கர்ணன் படப் பாடல்களைப் பார்த்தேன் என்று சொன்னேன். அதில் தோன்றிய சில எண்ணங்கள். மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தின் பாடல்களை ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருப்பதாக பலரும் சொல்லி கேள்வி. அந்த ராகங்களைப் பற்றியும் இந்த பாடல்களைப் பற்றியும் இசை மேதைகள் நிறைய சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். நாம் பாடல் காட்சிகளைப் பற்றி பேசலாம்.
என்னுயிர் தோழி - முதல் பாடல். முத்தான பாடல். ராகம் - ஹமீர் கல்யாணி.
எத்தனை பாடகியர் வந்தாலும் நாம் ஏன் சுசீலாவை அளவுக்கோலாக கொள்கிறோம் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் முதல் சரணத்தில் அரண்மனை அறிவான் அரியணை அறிவான் என்ற இடத்தில் நிறுத்தி ஒரு ஆலாபனை செய்வாரே, அது ஒன்று போதும். இனி காட்சிக்கு வருவோம்.
இந்த பாடல் படமாக்கப்பட்டபோது சாவித்திரிக்கு இரண்டு அசௌகரியங்கள். ஒன்று உடல் எடை கூடி விட்டது. இரண்டு அவர் அப்போது அவரது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். ஆதலால் அவரை அவ்வளவாக ஆட, ஓட விடாமல் படமாக்கியிருப்பார்கள். பாடலின் இடையில் நடிகர் திலகமும் அசோகனும் உள்ளே நுழைய முயற்சித்து ஆடலைப் பார்த்து விட்டு மறைந்துக் கொள்வதாக காட்சி. நடிகர் திலகத்தின் அந்த இரண்டு க்ளோஸ் அப் காட்சிகளாகட்டும் இல்லை லாங் ஷாட் ஆகட்டும் [இத்தனைக்கும் காம்பிநேஷன் இல்லை, சஜ்ஜெஷன் ஷாட்தான்] அந்த முகத்தில்தான் எத்தனை உணர்வுகள் மின்னி மறையும்? இசைக் கருவிகளை வாசிக்கும் தோழியர், பாடும் சேடிப் பெண்கள், ஆடும் நடன மங்கையர் என்று எல்லாமே அழகான லயத்தில் அமைந்திருக்கும்.
கண்கள் எங்கே - ராகம் - சுத்த தன்யாசி.
சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. இந்த பாடலை மட்டுமே ஒரு காஸட்டின் ஒரு பகுதி முழுக்க பதிந்து வைத்திருந்த ஒரு நண்பர் இருந்தார். அவ்வளவு இனிமை. இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் வரமாட்டார். ஆனால் அந்த குறையை தேவிகா போக்கி விடுவார். சரணங்களின் இடையில் தேவிகாவின் ஒரு சில நடன ஸ்டெப்ஸ் நளினமாக இருக்கும். அந்த ஏக்கத்தையும் விரகத்தையும் குறிப்பாக குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் என்ற வரிகளின் போது ரசனையோடு வெளிப்படுத்தியிருப்பார்.
இரவும் நிலவும் வளரட்டுமே - ராகம் - சுத்த சாரங்கி
பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் காட்சி. கர்நாடகாவில் உள்ள பேலூர் - ஹளபேடு கோவிலில் படமாக்கப்பட்ட காட்சி. சுசீலா ஆலாபனை ஆரம்பிக்கும் போதே தியேட்டர் களை கட்டி விடும். நடிகர் திலகத்தின் ராஜ நடை, காலை வளைத்து நிற்கும் போஸ், நாயக நாயகியரை மட்டும் போஃக்கஸ் செய்யாமல் அரண்மனையின் சிற்ப அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையாளன் உணரும் வண்ணம் அமைக்கப்பட்ட காமிரா கோணங்கள், நடிகர் திலகம் - தேவிகா இடையிலான கெமிஸ்ட்ரி இவை அனைத்தும் வெளிப்படும் ஒரு சிறந்த பாடல்.
கண்ணுக்கு குலம் ஏது - ராகம் - பஹடி
முதலிரவு பாடல். ஆனால் சோகத்தில் ஆரம்பித்து மகிழ்ச்சியில் முடியும். தன் குலத்தையும் பிறப்பையும் கேவலப்படுத்தி விட்ட கோவம் கர்ணனுக்கு. அது மட்டுமல்ல, மனைவியே தன்னை உதாசினப்படுத்திவிட்டாள் என்ற எண்ணம். மனைவி தவறு செய்யவில்லை என்றவுடன் சிறிது மகிழ்ச்சி அடைந்து பிறகு மனைவியின் பாடல் வரிகள் எப்படி மனதுக்கு சாந்தி அளிக்கின்றன என்பதை வெறும் முகபாவங்களிலேயே காட்டியிருக்கும் நேர்த்தி. குலத்தை விட குணமே சிறந்தது என்பதற்கு கண்ணதாசனின் வரிகள் மிக அழகாக விளக்கம் கொடுக்கும். இதில் குறிப்பிட தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் உள்ளே ஒரு மனப்போராட்டம் நடக்கும் போது வெளியே சேடிப் பெண்கள் ஆடிக் கொண்டிருப்பர். அதாவது உள்ளே நடப்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் உள்ளே ஒரு முதலிரவு கொண்டாட்டம் நடக்கிறது என்று நினைத்திருப்பர். இது ஒரு லாஜிக்கலான காட்சியமைப்பு.
மேலும் பேசுவோம்.
அன்புடன்
பாடல்களின் ராகங்களைப் பற்றிய விவரங்கள் அளித்த ராகபிரவாஹம் இணையதளதிற்கு நன்றி.