Today's Tamil The Hindu .
சிவாஜியின் அரசியல்
ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு:
writermuthukumar@gmail.com
http://tamil.thehindu.com/multimedia...i_2532462f.jpg
பிப்ரவரி 10, 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார் சிவாஜி.
நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை என்பார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.
அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடிக்க ஆள் தேடியபோது முதலில் கிடைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த இடத்துக்கு வந்தார் நடிகர் கணேசன். அவருடைய நடிப்பைப் பார்த்து, ‘சிவாஜி’கணேசன் ஆக்கினார் பெரியார். பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும், சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு.
திராவிட இயக்கம்
பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் கே.ஆர். ராமசாமிக்கு அடுத்து செல்வாக்கு நிரம்பிய திரை நட்சத்திரம் சிவாஜி மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். என்று பல நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். திராவிட நாடு கோரிக்கையைத் திமுக மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த சமயம், திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் ஈவெகி சம்பத் பேசினார். அந்தப் பேச்சு சிவாஜியை உணர்ச்சிவயப்படுத்தியது. அடுத்துப் பேசிய சிவாஜி, “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார்.
1957-ல் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்றார் அண்ணா. ஆகட்டும் என்று சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் களமிறங்கினர். கையில் துண்டேந்தி, ‘பராசக்தி' வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது. ஆனால், அண்ணாவின் பரிசும் பாராட்டும் எம்ஜிஆருக்கே கிடைத்தது. அண்ணாவைச் சுற்றியுள்ளோர் செய்த சதி என்று சந்தேகப்பட்டார் சிவாஜி. சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். வாருங்கள், திருப்பதி போய் வரலாம். போனார்கள். மறுநாள் பத்திரிகைகளில் செய்தி, ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று. ‘திருப்பதி கணேசனுக்குக் கோவிந்தா’என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. வழக்கமான செய்திதான். அது சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது புரிந்தது சிவாஜிக்கு. இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.