La Strada -Federico Fellini - 1954.
வாழ்க்கை என்பது நாம் காணும் நிகழ்ச்சிகளின் தொகுப்போ, நாம் படிக்கும் கேட்கும் விஷயங்கள் மட்டுமேயல்ல.ரியலிசம் மட்டும் உண்மையோ கலையோ ஆகாது.விஷயங்களை நம் மனம் வாங்கி கொள்ளும் முறை,அது சார்ந்து நம் மனம் நமக்கு காட்டும் முறைமை,உள்மன புயல்கள்,தேவையற்ற பயங்கள் ,வக்கிரங்கள், வன்மங்கள்,துயர் சிந்தனைகள்,நிழலான பகிர முடியாத எண்ணங்கள்,பிரத்யேக மன பிறழ்வுகள்,குற்ற உணர்வுகள்,சில நேரம் துன்பத்திலும் எள்ளும் வினோத குணம், வாழ்க்கையில் சேர்த்து கட்ட பட்டாலும் நேர்கோட்டில் வராத இரு பிரத்யேக குண விசேஷம் கொண்டவர்களின் சந்திக்காத மன உணர்வுகள்,அவர்கள் ஒருவர் வாழ்கையை மற்றவர் பாதிப்பதை உள்மன படிமங்களாக்குவது போன்ற ஆழமான விஷயங்களை ,மன விளையாட்டு பயிற்சியை,சத்தியமாக ரியலிச படங்களால் அணுகவே முடியாது.
Fellini புரிந்து கொள்ள படுவதற்கே ,தேர்ந்த ஆய்வாளர்களின் துணையுடன், படிப்பறிவு (துறை சார்ந்த),மனோதத்துவ பின்னணி,அழகுணர்ச்சி ,பல உலக படங்கள் பார்த்த தேர்ச்சி,இவை இருந்தாலே சாத்தியம். அப்படி ஒரு பாணி. Fantasy எனப்படும் மன பிரமை,Baroque என்ற கலை போல மிகை தன்மையுடன் நகர்வு சார்ந்த ஒருங்கிணைக்க பட்ட கலையுணர்வு, பூமியின் தன்மையுடன் (Earthiness )இணைவு பெற்றால் மட்டுமே நிகழும் அற்புத தருணங்கள். சிறு சிறு விஷயங்களும் நேர்த்தியாக காட்ட படும்.இது ஒரு Hollywood படங்கள் போல பொதுமையுடன் ,நீர்க்க செய்த வியாபார கலையல்ல. ஒரு மனிதன் தன் மனத்தை, அதன் தருணங்களை,அதன் சலனங்களை நம் மனத்தோடு பகிர என்னும் பிரத்யேக கலை படங்கள்.உள்மன விவரிப்பு படிமங்கள்,மனோதத்துவம் சார்ந்த யதார்த்தம்,மன உணர்வுகளின் மேன்மை-மென்மை -வறுமை-துயரம்-கொடூரம்-குழப்பம் இவற்றை மனிதம் கெடாமல் நம்மோடு பகிரும் ஒரு நேர்மையான நேர்த்தியான கலை.
இந்த படம் Zampano என்ற தெருவில் வித்தை காட்டி பிழைக்கும்(சங்கிலியால் கட்டி இழுக்கும் பல விளையாட்டு) ஒருவன் ,ரோஸா என்ற உதவி பெண் இறந்து விட்டதால், அவளுக்கு பதிலாக கேல்சொமினா என்ற அவளது தங்கையை 10,000 லிரா (இத்தாலிய காசுகள் சுமார் 600 ரூபாய் ) கொடுத்து வாங்கி உதவியாக வைத்து கொள்கிறான்.அவளிடம் மனித தன்மையற்ற குரூரம் காட்டி அனுதினமும் வதைக்கிறான்.அவன் ஒரு circus ஒன்றில் பணி புரிய நேரும் போது Matto என்ற கோமாளி கலைஞன் அவர்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு எதிலும் எப்போதும் விளையாட்டு மனநிலை இருந்தாலும் ,எந்த ஒன்றும்,எந்த ஒருவரும் ஒரு காரணத்தோடு படைக்க பட்டவர்களே என்ற மனிதம் நிறைந்த எண்ணங்கள் கொண்டவன். சம்பனோ வும் மட்டோ வும் ஆரம்பம் முதலே மோதல். ஒரு அசந்தர்ப்பமான தருணத்தில் மாட்டோ ,சாம்பநோவால் மடேர் மடேரென்று அடித்து கொல்ல பட்டு விடுகிறான்.(சாகும் போது மாட்டோ-என் வாட்ச் உடைந்து விட்டதே) .இந்த சம்பவத்துக்கு பிறகு மணந்து கொள்ள சொல்லும் கேள்சொமினா வை நிராகரித்து,நடை பிணமாக இருக்கும் அவளை விட்டு ஓடி விடுகிறான். அவள் நினைவுகளால் துரத்த பட்டு ,இறுதியில் கண்ணீர் வடிப்பதுடன் படம் முடிகிறது.
fellini தன் Autobiography என்று இதனை வர்ணித்துள்ளார்.உள் மனத்துயர் ,ஒரு லேசு பாசான (diffused )குற்றவுணர்வு,நிழல் ஒன்று மேல்தொங்குவது போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு ஒரு மன சித்திரமாக உருவானவள் கேள்சொமினா. Zampano ,சிறு வயதில் பார்த்த பன்றிகளுக்கு காயடித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண் பித்தனின் உண்மை பாத்திரம்.இவை வைத்து உருவானது. Fellini படங்களிலேயே அவருக்கு அதிகம் சிரமம் தந்த படம்.(நேரம்,பொருள்,மன உளைச்சல்),Antony Quinn தான் Zampano .
இவரின் பிற படங்கள் La Dolce Vita , 8 1/2, Amarcord .Nino Rota இந்த படத்திற்கு தந்த இசை கவனிக்க பட வேண்டியது. காட்சிகள் படமாக்கம் மிக ஆழ-அழுத்தம் கொண்டு பலமான காட்சி அதிர்வை தரும். ஒரு perfectionalist Fellini .