் கட்டுரைகளை இன்னமும் விரிவாக பதிய முயற்சி செய்தேன். நேரமின்மை காரணாமாக முடியவில்லை. முக்கியமாக, எங்கள் தங்க ராஜாவில் வரும் அந்த பட்டாக் கத்தி பைரவன் கதாபாத்திரத்தையும் அதில் அவர் காட்டிய அந்த energy -யையும். இன்னும் வசந்த மாளிகையைப் பற்றிக் குறிப்பிடும் போது, பல இடங்கள். கடைசி நேரத்தில் இந்தக் கட்டுரையை upload செய்யும்போது, பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் பதிவு செய்யக் கூடாது (இது இந்தக் கட்டுரையின் இரண்டாவது பாகத்திற்கு மட்டும்) என்று ஒரு டயலாக் பாக்ஸ் வந்தது. அதனால், சில கருத்துகளை நீக்கி பதிய வேண்டியதாகி விட்டது.
இனி வரும் கட்டுரைகளில், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து விடலாம் என்று யோசித்தால், அது முடியாத காரியமல்லவே. ஏனென்றால், எவ்வளவு முறை எழுதினாலும், எத்தனை பேர் எழுதினாலும், புதியதாக ஒரு சிந்தனையும், அலசலும், ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகரும் பதிந்து கொண்டேதான் இருப்பார். இருந்தாலும், விடாது முயற்சி செய்வோம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
சாரதா மேடம்,
தங்களின் பாராட்டுதல்களுக்கு நன்றி. இந்தக் கட்டுரை உங்களையும், பம்மலார் சாரையும் மேலும் விரிவாக நடிகர் திலகத்தின் சாதனைகளையும் அவரது அற்புத நடிப்பினையும் எழுத தூண்டியதற்கு நான் கடவுளுக்கும், கலைக்கடவுள் நடிகர் திலகத்துக்கும் நன்றி கூறுகிறேன்.
ஒரு சிறிய திருத்தும். நடிகர் திலகம் "அன்பு நடமாடும்" பாடலின்போது தன் கடைசி சரணத்தில், ஊன்றுகோலாய் எரிந்து விட்டு ஒருமாதிரி ஸ்டைலாக குடையைப் பிடித்தபடி ஓடி வந்து பாடத் துவங்குவார்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
விரைவில் வருகிறது
சென்னை 'சாந்தி சினிமாஸ்'ஸில்
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"
அரங்க வளாகத்தில் இக்காவியம் வெளிவரப்போவதைக் குறிக்கும் வண்ணம் மூன்று டிசைன்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
பொதுமக்களும், ரசிகர்களும் மலைப்புடன் பார்த்து செல்கின்றனர்.
சிவபெருமானின் நாயன்மார்களை வரவேற்க சிவாஜி பெருமானின் நாயன்மார்கள் காத்திருக்கின்றனர்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
சகோதரி சாரதா,
தங்களின் வசந்தமான பாராட்டுக்கு எனது வளமான நன்றிகள் !
50 நாள் படமான "எதிரொலி", மிகப் பெரிய அளவில் ஒலிக்காதது வலிக்கத் தான் செய்கிறது.
தாங்கள் குறிப்பிட்டது போல் பாரிஸ்டர் 25.10.1973 அன்று உயர்நீதிமன்றத்துக்கு(சென்னை 'சாந்தி')த் தான் வந்தார். 15.7.1973 முதல் இங்கே தனது பட்டாக்கத்தியை பறக்க விட்ட பைரவர், பாரிஸ்டருக்காக வழிவிடும் போது 102 வெற்றி நாட்களை பூர்த்தி செய்திருந்தார். தாங்கள் குறிப்பிட்ட 119 நாட்கள் என்பது, பைரவர் அவர்கள், கடல் கடந்த இலங்கையில் ஜெயக்கொடி நாட்டிய நாட்கள்.
ராஜ பைரவர் (Raja-Bhairavar), சென்னை(3 அரங்குகள்), மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை, நாஞ்சில், கொழும்பு, யாழ்ப்பாணம் என இந்தியாவிலும், இலங்கையிலும் மொத்தம் 9 ஊர்களில் (11 அரங்குகளில்) 100 நாட்களைக் கடந்தார்.
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் உயர்வான பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! நம் எல்லோரையுமே, நமது இதயதெய்வமான நடிகர் தில்கம் தான், நம்முள்ளிருந்து இயக்கி நம்மை எழுத வைக்கிறார். எல்லாப்புகழும் இதயதெய்வத்திற்கே! நாம் அனைவரும் அவரது திருத்தொண்டர்கள். தாங்கள் குறிப்பிட்டது போல் விடாது முயற்சி செய்து அவர் புகழ் பாடுவோம்!
அன்புடன்,
பம்மலார்.
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 177
கே: ஜெயலலிதாவை மேடையில் முதலில் பாராட்டிய நடிகர் யார்? (கே.எல்.சிவாஜி கன்னியப்பன், மலேசியா)
ப: சிவாஜி கணேசன். ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்துப் பாராட்டிய அவர், "தங்கச்சிலை" என்று ஜெயலலிதாவையும் குறிப்பிட்டிருக்கிறார்.
(ஆதாரம் : பொம்மை, ஜூன் 1969)
இன்று 24.2.2011 முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் திலகத்துடன் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர், கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 63வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மலார்.
-
எனக்கு, 1981 -இல் இருந்து ஒரு புதிய நண்பன் அறிமுகம் ஆனான். அவன் என்னை விட 5 வயது மூத்தவனாயிருந்தாலும், ரொம்பவே நெருக்கம் என்பதால், உரிமையோடு ஏக வசனத்தில் அழைக்கிறேன். அவனும் நடிகர் திலகத்தின் பக்தன் தான். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் "இருவர் உள்ளம்". அதற்கு முன், அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. நடிகர் திலகம் நடித்த 1967 -க்கு முன் வந்த படங்களை 1978 - க்கு மேல் தான் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன். அது ஒரு working week. மேலும், காலைக் காட்சி, ஆனால், திரை அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இருவர் உள்ளம் அப்போது (1982 -83 என்று நினைவு) சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டு நூறு நாட்களை ஷிப்டிங் முறையில் கடந்து சென்னையையே உலுக்கி விட்டது. இத்தனைக்கும், ரஜினி, கமல் மற்றும் இளைய தலைமுறை நடிகர்கள் அநேகமாக தங்களை establish செய்து விட்டிருந்தனர்.
பலரும், படம் ஆரம்பித்து விட்டதா என வினவிக் கொண்டே அவசர அவசரமாக அரங்கத்தினுள் நுழைந்து கொண்டிருந்தனர். படம் தொடங்குவதற்கு முன்னர், அநேகமாக ஒருவர் கூட விடாமல், அனைவரும் அரங்கத்தினுள் நுழைந்து விட்டனர். எனக்கு புரியவில்லை. என் நண்பன் சொன்னான் "இந்தப் படம் மற்றும் வசந்த மாளிகை-ஐயும் பார்த்து தான் நான் நடிகர் திலகத்தின் பக்தனானேன் என்று கூறி, இந்த இரண்டு படத்திலும், முக்கியமாக, இருவர் உள்ளம் படத்தில், டைட்டில் காட்சியிலிருந்தே, நடிகர் திலகத்தின் ஆட்சி ஆரம்பமாகி விடும். பார்த்து ரசி என்றான். (இரண்டு படங்களும் அநேகமாக ஒரே ஸ்டோரி லைன் தான்). டைட்டில் ஓட ஆரம்பித்தவுடன், காரில் அமர்ந்து கொண்டே, நடிகர் திலகம் படா ஸ்டைலாக, தன் தலையிலிருந்து தொப்பியை எடுத்து, அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து "ஹலோ" என்று அறிமுகப் படுத்திக் கொள்வது போல் ஆரம்பித்த உடனே எழுந்த ஆரவாரம், பாடல் முடிவடையும் வரை அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போனது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதுவும் அந்தப் பாடலின் கடைசி சரணத்தில், "இரவு பகல் என்று எதுவுமில்லை இங்கு.." என்று ஆரம்பிக்கும்போது, தனது தொப்பியைப் பிடித்துக் கொண்டே அவர் ஒரு நடை நடப்பார். எனக்குத் தெரிந்து, ஆபரேடர் கூட படத்தை ஓட்ட மறந்து, கை தட்டி ஆர்ப்பரித்திருப்பார். அதற்குப் பின், இருவர் உள்ளம் படத்தை குறைந்தது இருபது முறை பார்த்திருப்பேன். இந்தப் படத்தில் உள்ளது போன்ற ஒரு flow -வை அதற்கு முன்னரும் பின்னரும், இது வரையிலும், தில்லானா மோகனாம்பாள் தவிர்த்து வேறெந்தப் படத்திலும் கண்டதில்லை. இந்தப் படத்தின் DVD சற்று முன்னர்தான் வெளியிடப் பட்டது.
அன்புடன்,
பார்த்தசாரதி