http://www.youtube.com/watch?v=qDktQua5pOc
டி.எம்.எஸ். என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட டி.எம்.சௌந்தரராஜன் நேற்று மூச்சுத் திணறலால் காலமானார். திரையுலகில் சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் பணியாற்றி பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி தனிப்பெரும் சாதனை படைத்தவர் டி.எம்.எஸ். கிருஷ்ணவிஜயம் படத்தில் ராதே உனக்குக் கோபம் ஆகாதடி என்ற பாடல் மூலம் அறிமுகமாகி 1991 ஆம் ஆண்டு ஞானப்பறவை படத்தில் ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே என்ற பாடல் தனது கடைசி பாடல்வரை தனித்துவமான குரல் வளத்தால் தனி இடம் பிடித்தவர் டி.எம்.எஸ். தனது 91ஆம் வயதில் இயற்கையோடு இரண்டறக் கலந்தாலும் தமிழ் உலகம் உள்ளவரை அவரது குரல் நிலைத்திருக்கும். மலைக்கள்ளன் படத்தில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் தான் மக்கள் திலகத்திற்கு அவர் பாடிய முதல் பாட்டு. மக்கள் திலகத்தின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை நூற்றுக்கணக்கான பாடல்களை மக்கள் திலகத்திற்காக பாடி மக்கள் திலகத்தின் குரலாகவே வாழ்ந்தவர் டி.எம்.எஸ். பின்னால் வெளியான அவசர போலீஸ் 100 படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் அவரது குரலில் வெளிவந்தவையே. இடையில் சில காலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோரின் பாடல்களுக்கும் திறம்பட நடித்து மக்கள் திலகம் அவர்கள் அந்தப் பாடல்களுக்கு உயிரூட்டினார் என்றாலும் டி.எம்.எஸ். அவர்களது குரலில் எம்.ஜி.ஆர் பாடல்கள் வரும் போது அதில் வரும் உற்சாகமே தனி. குறிப்பாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற பாடல் எம்.ஜி.ஆரின் குரலாகவே ஒலிக்கும். கொஞ்சமும் பேதம் தெரியாது. கம்பீரமான வெண்கலக் குரலால் ரசிகர்களை எல்லாம் கட்டிப்போட்ட டி.எம்.செளந்தரராஜன் அவர்களது தாய் மொழி சௌராஷ்டிராவாக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தப் பிழையும் காண முடியாது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம். ஜெயா டிவியில் டி.எம்.எஸ். அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது. அதற்காக மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டத்தில் கூட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதை எதிர்பார்க்கிறோம்.

