Quote:
மருமகள்களை திருத்த வரும் மாமியார்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மாமியார் தேவை’ தொடர், 50–வது எபிசோடை எட்டியிருக்கிறது.
இளம் வயதில் மனைவியை இழந்த கங்காதரன் மிகப்பெரிய தொழில் அதிபர். இவருக்கு பிரேம்குமார், வசந்த்குமார், தீபக்குமார் என்று மூன்று மகன்கள். மூன்று பேருக்கும் திருமணம் நடந்து விட்டது. பிரேம்குமார் மனைவி நீலவேணியும், வசந்த்குமார் மனைவி கிரிஜாவும் தனிக்குடித்தனம் போக துடிக்கிறார்கள். அதற்காக தங்கள் கணவன்களையும் உருட்டி மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள்.
அந்த விவரம் மூன்றாவது மகன் தீபக்குமாருக்கும் அவன் மனைவி மீராவுக்கும் தெரிய வரும்போது துடித்துப் போகிறார்கள். அண்ணன்கள் குடும்பத்தில் சமாதானம் பேசி தோற்றுப் போகிறார்கள். வீடு விரிசல் விழும் நிலைக்கு வரும்போது கங்காதரன் துடிதுடித்துப் போகிறார். ‘இந்த நேரத்தில் குடும்பம் பிரிந்து போகாமல் தடுக்கும் விதமாக மனைவி இல்லாமல் போனாளே’ என்று வருத்தப்படுகிறார். மாமனார் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட இளைய மருமகள் மீரா, மாமனாருக்கு திருமணம் செய்து வைக்க பொருத்தமான மாமியாரை தேடுகிறாள்.
அந்த வகையில் மீரா கண்டெடுக்கும் மாமியார் துர்கா, துர்காதேவியை போன்று நீதிக்காக போராடும் போர்க்குணம் கொண்டவள். அத்தகைய துர்கா, கங்காதரனை மணந்து கொண்டு பெரிய குடும்பத்தில் மருமகளாக, மூன்று பெண்களுக்கு மாமியாராக வருகிறாள். வந்த வேகத்தில் பிரிய நினைக்கும் மகன்களைமருமகள்களை கட்டுப்படுத்தி ஒரே குடும்பமாக வாழ வைக்க அவளால் முடிகிறதா என்பதே தொடரின் கதை.
நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், யுவராணி– குமரேசன், சுக்ரன்– சோனியா, விஸ்வநாத்– வந்தனா, ரவி கவுடா– ‘‘நாதஸ்வரம்’ ஸ்ருதிகா, அழகு, ஜி.கே., ஈ.ராம்தாஸ் இவர்களுடன் பிரபல பட அதிபர் அழகன் தமிழ்மணியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். டி.ஐ.பிலிம் கார்ப்பரேசன் சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்க, துணை தயாரிப்பு: போரூர் கே.எம்.கண்ணன், தனுஷ் அஜய்கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜய்கிருஷ்ணா. திரைக்கதை: பாபா கென்னடி. வசனம்: கிருஷ்ணாபுரம் கிருஷ்ணசாமி. ஒளிப்பதிவு: மணிகண்டன். எடிட்டிங்: ராமசாமி, இசை: குணா, பாடல்: பிறைசூடன். இயக்கம்: கே.ஜே.தங்கபாண்டியன்.