Quote:
பொக்கிஷம்-200
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பொக்கிஷம் தொடர், 200-வது எபிசோடை தாண்டியபடி தொடர்கிறது. விறுவிறுப்பான திருப்பங்களுடன் விரையும் இந்த தொடரின் கதைப்பின்னணி வருமாறு. வசந்தன்-கண்மணிக்கிடையேயான கருத்து வேறுபாட்டில் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு போய் விடுகிறாள், கண்மணி. இந்த சூழலில் அவன் மாயாவை சந்திக்கிறான். ஒரு இக்கட்டான சூழலில் அவளுக்கு அவன் உதவி செய்ய, அந்த உதவிக்கு எதிர்வினையாக பிரச்சினை மாயா-வசந்தனை சுற்ற, அது எந்த அளவுக்கு வசந்தனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது?
வசந்தன்-கண்மணி பிரிவுக்குப் பின்னணியில் தெரிந்தோ தெரியாமலோ இருப்பவள் வழக்கறிஞர் அஸ்வதி. இவள் திருமணத்துக்கு முன்பே தன் காதலனுடன் நெருங்கிப் பழகியதில் தாய்மையடைகிறாள். ஆனால் வசந்தனின் தோழி என்ற முறையில் கண்மணியின் குடும்பம் வசந்தனை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது. குழந்தைக்கு அப்பாவே அவன் தான் என்று ஒருகட்டத்தில் முடிவே செய்கிறது. இதனால் வசந்தனை நிரந்தரமாக பிரிந்து விடும் நோக்கில் அவன் மீது விவாகரத்து வழக்கு தொடுக்கிறாள், கண்மணி. இந்த வழக்கில் கண்மணிக்கு ஆதரவாக அஸ்வதியின் தாயார் சத்யபாமா ஆஜராகிறாள். வசந்தனுக்காக அஸ்வதி வாதாடுகிறாள். தன் மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்று சொல்லும் வசந்தன், விவாகரத்துக்கு மறுத்து விடுகிறான். இதையும் தாண்டி வழக்கின் முடிவு என்னாகும்? இன்னொரு புறம் வசந்தனின் தம்பி ஆனந்தன் இந்த சூழலை பயன்படுத்தி குடும்ப சொத்துக்களை அபகரித்துக் கொள்கிறான். இதனால் திருமணத்துக்கு தயாராக இருக்கும் வசந்தனின் 2 தங்கைகளின்எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதைக்கண்டு மனம் பொறாத வசந்தனின் சித்தப்பா, ஆனந்தன் மீது வழக்கு தொடுக்கிறார். இதனால் வெகுண்ட ஆனந்தன், ஒரு விபரீத முடிவெடுக்கிறான். அதனால் வசந்தனின் குடும்பம் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்தித்தது?
சத்யபாமாவின் மகன் ரஞ்சன் ஜெயிலில் இருந்த வெளியே வந்ததும் வசந்தனை பழிவாங்கத் துடிக்கிறான். அதற்காக அவன் வைத்த குறி, வசந்தனின் தங்கை சுகுணா. அவன் விரித்த வஞ்சக வலையில் சுகுணாவும் விழுந்து விடுகிறாள். அவனது அன்பு போலியானது என்பதை புரிந்து கொண்டபோது அவளால் தப்ப முடிந்ததா? தொடரை இயக்கி தயாரிப்பதோடு வசந்தன் கேரக்டரிலும் நடிக்கிறார், திருச்செல்வம். நட்சத்திரங்கள்: திருச்செல்வம், மீரா, ஸ்ரீவித்யா, பாவனா, நளினி, சத்யபிரியா, விஜய்கிருஷ்ணா, பவானி, கற்பகம், வித்யா, பவ்யகலா, பாரதிகண்ணன், அப்பல்லோ ரவி, விஸ்வநாத், துரை, நந்தினி, ரமேஷ், ஆதவன், ஆடிட்டர் ஸ்ரீதர், சிவா. பிரகாஷ். ஒளிப்பதிவு: தியாகராஜன். வசனம்: திருச்செல்வம்- பிரியா. கதை, திரைக்கதை, இயக்கம்: திருச்செல்வம். தயாரிப்பு: திருச்செல்வம் தியேட்டர்ஸ்.