Originally Posted by
KALAIVENTHAN
‘இதய வீணையை மீட்டுவோம்’
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி உதவிய, பத்திரிகையாளராக இருந்த திரு.மணியன் அவர்களை திரைப்பட தயாரிப்பாளராக தலைவர் உயர்த்திவிட்ட படம்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர், அதிமுகவை தொடங்கிய 3வது நாளில் வெளியான படம்.
கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக ஆட்சியின் இடையூறுகளையும் தகர்த்து சென்னை,மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியதோடு பல சென்டர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படம்.
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்..., பொன்னந்தி மாலைப் பொழுது பாடல் காட்சிகளில் காஷ்மீரின் அழகு கண்ணுக்கு குளிர்ச்சி என்றால், அதையும் தாண்டிய அழகு, குளிர்ச்சியுடன் தலைவர்.
பொன்னந்தி மாலைப் பொழுது பாடலில் தலைவரின் 3 டிரஸ்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆடை மூடும் ஜாதிப்பூவில்... பாராவில் சுசிலா பாடும் ‘கண்ணோடு கண்... பண்பாடுமோ’ வரிகளின் போது சிவப்பு நிற டிரஸ்சில் தலைவர் லேசாக கொடுக்கும் ட்விஸ்ட் மூவ்மெண்ட் கிளாஸ். மஞ்சள் நிற டிரஸ்சில் இளமஞ்சள் நிற கூலிங் கிளாசுடன் வந்து அட்டகாசமாக ஸ்டெப்ஸ் போடும் தலைவருக்கு வயது 25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு பார்வையில் கோளாறு என்று அர்த்தம். இந்த பாடல் மட்டும் புலமைப்பித்தன். மற்றவை வாலி.
ஒரு வாலும் இல்லே.. நாலும் காலும் இல்லே.. சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே... (நெஜந்தான் தலைவரே) கருத்தாழம் மிக்க பாடல். ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்...’ இளமை பொங்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் திமுகவில் இருந்து தலைவர் நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் பால் பாயசம் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி (அவர்தான் எப்போதும் தனியாக சாப்பிட்டதில்லையே) தானும் சாப்பிட்டதோடு, கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை எடுத்திருக்கிறார். இதை மணியன் கூறியுள்ளார்.
‘ஏசுநாதர்’ என்ற படத்தில் தலைவர் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. படம் வந்திருந்தால் சரித்திரமாகி இருந்திருக்கும். வேடப் பொருத்தமும் ஏசுநாதர் போலவே இருக்கும். அந்த ஸ்டில் மிகவும் பிரபலம். ஏறக்குறைய அதேபோன்ற தோற்றம் கொண்ட தலைவரை ‘திருநிறைச் செல்வி...’ பாடலில் பார்க்கலாம்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
கொலைப்பழி சுமந்து, காட்டில் பதுங்கியிருக்கும் தலைவருக்காக மஞ்சுளா கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் கொட்டிப் போக.... ‘கொண்டு வந்த பொங்கல் கொட்டிப் போச்சு..’ என்று கூறி சத்தமாக தலைவர் சிரிக்கும் அட்டகாச சிரிப்பும், காட்சியையொட்டி, ‘இந்த நேரத்தில் கூட எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’ என்று மஞ்சுளா கேட்கும்போது தலைவர் அளிக்கும் பதில், அவரது மனத்தின்மைக்கு சான்று மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் பாடம்.
அந்த பதில்: ‘‘எந்த நேரத்திலும் என்னால் சிரிக்க முடியும். என் கவலையை மறக்க ஆண்டவன் எனக்குத் தந்த ஒரே வரப்பிரசாதம் அதுதான்’
தலைவர் கூறியது முற்றிலும் சத்தியம். காஷ்மீர்... பாடல் காட்சியிலும் ‘நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா’’ என்பார் சமத்துவ தத்துவத்தை அறிந்த நம் தலைவர்.
அவர் சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்த தமிழ்நாடு, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அழுதது. காரணம்... சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாமல் சத்திய வடிவமாய் வாழ்ந்த.. மன்னிக்கவும், வாழும் அந்த மனிதர்.... ஒரு புனிதர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்