-
பாவமன்னிப்பு 51
12. "பாவமன்னிப்பு" படப்பாடல்கள் காலத்தை வென்றவை. இப்பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான, ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளுக்கு அற்புதமான, இனிமையான மெல்லிசை மெட்டுகள் என ஒரு புதிய திரை இசை அலையையே உருவாக்கினார்கள் மெல்லிசை மாமன்ன்ர்கள். பாடல்களின் ஒலிப்பதிவை மட்டும் ஒலிப்பதிவு மாமேதை முகுல்போஸ் செய்து கொடுத்தார்.
13. "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலை நடிகர் திலகம் குழுவினருடன் பாடி நடிக்க சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார் டி.எம்.எஸ். குழுவினரில் ஒருவருக்கு நாகூர் ஹனீஃபா குரல் கொடுத்திருப்பார். இன்றளவும் இஸ்லாமிய பண்டிகை தினங்களில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. நாகூர் ஹனீஃபா தனது பக்தி இசைக் கச்சேரிகளிலும் இப்பாடலை மறவாமல் பாடுவதுண்டு. நடிகர் திலகம் இப்பாடலுக்கு 'டேப்'பை வாசித்துக் கொண்டே பாடுவது இப்பாடலின் சிறப்பம்சம்.
14. "காலங்களில் அவள் வசந்தம்" பாடல் இன்றளவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்த பாடல். பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் எத்தனையோ மெலடிகளை பாடியிருக்கிறார். எனினும் அவரது சிகர மெலடி இது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னர் பல படங்களில் பல நல்ல மெலடிகளை அவர் இசைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தின் இந்தப்பாடல்தான் அவரை Limelightற்கு கொண்டு வந்தது. ஜெமினிக்கு பிபிஎஸ் என்ற மியூசிகல் ஃபார்முலாவும் உருவாகக் காரணமாயிற்று. [காதல் மன்னனுக்கு ஹிட்ஸாங்ஸுகளுக்கு எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. 1950களில் ஏஎம்ராஜா, கண்டசாலா குரல்களிலும், 1960களில் பிபிஎஸ்ஸின் வாய்ஸிலும், 1970களில் எஸ்பிபியின் குரல்ஜாலத்திலும் அவருக்கு பற்பல சிறந்த
பாடல்கள் அமைந்திருக்கின்றன. டி.எம்.எஸ். குரலிலும் அவருக்கு சில சிகர பாடல்கள் இருக்கின்றன.]
15. "சாயவேட்டி தலையில கட்டி" பாடல் Lesshit பாடல் தான் என்றாலும் படத்தோடு பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நமது கால்களை தாளம் போட வைக்கும். இப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.
16. 'இந்த அளவுக்கு இனிமையாக என்னால் பாடவே முடியாது' என்று ஒரு இசைக்குயில் இன்னொரு இசைக்குயிலைப் பாராட்டியது. ஆம், "அத்தான் என் அத்தான்" பாடலைக் கேட்டு விட்டுத்தான் இத்தகைய மனமார்ந்த பாராட்டை பி.சுசீலாவுக்கு அளித்தார் லதா மங்கேஷ்கர். சாவித்திரியும், தேவிகாவும் போட்டி போட்டுக் கொண்டு perform பண்ணும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் ஒரு மலர்ந்த புன்னகை விரித்து சீனை தூக்கிக் கொண்டு போய் விடுவார். [இன்றளவும், எனது அத்தை மகன் அத்தானைப் பார்க்கும் போதெல்லாம் அவரை நோக்கி அடியேன் இந்தப் பாடலைப் பாடுவது வழக்கம்.]
17. "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" பாடலின் டியூன் படத்தில் டைட்டில் மியூசிக்காக தொடக்கத்திலேயே வந்து நமது ஆன்மாவைத் தொடும். பின்னர் பாடல் காட்சியாக வரும் போது கண்ணதாசன், விஸ்ராம், டி.எம்.எஸ் ஆகியோரை சைக்கிளில் செல்லும் சிவாஜி தன் performanceஸால் ஓவர்டேக் செய்து விடுவார். இப்பாடலில் விட்டல்ராவும் ஒளிப்பதிவில் தன் பங்குக்கு தூள் கிளப்பியிருப்பார். 'ரஹீம்' குற்றவாளியாக்கப்படும் காட்சியின் போதும் இப்பாடலின் சரணம் பின்னணியாக ஒலிக்கும். அதற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் உதவி இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.
18. 'வந்தநாள் முதல் இந்தநாள் வரை' பாடல் காட்சியில், சிவாஜி அவர்கள் சைக்கிளில் வரும் போது, சைக்கிளின் கேரியரில் ஒரு குழந்தையை வைத்து அழைத்து வருவார். அந்தக்குழந்தை பின்னாளில் சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, "சின்ன தம்பி", "மிஸ்டர் மெட்ராஸ்" போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரவீந்தர்.
19. மேலும், "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" டியூனையும் படத்தின் டைட்டில் மியூசிக்கிற்காக சேர்த்து ஒலிப்பதிவு செய்த போதுதான், தமிழ்த் திரை இசை வரலாற்றில், முதன்முதலாக, ஒரு படத்தின் ஆரம்ப இசைக்கு மிக அதிகப்படியான இசைக்கருவிகள் பின்னணியில் இசைக்கப்பட்டது. இத்தொடக்க இசைக்காக 60 வயலின், 8 வயோலா, 3 செல்லோ, 1 பாஸ், 4 டிரம்பட், 2 ஸாக்ஸ், 2 டிரம்ப், 2 ஃப்ளூட், 2 தபேலா, 2 டோலக், 2 டிரம் செட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் ஒரு திரை இசை பிரம்மாண்டம்.
20. "கவியரசரின் பாட்டிருக்கும், இசையரசர்களின் மெட்டிருக்கும், இசையரசியின் குரலிருக்கும், நடிப்பரசரின் நடிப்பிருக்கும்". இவையனைத்தும் இணையும் கீதம் "பாலிருக்கும் பழமிருக்கும்". "பாலும் பழமும்" மட்டுமா சுவை, இந்தப் "பாவமன்னிப்பு" பாடலும் தானே! சுசீலாவின் இனிமைக்குரலுக்கு ஏற்றாற் போல் தேவிகாவும் இப்பாடலில் இங்கிதமாக நடித்திருப்பார். சிவாஜியின் ஹம்மிங் எம்.எஸ்.வியின் சிங்கிங்.
21. ரஹீமின் அழகு முகம், திராவக வீச்சுக்குப் பின், சிதையும் போது அவரது காதலி மேரி(தேவிகா) வந்து பார்த்துவிட்டு தாங்கொணாத் துயரத்துடன் திரும்பிச் செல்கிறாள். அப்போது திலகத்தின் உயிர்ப்பில் டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்:
"ஓவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனங்கனிந்து வந்தாளோ
மறந்துவிட நினைப்பாளோ மறுபடியும் வருவாளோ"
ஆஹா...தமிழிருக்கும் வரை தமிழ்ப்பெரும் கவிஞன் கண்ணதாசனும் இருப்பார்.
22. "காலம் பல கடந்து" எனத் தொகையறாவில் தொடங்கி "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்" எனப் பாட்டாகும் போது நம் ஐம்புலன்களும் பார்க்கின்ற திரையோடு ஐக்கியமாகி விடும். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" சரிதான். ஆனால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் சிரித்துக் கொண்டே அழுவதற்கும், அழுது கொண்டே சிரிப்பதற்கும் ஒருவர் தானே இருக்கிறார். பாடல் முழுமையுமே நடிகர் திலகம் தனது performanceஸால் பார்ப்போரை புரட்டிப் போட்டு விடுவார். இந்தப் பாடலையெல்லாம் பாடகர் திலகம் டி.எம்.எஸ்ஸைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் பாட முடியும். அன்றும், இன்றும், என்றும் பல கோடி உலக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும், விளங்கப் போகும் வரிகளை கவியரசர் எத்தனை தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்:
"காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்! வந்ததை எண்ணி அழுகின்றேன்!"
சிவாஜி, சௌந்தரராஜன், விஸ்வநாதன், கண்ணதாசன் - பொற்காலப் படைப்பாளிகள். இவர்களின் பங்களிப்புக்கு ஒவ்வொருவருக்கும் எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம்.
23. 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடல் காட்சியில், ஒரே ஃப்ரேமில் மூன்று சிவாஜிகள் தெரிவார்கள். ஒருவர் சிரிப்பார், ஒருவர் அழுவார், ஒருவர் சிரித்து-அழுது பாடிக் கொண்டே வருவார். இப்படி இந்தப் பாடல் காட்சியை எடுக்கச் சொல்லி பீம்சிங்கிற்கு ஐடியா கொடுத்ததே அய்யன் சிவாஜி தான்.
24. "பாவமன்னிப்பு" படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் விட்டல் ராவின் கேமரா விளையாடியிருக்கும். ஆர்ட் டைரக்ஷனை ஹெச்.சாந்தாராம் செய்து கொடுக்க, எடிட்டிங் மேற்பார்வையை கவனித்தார் பீம்சிங்.
25. நடிகர் திலகத்தின் தாயாக இதில் நடித்திருப்பவர் எம்.வி.ராஜம்மா. முதலில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் பி.கண்ணாம்பா. அவர் நடித்து 6000 அடிகளுக்கான காட்சிகள் படமாகியிருந்த நிலையில் திடீரென்று அவர் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றினார். எனவே, மீண்டும் முதலிலிருந்து கண்ணாம்பா நடித்த காட்சிகளையெல்லாம் எம்.வி.ராஜம்மாவைக் கொண்டு படமாக்கப்பட்டது.
-
பாவமன்னிப்பு 51
26. "பாவமன்னிப்பு", நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியமாக, 66வது கருப்பு-வெள்ளைக்காவியமாக. 16.3.1961 வியாழனன்று சென்னையில் சாந்தி, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி முதலிய 3 திரையரங்குகளிலும் மற்றும் இந்தியாவெங்கும் வெளியானது. [பொன்விழா நிறைவு பெற்று 51வது ஆண்டு ஆரம்பிக்கும் 16.3.2011, பொன்னுக்கும் மேலான புதன்கிழமை].
27. சென்னை சாந்தி திரையரங்கில் வெளியான முதல் சிவாஜி படம் என்கின்ற பெருமையைப் பெரும் இக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கொண்டாடியது. தவிர, சென்னை மற்றும் தென்னகமெங்கும் 14 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது. முதல் வெளியீட்டில் சற்றேறக்குறைய 40 பிரிண்டுகள் போடப்பட்ட இக்காவியத்தின் கிட்டத்தட்ட அனைத்து பிரிண்டுகளும் 50 நாட்களைக் கடந்தது. அயல்நாடான இலங்கையிலும் 100 நாள் விழாக் கொண்டாடியது.
28. "பாவமன்னிப்பு" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 177 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா - 127 நாட்கள்
3. சென்னை - ராக்ஸி - 107 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் - 141 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 127 நாட்கள்
6. திருச்சி - ராஜா - 120 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 100 நாட்கள்
8. காஞ்சிபுரம் - கண்ணன் - 100 நாட்கள்
9. வேலூர் - ராஜா - 100 நாட்கள்
10. நெல்லை - ராயல் - 101 நாட்கள்
11. நாகர்கோவில் - பயோனீர்லக்ஷ்மி - 101 நாட்கள்
12. ராமனாதபுரம் - சிவாஜிடூரிங் - 100 நாட்கள்
13. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 133 நாட்கள்
14. பெங்களூர் - ஆபெரா - 133 நாட்கள்
15.திருவனந்தபுரம் - பத்மனாபா - 100 நாட்கள்
16. கொழும்பு - கிங்ஸ்லி - 115 நாட்கள்
29. உலக சினிமா வரலாற்றில், ஒரு டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் "பாவமன்னிப்பு" [ராமனாதபுரம் - சிவாஜி டூரிங்].
30. தமிழ்த் திரைப்பட வரலாற்றில், ஒரு ஏர்கண்டீஷண்ட்(ஏசி) டீலக்ஸ் திரையரங்கில், வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [அரங்கம் : சென்னை - சாந்தி]
31. சிங்காரச் சென்னை மாநகரின் வரலாற்றில், முதன்முதலில், ஒரு தமிழ்த் திரைப்படம், அதன் முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக ரூ.10,00,000/- ஈட்டியது இந்தப்படத்தில் தான். சாந்தி(177), ஸ்ரீகிருஷ்ணா(127), ராக்ஸி(107) என வெளியான மூன்று திரையரங்குகளிலும் மொத்தம் ஓடிய 411 நாட்களில் இக்காவியம் அள்ளி அளித்த மொத்த வசூல் ரூ.10,51,697-10பை. [இன்றைய பொருளாதார நிலையில் இத்தொகை பற்பல கோடிகளுக்குச் சமம்.]
32. 1961-ம் ஆண்டின் தலைசிறந்த, ஈடு இணையற்ற வசூல் சாதனைப் படமாக - Box-Office Himalayan Record படமாக - ஒரு புதிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம் "பாவமன்னிப்பு".
33. நடிகர் திலகத்தின் திரைப்பட பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகள் வரலாற்றில், சென்னை மாநகரில் மட்டும் அவருக்கு மொத்தம் 10 படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளன. அவரது சென்னை மாநகர வெள்ளிவிழாப் பட்டியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட படம் "பாவமன்னிப்பு".
34. ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களது திரைப்படங்களுக்கு வித்தியாசமாக விளம்பரங்கள் செய்வதில் வல்லவர்கள். அவர்கள், "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்கு, மிக மிக வித்தியாசமான - அதுவரை யாரும் செய்திராத - நூதன விளம்பரயுக்தியாக, ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ராட்சத பலூனில், "AVM" என்று ஆங்கில எழுத்துக்களில் பெரிதாக எழுதி, பலூன் வாலில் "பாவமன்னிப்பு" என்ற எழுத்துக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக தமிழில் அமைத்து, சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் மேல் வானில் பறக்க விட்டனர். ரசிகர்களும், பொதுமக்களும் இந்த பலூனை அதிசயத்துடன் அண்ணாந்து பார்த்து வியந்தனர். இந்த ராட்சத பலூன் சிறந்த காட்சிப்பொருளாகவும், படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.
35. "பாவமன்னிப்பு" பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு ஆன உடனேயே, ஏவிஎம் நிறுவனத்தார் அதனை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை வானொலி இப்பாடல்களை அனுதினமும் ஒலிபரப்பியது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
36. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை 'கொலம்பியா' நிறுவனம் வெளியிட்டது. இசைத்தட்டுகள் விற்பனை வரலாற்றில், "பாவமன்னிப்பு" படப்பாடல்களின் இசைத்தட்டுகள் இமாலய சாதனையை ஏற்படுத்தின.
37. "பாவமன்னிப்பு" வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. படம் மட்டுமன்றி பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஏற்கனவே பிரபலமாகியிருந்தன. இதனை அறிந்த ஏவிஎம் நிறுவனத்தினர் - இன்னொரு நூதன விளம்பர யுக்தியாக - "பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி"யை படம் வெளியான நான்காவது வாரத்தில் [7.4.1961] அறிவித்தனர்.
38. ஏவிஎம் அறிவித்த "ரசிகப் பெருமக்களுக்கு பரிசு - பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி" அறிவிப்பு இதுதான்:
"இப்படத்திலுள்ள பாட்டுகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாய் ஏகோபித்த பாராட்டுதல்கள் வருகின்றன. இப்பாட்டுகளை அதனதன் தராதரத்தின்படி, வரிசைப்படுத்தும்போது பாட்டின் இசை, பாட்டின் கருத்து மற்றும் ஒவ்வொரு பாட்டும் எவ்விதம் அந்தந்த காட்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு படத்திலுள்ள எட்டு பாட்டுகளையும் வரிசைப்படுத்தி எழுதி பரிசு பெறுங்கள்...
முற்றிலும் சரியான விடைக்கு முதல் பரிசு ரூ.4000/-
ஒரு தவறுள்ள விடைக்கு இரண்டாவது பரிசு ரூ.2000/-
இரண்டு தவறுள்ள விடைக்கு மூன்றாவது பரிசு ரூ.1000/-
திருவாளர்கள் டாக்டர் மு.வரதராசனார், சங்கீத கலாநிதி முசிறி சுப்ரமண்ய ஐயர், ஔவை டி.கே.ஷண்முகம், தொழிலாளர் தலைவர் பட்டாபிராமன் எம்.பி. ஆக நால்வரும் தேர்வு குழுவிலிருக்க இசைந்துள்ளார்கள். அவர்களின் தீர்ப்பே முடிவானது. தீர்ப்பின் முடிவுப்படி பரிசு பெற்றவர்களுக்கு 'பாவமன்னிப்பு' 100வது நாள் விழாவன்று பரிசளிக்கப்படும். உங்கள் விடைகளை 10.6.1961 தேதிக்குள், 'பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி', ஏவிஎம் ஸ்டூடியோ, சென்னை - 26 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முடிவு தேதிக்குப் பின் வரும் விடைகள் கவனிக்கப்படமாட்டாது."
39. ரசிகப்பெருமக்கள் பெருமளவில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஏவிஎம் நிறுவன அலுவலகத்தின் ஒரு பெரிய அறை முழுவதும் விடைகள் வந்து குவிந்தன. அதன் பின்னர் தேர்வுக் குழுவினரும் முடிவு செய்து தங்களது தீர்ப்பினை வெளியிட்டனர். அத்தீர்ப்பின்படி வரிசைப்படுத்தப்பட்ட படத்தினுடைய எட்டு பாடல்கள்:
"1. காலம் பல கடந்து / சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
2. அத்தான் என் அத்தான்
3. வந்தநாள் முதல் இந்தநாள் வரை
4. காலங்களில் அவள் வசந்தம்
5. பாலிருக்கும் பழமிருக்கும்
6. ஓவியம் கலைந்ததென்று
7. எல்லோரும் கொண்டாடுவோம்
8. சாயவேட்டி தலையில கட்டி"
சரியான விடைகளை எழுதி வெற்றி பெற்ற ரசிகப் பெருமக்களுக்கு, "பாவமன்னிப்பு" 100வது நாளன்று பரிசுகளும் வழங்கப்பட்டன.
40. "பாவமன்னிப்பு" திரைப்படம்தான், தமிழ் சினிமா வரலாற்றில், முதன்முதலில், ஒரு படத்தினுடைய பாடல்களையும், ரசிகர்களைவும் சம்பந்தப்படுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்ட முதல் படம்.
-
பாவமன்னிப்பு 51
41. 1961-ல் பம்பாய் மாநகரில் இக்காவியம் வெளியான போது, இசைச் சகோதரிகள் லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் காணச் சென்றனர். படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அப்படியே அவர்களை உருக்கி விட்டது. பல காட்சிகளின் போது அவர்கள் இருவரின் கண்களிலும் தாரைதாரையாகக் கண்ணீர். படம் முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்றவர்கள் என்ன நினைத்தார்களோ மறுநாள் அதிகாலையே சென்னைக்கு விமானம் ஏறி அன்னை இல்லம் வந்தனர். நடிகர் திலகத்தை சந்தித்தனர். இசையரசிகளின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். நடிப்பரசரை அவர்கள் மனதாரப் பாராட்டி வாயார வாழ்த்திச் சென்றனர்.
42. 1961-ம் ஆண்டிலேயே இக்காவியம் "பாபபரிகாரம்" என்கின்ற தலைப்பில் தெலுங்கில் மொழிமாற்றம்(டப்பிங்) செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டது.
43. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் குறித்து பீம்சிங்:
"மனிதனுக்கு மனிதன் உண்டாகும் பிரச்னைகளை, கோபதாபங்களை ஒருவருக்கொருவர் அன்பு வழியில் தீர்த்துக் கொண்டால், உலகத்தில் எத்தனை மதங்களும், மார்க்கங்களும் இருந்தாலும் 'எல்லோரும் மனிதர் தானே' என்கிற பொது எண்ணம் உண்டாகி, அனைவரும் மண்மாதாவின் குழந்தைகள் போல ஒற்றுமையாக வாழ முடியும் என்பது என் நம்பிக்கை, ஆசை. அந்த ஆசையின் படப்பிடிப்புதான் நீங்கள் காணும் 'பாவமன்னிப்பு'. உலகமெலாம் அன்பு வழி நடந்து எல்லோரும் சகோதரர்களாகப் பழகி வாழ என் முயற்சி கடுகளவாவது துணை புரியுமானால், அதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாகக் கருதுவேன்."
44. "முஸ்லீம் வாலிபர்கள் இந்தப் பாத்திரத்தைப் போலல்லவா வாழ வேண்டும் என்று எண்ணும்படி அதிக சிரமமெடுத்து நடித்த படம்" என இக்காவியம் குறித்து நடிகர் திலகம் கருத்து கூறியுள்ளார்.
45. "பாவமன்னிப்பு" காவியத்தில் நடித்தது குறித்து தேவிகா:
"ஆசியாவின் சிறந்த நடிகரான சிவாஜி அண்ணாவுடன் நான் 'பாவமன்னிப்பு' படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு முறையும் அவர் 'நீ சிறப்பாக நடிக்க வேண்டும்' என்று ஊக்கம் ஊட்டும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். சில வேளைகளில் கஷ்டமான பாவங்களை சித்தரித்து காட்டுவது எப்படி என்று அவரே நடித்துக் காட்டியிருக்கிறார். 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடல் காட்சியில் நடிக்கும்பொழுது சிவாஜி அண்ணா அவர்கள், 'இந்தக் காட்சியில் கிறிஸ்தவப் பெண்ணுக்குள்ள அமைதி, பண்பு ஆகிய குணநலன்களுடன் இயற்கையாகக் காட்சி அமைய நீ நடிக்க வேண்டும். இந்தக் காதல் காட்சியில் நடிக்கும்பொழுது நெளிந்து நெளிந்து நடிக்காமல் அமைதியாகவும், அடக்க ஒடுக்கமாகவும் நீ நடிக்க வேண்டும்' என்று எனக்குக் கூறி ஊக்கம் அளித்து காட்சியின் தன்மையை விளக்கிக் காட்டினார். அதன்பின் அவர் அளித்த ஊக்கத்தினால்தான் அக்காட்சியில் சிறப்பாக நடித்தேன். படம் வெளியான பிறகு இந்தப் பாடல் காட்சியும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றுவிட்டது. சிவாஜி அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும் சொல்லுவேன். 'பாவமன்னிப்பு' வெளிவருவதற்கு முன்பே அவர் என்னைப் பார்த்து 'இந்தப்படம் வெளிவந்ததும் உனக்கு நல்ல பெயர், புகழ் வரும்' என்றார். எனக்கென்னவோ தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் முடிவில் அவர்தான் வெற்றி பெற்றார். 'பாவமன்னிப்பு' படம் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. பொது நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் கைகொடுத்து உதவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நீடூழி வாழப் பிரார்த்திப்போமாக."
46. பாக்ஸ்-ஆபீஸ் மெகாஹிட் காவியமான "பாவமன்னிப்பு", இந்திய அரசின் விருதினையும் வென்றது. 1961-ம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மிகச் சிறந்த திரைப்படம் என்று இப்படத்திற்கு "வெள்ளிப்பதக்கம்" விருதும், அகில இந்திய நற்சான்றிதழும் இந்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
47. "பாவமன்னிப்பு", "சப் கா சாத்தி" என்கின்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஹிந்திப் பதிப்பாகவும் வெளிவந்தது. 1972-ல் வெளியான இந்த ஹிந்திப்படத்தில் சஞ்சய்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். ஜெமினி, சாவித்திரி ரோல்களில் வினோத்கன்னாவும், பாரதியும் நடித்திருந்தனர். இப்படத்தை பீம்சிங்கே இயக்கினார்.
48. நடிகர் திலகத்தின் 'ரஹீம்' கதாபாத்திரம், கவிப்பேரரசு வைரமுத்துவின் மனம் கவர்ந்த பாத்திரமாகும். அவர் கலந்து கொள்ளும் சிவாஜி விழாக்களில் இப்பாத்திரம் குறித்து அவர் சிலாகித்துச் சொல்லாத மேடைகளே இல்லை. 'சிரித்துக் கொண்டே அழவதையும், அழுது கொண்டே சிரிப்பதையும் உலகில் சிவாஜியால் மட்டுமே சித்தரித்துக் காட்ட முடியும்' என்று வைரமுத்து சிவாஜி விழாதோறும் நடிகர் திலகத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
49. வெள்ளித்திரை மறுவெளியீடுகளிலும், சின்னத்திரைச் சேனல்களிலும் "பாவமன்னிப்பு"க்கு கிடைக்கும் அமோக வரவேற்பே தனிதான். Vcd, dvd வடிவத்திலும் இக்காவியத்திற்கு ஏக கிராக்கி.
50. "பாவமன்னிப்பு", மதங்கள் மனங்களை பிரிக்கக்கூடாது, அவை இதயங்களை இணைக்கும் பாலங்களாக இருக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவத்தை உறுதியோடு வலியுறுத்திய காவியம். 'அனைத்து ஆயுதங்களையும் விட அன்பே சிறந்த ஆயுதம்' எனும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை போதித்த உன்னத சித்திரம். மதஒற்றுமையை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி அதற்கு என்றென்றும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திரைஓவியம்.
51. 16.3.2011 புதன்கிழமையன்று "பாவமன்னிப்பு" திரைக்காவியம் தனது பொன்விழா ஆண்டினை நிறைவு செய்து 51வது ஆண்டில் மிக மிக வெற்றிகரமாக பீடு நடை போடுகின்றது. எக்காலத்தையும் வெல்கின்ற, எந்தத் தலைமுறையையும் ஈர்க்கின்ற தலைசிறந்த காவியமாக மென்மேலும் பற்பல விழாக்களை இக்காவியம் காணப் போவது திண்ணம்.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார்,
தங்களுடைய 51 குறிப்புகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு லட்சம் கோடி என்றால் கூட குறைந்தது 51 லட்சம் கோடிக்கு நீங்கள் தற்போது அதிபதி. அதில் 0.001 எனக்கு கிடைத்தால் கூட அதுவே போதும் மிச்சமுள்ள வாழ்நாளை ஓட்டிவிடலாம். விரைந்து ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு சி.பி.ஐ. போன்றவர்கள் வரமாட்டார்கள். வந்தால் அவர்களும் கூட பங்கு கேட்பார்கள். ஏனென்றால் நடிகர் திலகத்தைப் பற்றி தெரியாவர்களே இல்லை இப்புவியில்.
நகைச்சுவை தான்... தவறாக எண்ணாதீர்கள் (எண்ணுவது என்பது மனஓட்டம், கணித எண்ணிக்கையல்ல)... ஹி...ஹி...ஹி... தேர்தல் நேரமல்லவா ... அதுவே நெஞ்சில் தாக்கமடைந்து விட்டது.
பாவமன்னிப்பு படத்தைப் பற்றிய தங்கள் குறிப்புகள் மிக்க பயனுள்ளவை. பல புதிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்கின்றன. என் உளப் பூர்வமான பாராட்டுக்கள்.
அடியேனுடைய சிறு பங்காக சில விளம்பரங்களின் நிழற்படங்கள்
பாவமன்னிப்பு வெளியீட்டு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...uReleasead.jpg
பாவமன்னிப்பு வெற்றிகரமான காட்சிகளின் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...uRunningad.jpg
பாவமன்னிப்பு பாடல் போட்டிக்கான விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ppuPrizead.jpg
அன்புடன்
ராகவேந்திரன்
-
டியர் ராகவேந்திரன் சார் அவர்களுக்கு,
தங்களின் உளமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள். கூடியமட்டும் நடிகர்திலகம் புகழ் பாடும் எந்த செய்தி, மற்றும் கட்டுரையையும் தவறவிடுவதில்லை, எப்போது பார்த்தாலும், ஆழ் மனதில் நடிகர் திலகம் நீக்கமற நிறைந்திருப்பதால்.
தாங்கள் கொடுத்த விவரங்கள் மூலம் திருச்சி மாவட்ட அன்பர்கள் செய்த முயற்சியினைப் பார்க்கிறேன். நன்றி.
டியர் முரளி சார் மற்றும் பம்மலார் அவர்களுக்கு,
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. பாவ மன்னிப்பு பற்றி நினைத்தவுடனேயே என்றென்றும் நினைவுக்கு வருவது, நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி - அதாவது, எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சி. அந்த அழகும், அமைதியும், கனிவும் பொங்கும் அந்த முகம், பாடலில் அவரது பாவனைகள், உச்சரிப்பு மற்றும் இலேசான அவரது trademark தலையசைப்பு மற்றும் தோலக்கில் அவரது விரல்கள் விளையாடும் லாகவம். இதுபோல் எத்தனை எத்தனையோ. இருப்பினும், பம்மலார் இந்தப் படத்துடன் சம்பந்தப் பட்டவர்களுக்குக் கூடத் தெரியாத (ஒரு யூகம் தான். ஏனென்றால், அத்தனை விவரங்கள்!) விவரங்களைக் கொட்டி, என்னை மேலும் தூண்டி விட்டு விட்டார். அதியற்புதம்!
மூன்று படங்கள் தான் முடித்திருக்கிறேன்; மற்ற ஏழு படங்களையும் சீக்கிரமே பதிவிடத் துடிக்கிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
DEAR PARTHASARATHY SIR,
Your postings on NT films remade in other languages are super.one small information,paasamalar was remade in kannada as ANNA-THANGI with Rajkumar in the lead and failed miserably as rajkumar couldnot even touch the shadow of NT's acting.
pammal sir,
thanks for more interesting and less known facts of paavamannippu
-
டியர் பார்த்தசாரதி,
நடிகர்திலகத்தின் காவியப்படங்கள் பலவும், வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட விதம் பற்றியும், அப்போது நடந்த நிகழ்வுகள் பற்றியுமான தங்களின் விரிவான பதிவு அருமை. பலருக்கும் இதுவரை தெரிந்திராத பல புதிய விஷயங்கள்.
எனவே முரளியண்ணா சொன்னது போல, இங்கு சிலர் பெயரைக்குறிப்பிட்டு, அவர்கள் போல எழுத முடியாது என்று சொல்லியிருக்கும் உங்களின் கூற்றை வன்மையாக மறுக்கிறேன். உங்களின் பதிவுகளும் விவரங்களும் யாருடைய பங்களிப்புக்கும் குறைந்ததல்ல. இங்கு பதிவிடும் எல்லோருமே சிறந்த பங்களிப்பாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
நடிகர்திலகத்தின் படங்கள் வேற்று மொழியில் எடுக்கப்படும்போது, அவற்றில் அவருடைய பாத்திரங்களை ஏற்கும் கதாநாயகர்கள் முதலில் சொல்லும் ஒரே விஷயம், 'என்னுடைய லெவலுக்கு நான் பண்றேன். தயவு செஞ்சு அவருடைய பெர்பார்மென்ஸோடு ஒப்பிடாதீர்கள். அப்படி ஒப்பிட்டால் நான் காணாமல் போயிடுவேன்' என்பதுதான். அந்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களிடம் பெரும் மரியாதையைப்பெற்றிருந்தார் நடிகர்திலகம்.
ஒரு உதாரணம், கார்கில் போர் நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது அதில் பல இந்தி நடிகர்களும் கலந்துகொண்டனர். ஆட்டம் முடிந்ததும், அங்கே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முதல்வர் கலைஞர், அப்போதைய சென்னை மேயர் ஸ்டாலின், நமது நடிகர்திலகம் ஆகியோர் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப்பெற்றனர். அப்போது மேடைக்கு வந்த இந்தி நடிகர் 'அனுபம் கெர்' முதலில் மேயரிடம் கைகுலுக்கினார், அடுத்து நின்ற முதல்வரிடமும் கைகுலுக்கியவர் அவரையடுத்து நின்ற நடிகதிலகத்திடம் வந்ததும் சட்டென்று காலில் விழுந்து எழுந்தார். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கெல்லாம் மெய்சிலிர்த்துப்போனது.
அந்த அளவுக்கு மற்ற மொழி கலைஞர்களிடமும் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவர் நமது அண்ணன். உங்கள் ஆய்ப்புப்பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
-
டியர் பம்மலார்,
பொன்விழா ஆண்டைப்பூர்த்தி செய்து, இன்றளவும் புதுமை மாறாமல் பொலிவுடன் திகழும் பொற்காவியமாம் 'பாவ மன்னிப்பு' திரைக்காவியம் பற்றிய முத்தான, சத்தான, அத்தனை தகவல்களையும் 51 கேப்ஸ்யூல்களில் அடைத்து வழங்கியிருக்கிறீர்கள்.
தகவல்களை திரட்டிய, தொகுத்த, அழகுதமிழில் வழங்கிய உங்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். அடேயப்பா, பாவமன்னிப்பு பற்றி எத்தனையெத்தனை தகவல்கள்...!!!!!. எதையும் விட்டுவிடாமல் சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். அப்படம் பற்றிய எந்த செய்திக்கும் உங்களுடைய இப்பதிவை அணுகினால் போதும் என்கிற அளவில் முழுமையாக அமைந்திருக்கிறது.
டியர் முரளி,
பாவமன்னிப்பு திரைக்காவியம் பற்றிய உங்கள் பதிவு, பம்மலாரின் நீண்ட பதிவுக்கான முன்னுரை போல சிறப்பாக அமைந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புக்களைத் தாங்கி வந்த அப்படத்தை, தமிழக மக்கள் மாபெரும் வெற்றிப்படமாகவும் ஆக்கி மேலும் சிறப்பு சேர்த்தனர். ஒரே ஆண்டில் பாவமன்னிப்பு, பாசமலர் என்ற வெள்ளிவிழாக்காவியங்களையும், பாலும் பழமும் என்ற 20 வாரங்கள் படத்தையும் ஆதரித்த தமிழ் ரசிகப்பெருமக்கள், அந்த ஆண்டு தீபாவளிக்கு எங்கே போனார்கள்?. (1061 தீபாவளியை நான் மறக்க விரும்புகிறேன்).
டியர் ராகவேந்தர்,
முரளியார், பம்மலார் ஆகியோரின் சிறந்த பதிவுகளுக்கு மேலும் சிறப்புச்சேர்க்கும் வகையில் நீங்கள் வழங்கியுள்ள 'பாவமன்னிப்பு' செய்தித்தாள் விளம்பரங்களுக்கும், பாடல் காட்சிக்கும் மிக்க நன்றி.
'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் காட்சியிலேயே, படத்தின் முக்கிய பாத்திரங்களையும் அவர்களின் பின்னணியையும் குழப்பமில்லாமல் நமக்கு அறிமுகப்படுத்தும் பீம்சிங் போல இன்னொரு பீம்சிங் வருவது சாத்தியமேயில்லை.
குடிசைகளை காலிசெய்துகொண்டு அனைவரும் வெளியேறும்போது, தன் கைத்தடி ராமாராவிடம், "பெருமாளு, நீ அந்தப்பக்கம் போய்ப்பாரு. எவனாவது மண்ணை வெட்டி அள்ளிக்கிட்டு போயிடப்போறான்" என்று சொல்லும் நடிகவேள் போல மட்டும் இன்னொருவர் வந்துவிடுவாரா என்ன.
-
Thanks to Pammalar for 51 Excellent informations about PAAVA MANNIPU. You done a wonderful job.
Thanks again
-
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
4. பாலும் பழமும் (1961) / சாத்தி (1968) ஹிந்தி
மறுபடியும் நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் கூட்டணியில் வெளி வந்த மாபெரும் வெற்றிப்படம். 1961 -ஆம் ஆண்டின் மூன்றாவது வெள்ளி விழாப் படமாகியிருக்க வேண்டிய படம். ரொம்ப காலத்திற்கு, இந்தப் படம் வெள்ளி விழாப் படம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எழுபதுகளின் இறுதியில், முதன் முறையாக, நடிகர் திலகத்தின் அத்தனை படங்களைப் பற்றியும், சாந்தியில் எழுதப்பட்டதைக் கண்டவுடன்தான், பாலும் பழமும் வெள்ளி விழாப் படம் இல்லை என்று தெரிந்து கொண்டேன். அங்கிருந்த நண்பர்கள் மூலமாக, பாலும் பழமும் வெள்ளி விழா வாய்ப்பை சில வாரங்களில் இழந்தது என்றும் அறிந்து கொண்டேன். மேலும், இந்தத் திரியின் மூலம் இந்தப் படத்தைப் பற்றிய ஏராளமான செய்திகளையும் திரு முரளி சார், பம்மலார், ராகவேந்தர் சார் போன்ற விற்பன்னர்கள் மூலம் அறிந்து கொண்டேன். பாலும் பழமும் மட்டும் வெள்ளி விழாப்படமாகியிருந்தால், ஒரே வருடத்தில் (1961), மூன்று வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்த நடிகராகியிருப்பார் நடிகர் திலகம். இருப்பினும், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளி விழாப் படங்களை ஏழு முறைகளுக்கு மேல் கொடுத்தவர் நடிகர் திலகம் ஒருவர் தான் என்று ஒவ்வொரு தமிழனும் இறுமாந்து கொள்ளலாம். (1959, 1961, 1972, 1978, 1982, 1983 & 1985). சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைக் கூட ஒருவர் முறியடித்துவிட முடியும்; ஆனால், நம் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாது. அவர்தான் திரும்பவும் பிறந்து வரவேண்டும். (அது சரி, அவர் எங்கு மறைந்தார் திரும்பவும் பிறப்பதற்கு - அவர்தான் எப்போதும் நம்மோடு கலந்திருக்கிறாரே.)
இந்தப் படம் இந்த மாபெரும் கூட்டணியிலிருந்து வெளி வந்த படங்களில் முதன் முறையாக, நிறைய ஜனரஞ்சக அம்சங்கள் – நகைச்சுவை மற்றும் பாடல்கள் – இவர்களது முந்தைய படங்களை விட – சிறப்பாக அமைந்த படம் என்று கூறலாம் (விவாதத்துக்குரிய கூற்றாகவும் இருக்கலாம்). குறிப்பாக, பாடல்கள். பல வகைப்பட்ட பாடல்களும், அற்புதமாக அமைந்த படம். ஆனாலும், கலைத் தன்மையைக் கொஞ்சம் கூட இழக்காத படம்.
இந்தப் படத்தில்தான் நடிகர் திலகம் முதன் முறையாக முழு நீள டாக்டர் வேடம் ஏற்று நடித்தார் எனலாம். (அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நண்பர்களே, பிழை இருந்தால், திருத்துங்கள்).
இந்தப் படத்திற்காகத் தான் முதன் முறையாக முழு நீள டாக்டர் வேடம் ஏற்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன், சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு டாக்டர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்கள் எப்படி நோயாளிகளை அணுகுகிறார்கள், எப்படி கேஸ் ஷீட்டைப் பார்க்கிறார்கள், நர்ஸ்களிடம் எப்படி வினவுகிறார்கள், எப்படி டாக்டர் கோட்டைப் போடுகிறார்கள் என்று சகல விஷயங்களையும் பார்த்து நன்றாக அலசி விட்டு, பின்னர் அந்த வேடத்திற்காக, வித்தியாசமான சிகை அலங்காரத்தை தேர்வு செய்து, பின்னர் தான் நடிக்க ஆரம்பித்தார்.
என்னுடைய நீண்ட கால நலம் விரும்பி மற்றும் நண்பர் (என்னை விட ஒரு இருபது வயது மூத்தவர் மற்றும் எனது குரு), இந்தப் படத்தைப் பற்றி சொல்லும் போது, அந்தக் காலத்தில், தமிழகத்தில் இருந்த அநேகமாக அத்தனை டாக்டர்களையும், பெரிய அளவில், நேர்மறையாக இந்தப் படம் (அதாவது நடிகர் திலகத்தின் நடிப்பு) பாதித்தது என்று சொல்லுவார். அதாவது, நடிகர் திலகத்தின் உடல் மொழி, நடை, உடை மற்றும் பாவனை அனைத்தும் மிகப் பெரிய அளவில் அத்தனை டாக்டர்களையும் ஒருசேர பாதித்தது. இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் இருந்த அநேகமாக, எல்லா டாக்டர்களும், அந்தந்த மருத்துவமனைகளில், நடிகர் திலகம் மாதிரியே, நடந்து கொண்டிருந்தார்களாம். படத்தில், மருத்துவமனையில், நோயாளிகளை மற்ற உதவி டாக்டர்களுடனும் நர்சுகளுடனும் பார்க்கும்போது, ஒருமாதிரி இலேசாக தலையை சாய்த்து ஸ்டைலாக graceful-ஆக நடப்பார் – அதே நடையை அத்தனை டாக்டர்களும் நடந்துகொண்டு இருந்தார்களாம்.
இந்தக் காலகட்டத்தில் தான், நடிகர் திலகத்தின் முழுத் திறமையும் காண்பிப்பதற்கு அவருக்கு பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது, அதற்கேற்ற காட்சியமைப்புகள், மற்றும் பாடல்களும் அவருக்குக் கிடைத்தது என்று சொல்லலாம். ஒரே நேரத்தில், பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில், தேசிய மற்றும் புராண கதாபாத்திரங்கள் (ஏற்கனவே வாழ்ந்து பெரிய புகழ் அடைந்தவர்களின் கதாபாத்திரங்கள், மற்றும் புராண இதிகாச, சரித்திரக் கதாபாத்திரங்கள்), பீம்சிங்கின் இயக்கத்தில், சமூகச் சித்திரங்கள் (அனைத்து “ப, பா” வரிசைப் படங்கள்) (ஒரு மனிதனின் பல்வேறு காலகட்டங்களில், அவன் சந்திக்கும் பல பிரச்சினைகள், அதில் அவனது மன நிலைகள், இத்யாதி) மற்றும் பொதுவான பொழுதுபோக்குச் சித்திரங்கள் (பலே பாண்டியா, இருவர் உள்ளம், போன்றவை) ஆகிய படங்களில் நடித்தார்.
முக்கியமாக, பாடல்களின் மூலம், அவரது பல்வேறு வகைத் திறமைகளையும் வெளிக் கொணர முடிந்தது.
படத்தின் முதல் பாடலான “ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்” (இன்று வரை அநேகமாக எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் தான் முதல் பாடலாகப் பாடப்படுகிறது.) பாடலில், நடிகர் திலகம் ஒரே ஒரு இடத்தில்தான் – மின்னல் போல – அதாவது உறங்கிக் கொண்டிருப்பார். அந்த ஒரு மின்னல் காட்சிக்காக, அந்தக் காலத்தில், தூர்தர்ஷனில் ஒலியும ஒளியும் நிகழ்ச்சியில் அந்தப் பாடல் ஒளிபரப்பப்படும்போது, காத்துக்கொண்டிருப்போம். அடுத்த பாடலில் துவங்கி, ஒவ்வொரு பாடலிலும், நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாகவும், அழகுடனும், பிரமிப்பாகவும், இருக்கும். “நான் பேச நினைப்பதெல்லாம் ” பாடலில் , அவர் ஹம் செய்யும் அழகு; “பாலும் பழமும் ..... ” பாடலில், அவரது அளவான சோகம் ததும்பும் நடிப்பு (குறிப்பாக கடைசி சரணத்தில் “ஈன்ற தாயை நான் கண்டதில்லை" எனும்போது, கலங்காத கண்களும் உண்டோ?) இந்தப் பாடலில் அவர் தன் மனைவியாக வரும் சரோஜா தேவியை கவனித்துக் கொள்ளும் அழகும், கனிவும், பாங்கும் - அப்பப்பா!; “போனால் போகட்டும் போடா” பாடலில், விரக்தியான சோக நடிப்பு மற்றும் அந்த வேகமான நடை; “காதல் சிறகைக் காற்றினில் விரித்து” பாடலில் ஒரு விதமான அமைதி தவழும் பாவனை (குறிப்பாக, கடைசியில், சேரில் அமர்ந்து கொண்டே அசைந்தாற்போல் தூங்குவார் – தூங்குவதைக் கூட அழகாகச் செய்து மக்களின் ரசனையை உயர்த்திய ஒரே நடிகன்!); “என்னை யாரென்று எண்ணி எண்ணி” பாடலில் காட்டும் அந்த உணர்ச்சிமயமான நடிப்பு (பாடல் துவங்குவதற்கு முன் வேகமாக பெருத்த சோகத்துடன் நடந்து, விழப் பொய், சரோஜா தேவி அவரைத் தாங்கிப் பிடித்தபின் பாடலைத் துவங்கும் விதம் அற்புதமாக இருக்கும்; அரங்கமும் அதிரும்); “நான் பேச நினைப்பதெல்லாம்” சோக வடிவத்தில், வெளிப்படுத்தும் அந்த மெல்லிய சோக உணர்வுகள்.
பாடல்களுக்காகவும், அவைகளில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்காகவும், பாடல்களை எடுத்த விதத்திற்காகவுமே, பலரை, பல முறை பார்க்க வைத்த படம். “பாவ மன்னிப்பு” தான், இன்று வரை எல்லா விதமான, சினிமா பாடல்களுக்கும் முன்னோடி எனலாம். மெல்லிசை மன்னர்கள் (குறிப்பாக MSV அவர்கள்) தான், இன்று எல்லா இசையமைப்பாளர்களும் கையாளும், சினிமா சங்கீதத்தை முதன் முதலில், பாவ மன்னிப்பு படத்தில் புகுத்தினார்கள் – மிக மிக வெற்றிகரமாக. இந்த சங்கீதம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளது போல் இல்லாமல் – சாஸ்திரிய சங்கீதமும் இல்லை – ஒரேயடியாக கிராமத்து சங்கீதமும் இல்லை; மேல்நாட்டு சங்கீதமாகவும் இல்லை – மெல்லிய ஒரு மெட்டையும், சாஸ்திரிய சங்கீதத்தையும் இலேசான மேல்நாட்டு சங்கீதத்திற்குத் தேவைப்படும் இசைக் கருவிகளையும் கொண்டு, அபாரமான கற்பனை வளத்துடன் அமைக்கப்பட்டது.
ஆனாலும், பாவ மன்னிப்பை விட, பாலும் பழமும் படத்தில்தான், மெல்லிசை மன்னர்களின் முழுத் திறமையும் வெளிப்பட்டது எனலாம் (மறுபடியும் விவாதத்துக்குரிய கூற்றோ?). MSV அவர்களின் உரை மூலமாகவே சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படம் ஹிந்தியில் எடுக்கப்பட்ட போது, அவரே தனது மானசீக குருவாக மதிக்கும் திரு நௌஷாத் அவர்கள் சொன்னாராம், “விசு, நீ மெய்சிலிர்க்கும் இசையைக் கொடுத்திருக்கிறாய். மற்ற எல்லா பாடலுக்கும் நான் ஓரளவிற்கு இசை அமைத்தேன். ஆனாலும், நான் பேச நினைப்பதெல்லாம் பாடலை மட்டும் என்னால் replace பண்ண முடியவில்லை; உன்னோட நிழலில் இருந்து தான் நான் இசையமைத்தேன்." என்று கூறினாராம். இந்தப் படத்தில் இடம் பெறாத ஆனால், இசைத்தட்டில் இன்றும் இருக்கின்ற “தென்றல் வரும் சேதி வரும்” என்ற பாடல் கூட மிகப் பெரிய ஹிட்டானது (அந்த அளவிற்கு அத்தனை முத்தான பாடல்கள். படத்தின் நீளம் கருதி, இந்தப் பாடலை சேர்க்காமல் விட்டு விட்டார்கள்). இந்தப் படத்திற்குப் பின்னர்தான் பி.சுசீலா அம்மா அவர்கள் சரோஜா தேவிக்குத் தொடர்ந்து பாட ஆரம்பித்து, பெரிய பெரிய ஹிட் பாடல்களை இந்த ஜோடி கொடுக்க ஆரம்பித்தது.
இந்தப் படம் முழுவதும், நடிகர் திலகத்தின் நடிப்பு மிக மிக எளிமையாகவும், அதே சமயத்தில் graceful -ஆகவும் இருக்கும். ஆரம்பத்தில், அவர் எஸ்.வி.சுப்பையாவுடன் பேச ஆரம்பிப்பதில் இருந்து, சரோஜா தேவியைப் பார்த்தபின், அவரது மாமன் (திரு எஸ். ஏ. கண்ணன் அவர்கள்) உடல் நிலையைப் பரிசோதிக்கப் போகும்போது ("இனிமேல் இப்படி எல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா!" என்று அவரிடம் கூறும்போது அவருடைய குரலின் தொனி ஒரு அளவோடும், சன்னமாகவும் ஆனால் கண்டிப்புடனும் இருக்கும்). படம் நெடுகிலும் இந்த அளவை maintain பண்ணி இருப்பார். இது போல் இன்னும் பலப்பல காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம் – நடிகர் திலகத்தைப் பற்றி மட்டுமே வைத்துக் கொண்டு.
பாசமலரைப் பார்த்தபின் தமிழகத்தின் ஒவ்வொரு தங்கையும் இதுபோல் ஒரு அண்ணன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்றால், பாலும் பழமும் பார்த்தபின், ஒவ்வொரு மங்கையும், இதுபோல் ஒரு கணவன் வைக்க வேண்டும் என்று விரும்பினர்.
இந்தப் படம், ஹிந்தியில், 1968-இல், ஸ்ரீதரின் இயக்கத்தில், “சாத்தி” என்ற பெயரில், வீனஸ் பிக்சர்சால் தயாரிக்கப் பட்டது. ராஜேந்திர குமாரும் (இவர் தான், சிவந்த மண்ணின் ஹிந்தி வடிவத்திலும் (“தர்த்தி”) நடித்தார்)) வைஜெயந்தி மாலாவும் நடித்தனர். இந்தப் படம், ஹிந்தியில் பெரிய அளவில் ஒடவில்லை ஆனாலும், ஓரளவுக்கு நல்ல பெயரை, குறிப்பாக, நவ்ஷாதின் பாடல்கள் பிரபலமாயின. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடல் (தமிழ் நான் பேச நினைப்பதெல்லாம் பாடலின் ஹிந்தி வடிவம்) – “மேரா பியார் ….”, என்று போகும். இந்தப் பாடலில் வரும் ஒரே ஒரு மெட்டை மட்டும் MSV எடுத்துக் கொண்டு (அவருடைய மானசீக குரு நவ்ஷாதின் மெட்டல்லவா!) தமிழில், பின்னர் வெளிவந்த மீனவ நண்பன் படத்தில் வரும் “தங்கத்தில் முகமெடுத்து” பாடலில் பயன்படுத்தினார். இரண்டு படங்களையுமே ஸ்ரீதர் தான் இயக்கினார் (சாத்தி – ஹிந்தி & மீனவ நண்பன் – தமிழ்).
பாலும் பழமும் - தமிழில் இருந்த அந்த உயிரோட்டமான திரைக்கதையும், நடிக நடிகையரின் உயிரோட்டமான நடிப்பும், குறிப்பாக நடிகர் திலகத்தின் நடிப்பு - ஹிந்தியில் இல்லாமல் போனதால், ஹிந்தியில் இந்தப் படம் பெரிய வெற்றியை ஈட்ட முடியவில்லை.
பாலும் பழமும் தெலுங்கில் நாகேஸ்வரராவும் சாவித்திரியும் நடித்து வெளிவந்ததாகத் தகவல். ஊர்ஜிதம் செய்ய முடியாததால், எழுத முடியவில்லை.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி