http://i65.tinypic.com/14xoydg.jpg
Printable View
நாகர்கோவிலை சார்ந்த திரு. ஜேம்ஸ் என்பவர் வெறி பிடித்த , தீவிர எம்.ஜி.ஆர். பக்தர் .அவர் சிங்கப்பூரில் கப்பலில் வேலை பார்த்து வந்தார் . தற்போது தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாடு அருகில் உள்ள ஒரு நகரில் கப்பலில்
ஆறு மாத கால ஒப்பந்தத்தில் வேலை பார்த்து வருகிறார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பார்வையாளராக உள்ளார். சமீபத்தில் மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் பதிவுகள் இருந்ததாக கருதி நேற்று (8/6/18) அவரது தேநீர் இடைவேளையின்போது சுமார் அரை மணி நேரம் அலைபேசியில் பேசி தனது கருத்துகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார் . இது போன்ற பதிவுகளைத்தான் தான் பெரிதும்
விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார் . இந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களைத்தான் உண்மையில் சாரும் .
நண்பரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
ராஜ் தொலைக்காட்சியில் இன்று மதியம் 12 மணிக்கு மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' ஒளிப்பாராக உள்ளது .
" வேட்டக்காரன் வருவான்... உஷார்" !
எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.
1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.
பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.
அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.
தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.
திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.
'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த
நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.
தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.
அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.
கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).
பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த
காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்'
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy- rajbav
தாய்ப்பாசம் என்றால் எம்.ஜி.ஆர் – நடிகர் சிவக்குமார் ஆக
தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு.
உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.
தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.
அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.
“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
நம் நாடு 1969
நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
ஓர் உரையாடல்
வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.
ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.
சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.
மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!
ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.
மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.
ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!
சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.
பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’
சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.
ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!
சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)
மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?
ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.
சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?
சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!
சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?
மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?
சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?
ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?
சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!
ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?
பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!
சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!
சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா
ஜெயராஜ் ஓவியர்
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.