Originally Posted by Maestro
பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்" படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல ட்யூன்களை எலலாம் போட்டுத்தருவார்" என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒரு நாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசைசேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாயூர் போய்வரலாம்" என்றேன். "சரி" என்றார். வேலை சரியாக இருந்ததால், நகரமுடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒண்ணு குறையுதே. உனக்குத்தெரியாதா? தெரிந்தா சொல்லு!" என்றார்.
"அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!" என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாயூர் போய் வரலாம்" என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்கவேண்டும். இப்போது வேண்டாமே!" என்று கூறிவிட்டேன்.
“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.
“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.
அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கிவந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா." படம் ஓடவில்லை.