Today's Junior vikatan.
சிவாஜி மணிமண்டபம்... குறட்டை விட்ட நடிகர் சங்கம்... குட்டுவைத்து எழுப்பிய முதல்வர்!
http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4b.jpg
சிவாஜி மணிமண்டபம்... குறட்டை விட்ட நடிகர் சங்கம்... குட்டுவைத்து எழுப்பிய முதல்வர்!
நீ...ண்ட காலமாகக் கிடப்பிலே இருக்கும் திட்டங்களில் ஒன்று நடிகர் சிவாஜியின் மணிமண்டபம். சிவாஜி மணிமண்டபத்தைக் கட்டுவதில் கும்பகர்ண தூக்கம் போட்டுவந்த தமிழக அரசு இப்போது திடீரென்று விழித்திருக்கிறது. ‘சிவாஜிக்கு அரசின் செலவில் மணிமண்டபம் கட்டப்படும்’ என சட்டசபையில் அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா.
சிவாஜி மணிமண்டபம் தொடர்பாக 16-03-2005 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறோம். 17-04-2005, 24-04-2005, 05-10-2005, 01-08-2010, 02-10-2011, 21-04-2013, 22-07-2015 என இதுவரை எட்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். கன்னித்தீவு கதைபோல நீண்டுகொண்டே போகும் மணிமண்டபம் பிரச்னையின் ஃபிளாஷ்பேக்...
2001-ம் ஆண்டு சிவாஜி இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தவந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ‘சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தாருங்கள்’ என கோரிக்கை வைத்தது நடிகர் சங்கம். சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சுமார் 12 கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கத்துக்கு ஒதுக்கி, 2002-ம் ஆண்டு ஆணை போட்டார் ஜெயலலிதா. உடனே ‘அரசு ஒதுக்கிய இடத்தில் நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவோம்’ என சொன்னது நடிகர் சங்கம். தேர்தல் வாக்குறுதி போல நடிகர் சங்கம் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பேச்சு மூச்சே இல்லை. ‘மணிமண்டபம் கட்டும் இடத்துக்குக் குறுக்கே செல்லும் சாலைக்கு மாற்று சாலை அமைக்க ரூ.4.20 லட்சம் செலவாகிறது. அதில் ரூ.2 லட்சத்தை மட்டுமே நடிகர் சங்கம் செலுத்தியிருக்கிறது. அதனால்தான் தாமதம்’ என அப்போது சொன்னது அரசு. அதன்பிறகு 22.4.2005-ல் மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டனர். அப்போது, ‘மணிமண்டபம் கட்ட வரைபடம் தயாரித்தல், நிதி திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காகத் தனியாக குழுவை நியமிக்கப் போகிறோம். இதற்காகப் பிரத்யேகமாக இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம்’ என்றெல்லாம் கலர்ஃபுல் அறிவிப்புகளை வெளியிட்டது நடிகர் சங்கம். எல்லாம் பூமி பூஜையோடு முடிந்துபோனது. ஒரு செங்கல்லைக்கூட இதுவரை வாங்கவில்லை நடிகர் சங்கம். ஜெயலலிதா இடம்கொடுத்தும் அதை அப்போது நடிகர் சங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
http://img.vikatan.com/jv/2015/09/zj...ges/p4a(1).jpg
2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, சிவாஜிக்கு கடற்கரையில் சிலை எழுப்பினார் கருணாநிதி. சிவாஜிக்கு சிலைவைத்த கருணாநிதியே நிச்சயம் மணிமண்டபத்தையும் கட்டித் தருவார் என சிவாஜி ரசிகர்கள் நம்பியிருந்தனர். அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு மணிமண்டபம் அமைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
நடிகர் சங்கத்தின் மெத்தனத்தை ஜெயலலிதாவே உடைத்திருக்கிறார். ‘மணிமண்டபம் கட்டப்படும்’ என்கிற அறிவிப்பை அவர் வெளியிட்டபோது அதைச் சொல்லியிருக்கிறார். ‘‘மணிமண்டபத்தை நடிகர் சங்கமே அமைக்கும் என்றதால், அரசு மணிமண்டபம் கட்ட நடவடிக்கையை எடுக்கவில்லை. ‘மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும்’ என அப்போதே நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கியிருப்பேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. நடிகர் விஷாலும் தன் பங்குக்குச் சீறியிருக்கிறார். ‘நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கி 12 ஆண்டுகள் கடந்தும் மணிமண்டபம் அமைக்கவில்லை. இது நடிகர் சங்கத்துக்கு அவமானம். இதில் இருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ள முடிகிறது’ என சொல்லியிருக்கிறார்.
சிவாஜி சமூகநலப் பேரவை’தான் மணிமண்டபத்துக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ‘‘தமிழக கலைக்கு அடையாளமாகத் திகழ்ந்த சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப் போராடுவதே வேதனையாக இருக்கிறது. நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டுவதில் அக்கறை காட்டவில்லை. வெறும் வாய் வார்த்தைகளில்தான் நடிகர் திலகத்தைப் புகழ்ந்து வருகிறார்கள். செயலில் எதுவும் இல்லை. இதற்காகத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நாங்கள் கடிதம் எழுதி வந்தோம். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக மனுக் கொடுத்தோம். நடிகர் திலகத்தை திரைத் துறையும் தமிழக அரசும் கண்டுகொள்ளாததால் கடந்த மாதம் 21-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அரசின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்’’ என்றார்.
‘சிவாஜிக்கு அரசே மணிமண்டபம் கட்டும்’ என்கிற அறிவிப்பை ஜெயலலிதா திடீரென்று அறிவிக்கக் காரணம் என்ன? சிவாஜி சமூலநலப் பேரவை சார்பில் 21-07-2015 அன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருமாவளவன், தமிழிசை செளந்தரராஜன் என முக்கிய கட்சித் தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இதன்பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ‘மணிமண்டபத்தை நடிகர் சங்கம் கட்டவில்லை’ என ஜெயலலிதா சொல்லியிருப்பதன் மூலம் சரத்குமார் அணிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகப் பலரும் நினைக்கிறார்கள். விஷாலின் ரியாக்*ஷனும் அதைத்தான் காட்டுகிறது. சென்னை கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘சிவாஜியின் சிலையை அங்கிருந்து அகற்றலாம்’ என்று சொன்னது அரசு. இதற்கு சிவாஜி ரசிகர்களோடு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு சிலை அகற்றப்படவில்லை.
‘அரசே மணிமண்டபம் கட்டும்’ என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் சிவாஜி சிலையின் நிலைப்பாட்டில் அரசின் முடிவையும் அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
[IMG]http://img.vikatan.com/jv/2015/09/zjblzt/images/p4.jpg[/IMG]
திறப்புவிழா எப்போது?
திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் கே.என்.நேரு, சட்டசபையில் பேசி சிலை அமைப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்தார். அதன்பிறகு சிவாஜி வாழ்ந்த பகுதியான பாலக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சிவாஜி ரசிகர் மன்றத்தின் செலவில் சிலை வடிவமைக்கப்பட்டு அந்த இடத்தில் நிறுவப்பட்டது. எல்லாப் பணிகளும் முடிந்த நிலையில் திறப்புவிழா மட்டும் நடக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இன்றுவரை திறப்பு விழா காணாமல் கடந்த 5 வருடங்களாகத் துணியால் மூடி கிடக்கிறது சிவாஜி சிலை.