-
உலகம் சுற்றும் வாலிபன் இந்த படம் உருவான விதம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.
இதுவரை அயல்நாடுகளில் படமாக்கப்பட்ட படங்களிலேயே அதிக செலவு ஏற்பட்ட படம் இதுவாகத்தானிருக்கும். அது மட்டுமன்றி அயல்நாடு செல்லாத நம்பியார், தேங்காய் சீனிவாசன், மனோகர் ஆகியோரையெல்லாம் அயல்நாடுகளில் அவர்கள் இருப்பதுபோல் அரங்கங்களை எண்ண முடியாத அளவில் உருவாக்கிப் படமாக்கினார் எம்.ஜி.ஆர். தமிழில் சமூகப் படமொன்றிற்காக இதுவரை அதிகபட்ச அரங்கங்களை (செட்) சந்தித்த படம் உலகம் சுற்றும் வாலிபனே. நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலில் மஞ்சுளாவுடன் எம்.ஜி.அர். நடித்த காட்சிகளில் எது அரங்கம் எது அயல்நாட்டுக் காட்சி என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் படமாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படமாக்கத்தில் சாதனை நிகழ்த்தியதை போல் திரையிடப்பட்டதிலும் சாதனை நிகழ்த்தியது உலகம் சுற்றும் வாலிபன். உலகம் சுற்றும் வாலிபன் அயல்நாடுகளில் படமாக்கப்பட்டதன் காட்சிகள் அடங்கிய நெகடிவ் நாசமாகிவிட்டது என்று தமிழகமெங்கும் வதந்தியாக செய்திகள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் மீறி படம் தயாரானால், சென்னை படம் திரையிடுவதற்கு தியேட்டர் கிடைப்பது கேள்விக்குறியானது. கலைஞர் ஆட்சியின் மிரட்டல்களை சந்திக்கத் துணிந்து தியேட்டர்கள் கிடைத்தன. போஸ்டர்கள் ஒட்டினால் அதை கிழிப்பதற்கு தி.மு.கவினர் தயாராக இருந்தனர்.
தினத்தந்தியுடன் அப்போது எம்.ஜி.ஆருக்கு சுமூகமான உறவு இல்லை. அதனால் சமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரது பட விளம்பரங்களே தினத்தந்தியில் இடம் பெறவில்லை. அதனால் சென்னை போஸ்டர்களே ஒட்டாமல், பிற நாளிதழ் விளம்பரங்களாலும், ஸ்டிக்கர் விளம்பரத்தாலும் (தமிழில் ஸ்டிக்கர் விளம்பரம் அறிமுகமானது இதிலிருந்துதான்) உலகம் சுற்றும் வாலிபன் வெள்ளி விழா கண்டது. படத்தின் பிரிண்டுகளை வெளியூர்களுக்கு அனுப்பும்போது எதேனும் அசம்பாவிதங்கள் நடத்தக்கூடும் என்று கருதிய எம்.ஜி.ஆர். அதற்கும் ஒரு வழி செய்தார்.
ஒரே ஊருக்கு மூன்றுவிதமான படப்பெட்டிகளை எம்.ஜி.ஆர் அனுப்பி வைத்தார். மூன்றில் ஏதேனும் ஒன்றில்தான் நிஜமான படப்பிரதி இருக்கும். மற்றொன்றில் கற்கள் அடுக்கப்பட்டிருக்கும், மூன்றாவதில் குப்பை அல்லது கழிவு ஃபிலிம் இருக்கும். இப்படி மூக்கில் விரல் வைக்கும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக உலகம் சுற்றும் வாலிபன் 20 திரையரங்குகளில் 100 நாட்களை கண்டது. 5 வருடங்களுக்கு ஒரு முறையல்ல, ஆண்டு தவறாமல் திரையரங்குகளுக்கு படையெடுத்து வசூலை வாரிக் குவிக்கும் ஒரே தமிழ் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபனே.
courtesy - net
-
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. 1964ல் திடீரென மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது திமுகவினர் பலத்த அதிருப்தி அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியான என் கடமை படம் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, உலகம் சுற்றும் வாலிபன் படமும் தோல்வியடையும் என்று நினைத்தனர். முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.
இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.
‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’
courtesy - net
-
உலகம் சுற்றும் வாலிபன்(1973) - ஆனந்த விகடன் விமர்சனம்.
பிரமாண்டமான வெளி நாட்டு படங்களைப பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு ஏக்கம் வரும். இப்படிப் பிரமிக்க வைக்கும் வெளிப்புறக் காட்சியமைபுக்களுடனும்,தொழில் நுணுக்கத்துடனும் தமிழிலும் படம் வராதா என்று.
அந்த ஏக்கத்தைத தீர்ப்பதற்கு வெளி வந்திருக்கிறான் 'உலகம் சுற்றும் வாலிபன்.'
பயங்கர இடி, மின்னல்களுக்கு மத்தியில் ஓர் இளம் விஞ்ஞானி(எம்.ஜி.ஆர்) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை நம்மை ஒரு புது உலகத்துக்கே அழைத்து சென்று, நிமிடத்துக்கு நிமிடம் கண்ணைக் கவரும் வெளிப்புறக் காட்சிகளால் பிரமிக்க வைக்கிறார் தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்.ஜி.ஆர்.
மகத்தான படங்களைத் தந்து புகழ் பெற்ற செசில் பி டேமிலியின் முழு சாயலை எம்.ஜி.ஆரிடம் கண்டு பெருமைப்படுகிறோம்.
படத்தின் பெரும்பகுதி, கதை நிகழும் கிழக்காசிய நாடுகளான சிங்கப்புர்,மலேய்சியா,தாய்லாந்து,ஹாங்காங்,ஜப் பான், இவற்றிலேயே படமாக்கப் பட்டு இருக்கிறது. அதுவே நமக்கு புது அனுபவமாக இருக்கிறது.தமிழில் இப்படி பெரிய அளவில் அயல் நாட்டு வெளிப்புறக் காட்சிகள் அமைந்திருப்பது இதுவே முதல் படம்.
'பேராசை பிடித்திருக்கிறது' என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கும் காமிராவைத்தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு தாகத்துடனும் வேகத்துடனும் கிழக்காசிய நாடுகளின் அழகுகளை எல்லாம் ஒன்று விடாமல் வாரி வாரித் தன்னுள் அடக்கி கொண்டு இருக்கிறது. அந்தக் காட்சிகள் வெள்ளித் திரையில் வண்ண வண்ணமாக விரியும் போது அந்த அழகு கொள்ளையில் நாம் மெய் சிலிர்த்து போகிறோம்.
சந்திரகலாவும்,எம்.ஜி.ஆரும் காரில் போகும் போதும், படகில் டூயட் பாடிக்கொன்டு இருக்கும் போதும்,அவர்களுக்கு மேலாகப் பறக்கும் விமானத்தைக் கூடப் புத்திசாலித்தனத்துடன் அழகாகப் படமாக்கி பிரமிக்க வைத்து இருக்கிறார்கள்.
வாலிபன் - இல்லை,வாலிபர்கள்(எம்.ஜி.ஆர்க்கு இரட்டை வேடம்)சந்திக்கும் பெண்கள் நால்வர்.சந்திரகலா,மஞ்சுளா,லதா,தாய்லாந்து நடிகையான மேட்ட ரூங்ராத்.
இந்த நால்வரிலும் தன் கள்ளமற்ற சிரிப்பு ஒன்றினாலேயே நம் மனத்தை வசிகரத்து கொள்பவர் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத்தான். எம்.ஜி.ஆரைக் காதலித்து உருகும் அவருடைய காதல் முறிவை சட்டென்று சகோதரப் பாசத்துக்கு மாற்றியதுதான் ரசிக்கும் படி இல்லை.காதலில் தோல்வி கண்டதும் அவரை உருக்கத்துடன் வெளியேற விட்டு இருந்தால் அக்காட்சி நெகிழ்ச்சியுட்டும் படி இருந்து இருக்கும்.
சந்திரகலாதான் மற்றவர்களுள் அதிக வாய்ப்புள்ள கதாநாயகி.அடக்கமும் உணர்ச்சியும் நிறைந்த நடிப்பு அவரிடம் இருந்து வெளிப்படுகிறது.
பிரதான வில்லன் அசோகன் தான் என்றாலும் நம் பிரியத்தை சம்பாதித்துக் கொள்கிற வில்லன் நம்பியார்தான்.
வெகு நாட்களுக்கு பின் பழைய நாகேஷைப் பார்க்கிறோம்.
வெளிப்புறக் காட்சிகளையும் உட்புறக் காட்சிகளையும் பேதம் கண்டுபிடிக்க முடியாத படி இணைத்து படத்துக்கு கம்பீர வடிவம் தந்திருப்பது பெரிய சிறப்பு.
அதற்க்கு துணையாக பிரமிக்கத்தக்க வெளிப்புறக் காட்சிகளுக்கு ஈடு கொடுக்கும்படி பொருத்தமாக உட்புறக் காட்சிகளை அமைத்திருக்கும்(உதாரணம் - புத்தர் கோயில்)ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துக்கு ஒரு சபாஷ்.
'எக்ஸ்போ 70' காட்சிகளை அங்கு நேரில் சென்றவர்கள் கூட இப்படித் தேர்ந்தெடுத்து ரசனையுடன் பார்த்திருப்பார்களா என்று சந்தேகப் படும்படி அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்கள். அதே போல தண்ணீருக்குள் எம்.ஜி.ஆர், லதா சம்பந்த்தப்பட்ட பாலே காட்சியும், சறுக்கு விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் காட்சியும் கூட மறக்க முடியாதவை.
இப்படி காமிராவை அற்புதமாக இயக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் ராம மூர்த்திக்கு ஒரு சபாஷ்!
படம் வெளியாகுமுன்னே பிரபலமாகி விட்டவை இந்தப் படத்தின் பாடல்கள். 'சிரித்து வாழ வேண்டும்','பச்சைக்கிளி முத்து சரம்' பாடல்கள் எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காதவை.பாடல்களுக்கான இசை அமைப்பையும் மிஞ்சி நிற்கிறது 'ரீ - ரிக்கார்டிங்'. மெல்லிசை மன்னருக்கு ஒரு சபாஷ்.
ஏற்கனவே 'நாடோடி மன்னன்','அடிமைப் பெண்' போன்ற மகத்தான படங்களைத் தயாரித்தவர்தான் எம்.ஜி.ஆர்.
ஆனால் அவற்றை எல்லாம் மிஞ்சி இப்படத்தின் மூலம் எட்டாத உயரத்திற்க்கு எழுந்து நிற்கிறார் அவர்.
தமிழ் திரை உலகமே பெருமைப்படத்தக்க தனிப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கும் எம்.ஜி.ஆருக்கு எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம்.
விகடன் விமர்சனக் குழு.
இதுவரை எந்த ஒரு பொழுது போக்கு படத்திற்க்கும் இந்த மாதிரி விமர்சனம் வந்ததில்லை. இனியும் வரப் போவதும் இல்லை. அது தான் எம்.ஜி.ஆர்
-
-
-
-
-
-
-