Originally Posted by Murali Srinivas
நமது அருமை நண்பர்கள் எல்லோரும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லி விட்ட பின் தனியாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன்.
சுவாமி அவர்கள் குறிப்பிட்டது போல நமது ரசிகர்களுக்கும் காவல் துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அது நேற்றும் தொடர்ந்தது. மாலைக் காட்சிக்கு முன்னரே வந்து விட்ட ரசிக உள்ளங்கள் வழக்கம் போல் போஸ்டருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சூடம் காண்பித்து ஒரு பட்டாஸ் வெடித்தவுடன் போலீஸ் வந்து விட்டது. தியேட்டருக்கு அருகாமையில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் திரு நிதின் கட்காரி அவர்கள் கொடியேற்ற வந்திருக்கிறார். ஆகவே பாதுகாப்பு காரணம் கருதி இங்கே பட்டாஸ் வெடிக்கக் கூடாது என்று தடுக்க ரசிகர்கள் கொந்தளிப்பானார்கள். சற்று நேரத்தில் பா.ஜ. கட்சியினர் அங்கே வெடி வெடிக்க இங்கே சூடு ஏறியது. உடனே கட்காரி கிளம்பி விட்டார். அவர் கார் அதை தொடர்ந்து பல வாகனங்கள் வந்தன. ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார். நமது கூட்டத்தின் காரணமாக நின்று நின்று சென்றன வாகனங்கள். பஸ்சிலிருந்த ஒருவர் இது பழைய படம்தானே என்று கேட்க ரசிகர் ஒருவர் எங்களுக்கு என்னிக்கும் இது புது படம்தான் என்று சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்தவர்கள் ஒரு 10000 வாலா சரத்தை கொளுத்த, அந்த ஏரியாவே சத்தத்தில் சின்னாபின்னமானது. எதிர் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வசிப்போர் அனைவரும் பால்கனியில் குவிந்து விட்டனர். பட்டாஸ் முடிந்தவுடன் சரமாரியாக கணேசருக்கு தேங்காய் உடைக்கப்பட்டன. குறைந்தது ஒரு 50 காய் உடைத்திருப்பார்கள். தெரு முழுக்க சில்லு தேங்காய். வெளியே ஆரவாரம் தொடர உள்ளே படம் தொடங்க நாங்கள் அரங்கில் நுழைந்தோம். வெளியே எந்த அளவிற்கு அலப்பறை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். என்னுடைய நண்பர் ஒருவர் [நமது சுவாமி, ஜோ வயதையொத்தவர்] சிவாஜி ரசிகர், தன்னை விட இளையவர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியில் நடந்த மாலை சார்த்துதல், சூட ஆராதனை, வாண வேடிக்கை போலீஸ் காவல் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மிரண்டு விட்டார்கள். படம் பார்க்க வந்தவர்கள் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள்.அவர்களால் நண்பரும் பார்க்கும் வாய்ப்பை
துறந்தார்.
நடிகர் திலகம் அறிமுக காட்சி. ஒரே ஆரவாரம். தங்கைக்கு அடிப்பட்டு விட்டது என்று தெரிந்து மேஸ்திரியிடம் போய்யா என்று சொல்வது, பிறகு கையெழுத்து போட மறைந்து மறைந்து வருவது, முதலாளியிடம் போய் பேசும் போது ஜெமினி சொல்வதை அபப்டியே பார்ப்பது இவை எல்லாவற்றிற்கும் கைதட்டல் இருந்துக் கொண்டே இருந்தது. ராகவேந்தர் சார் சொன்னது போல் சும்மா கத்தும் கூட்டம் இல்லை ரசனையுள்ள கூட்டம் என்பதற்கு சாட்சி உடனே கிடைத்தது. வெளியே வரும்போது நடிகர் திலகம் தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆட்டிக் கொண்டே வருவார். அதற்க்கெல்லாம் அப்படி ஒரு கைதட்டல். நீ முதலாளி கிட்டே பேசினது இது இல்லை ஆனா என் தங்கச்சியை காப்பாத்தினேன் சொன்ன பாரு அதுதான் இது என்ற வசனத்திற்கு எல்லாம் பெரிய ஆரவாரம்.
அடுத்து ஜெமினி வீடு தேடி வரும் சீன். ஆனந்தா அது சிரிச்சா நான் சிரிப்பேன். அது அழுதா ஐயையோ என்னாலே தாங்கவே முடியாது என்ற வசனத்திற்கும், இந்த உலகம் என்னை பத்தி கவலைப்படுதோ என்ற வசனத்திற்கும் சுயநலத்திலிருந்துதான் பொது நலமே பிறக்குது என்ற வசனத்திற்கு எல்லாம் ஒரே கைதட்டல்.
வந்தது மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் பாடல். அதிர ஆரம்பித்தது அரங்கு. ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட, திரையின் முன்னால் ரசிகர்கள் கூட, ஆரவாரம் ஆரம்பமானது.எவ்வளவு ரசனையான ரசிகர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு குறிப்பு. முதல் சரணத்தில் மாவிலை தோரணம் ஆடிட கண்டாள் என்ற வரிகளுக்கு வலது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவார், அதிர்ந்தது அரங்கு. அது போல் இரண்டாவது சரணத்தில் தங்கைக்கு கற்பனை கல்யாணம் முடிந்தவுடன் காலில் விழும் தங்கையை தூக்கி ஒரு கையால் அணிந்திருக்கும் கண்ணாடியை சற்றே மேலே தூக்கி கண்ணீர் துடைப்பார். இங்கே எழுந்தது கூட்டம். அது போல் மருமகள் கண்ணில் அன்பு மாமன் தெய்வம் கண்டான் என்ற போதும் கைதட்டல் பறந்தது.
பிறகு ஸ்ட்ரைக் காட்சி. வந்து தங்கையிடம் புலம்புவார். தங்கை இவர் கலந்து கொள்ளாவிட்டாலும் வேலை போயிருக்கும் என்பதை விளக்கியவுடன் வரும் முகபாவம், ஆயிரம் ரூபாய் என்று கேட்டவுடன் வரும் அதிர்ச்சி + ஆனந்தம் இவை எல்லாம் அடுத்து வரும் திருவிழாவிற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருந்தது.
சுவாமி சொன்னது போல் எங்களுக்கும் காலம் வரும் ஆரம்பமே அமர்க்களம். சின்னதாய் ஒரு சுற்று சுற்றி பாட தொடங்குவார். அப்போது ஆரம்பித்த ரகளை கூடி கூடி போனது. மேடையில் ஏறவிடாமல் தடுப்பதற்கே இரண்டு மூன்று பேர் வேண்டியிருந்தது. இதற்கிடையில் தீபம் வேறு. மேலே பால்கனியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் சூடத்தை கொளுத்தி [கையில்?] சுத்த, அவர் கையைப் பற்றியும், எரியும் சூடம் கிழே விழுந்தால் என்ன ஆவது என்ற பயமும் வந்தன. ஆனால் அவர் லாவகமாக அதை சுற்றி கிழே கைப்பிடி சுவரில் வைத்து அணைத்தார். பாடல் ஓட ஓட அதிகமாகி போன டெசிபல் லெவல் சுவாமி சொன்னது போல் நெஞ்சில் ஒரு களங்கமில்லை வரியில் ஆரம்பித்து வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை என்ற உச்சக்கட்ட வரிகளுக்கு டி.எம்.எஸ்-ன் குரலையும் தாண்டிய அலப்பறை- தெருவிற்கே கேட்டிருக்கும். எங்கள் தங்க ராஜாவை விட ஆர்ப்பாட்டம் அதிகம் என்று புரிந்தவுடன் போலீஸ் உள்ளே நுழைய,ரசிகர்கள் மேலும் ஆவேசமானார்கள். மன்றத்தினரும் மற்ற சிலரும் சேர்ந்து சமாதானப்படுத்த சிறிது அமைதி திரும்பியது.
அன்புடன்
(தொடரும்)
tac,
நீங்கள் எழுதியது சென்னை ரசிகர்களை உசுப்பி விட்டது என்று நினைக்கிறேன். தியேட்டரை ரெண்டு பண்ணி விட்டார்கள்.
அரங்கிற்கு வெளியில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவாஜி மன்றத்திலிருந்து பாசமலர் சாதனைகளை பற்றியும் 1961-ல் நடிகர் திலகத்தின் ஏனைய படங்களை பற்றியும் ஒரு நோட்டீஸ் [சாதனை தகவல் உபயம் நமது சுவாமி] கொடுத்தார்கள். சுவாரசியமானதாக இருந்த அதை பலரும் விரும்பி கேட்டு வாங்கி சென்றார்கள்