யுகேஷ் பாபு
இதுவரை நான் பார்த்திராத மக்கள் திலகத்தின் அபூர்வ படங்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி .
Printable View
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள்
திரு ஜெய் சங்கர் -திரு கலிய பெருமாள்-திரு ரூப்குமார் உங்களின் பதிவுகள் இல்லாமல் இருப்பது
ஏமாற்றமாக உள்ளது . நண்பர்களே ..திரிக்கு வந்து தொடர்ந்து பதிவிடுங்கள் .
திரு வினோத் அவர்கள் குறிப்பிட்ட முகராசி - 100 வது நாள் விளம்பர ஆவணத்தை திரு ராமமூர்த்தி
அவர்கள் இன்று வழங்குவார் என்று எதிர் பார்க்கிறேன் .
மன்னாதி மன்னன் - 9
தொண்டருக்கும் தொண்டர்
விஜய் டி.வி.யின் மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் தலைவரைப் பற்றி, அவரது கொடையை, தாயுள்ளத்தை, திறமையை புகழ்ந்து பிரபலங்கள் பேசியது இருக்கட்டும். அதில் கலந்து கொண்ட (பலரது பெயர் கூட தெரியவில்லை) ரத்தத்தின் ரத்தங்கள், சாதாரண மக்கள் கூறிய கருத்து தலைவர் எப்படி எல்லாரது ஊனோடும் உயிரோடும் கலந்து நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை உணர்த்தியது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அனைவரையும் மகிழ்விக்கும் வகையில், வந்திருப்பவர்களுக்கு உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில், மிகவும் புத்திசாலித்தனமாக தலைவரின் பேச்சை ஒலிபரப்பினர். ஆட்சியிலிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவது போலிருந்தது தலைவரின் கருத்து.
‘ஆட்சி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு. அதிகாரம் கூடாது, அன்புள்ளத்தோடு செயல்பட வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக் கூடாது. வல்லவனாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்க வேண்டும்’ என்ற தலைவரின் கருத்துக்களும் அவரது குரலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமின்றி டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த நமக்கும் நெஞ்சம் விம்மும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
‘நல்லவனாக இருக்க வேண்டும்’ என்று சொன்ன அந்த நல்லவர் இன்று இல்லையே என்று ஒரு சகோதரர் (மன்னிக்கவும், பெயர் தெரியவில்லை) அழுதபோது நமக்கும் கண்களில் நீர்த்திரை விழுந்து பார்வையை மறைத்தது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவருக்காக மீண்டும் தலைவரின் பேச்சை ஒலிபரப்பினர். அவர் சொன்னார். திரைப்படங்களில் சிலம்ப சண்டையில் தலைவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறியதோடு ‘தத்தித்தோம் தோம்...’ என்று தாளக்கட்டோடு சிலம்பத்தில், தலைவர் ஸ்டெப் வைத்து அதே போல திரும்பி வருவார் என்று கூறினார். இதற்கு சவுடு என்று பெயர் (அவர் சிலம்பம் கற்றவர் போலிருக்கிறது) என்றார்.
தலைவரின் ஸ்டைல் குறித்து பலரும் கூறினார்கள். நாடோடி மன்னனில் மூக்கை விரல்களால் லேசாக தேய்ப்பது, காதல் காட்சிகளில் உதட்டை சுழிப்பது என்றெல்லாம் கூறினார்கள். இதெல்லாம், பாத்திரத்தின் மாறுபாட்டையும் உணர்ச்சியையும் காட்ட தலைவர் கையாண்ட உத்திகள்.
எனக்கென்னவோ, அவர் நிற்பது, நடப்பது, பார்ப்பது, பேசுவது, பாடல் காட்சிகளில் மறைவில் இருந்து மின்னலாய் வெளிப்பட்டு காதல் பாடல்கள் என்றால் தென்றலாகவும், கொள்கை பாடல்கள் என்றால் காட்டாறாகவும் ஓடி வருவது, சண்டைக் காட்சிகளில் திரு.கருணாநிதி அவர்கள் கூறியது போல மின்சாரத்தின் உயிர்ப்புடன் (அவர் உருப்படியாக கூறிய கருத்துக்களுள் இது ஒன்று) சிரித்துக் கொண்டே எதிரிகளை அவர்களுக்கு உயிராபத்து நேராமல் தாக்குவது,(உனக்கு ஆபத்து ஏற்படுத்துவது நோக்கமல்ல என்பதையும் நீ எனக்கு சமமானவன் இல்லை என்பதையும் உணர்த்த சிரிப்பு) நேற்று இன்று நாளையில் ‘பாடும்போது நான்’.... பாடலில் சரிவான மலைப் பகுதியில் தாவிக்குதித்து செல்லும்போது, சறுக்கி விழாமல் இருக்க ஒரு காலை மடக்கியபடி பேலன்ஸ் செய்து ஸ்டைலாகவும் அதே நேரம் விழாமலும் நின்ற அட்டகாசம்..... என்று அவரது ஸ்டைல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியின் உடலமைப்பும் நடை, உடை, பாவனைகளும் அளவெடுத்து வைத்தாற்போல ஜியாமெட்ரிக்கலாக இருக்கும்.
ஒரு சகோதரி, 25 ஆண்டுகளுக்கு முன் சென்னை தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் போடப்பட்ட பாடல்களுக்காக நெடுந்தூரம் சென்று பார்த்ததாகவும் ஒருமுறை, போடப்பட்ட பாடல்கள் விறுவிறுப்பு இல்லாமல் இருந்த நிலையில் கடைசியாக ‘பாடும்போது நான் தென்றல் காற்று...’ பாடலை பார்த்து உற்சாகம் அடைந்ததாகவும் கூறினார். (உண்மையான பேச்சு. நான் கூட பணி முடிந்து இரவில் நெடுநேரம் கழித்து அயர்வுடன் வீடு திரும்பிய பின், தலைவர் பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்த பின்தான் அலுப்பு நீங்கி உற்சாகம் வரும். தலைவரின் ஒரு பாடலையாவது பார்த்து விட்டு படுத்தால்தான் இரவில் உறக்கம் நன்றாக வருகிறது. ஆனால், தனது பாடலுக்காக காக்க வைப்பதில்லை தலைவர்)
பாடும்போது நான்.... பாடலை ஒருவரை பாடச் சொல்லி, அதற்கு மற்றொரு நண்பர் உணர்ச்சி வசப்பட்டு நடிப்பதைப் பார்த்து திரு.கோபி சிரித்தபோது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
மற்றொரு சகோதரி, படகோட்டி படத்தில் தொட்டால் பூ மலரும் பாடலுக்கு முன் தலைவரும் சரோஜாதேவியும் எதிரெதிரே ஓடி வந்து நெருங்கி, தலைவர் தொடும்போது சரோஜாதேவி நாணத்தால் எதிர்க்க, தலைவர் மூச்சு வாங்க, கொஞ்சம் ஹஸ்கி வாய்சில் ‘ஏன் தொடக் கூடாதா?’ என்று கேட்பதை சுட்டிக்காட்டினார். ‘காதலிக்கும் இளைஞர்கள் தலைவரைப் பார்த்து காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியதன் அர்த்தம், அந்த அளவுக்கு தலைவர் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிப்பார் என்பதை எடுத்துக் காட்ட.
கலந்து கொண்டவர்களில் எல்லாரையும் கவர்ந்த குறிப்பிடத் தகுந்தவர் மூத்த ரசிகர் ஆழ்வை ராஜப்பா வெங்கடாச்சாரி. இவரது தனிச்சிறப்பு, தலைவர் நடித்த எந்தப் படத்தைப் பற்றி கேட்டாலும் அது எத்தனாவது படம் என்பது உட்பட விரல் நுனியில் படங்களை பற்றி வைத்திருந்த புள்ளி விவரங்களை சொல்லி அசத்தியது. 1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்த டிக்கெட்டை இவர் லேமினேஷன் போட்டு வைத்துள்ளார். அதை காண்பித்தார்.
கைகளை ஆட்டாமல் தலைவருக்கு நடிக்க வராது என்று அந்தக் காலத்தில் கூறப்பட்ட கருத்தை பொய்யாக்க திருடாதே படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தலைவர் இரண்டு கைகளையும் பேன்ட் பாக்கெட்டில் விட்டபடி நடித்திருப்பார் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். பெற்றால்தான் பிள்ளையா? படத்தில் நாம் எல்லாரும் ரசித்த தலைவரின் வித்தியாசமான நடை மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பையும் சிலாகித்ததோடு, படத்தை பார்த்து நானே 10 நாள் மைன்ட் சேஞ்ச் ஆகியிருந்தேன் என்று சொல்லி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
தலைவரின் தீவிர ரசிகரான அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறாரா? என்று தேடியதாகவும் அவரைப் பார்த்தபிறகே திருப்தியாக இருந்ததாகவும் ஒரு சகோதரர் கூறினார். உடனே, அவரது பெயர் என்ன? என்று திரு.கோபி கேட்க பதில் வந்தது.... தீன் என்று. அவர் ஒரு இஸ்லாமிய சகோதரர். அப்போது திரு. கோபி கூறியது நம்மை பெருமிதமடையச் செய்தது. ஒரு இந்துவை ஒரு இஸ்லாமியர் பாராட்டுகிறார் இது ஒற்றுமையை காட்டுவதாக திரு.கோபி கூறினார்.
சாதி, மத, இன, மொழி பேதங்களை எல்லாம் தாண்டி நம் எல்லாரையும் அன்பு சங்கிலியால் பிணைத்திருப்பது தலைவர்தானே? நம்மை எல்லாம் ஒருவருக்கொருவர் ரத்த சொந்தங்களாய் கருத வைப்பது அந்த மனித நேயர்தானே?
மற்றொரு சகோதரர் கூறுகையில், ‘‘அன்பு, அருள் ஆகியவற்றுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் தலைவர். திரையுலகம், அரசியல், தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றில் அவரைப் போல அந்த வார்த்தைகளை வேறு யாரும் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்தவில்லை ’’என்றார். தலைவருக்கு கோயில் கட்டி, ஆண்டுதோறும் விரதம் இருந்து மாலை போட்டு வழிபடுவதாகக் கூறினார் ஒரு சகோதரர்.
நிகழ்ச்சியில் கவனத்தைக் கவர்ந்த இன்னொரு அம்சம்... 1956ம் ஆண்டில் தலைவர் நடத்தி வந்த நடிகன் குரல் பத்திரிகை. பல அரிய தகவல்கள் அந்த பத்திரிகையில் இருப்பதாக கூறினார் அதை வைத்துள்ள சகோதரர். தலைவரின் காழ்ப்புணர்ச்சியற்ற மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாய் அட்டையில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் புகைப்படம்.
அந்த புத்தகத்தை ஏலத்துக்கு விடுவதாக கூறினார் திரு.கோபிநாத். ஒருவர் லட்ச ரூபாய் கொடுக்கிறேன் என்றார். மற்றொருவர் தனது புதிய டஸ்டர் காரைத் தருவதாக கூறினார். விஞ்ஞானி பேராசிரியர் இளங்கோவன் தனது தங்க மெடலையே தருவதாக அறிவித்தார். வேறொருவர் தன்னிடம் உள்ள பழங்கால அரிய நாணயங்களை கொடுக்கிறேன் என்றார். ஈரோடு வரும்போதெல்லாம் தலைவருக்கு பண நோட்டு மாலை அணிவித்ததாகவும் அந்த பணக்கட்டுகளை தருவதாகவும் கூறினார் ஒருவர். இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவரும் நமது திரியில் பங்கேற்கும் சகோதரருமான திரு.சைதை ராஜ்குமார், சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனது 6 கிரவுண்ட் நிலத்தையே தருவதாகவும் அங்கேயே அக்ரிமென்டில் கையெழுத்து போட்டுத் தருவதாகவும் கூறினார்.
ஆனால், ‘கோடி கொடுப்பினும் கொடேன்’ என்று மறுத்து விட்டார் அதை வைத்திருந்த சகோதரர்.
இவர்களைப் போலவே தமிழக மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக தலைவர் மீது அன்பு வைத்திருக்க காரணம்தான் என்ன?
‘அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை....’
என்று திரைப்படத்தில் பாடியபடி, நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டினாரே? அதுதான் காரணம்.
நம் தலைவர் .... தொண்டருக்குத் தொண்டர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்