நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகள
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும்
இது ஒரு இரு பாகங்களை அடக்கிய தொகுப்பு. ஒன்று, நடிகர் திலகமும் அவர் நடித்த ரீமேக் படங்களும் (இது சமீபத்தில்தான் முடிந்தது.). மற்றொன்று, நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் எடுக்கப்பட்டது பற்றிய பாகம்.
நம் நடிகர் திலகம் மற்ற எல்லா நடிகர்களையும் விட எல்லா விதத்திலும் மிகச் சிறந்த நடிகர் என்று பறைசாற்றுவதற்காகத்தான் இந்தக் கட்டுரைகளை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் நம்மைப்போன்ற எல்லா ரசிகர்களால் மட்டுமல்ல, பெரிய பெரிய ஜாம்பவான்களுமே ஏற்றுக் கொண்ட ஒன்றாயிற்றே; எதற்கு இதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அனைவரும் நடிகர் திலகத்தைப் பல கோணங்களிலும் பார்த்து ரசித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் உங்களுடன் சேர்ந்து என்னுடைய பார்வையிலிருந்து எழுதுகிறேன். அவ்வளவுதான். எல்லாவற்றுக்கும் மூலம் நம் அனைவரையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் என்ற மகா மனிதன் மற்றும் கலைஞன் தான். நான் என் மனதில் முப்பது வருடங்களுக்கு முன்னரே (தேவர் மகன் படம் தவிர்த்து) வடித்து, பெரிய கட்டுரையாய் எழுதி வைத்ததன் வடிவம்தான் இவை. அந்தக் கட்டுரை எரிந்து விட்டாலும், இப்போதும், எப்போதும், தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும், இவை அத்தனையையும் மனப்பாடமாக என்னால் சொல்ல முடியும் (சில நுணுக்கமான புள்ளி விவரங்களை மட்டும் சில வெப்சைட்-களில் இருந்து இப்போது எடுத்தேன்.). திரு Y.G.மகேந்திரா அவர்கள் வசந்த் டிவியில் கூறிய அந்த வெர்சடைலிடி தான் இந்த இரு பாகங்களுக்கும் அடி நாதம். (திரு சோ அவர்களும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் பொம்மை இதழில் இந்த வெர்சடைலிடியைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)
நடிகர் திலகம் ஒவ்வொரு மொழியிலும் வெளி வந்த வெவ்வேறு மாதிரியான பாத்திரங்களையும் அசலை விட பல மடங்கு பிரமாதமாக நடித்திருந்தார். அதே நேரம், தமிழில் அவர் செய்த மிகச் சிறந்த, கனமான, வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு பாத்திரத்தையும், அவை வேறு மொழிகளில் எடுக்கப்பட்டபோது, அந்தந்த மொழிகளில் நடித்த பெரிய பெரிய நடிகர்களாலேயே, நடிகர் திலகம் தொட்ட உச்சத்தில், ஐம்பது சதவிகிதத்தைக் கூடத் தொட முடியவில்லை.
மற்றவர்களால்,நடிகர் திலகத்தின் அசலில் ஐம்பது சதவிகிதத்தைக் கூடத் தொட முடியாமல் போனபோது, நடிகர் திலகத்தால் மட்டும் எப்படி அசலை விட பல மடங்கு சிறப்பாக செய்ய முடிந்தது? பல காரணங்களைப் பலர் கூறலாம். எனக்குத் தெரிந்து முக்கியமான காரணம், எந்த அந்நிய மொழிக் கதை மற்றும் சூழலையும், தன்னுடைய மண்ணிற்கேற்ப மாற்றிக் கொடுத்த நடிகர் திலகத்தின் கற்பனை வளம் மற்றும் முனைப்பு தான் முக்கிய காரணமாக இருக்க முடியும். எந்த ரீமேக் படமும் வேறு மொழியில் வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணம், மாற்றம் செய்யப்படும் மொழி மற்றும் அந்த சூழலுக்கேற்ப (nativity) படமெடுக்கப்படும் விதம், மற்றும் நடிகர்களின் கற்பனை வளம். இந்த விஷயத்தில், நடிகர் திலகம் மட்டுமே அனைத்து நடிகர்களை விடப் பல நூறு மடங்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது தொழில் பக்தி, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளம் ஆகியவை மற்றவர்களை விட மிகப் பெரிதாக இருந்ததே.
சமீபத்தில், திரு பாலகிருஷ்ணன் அவர்கள் கூட எனது முந்தைய பதிவிற்கான தனது பதிலில், இந்த புதிய தலைப்பையொட்டி, சில படங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட படங்களில், பாசமலர் மற்றும் நவராத்திரி மட்டும் எடுத்துக் கொண்டு, வேறு எட்டு படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதனால், திரு பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட மற்ற படங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அந்தப் படங்களை எனது வேறு கட்டுரைக்காக தனியாக வைத்திருக்கிறேன்.
1. பாகப்பிரிவினை (1959) - கலிசி உன்டே கதலு சுகம் (1961) தெலுங்கு / கான்தான் (1965) ஹிந்தி
இது பீம்சிங் - நடிகர் திலகம் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கண்ணதாசன்/பட்டுக்கோட்டையார் (இதற்கப்புறம் பட்டுக்கோட்டையார் மறைந்து விட்டதால், படிக்காத மேதையிலிருந்து கண்ணதாசன் தொடர்ந்தார்.) கூட்டணியில் அமைந்த இரண்டாவது வெற்றிப் படம் (பதிபக்திக்குப் பிறகு). இன்னும் சொல்லப் போனால், முப்பது வாரங்களுக்கு மேல் ஓடி, தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்த படம்.
பின்னாளில் வெளிவந்த அத்தனை குடும்பப் படங்களுக்கும் முன்னோடியாக அமைந்த படம். மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டத்திலும், தானும் ஒரு டீம் ப்ளேயராகவும் இருந்து, தன் தனித் தன்மையையும் நடிகர் திலகம் நிரூபித்த படம். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வீரம் சொரிந்த கதாபாத்திரமாகவே மாறி சிம்ம கர்ஜனை செய்து விட்டு, உடனேயே, அதற்கு நேர் மாறான கன்னையன் என்ற பட்டிக்காட்டு சப்பாணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய படம்.
தன் இளம் வயதிலும், கனமான பாத்திரத்தை ஏற்று, பார்ப்பவர் அத்தனை பேரையும், அவரோடும், பாத்திரத்தோடும் ஒன்ற வைத்து, கலங்கடித்த படம். நடிகர் திலகம் என்றால் எத்தனையோ தனித் தன்மைகள் உண்டு. USP என்கிறார்களே. இவருக்குத்தான் எத்தனை USP-கள். அதில் மிக முக்கியமானது முழுமையான மற்றும் நிறைவான நடிப்பு. இதில், சப்பாணி கதாபாத்திரத்துக்கேற்றார்ப் போல், கடைசிக் காட்சிக்கு முன் காட்சி வரை, கேமரா கோணம் தொலைவில் இருக்கும்போது கூட, அந்த விந்தி விந்தி நடக்கும் சப்பாணி நடையை மிகச் சரியாக maintain பண்ணி நடித்தார் (தாழையாம் பூ முடிச்சு பாடலின் முடிவில் வரும் ஹம்மிங்கோடு முடியும் காட்சி ஒரு சாம்பிள்). இதே சப்பாணி பாத்திரத்தை பின்னாளில் கமல் பதினாறு வயதிலே படத்தில் ஏற்று நடித்த போது, அதற்கு, பாகப்பிரிவினை கன்னையனை மானசீகமாக நினைத்துக் கொண்டு தான் நடித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடிகர் திலகத்திற்கு செவாலியே விருது வழங்கப் பட்ட அந்த மாபெரும் விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அதில் பேசிய, நடிகை சரோஜா தேவி அவர்கள், இந்தப் படத்தில், ஒரு காட்சியில், தான் பிரசவ வேதனையால் தவிக்கிறார்ப் போல் நடிக்க முடியாமல் போக, நடிகர் திலகம் அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டியதில், ஒரு சிறிய பங்கே தான் நடித்து, நல்ல பெயர் வாங்கியதாகக் குறிப்பிட்டார்.
இதில், ஒவ்வொரு முறை அவர் எம். ஆர். ராதாவாலும், சொந்தத் தம்பி எம். என். நம்பியாராலும் அவமானப் படுத்தப்படும்போதும், அவருடன் சேர்ந்து மக்களும் விம்முவர். இந்தப் படத்தைப் பற்றியும், இதில் இடம் பெறப் போகும் மற்ற எல்லா படங்களையும் பற்றி இன்னும் விரிவாக எழுத முடியும், இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல, என்பதால், இப்போதைக்கு இது போதும்.
பாகப்பிரிவினை தெலுங்கில் முதன் முறையாக 1961 -இல் எடுக்கப்பட்ட போது, கலிசி உன்டே கதலு சுகம் என்று பெயர் வைத்தனர். (மரோ சரித்ரா தெலுங்கு படத்தில், லிப்டில் ஒரு பாடல் வரும் - பல தெலுங்குப் படங்களின் பெயர்களை வார்த்தைகளாக வைத்து - அந்தப் பாடலின் முதல் வரி - அதாவது பல்வேறு படங்களின் - இது தான்.) தெலுங்கில் பிரதான பாத்திரங்களில் என்.டி. ராமாராவும் சாவித்திரியும் நடித்தனர். ரேலங்கி என்ற பண்பட்ட நகைச்சுவை நடிகர் எம்.ஆர். ராதா ஏற்ற நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தை ஏற்றார். என்.டி. ராமாராவ் புராண இதிகாச (ராமர், கிருஷ்ணர் வேடங்கள்) மற்றும் மசாலா படங்கள் மட்டுமல்லாமல், பல வித்தியாசமான படங்களில், நல்ல வேடங்களிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார். இருப்பினும், கன்னையன் பாத்திரத்தில், நடிகர் திலகம் அளவிற்கு அவரால் நடிக்க முடியவில்லை. படமும் பெரிய வெற்றியைப் பெறவும் முடியவில்லை.
ஆறு வருடங்களுக்குப் பிறகு பாகப்பிரிவினை ஹிந்தியில் எடுக்கப் பட்டபோது (காந்தான்), அதை மறுபடியும், பீம்சிங் தான் இயக்கினார். பிரதான பாத்திரங்களில், சுனில் தத், நூதன் மற்றும் பிரான் முதலானோர் நடித்தனர். ஏன் ஆறு வருடங்களுக்குப் பிறகு? பாகப்பிரிவினை வெளிவந்தவுடனேயே, இதை ஹிந்தியில் எடுக்க விரும்பி, வட நாட்டின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான, திலீப் குமாரை அணுகிக் கேட்டபோது, அவர், என்னால் விஷப் பரீட்சையெல்லாம் செய்ய முடியாது என்று கூறி நாசூக்காக ஒதுங்கிக் கொண்டாராம்.
சுனில் தத் காங்கிரஸ்காரர் மட்டுமல்லாது, நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் ஆவார் (அவர்தம் மனைவி நடிகை நர்கீசும் நடிகர் திலகத்தின் நண்பர்தான்). நடிகர் திலகத்தின் படங்கள் ஹிந்தியில் எடுக்கப் பட்டபோது, பெரும்பாலும், சுனில் தத்தும், பின்னாளில், சஞ்சீவ் குமாருமே, அவைகளில், நடித்தனர். இந்தப் படம் சுனில் தத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து, ஓரளவிற்கு நன்றாகப் போனது என்றாலும், தமிழின் சாதனையை நெருங்கக் கூட முடியவில்லை. அதற்குக் காரணம், நடிகர் திலகத்தின் உயிர்ப்பான நடிப்பில், ஓரளவுதான் சுனில் தத்தால் செய்ய முடிந்தது. மற்ற நடிகர்களும், அசல் அளவிற்கு, செய்ய முடியவில்லை.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகள
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
2. படிக்காத மேதை (1960) - மெஹர்பான் (1967) - ஹிந்தியில்
மறுபடியும் பீம்சிங் - நடிகர் திலகம் - கண்ணதாசன் கூட்டணி (இசையமைப்பு மட்டும் இந்த முறை மாறியது. "மாமா" கே.வி. மகாதேவன் அவர்கள் இசையமைத்திருந்தார்). மிகப் பெரிய வெற்றியடைந்த படம். குறிப்பாக, மதுரை தங்கம் திரையரங்கத்திலேயே (ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம்) நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
இது ஒரு வங்க மொழிப் படத்தின் தழுவல் என்றாலும், இந்தப் படம் பிற மொழிகளில், குறிப்பாக, ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, தமிழ்ப் படத்தை ஒட்டியே எடுத்ததால், இறுமாப்பாக, படிக்காத மேதை படத்தை இந்த பாகத்தில், சேர்த்துக்கொள்வதில், பெருமை கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். பாகப் பிரிவினை படத்திற்குப் பிறகு, மறுபடியும், ஒரு அப்பாவி/வெகுளி கதாபாத்திரம். பாகப்பிரிவினை கன்னையனை ஒரேயடியாக அப்பாவி/வெகுளி என்று கூற முடியாது. அது ஒரு விதமான கிராமத்து இளைஞன் வேடம் - சப்பாணி என்பதால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாக நடித்திருப்பார். அந்த வித்தியாசமான கெட்டப்பே - சிகை அலங்காரம், காது கடுக்கன், மீசை (பெரிதாக ட்ரிம் செய்யப்படாமல் எளிமையாக இருக்கும்.), இத்யாதி பிளஸ் சப்பாணி என்பதால் வரும் அந்த இரக்க உணர்வு அந்தக் கதாபாத்திரத்துடன் படம் பார்க்கின்ற ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி விடும். ஆனால், கடைசியில், அவரது கை, கால் சரியாகி விட்டபின்பு - அவருடைய ஒரிஜினல் சுருள் முடி வேறு சேர்ந்து விடும்! ஒரு மாதிரி சர்- என்று கன்னையன் பாத்திரத்தின் அந்த வெள்ளந்தியான தன்மை குறைகிறார்ப் போல் இருந்து மறுபடியும், நடிகர் திலகத்தின் ஒப்பற்ற உடல் மொழியால் மறுபடியும் அந்தப் பாத்திரம் உயிர் பெறும். (அவருக்கு மற்றவர் சொல்லித்தான் தெரிய வரும் தனக்கும் மற்றவர்போல் கை கால் சரியாகி விட்டதென்று - ஒரு மாதிரி கையையும் காலையும் ஆட்டி குதிப்பார் - உடனேயே, எல்லோரையும் அந்த கன்னையன் கதாபாத்திரத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்.) கெட்டப் மாற்றம் என்பதற்கு நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே எந்த அளவிற்கு நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதற்கு இந்த இரு கதாபாத்திரங்களுமே சாட்சி.
படிக்காத மேதை "ரங்கன்" கதாபாத்திரத்திற்கு அவர் எந்த புதிய கெட்டப்பும் கொடுக்காமல் விட்டிருப்பார். அதாவது, பாகப்பிரிவினையில், கன்னையனுக்கு கை கால் சரியாகி விட்டபின் வரும் அந்த நார்மல் கெட்டப். இந்தப் படம் முழுவதும், ஒரு முண்டா பனியனும் வேட்டியுமே அவரது உடை. ரங்கன் ஒரு வேலைக்காரன் தானே. ஆனாலும், தன ஒப்புயர்வற்ற உடல் மொழி, வசன உச்சரிப்பால் மட்டுமே, இந்த அப்பாவி ரங்கன் பாத்திரத்தை, காலத்தால் அழிக்க முடியாத, ஒரு திரைக் கதாபாத்திரமாக மாற்றினார். ஆம். அவர் நடித்த எத்தனையோ சமூகச் சித்திரங்களில் ஏற்ற கதாபாத்திரங்களில், முதல் பத்து இடங்களில், முன்னணியில் அமைந்திருக்கும் பாத்திரம் பலருக்கும், இந்த "ரங்கன்" தான். (இதற்கும் வழக்கம் போல் கடும் போட்டி - பாரிஸ்டர், prestige -காரர், போன்றவர்களிடமிருந்து. அதைத் தனியாக வைத்துக் கொள்ளலாம்.)
இந்தப் படத்தைப் பற்றி யார் எப்போது எழுதினாலும், இரண்டு பெயர்கள் தவிர்க்க முடியாதவை. ஒன்று, நடிகர் திலகம் என்றால், மற்றொன்று, எஸ். வி. ரங்காராவ். என்ன ஒரு நடிப்பு. (அதிலும், குறிப்பாக, "எங்கிருந்தோ வந்தான்" பாடலில், பிறகு, கடைசியாக சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விடும் காட்சி, போன்றவை).
எத்தனையோ காட்சிகள் - குறிப்பாக - நடிகர் திலகமும் சௌகாரும் வீட்டை விட்டுக் கிளம்பி வாசலில் ரிக்க்ஷாவில் ஏறப் போகும் போது, அங்கு வரும் எஸ்.வி.ரங்கா ராவ், சௌகாரிடம், அவனுக்கு உலகம் தெரியாது - நீதான் பார்த்துக்கணும் என்று சொல்லி விட்டு - நடிகர் திலகம் நோக்கித் திரும்புவார். நடிகர் திலகம் அது வரை முகத்தைத் திருப்பிக்கொண்டிருப்பார் - ரங்காராவ் தான் அவரை என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லி விட்டாரே! ரங்கா ராவ் நடிகர் திலகத்திடம் பேச ஆரம்பித்து அவரது தோளைத் தொடுவார் - அதாவது - அவர் தன்னிடம் கோபத்தில் இருக்கிறார் என்று நினைத்து - ஆனால் நடிகர் திலகமோ ஊமையாய் அழுது கொண்டிருப்பார். அவரைத் திருப்பியவுடனே நடிகர் திலகம் வெடிப்பார் பாருங்கள். இந்தக் காட்சியை நினைத்துக் கொண்டு எழுதும்போதே, கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறதே, பார்த்தால்! இந்தக் காட்சியை திரை அரங்கத்தில் பார்க்கும் போது - இன்னும் நினைவில் நிழலாடுகிறது - அரங்கமே அழுது கொண்டிருந்தது. அந்த அளவிற்கு, படம் பார்க்கும் அனைவரையும் தன் வசம் கட்டிப் போட்டிருப்பார்.
பொதுவாக, நடிகர் திலகம் சில காட்சிகளுக்கு அரங்கம் அதிர கை தட்டல் வாங்குவார் - சில காட்சிகளிலோ - அனைவரையுமே கட்டிப் போட்டு விடுவார் - சில காட்சிகளிலோ - அனைவரையுமே, குறிப்பாக, அவருடைய பிரத்தியேக ரசிகர்களாகிய நம்மை ஆர்ப்பரிக்க வைத்து விடுவார். அவர் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது, கோபத்தில் வெடிக்கும்போது வெடித்து - இப்படியாக அவருடனேயே எல்லோரையும் பயணிக்க வைத்து விடுவார்.
அடுத்தபடியாக, ரங்கா ராவ் இறந்தவுடன், அவர் வீட்டிற்குச் சென்று கண்ணாம்பாவுடன் சேர்ந்து வெடித்து அழும் காட்சி. இந்தப் படம், எண்பதுகளில், தூர்தர்ஷனில், ஒளிபரப்பப்பட்டபோது, எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் (என் நண்பர்களும் சேர்ந்து தான்) பார்த்து அழுதது இன்னும் நினைவில் உள்ளது. அது மட்டுமல்ல, உடனே வந்த ஒரு வார இதழில் (குமுதம் என்று நினைவு), நடிகை சுகாசினி மணிரத்னம் அளித்த பேட்டியில், இந்தக் காட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர், கமல் முதல் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் அடக்க முடியாமால் அழுதோம் என்று கூறி இருந்தார். இன்று வரை, இந்தப் படம் பார்க்கின்ற அனைவரையும் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது, ரங்கன் இன்னமும், அனைவரையும், இன்று பிறந்த குழந்தை வரை, தன் வசம் கட்டிப்போட்டுக்கொண்டுதானிருக்கிறான்.
இந்தப் படம் ஹிந்தியில், மெஹர்பான் என்ற பெயரில் எடுக்கப் பட்டபோது, மறுபடியும், பீம்சிங் தான் இயக்கினார். மறுபடியும், சுனில்தத் - நூதன் நடித்தனர். நடிகர் திலகம் தொட்ட உச்சத்தில் பாதி கூட சுனில் தத்தால் தொட முடிய வில்லை - படமும் தமிழ் அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை.