Originally Posted by RAGHAVENDRA
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியுள்ளது போல் நடிகர் திலகம் ஒரு மனோரஞ்சித மலர். எத்தனை முறை முகர்ந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய மணம் வீசும் மலரே மனோரஞ்சிதம். அது போன்று ஒவ்வொரு முறையும் புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு நமக்கு புதிய அனுபவங்களைத் தருகிறது, புதிய பாடங்களைத் தருகிறது, புதிய ரசனையைத் தருகிறது ....
நேற்று திங்கட்கிழமை ஜெயா தொலைக்காட்சியின் சிறப்புத் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வியட்நாம் வீடு சுந்தரம் தொகுத்து வழங்கினார். பெரும்பாலானவை நடிகர் திலகத்தின் பாடல்களே. இருந்தாலும் ஒரு புதிய தகவல் நம்மை மெய்மறக்க, மெய்சிலிர்க்கச் செய்கிறது.
சட்டி சுட்டதடா பாடல் காட்சி ... படமாக்கப் பட்ட இடம் பாறைகளாலான பகுதி... காமிராவைப் பொருத்திப் படமாக்க சரியான வசதி, வழி, இடம் யாவும் இல்லாத சூழ்நிலை. இயக்குநர் சங்கரும் ஒளிப்பதிவாளர் தம்புவும் சேர்ந்து முடிவெடுத்தபடி அப்பாடல் முழுவதும் கிரேனிலேயே படமாக்க தீர்மானிக்கப்பட்டது. அதே போல் முழுப்பாடலையும் - நடுவில் வரும் உள்ளரங்க தொகுப்புக் காட்சி தவிர - வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் கிரேனிலேயே படமாக்கப் பட்டுள்ளது. எண்ணற்ற முறை அப்பாடலைப் பார்த்துள்ள நாம், இத்தகவலைக் கேட்ட பின் இப் பாடலைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மலைப்பாக உள்ளது. காமிரா தொழில் நுட்பம், கோணங்கள் இவற்றுக்கேற்றவாறு அதுவும் கிரேனிலேயே முழுப்பாடலுக்கும் ஒளிப்பதிவு செய்யப்படும் போது அதற்கேற்றவாறு நடிப்பதென்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இப்படி திரைக்கலையின் அத்தனை தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொண்டும், முந்திரிக்கொட்டைத்தனம் செய்யாமல், அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளாமல், மேதாவி போல் காட்டிக் கொள்ளாமல், நிறைகுடம் தளும்பாது என்ற மொழிக்கேற்ப, இயக்குநர் மாலுமியைக் கடவுள் போல் பாவித்து தொழில்பக்தியைக் காட்டி இன்றைக்கும் இறவாப்புகழோடு வாழும் நடிகர் திலகத்திற்கு ரசிகர்களாய் நாம் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்