Quote:
காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள்
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், எதிர்பாராத திருப்பங்களில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மகன் லட்சுமிபதி, சக்தியை காதல் திருமணம் செய்து கொண்டதே அலமேலுக்கு உள்ளூற உறுத்தலாக இருந்து கொண்டிருந்தது. என்றாலும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மகள் கர்ணா திடீரென்று ஒரு இளைஞனுடன் காதலான கதை தெரிந்தபோதே கிட்டத்தட்ட அவள் எரிமலையாகி விட்டாள். இந்தக்காதலுக்கு உடந்தையாக இருந்தவள் தன் மருமகள் சக்தி என அலுமேவுக்கு தெரிந்ததும் பொங்கி விட்டாள். காதலனுடன் மகள் கர்ணாவை அவ்வப்போது போனில் பேச வைத்து காதல் வளர்த்ததே சக்தி தான் என்பது தெரிந்ததும், அலமேலு ஆவேசமாகிறாள். மருமகள் சக்தியை வீட்டை விட்டு துரத்துகிறாள்.
இதற்கிடையே காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்திற்கு அபயம் தேடி வர, அங்கே வரவழைக்கப்பட்ட அலமேலுவோ மனதைக் கல்லாக்கிக் கொள்கிறாள். காலில் விழுந்த மகளிடம் என்னை மீறி உங்க கல்யாணம் நடந்தா அது என் பிணத்து மேல தான் நடக்கும் என்கிறாள். இதனால் பஞ்சாயத்து பண்ண இருந்த போலீஸ் குழம்புகிறது. இப்போது இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாய் தவிக்கும் காதல் ஜோடிகளை போலீஸ் சேர்த்து வைத்ததா? அல்லது அலமேலுவின் பிடிவாதம் வென்றதா? இதற்கிடையே வீட்டைவிட்டு துரத்தப்பட்ட சக்தி தன் வளர்ப்பு அப்பா சிவநேசனை சந்திக்க விரும்பாமல் கால் போன போக்கில் போகிறாள். வளர்ப்புத் தந்தைக்கு தன் விஷயம் தெரிந்தால் துடித்துப்போவார் என்பதால் இந்தமுடிவு. இப்படி தன்னை மறந்து அவள் போய்க் கொண்டிருக்கும் போது அவள் சாலை விபத்தில் சிக்குகிறாள். அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், அவள்அணிந்திருந்த நகைகளை மட்டும் கழற்றி எடுத்துக் கொண்டு அவளை அம்போ என விட்டு விட்டுப் போய்விடுகிறது, அங்கே வந்த கூட்டம்.
இந்நிலையில் சக்தி சாலை விபத்தில் இறந்து விட்டாள் என்ற தகவல் அலமேலு குடும்பத்துக்கு கிடைக்கிறது. அப்போது அலமேலு எடுக்கும் முடிவு என்ன? சிவநேசன் வீட்டுக்கு இப்போது மகள் என்ற பெயரில் இளம்பெண் ஒருத்தி வந்திருக்கிறாள். அந்தப்பெண்ணின் பின்னணி என்ன என்பது இன்னொரு சுவாரசியம். தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, எல்.ராஜா, ஸ்ரீலேகா, மகாலட்சுமி, ஸ்ரீதர், ரேவதிப்பிரியா. திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: சம்யுக்தா ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். ஹோம் மீடியா மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.